புதுமைப்பித்தன்: மேடையில் உயிர்பெறும் சித்திரம்
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அதிக நாடகங்கள் எழுதாவிட்டாலும், குறிப்பிட்ட நடிகரை மனத்தில் வைத்துச் சில நாடகப் படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். கருணா பிரசாத் என்ற ‘நடிகர்’ தான் எழுதிய ‘அரவான்’ நாடகத்தைத் தனியாகச் சுமந்து அரவானின் அவலத்தை வெளிக்கொணர்ந்தவர். சில வருடங்களுக்கு முன்பு தனக்காக எழுதப்பட்ட இந்த ‘நான் புதுமைப்பித்தன்’ நாடகத்தைக் கருணா பிரசாத் தற்போது கூத்துப்பட்டறை நடிகர்களைக் கொண்டு இயக்கியுள்ளார். இதற்காகச் சில காலம் நடிகர்களுக்கு புதுமைப்பித்தன் படைப்புகளுடன் நல்ல பரிச்சயம் ஏற்பட உதவியிருக்கிறார். அது இந்த நாடகமாக்கலில் புதுமைப்பித்தனின் ஆளுமையை வடிவமைக்க அவர்களுக்கு உதவியிருக்கிறது. படைப்பாக்கம் நிறைந்த வெங்கடேசனின் அரங்க அமைப்பும் செ. ரவீந்திரனின் மிதமான ஒளியமைப்பும் புதுமைப்பித்தனின் சூழலைக் கட்டமைக்கவும் நாடகத்தின் கனத்தை அதிகப்படுத்தவும் உதவியிருக்கின்றன.
காலத்தால் கரையாத கண்ணீர்
தினகரி சொக்கலிங்கம்
ஏப்ரல் 28, அப்பாவின் பிறந்த நாள். ‘நான் புதுமைப்பித்தன்’ நாடகத்தைக் கூத்துப்பட்டறையினர் மார்ச் மாதம் அரங்கேற்றினார்கள். அப்பாவின் நினைவைப் போற்றும் வகையில் நடைபெற்ற நினைவேந்தல்; என்னைப் பொருத்தமட்டில் அது அப்பாவின் வாழ்வோவியம்.
யாரையெல்லாம் பாராட்டுவது? எஸ்.ரா.வையா, கருணாவையா, கதாபாத்திரங்களாகவே மாறிப்போன நடிகர்களையா?
இறுதிக் காட்சியைக் கண்டபோது ஒருபுறம் கனத்த இதயம்; மறுபுறம் என் பெற்றோரைச் சந்தித்த மனநிறைவு. வெகு இயல்பாகத் தொடங்கிய முதல் காட்சிமுதல் இறுதிவரை எல்லோரையும் கட்டிப்போட்ட இயல்பான நடிப்பு. கம்பீரக் குரல். பால்வண்ணம் பிள்ளையை, அரங்கம் அதிர ஆடிவந்த சிவனை மறக்க முடியுமா?
தன் குழந்தை மறைந்த சோகத்தைக் கண்ணீரால் கடிதம் எழுதும் அப்பா, கடிதத்தைப் படித்தே கலங்கும் அம்மா, காசுக்காகக் கம்பனை விற்க மாட்டேன் என்ற கம்பீரக் குரல்… இறுதியில் இருமி இருமிப் பேசும்போது தண்ணீர் எடுத்துக்கொடுக்க வேண்டும் என மனம் துடித்தது.
உயிரற்ற உடலருகில் கதறும் அம்மா. தினகரி பிறந்தாள் என்ற அம்மாவின் குரல், இன்னமும் என் நெஞ்சைத் துளைக்கிறது. கூடவே பின்னணியில் ஒலித்த அப்பாவின் கவிதை. இருக்கையை விட்டெழுந்து ஓடிப்போய் அவரது பாதம் பற்றிக் கதற வேண்டும் என மனம் துடிதுடித்தது.
