காவிய நேர்த்தி கொண்ட தன்வரலாறு
வாழ்க்கைப் பாதை
(தன்வரலாறு)
செறுகாடு
தமிழில்: நிர்மால்யா
வெளியீடு:
சாகித்ய அகாதெமி
சென்னை
பக். 816
ரூ. 1,130
தன்வரலாற்றுப் புத்தகங்கள் இரண்டு வகைகளில் குறிப்பிடத் தகுந்தவை; ஒன்று வாழ்வின் வாக்குமூலம் என்ற வகையில்; இரண்டு அந்த வாழ்வு விரிந்த சமூகக் காலகட்டத்தின் ஆவணம் என்ற வகையில். இரு வகையிலும் மிகச் சிறப்பானதொரு வாசிப்பனுபவத்தை தரும் நூல் செறுகாடு எழுதிய ‘வாழ்க்கைப் பாதை’. தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய நூல்களின் பட்டியலில் செறுகாடுவின் ‘வாழ்க்கைப் பாதை’யைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் சுந்தர ராமசாமி.
தாய்வழிச் சமூக அமைப்பைக்கொண்டிருந்த திருவிதாங்கூரும் அதன் இறுக்கமான சாதி வேறுபாடுகள் கொண்டிருந்த வாழ்வியல் முறையுமாக, மிக வேறுபட்ட அனுபவத்தைத் தரக்கூடியது இந்நூல்.
தீண்டாமை மிக இறுக்கமான பிடியாக விளங்கிய பகுதி, சாதிப் பிரிவுகளிலும் உட்பகுப்புகளிலும் மரபார்ந்த நம்பிக்கைகள் அப்பிக் கிடந்ததொரு பிரதேசம். சிறு அசைவுகூடச் சாத்தியமற்றது என்றிருந்த சமூகம் மெல்லமெல்ல உருமாறுகிறது. இறுக்கங்கள் தளர்கின்றன. காட்சிகள் வேறொரு பரிமாணத்தைக் கொள்கின்றன. பாறையிலிருந்து கசியும் நீரைப் போல மனிதர்கள் இளகி மாறுகிறார்கள். மலைமுகடுகளில் சூரியன் எழுந்ததுபோலப் பரப்பு முழுவதும் புலனாகிறது. இத்தகைய விரிவான காட்சியை வாழ்க்கைப் பாதை நூலில் காண முடியும். தாய்வழிச் சமூக அமைப்பில் வந்த செறுகாடு எளிய கல்வி கற்று, சமூக மாற்றத்தில் தானும் ஒரு கருவியாகி அலைப்புண்ட வாழ்வை எடுத்துக் கூறுவதுதான் இந்நூல்.
1910ஐ ஒட்டி தன்வரலாறு தொடங்குகிறது எனலாம். பிஷாரடியான செறுகாடு தம் குடும்ப வரலாற்றைத் தொட்டுக் காட்டித் தன் வாழ்வுக்குள் நுழைகிறார். நம்பூதிரிகளுக்கும் நாயர்களுக்கும் இடைப்பட்ட சாதி பிஷாரடி. அதிலும் நம்பூதிரிகளின் கோயில்களில் ஊழியம் செய்யும் பிஷாரடி ஒரு பிரிவு; நாயர்களின் கோயில்களில் ஊழியம் செய்யும் பிஷாரடி வேறு பிரிவு. இவர்கள் அம்பலவாசிகள் என்றாலும், இரண்டு பிரிவுகளுக்குள் கொடுக்கல் வாங்கல்கூட இல்லை. தாய்வழிச் சமூகமான மருமக்கத்தாய அமைப்பில் பெண்தான் குடும்பத்தின் இணைப்புச் சங்கிலி. அவளும் குழந்தைகளும் அவர்களுக்குக் காப்பாளர்களான தமையன்மார்களுக்கும் மட்டும் பாத்தியதை உடைய குடும்ப அமைப்பு. இங்கு கணவன் என்பவர் குழந்தைகளின் தந்தை மட்டுமே; வேறு எந்த உரிமையும் இல்லை. கடமைகளும் இல்லை; குளிக்கத் தேவையான எண்ணெயும் வருடத்திற்கு ஒரு உடுப்பும் மட்டுமே கணவன் செய்ய வேண்டியது. மற்றபடி வந்துபோய்ப் படுக்கையைப் பகிர்ந்துகொள்பவன் மட்டுமே கணவன். அந்தக் கடமையைக்கூடச் சரியாகச் செய்யாமல் தட்டிக் கழிக்கும், தன் படுக்கையை வேறுவேறு இடங்களுக்கு மாற்றிக்கொள்ளும் கணவன்மார்களே அதிகம். மனைவிக்கும் கணவனிடம் பெரிய உரிமைகள் ஏதும் இல்லையென்பதும் நோக்கத்தக்கது. (செறுகாடுவின் மனைவி வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கும்பொழுது அந்தப் பணம் அவர்களது குடும்பத்தினருக்கே அதாவது, தாய்வீட்டுக் குடும்பத்தினருக்கு மட்டுமே உரிமையுடையதாகிறது. செறுகாடு அதிலிருந்து சல்லிக்காசும் பெற முடியாது.)
