தன்வயப்படுத்தும் கிழமை
ஓவியம்: மு. நடேஷ்
தன்வயப்படுத்தும் கிழமை
ஒரு கிழமையைத் திறக்கையில்
அந்த நாளுக்குரிய மகிழ்ச்சி கிடைத்துவிடுகிறது
அன்று வெயில் அகல விரித்து
மனதிற்கு இதம் சேர்க்கிறது
ஒரு பறவை அக்கிழமையின் வழியே புகுந்து
அக்கிழமையின் வழியே வெளியேறுகிறது
இளந்தென்னை மரம் குருத்துவிட்டு வளர்ந்து நீரைப் பருகத் தருவதும்
ஓங்கி உயர்ந்த பனைமரம் குலைதொங்கிக் காயை உண்ணக் கொடுப்பதும்
அக்கிழமைக்கு உரித்தாக்கி விடுகிறது
மேலும் அன்றைய நாளில்
அக்கிழமைக்குப் பேரீச்சம் பழச்சுவை இரண்டு மடங்கு கூடிவிடுகிறது
தேனீ அக்கிழமைக்குள் ரீங்காரமிடுகிறது
வண்ணத்துப்பூச்சி அக்கிழமைக்கு நிறத்தைக் கொண்டு செல்கிறது
நட்சத்திர ஒளி அக்கிழமையைத் தன்வயப்படுத்துகிறது
மாலைஅந்தி கங்கு சிதைந்து
தீஞ்சுடரை அணைய விடுகையில் ஒருவித சித்த பிரம்மை ஏற்படுத்துகிறது
ஆலங்குயில் நள்ளிரவு யாமத்தில் நிசப்தத்தை உணரச் செய்கிறது இருந்தபோதிலும்
ஒரு கிழமை என்பது
கனிந்த சொல்லை உதிர்க்க முடியாதபோது
ஒரு பாறை வெடித்துச் சிதறிச் சின்னா பின்னமாவதும்
துயரத்தின் மிகுத் துயரை அக்கிழமை உண்டுபண்ணுகிறது.
மின்னஞ்சல்: eas ter.bhc@gmail.com