நாடகம் முடிந்தது. என்னால் பேச முடியவில்லை. சுற்றிலும் நண்பர்கள். எஸ்.ரா., சந்திரா, கருணா… எத்தனை எத்தனை வாசகர்கள். என் கரம் பற்றி ஆற்றுப்படுத்திய சந்திரா, மங்கை, கலைவாணி, சுடர்விழி…
எப்படி நன்றி சொல்ல? காலத்தால் கரையாத கண்ணீரைக் காணிக்கையாகத் தருவதைத்தவிர…
புதுமைப்பித்தனின் அன்றாட வாழ்வியல் சூழல் அதன் மதிப்பீடுகளுடன் நடுஅரங்கிலும் மனைவியின் பிரதானமான லெளகீக இருப்பு பக்கவாட்டிலும் இருவருக்கும் சொந்தமான அந்தரங்க நெகிழ்ச்சிகள் உட்புற அரங்கிலுமாக நாடகத்தளம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தன்னுடைய லெளகீக வாழ்க்கையிலும் எழுத்து வாழ்க்கையிலும் புதுமைப்பித்தன் சந்தித்த பிரச்சினைகளும் அவற்றை அவர் எதிர்கொண்ட விதமும் அதில் வெளிப்படும் அவருடைய ஆளுமையும் நாடகமாக்கலுக்கான களமாகின்றன. அவருடைய படைப்புகளிலிருந்து பாத்திரங்கள் வெளிப்பட்டுப் புனைவில் விடுபட்ட தங்கள் வாழ்க்கையை அவருடன் உரையாடக் காத்திருக்கிறார்கள். அவருடைய கதையில் வரும் கடவுள்கூட அவருடைய சித்திரிப்பு குறித்த அதிருப்தியுடன் அவரைச் சந்திக்கிறது. புதுமைப்பித்தனுக்குக் கடவுளைக்கூடக் காப்பியுடன் சந்திக்க முடியும். ஆனால் அவருடைய உடல் உபாதைகளும், பிரசுரகர்த்தர்கள், சினிமா தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்புகளும் அவருடைய வசத்தை மீறியவை.
இந்தப் போராட்டத்தில் குடும்பத்தின் தேவைகளையும் சந்திக்க முடியாமல் உடல் சிதைவுகளுடன் மணியார்டரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எழுத்தாளர்போல் அவர் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆனால் தன்னுடைய போராட்டக் குணத்தையும் இலக்கியம் குறித்த பெருமிதத்தையும் வணிக நோக்குக்கு எதிரான சமரசமற்ற எதிர்ப்புணர்வையும் அவர் என்றும் கைவிடுவதாக இல்லை. கடுமையான வறுமையிலும் மனைவி மீதும் குழந்தை மீதும் அவர் கொண்டுள்ள பாசப் பிணைப்பு அவரது துயரை மேலும் அதிகப்படுத்துகிறது. கடிதங்கள் மூலமே அவர்கள் உரையாட முடியும்.
புதுமைப்பித்தன் போன்ற ஒரு மகத்தான படைப்பாளியின் இந்தப் போராட்டம், ஆளுமைப் பலம் ஆகியவற்றைக் கொலாஜ் பாணியிலான வரிசையற்ற குவிப்புடனும் நாடகப் பரிமாணங்களுடனும் உரிய படைப்பு உத்திகளுடன் எஸ். ராமகிருஷ்ணன் வடிவமைத்திருக்கிறார். புதுமைப்பித்தன் படைப்புகளில் வரும் பாத்திரங்களும் அந்தச் சித்திரிப்புகளில் வெளிப்படும் பல்வேறு ஆளுமைச் சிதறல்களும் நாடக வடிவம் கொண்டிருக்கின்றன. தமிழ் நவீன இலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளியான புதுமைப்பித்தனின் வாழ்க்கைச் சூழல், ஆதர்சமும் கோர யதார்த்தமும் பின்னிப் பிணைந்த சோகச் சித்திரம். அதன் சாரமான சில பகுதிகள் நேர்கோடற்ற தன்மையில் நாடகத்தில் பிரதிபலிக்கின்றன. புதுமைப்பித்தன் தன் மனைவியை ஊருக்கு அனுப்புவது, அவருடைய பாத்திரங்கள் நாடகத்திலிருந்து வெளிப்பட்டுத் தங்களின் விடுபட்ட பகுதிகளை அவருடன் உரையாடக் காத்திருப்பது, பிரசுரகர்த்தர்கள், சினிமா தயாரிப்பாளர்களின் வணிக ஈடுபாடுகளுக்கிடையே புதுமைப்பித்தன் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்டுவது, மனைவிக்கும் குழந்தைக்கும் கட்டற்ற அன்பைப் பரிமாறுவது, உடல் உபாதையுடனும் இயலாமைகளுடனும் மரணத்தை எதிர்கொள்வது என நாடகத் தளம் விரிவுகொண்டிருக்கிறது.