குடும்பம், கட்சி, சமூக உறவு சார்ந்து ஏராளமான மனிதர்கள் இந்த தன்வரலாற்றில் காணக் கிடைக்கிறார்கள். சிலர் கல் மேல் எழுத்தாய்ப் பொலியும் பாத்திரங்கள். குறிப்பாகச் செறுகாடுவின் மனைவி லட்சுமிகுட்டி. காம்ரேட் லட்சுமிகுட்டி என்று சொல்வதே பொருந்தும். ஏற்கெனவே திருமணமாகி மணவிலக்குப் பெற்றிருந்த லட்சுமிகுட்டியைக் குடும்பத்தின் எதிர்ப்பை மீறிச் செறுகாடு மணம் முடிக்கிறார். ஏன் லட்சுமிகுட்டிதான் என்று செறுகாடு விவரிக்கும் இடங்கள் உவப்பூட்டுவை. ஆனாலும், இவ்வளவு விரும்பித் திருமணம் செய்துகொண்ட பெண்ணினுடைய உறவில் அவருக்குப் பலத்த சந்தேகம். ஊசலாட்டமும் சந்தேகமும் தவறான கணிப்புகளுமாக அந்த உறவு பல நேரங்களில் கேள்விக்குரியதாகிறது. ஆனால் அத்தனை கேள்விகளும் செறுகாடின் மனத்தில் மட்டும்தான். லட்சுமிகுட்டிக்கு எந்த ஊசாலட்டமும் இல்லை. தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாத ஒரு மாசற்ற கம்யூனிஸ்ட்டாகவும் லட்சுமிகுட்டி மிளிர்ந்து நிற்கிறார்.
நிலவுடைமை அமைப்பும் இறுகிய பிடி கொண்ட சமூக அமைப்பும் கெட்டித்தட்டிப்போன சடங்குகளுமாக இருந்த கேரள மண்ணில் சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் நுழைகிறது. இறுக்கம் லேசாக, மிக லேசாகத் தளர்கிறது. காங்கிரஸ் நுழையாத இடம் ஏதுமில்லை என்று காட்சிகள் விரிகின்றன. ஓரிடத்தில் காங்கிரஸ் அமைப்புக்கூட எட்டிப் பார்க்காத வேம்பநாட்டுப் பகுதிக்குப் போலீஸ் வராது என்ற வரிகள் காங்கிரஸ் எந்த அளவுக்கு ஊடுருவியிருந்தது என உணர வைக்கிறது. தீண்டாமை யாத்திரையின் ஒரு பகுதியாக காந்தியும் அந்தப் பகுதிக்கு வருகிறார். செறுகாடு காந்தியைப் பார்த்திருக்கிறார். ஆனால் காந்தியைப் பற்றி காங்கிரஸார் சொன்ன வார்த்தைகளும் விவரணைகளும் தன் மனதில் பெரிதாகப் பதியவில்லை என்றும் நேர்மையோடு பதிவுசெய்கிறார். காங்கிரஸில் வலது, இடது எனப் பிரிவு நிகழ்ந்தபோது செறுகாடு இடதுசாரிப் பக்கம் நிற்கிறார். ‘மலபாரின் நம்பூதிரிகளின் வட்டத்திலும் சிறு சலசலப்பு உண்டாகிறது. சமுதாயத்தில் மேல்தட்டிலுள்ள வகுப்புவாத அமைப்புகளின் முற்போக்கு நடவடிக்கைகள் புரட்சிகர இயக்கத்திற்கு எப்படி உதவிகரமாக விளங்கின என்பதை இப்போது திரும்பிப் பார்க்கிறேன். மிகச் சிறிது எனினும் அத்தகைய அலைகளின் ஒன்றுதிரண்ட பெரும் பிரவாகத்தையே அரசியல் பொருளாதாரப் புரட்சியாகக் கருதுகிறேன்’ என எழுதுகிறார் செறுகாடு.
