கவிதைகள் மே 2009 - மே 2023
ஓவியம்: கமலா வாசுகி
கிளிப்பாட்டு
1.
கிளிக்கு ஓராயிரம் மொழிகள் தெரியும்
என்னுடைய கிளிக்கு
மேலதிகமாக இன்னொன்றும் தெரியும்
அது பொது மொழி. பாவலர் அஞ்சும் மொழி.
கெட்ட வார்த்தைகளின் சுவன மொழி.
எந்த அகரமுதலிக்குள்ளும் அடங்காமல்
மகிழ்விலும் குதூகலத்திலும் துலங்கும் மொழி.
காதலைக் கடியும் மொழி
ஆலோலம் பாடும் மொழி
எனினும்
ஆயிரம் கிளிகள் கூட்டமாகத் திரும்பி வந்து
தென்னங் கீற்றில் அமரும்போது
இன்னொரு மொழி பிறக்கிறது.
அப்போது
மானுடம் காணாத புதிய ஆடல்களை
தென்னங் கீற்று தருகிறது
அதுதான் ஆடும் சிவனைத் தற்கொலைக்கு அனுப்புகிறது.
2.
கிளி
வானம் முடியும்வரை தொடர்ந்து சென்றது
அதன் பறப்பில் வானவில்லைக் கொன்றது.
அது பறக்கும் பறவைதானா எனப் பெரும் ஐயம் எழுந்தது.
வாழ்வுக்கு உயிர் தேவையில்லை எனச் சொல்லியபடி
அந்தக் கிளி பறந்தது
அதன் இறகுகளில் இருந்து பெயரும் வாசனை
அதன் உயிருக்குத் தீர்ப்பு வழங்கும் என்பது
ஐதீகம்.
சரிதான்.
கிளி பறவை. பேசாப் பொருளைப் பேசும்.
அதுவே உயிரின் மூலம்.
வாழ்வின் பயன்.
சிலவேளைகளில்
நமது பாடுகளின் நம்பிக்கைக் குரல்.
3.
ஒரு கிளியைக் கூண்டிலிருந்து விடுவிக்கும்போதும்
யானைகளின் கால்களைப் பிணைத்த சங்கிலியை
அறுத்துவிடும்போதும்
காடுகளை உருவாக்குகிறோம்
நீரில் கலங்கி அழியும் நிழல்கள்
அந்தக் காடுகளில் இல்லை
கடலையும் கரையையும் கடந்து வருகிறது
எங்களுக்கான காடு
மழைக்கும் காடுகளுக்கும் காதலுக்கும்
என
நம் கிளிகள்.
ஓவியம்: அருந்ததி
பழங்கள்
1.
இடிக்கப்பட்ட நினைவிடங்களிலும்
நடுகற்கள் விம்மி அழும் மயானங்களிலும்
ஒரு மாம்பழத்துடனும்
ஒற்றைப் பட்டிப்பூவுடனும் அலைகிறேன்.
2.
உறைபனிக் காலம் முடிய
சாளரத்தைத் திறக்கிறேன்
வெளியே ஆயிரம் மஞ்சள் பூக்கள்
பெயரறியா மரங்களின் மீது
சண்டையிடும் சிட்டுக்குருவிகள்
கொடியில் எஞ்சியிருக்கும்
சிவப்புப் பழங்கள்
அவற்றைச் சுகிக்க வரும்
இளவேனில் காலத்தின் முதல் பறவைகள்
எல்லாப் பூக்களையும்
கொய்து வீசிவிடும் அணில்கள்
கானகத்திலிருந்து இன்னும் திரும்பி வராத
நிறைவேறாத காதலின் மென்காற்று
எட்டாத பழம்.
ஓவியம்: அருந்ததி
பறவை
இந்த இரவு
ஆற்றில் மிதந்து செல்லும்
வெட்டுண்ட மரங்கள்மீது நகர்கிறது.
அந்த மரங்களின் பாடல்கள்
எங்கே போய்விட்டன என
ஒருவரும் தேடப்போவதில்லை
நிறங்கள் மயங்கித் துலங்கும் வண்ணங்களில்
இறகுகள் ஒளிரும் பறவைகள்
ஓராயிரம்.
அவற்றுக்குத் தூங்குமிடம் இல்லை
அவை எழுப்பும் சாக்குரலில்
கவிதை அழிகிறது
காட்டை உருவாக்குவதைவிட
கவிதைக்கு வேறென்ன வேலை இன்று?
மின்னஞ்சல்: cheran@uwindsor.ca