எஸ். ராமகிருஷ்ணன்
நவீன நாடகமாக்கலில் அனுபவமும் தேர்ச்சியும் கொண்ட கருணா பிரசாத், புதுமைப்பித்தனின் இத்தகைய ஆளுமைச் சிதறல்களை உயிரோட்டமான காட்சித்தன்மையுடன் கலைஞன், சமூகம் குறித்த மேலான புரிதலுக்கான ஒரு தளமாக வடிவமைத் திருக்கிறார். வெள்ளை வேட்டியிலும் ஜிப்பாவிலும் புதுமைப்பித்தனின் இயல்பும் எழுச்சியுமான சித்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அரங்கின் நடுவில் புதுமைப்பித்தனின் இயக்கம், பக்கவாட்டில் மனைவியும் அவருடைய கதாபாத்திரங்களின் இயக்கமும் என உரையாடல் தளம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் இயலாமையின் உச்சத்தில் புதுமைப்பித்தனும் அவர் மனைவி கமலாவும் அதீத நெருக்கத்துடனும் பிணைப்புடனும் கடிதப் பரிமாற்றம் செய்துகொள்வது நிகழ்வின் நுண்தருணம்.
கருணா பிரசாத்
நடிகர்கள் புதுமைப்பித்தனின் ஆளுமை குறித்த புரிதலுடன் நடித்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் மனைவியாக நடித்த ஸ்ரீதேவி ஆழ்ந்த நெகிழ்ச்சியுடன் தன் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். நடிகர்கள் அனைவருமே புதுமைப்பித்தனின் வெவ்வேறு பக்கங்களுக்குச் சிறப்பான வடிவம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இறுதிக் கட்டத்தில் ஆதர்ச நோக்கும் நடைமுறை நலிவும் புதுமைப்பித்தனைப் பந்தாடும் நிலையில் உருப்பெறும் கழிவிரக்கச் சூழல் அதிகமாக நீட்டப்பட்டிருந்தது. ஒரு கலைஞனின் மரணமும் கம்பீரமானதுதானே.
புதுமைப்பித்தனை முன்வைத்து ஒரு நிகழ்தளத்தில் படைப்பாளியும் அவன் சூழலும் அதிக பரிமாணங்கள் கொள்ளும் சாத்தியங்கள் இந்த நாடகத்தில் உயிரோட்டமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. தமிழில் புதுமைப்பித்தனுக்கு இணையான மற்ற படைப்பாளிகளும் ஒரு நிகழ்தளத்தில் இத்தகைய வெளிச்சம் பெறும் சூழல் உருவாக வேண்டும். மிகையற்ற படைப்புத் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ள காட்சித் தளமும் பாத்திரங்களின் அசைவுகளும் அத்தகைய சாத்தியங்களுக்கான எதிர்பார்ப்புகளை உருவாக்கின. நெகிழ்வான கட்டமைப்புடன் நாடகத்தை உருவாக்கிய எஸ். ராமகிருஷ்ணனும் அதற்கு நிகழ்வடிவம் கொடுத்த கருணா பிரசாத்தும் பாத்திரங்களை இயல்பான உயிரோட்டத்துடன் பிரதிபலித்த நடிகர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
மின்னஞ்சல்: velirangarajan2003@yahoo.co.in