1925 வாக்கில் செறுகாடு சார்ந்திருந்த பிஷாரடி பிரிவிலும் சிறு முன்னேற்றங்கள் தொடங்குகின்றன. சமஸ்த கேரள பிஷாரடி சமாஜம் தொடங்கியிருக்கிறது. அதன் நிழலில் இளைஞர் சங்கம் ஒன்று உருவாகிறது. யுவ சைதன்யம் என்கிற மாத இதழ் வெளிவருகிறது. அது கூறிய ஒரு கருத்து முக்கியத் திருப்பத்தைத் தருகிறது. ‘கோயில் ஊழியம் செய்து வாழலாம் என்கிற பேராசை வேண்டாம். வழிபாடுகள் குறைந்துவிட்டன. நவீன கல்வியைப் பெற்று அரசாங்கப் பணிகளிலும் நுழைய வேண்டும். புதிய புதிய வாழ்வாதாரங்கள் நோக்கிப் பிரவேசிக்க வேண்டும்.’ இதுதான் செறுகாடுவின் வாழ்விலும் நடந்தது. கோயில் ஊழியம் தவிர்த்து, அவர் கல்வி பயிலச் செல்கிறார். அதுவும் சுலபமானதாக இல்லை. பள்ளிகளின் வளர்ச்சியும் பாடத் திட்டங்களும் சுவாரசியமானவை.
பிஷாரடி சமாஜம் முக்கியமான எதிர்ப்பை முன்னெடுக்கிறது. தாலிகட்டுக் கல்யாணம் என்ற பெயரிலும் ஸேகம் என்ற பெயரிலும் நடக்கும் சடங்கும் எதிர்ப்புக்கு உள்ளாகின்றன. மூன்று நான்கு வயதுக்குள்ளான பெண் குழந்தைகளுக்குத் தாலிகட்டுக் கல்யாணம். அது முடிந்ததும் மூடிய அறைக்குள் கொன்றை மாலையில் அந்தக் குழந்தையைப் படுக்க வைத்து முதியவர் ஒருவரால் யோனி தீண்டும் நிகழ்வு. தாலிகட்டுக் கல்யாணம் நடக்காமல் அந்தப் பெண் பூப்பெய்திவிட்டால் அந்தப் பிஷாரடிக் குடும்பமே ஒதுக்கி வைக்கப்படும். நம்பூதிரிகளின் இத்தகைய கட்டுப்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. சமூக மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதன்று. ஒவ்வொரு சமூக மாற்றத்திற்கும் பாறை உடைந்து கூழாங்கற்களாகும் கால நீட்சி தேவையாகிறது.
இரு பெரும்புரிகளாக இந்தத் தன்வரலாறு பின்னிச் செல்கிறது. பிஷாரடி தாய்வழிக் குடும்பத்தின் அமைப்பு, அதில் தாய்மாமனின் கடமை, இறுக்கமான சடங்குகள், கைவிட முடியாத பொறுப்புகளென விரியும் குடும்பப் புரி ஒருபக்கம். கல்வி கற்றுச் சுயசிந்தனையுடன் சமூகப் பொறுப்புகளில் பங்கு வகித்து இடதுசாரி காங்கிரஸ்காரராகவும் பின் கம்யூனிஸ்ட்காரராகவும் செறுகாடுவின் அனுபவப் பயணங்கள் ஒரு புரி. இரண்டுமே ஏற்ற இறக்கங்களையும் திடீர்த் திருப்பங்களையும் பெருமிதத் தருணங்களையும் உள்ளடக்கியவை. செறுகாடுவுக்குத் தன்னைப் பற்றிய இயல்புக்கு மீறிய பெருமிதங்கள் இல்லை. கோடைக்காலம் சூரியன் காயும், மழைக்காலத்தில் மழை வரும் என்பதைப்போல இயல்பாய்த் தன் பயணத்தைக் கூறிச் செல்கிறார். ஆயின், அவமானமடைந்த தருணங்களையும் தாம் மன்னிப்பு கேட்ட தருணங்களையும் அவர் விவரிக்கும் இடங்கள் அருமை. கருத்து வேறுபாடுகள் மோதல்கள் தாண்டியும் மனித உறவுகளை நிலைநிறுத்திக்கொள்ளும் தன்மை ஒரு நாவலுக்கு ஒப்பானது. தாய்மாமனான குஞ்ஞு அம்மாமனுக்கும் அவருக்குமிடையே நடக்கும் சம்பவங்களும் உரையாடல்களும் காவிய நேர்த்திகொண்டவை.
சிறிதுசிறிதாகக் காட்சி மாறுகிறது. காங்கிரஸ்காரனான செறுகாடு கம்யூனிஸ்ட் ஆகிறார். எந்த இயக்கமாயினும் அதுசார்ந்த கொள்கைகளில் எவ்வளவு பிடிப்பும் இறுக்கமுமாய் உண்மைத் தொண்டர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்பொழுது, கட்சி என்பதன் திரண்ட கருத்து வலிமைபெற்று நிற்குமிடம் புலனாகிறது. தவறு செய்ய நேரும்போது கட்சியே கண்முன் நிற்கிறது. ‘அம்மா, தாய்மாமன், கடவுள் ஆகியோரின் வரம்புகளைக் கடந்து வெளியேறி விடுதலையடைந்த நான் இயக்கத்தைக் கண்டு மட்டும்தான் அஞ்சினேன். எந்த நற்செயல் செய்யும் வேளையிலும் இயக்கத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதே எனது குறிக்கோளாக இருந்தது. எந்தத் தீயசெயலை நிகழ்த்தச் சிந்திக்கும் வேளையிலும் இயக்கத்தைக் கண்டு பயந்து நடுங்கினேன்’ என்கிறார் செறுகாடு.
கம்யூனிஸ்ட் கட்சி காலூன்றித் தழைத்து வளர்ந்த விதமும் அதன் இடர்ப்பாடுகளும் கண்முன் விரிகின்றன. அன்றைய தேசிய நீரோட்டத்திற்கு எதிரான கருத்தியல்களை முன்வைக்க நேர்கையில் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் ஒருகணம் திகைத்து மருளும் தருணங்களையும் செறுகாடு காட்சிப்படுத்துகிறார். தன்னை முற்றுமுழுக்கக் கட்சிக்காக ஒப்புக்கொடுத்து விட்ட செறுகாடுவின் அரசியல் செயல்பாடுகள் எந்த சாகசத்திற்கும் குறைவில்லாதவை. உண்மையில், சாகசங்களைவிட மண்ணில் கால் பதிந்த அரசியல் சமூகப் பணியே எதிர்பாராத அம்சங்களைக் கொண்டது. செறுகாடு மாறாத பற்றும், ஆணைக்கு இணங்கிச் செயல்படும் தொண்டர் மனப்பாங்கும் கொண்டவர். எனினும் சிலநேரங்களில் தலைமையின் போக்கு உண்மையான களநிலவரத்தைப் புரிந்துகொள்ளாமல் செயலாற்றச் சொல்கையில் அதன்மேல் விமர்சனங்களை எடுத்துவைக்கவும் செறுகாடு தவறவில்லை. கல்கத்தா ஆய்வறிக்கையும் ரணதிவேயின் முடிவுகளும் அடிமட்டத் தொண்டர்களைப் பந்தாட வைக்கின்றன. சுதந்திரப் போராட்டக் காலம்வரை இருந்த நிலைமை வேறு; விடுதலையடைந்ததும் காங்கிரஸும் கம்யூனிஸ்டும் இருவேறு நிலைப்பாடுகளை எடுக்கின்றன. போராட்டக் காலத்திலிருந்த காங்கிரஸ் வேறு வகையானது. அதிகார ருசி கொண்ட காங்கிரஸ் வேறு வகையானது. லட்சியக் கனவுகள் தகர்ந்து அன்றாட வாழ்வியல் சிக்கல்கள் நெருக்குகின்றன. செறுகாடு ஒவ்வோர் இருண்ட மூலையையும் காட்டித் தருகிறார்.
நன்றியும் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக எந்த அளவிலும் தன்னலம் மறந்து பணியாற்றும் செம்மல்கள் எப்போதும் பெருமிதத்தோடு விழி நீரைத் துளிர்க்கச் செய்பவர்கள். செறுகாடு அவ்வாறு பலரைச் சுட்டுகிறார். வைசூரி என்னும் பெரியம்மை வந்து படுத்திருக்கும் குஞ்ஞு அம்மாமனுக்கு வைத்தியம் பார்க்க வரும் கிருஷ்ண பள்ளம் நம்பூதிரி, தொற்று நோய் எனினும் அச்சமற்று நோயாளியின் அறையைச் சுத்தம் செய்து வைத்தியம் பார்க்கிறார். அடுத்தவர், புலாமந்தோளின் பீடித் தொழிலாளியும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியச் செயலூக்கம் கொண்டவருமான நல்லோளி குஞ்ஞிக்கண்ணன். பஞ்சம் தலைவிரித்தாடி, காலராவும் பரவிய காலத்தில் புலாமந்தோளின் வடபகுதியில் தனித்தீவாக விடப்பட்ட தாழ்த்தப்பட்ட செறுமர் மக்களின் பகுதிக்குச் சென்று காலராவால் இறந்த பிணங்களைத் தானே புதைத்து, அம்மக்களுக்காகப் பணியாற்றியவர் இவர். வீர சாகசமின்றி அப்பகுதியைச் செறுகாடு விவரிக்கிறார். வீர சாகத்தினும் கடுமையானது மக்கள் சேவை. ’தெய்வத்துடன் இணைந்து’ என்றே அந்த அத்தியாயத்திற்குத் தலைப்பிட்டிருக்கிறார்.
கம்யூனிஸ்டுக்குத் தெய்வமும் சடங்குகளும் உண்டா? செறுகாடுவின் தாய் இறந்தபோது தமக்கைகளின் கண்ணீருக்காக அவர் சடங்குகளைச் செய்கிறார். அவ்வப்போது கடவுளரையும் பணிகிறார். அதற்கு உண்மையான விளக்கமும் தருகிறார். ‘நான் கடவுளை அழைக்கும்போது வாசகர்களான நீங்கள் தவறாக என்னை எண்ண வேண்டாம். வருத்தம் தரும் பிரச்சினைகளிலும் மனம் அல்லலுறும்போதும் பல்லாண்டுகளாக நீண்டு நிற்கும் பண்பாடு ஒரு நெட்டுயிர்ப்பாக வெண்ணெய் உருகும் ஒலியைப்போல வெளியே வருகிறது’ என்கிறார் செறுகாடு.
அலைக்கழிக்கப்படும் தொண்டனாக, அவரது குடும்பம் படும் பாடுகள் எழுத்தில் விரிகின்றன. கொண்டாடி மகிழ்ந்த ஊர் நீ இருப்பதே பாரம் என்கிற நிலைக்கு வந்துவிடுகிறது. போராட்டக்காரனின் மனதில் அலை ஓயாத போராட்டம். ஆனால் செறுகாடு ஒரு கட்டத்தில் தெளிவு கொள்கிறார். அங்கு அவர் எழுதியிருக்கும் வரி அபாரமானது. ‘ஸாமுத்ரோஹி தரம்கா’ அலை, சமுத்திரத்தினுடையது; ஒருபோதும் சமுத்திரம், அலையினுடையது அல்ல. சமுத்திரம் என்றால் அது மக்கள்திரள்; அலை தனிமனிதன். போராட்டம் தொடர்கிறது. செறுகாடு கைதாகிறார். அத்தோடு அந்தக் கதைகூறல் முடிகிறது. ஆயினும் நிகழ்வுகள் தொடரவே செய்கின்றன.
பழுப்பு நிறமும் கருப்பும் வெள்ளையுமாக ஒரு திரைப்படத்தைப் பார்த்த அனுபவத்தை இந்த தன்வரலாற்று நூல் வழங்குகிறது. சடங்குச் சம்பிரதாயங்களும் மனவார்ப்புகளும் சமூகத்தின் கூட்டு மனநிலையும் படிப்படியாக மாறிவரும் இயல்பைத் திரைவிரிவதைப்போல இந்நூல் காட்டிச் செல்கிறது. மானுட வாழ்வைச் சிக்கலாக்கிக்கொள்ளச் சடங்குகளே போதும் என்கிற எண்ணம் எழாமல் இல்லை. தனக்கான விலங்குகளைப் பூட்டிக்கொள்வதில்தான் மனிதருக்கு எத்தனை உற்சாகம்.
பண்பாட்டு மானுடவியலை ஆய்வு செய்வோருக்கு ஏராளமான தகவல்களைத் தரும் புத்தகம் இது. உணவுப் பழக்கம் பல இடங்களில் சுட்டப்படுகிறது. வெற்றிலை போடும் பழக்கம் மிகப் பரவலானது. அதிலும் வெற்றிலைப் போட்டுக் கண்ட கண்ட இடங்களில் துப்புவது அன்றாடச் செயல்பாடு. தேநீரும் வெற்றிலையுமே முக்கிய இடம் பிடிக்கின்றன. பறை என்கிற முகத்தலளவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். திருப்பாவையில் வரும் பறையின் நினைவு எழாமல் இல்லை. சடங்குகள் வித்தியாசமானவை. மருமக்கத்தாய உரிமைக்கான கடமைகளும் வேறுபட்டவை. வசதி படைத்தவர்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் அதிர்வேட்டு வெடித்து அறிவிக்கும் பழக்கமும் பணமில்லாதவர்கள் கூவி அறிவிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. பெண்ணாக இருந்தால் கதவுப் பலகைகளைத் தட்டி அறிவித்தலே போதுமானது. சமஸ்கிருதக் கல்வி பரவலாக இருந்திருக்கிறது. இந்த நூலில் உள்ள ஏராளமான சமஸ்கிருத வாக்கியங்கள் பேச்சின் நடுவே சொலவடைபோல சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லும் வழக்கம் இருப்பதைக் காட்டுகின்றன.
இந்தத் தன்வரலாற்றின் பின்புலமாக இருப்பது அன்றைய சுதந்திரப் போராட்டக் காலகட்டமும் அதன் விளைவாக எழுந்த சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளும் நம்பூதிரிகளின் இறுகியிருந்த பிடிகள் தளர்கின்றன. இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு வகித்த முக்கியமான இடம் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடுமீது கொண்டிருந்த மதிப்பைப் பல இடங்களில் எழுதிச் செல்கிறார் செறுகாடு. அதேபோல ஆரியா பள்ளத்தைப் பற்றி இந்த நூலில்தான் நான் முதலில் படிக்கிறேன். மிகப் பிரபலமான நம்பூதிரிக் குடும்பத்திலிருந்து வந்த, புரட்சிகரமான மாற்றங்களுக்கு தனது வாழ்க்கையை உள்ளாக்கிக்கொண்ட ஆர்யாபள்ளத்தின் நடவடிக்கைகள் குறிப்பிடத் தகுந்தவை. பெண்கள் சமூகக் கட்டுகளிலிருந்து வெளியே வந்து பொதுச் சேவைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்கிற இடங்கள் நெகிழ வைப்பவை. அதைப்போல கட்சி சார்ந்து செயல்பட்ட பல்வேறு ஆளுமைகளின், தொண்டர்களின் குணாதிசயங்களையும் செறுகாடு மிக அழகுற விவரித்துள்ளார்.
அலங்காரப் பூச்சுகளற்ற எளிய நடை, தன்னை முன்னிருத்தாத பாங்கு என செறுகாடுவின் மொழி
நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. பல நேரங்களில் நாம் மொழிபெயர்ப்பு நூலை வாசிக்கிறோம் என்கிற உணர்வு தோன்றாததற்கு நிர்மால்யாவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். சமஸ்கிருத சுலோகங்கள் விரவி வரும் இந்த நூலில் அவற்றின் மொழிபெயர்ப்பில் மட்டும் கவிதைத் தன்மை கைகூடவில்லை எனலாம். அடிக்குறிப்புகள் சமூகப் பழக்கங்களைப் புரிந்துகொள்ளப் பெருமளவு உதவி புரிகின்றன. மிக சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய புத்தகம் செறுகாடுவின் வாழ்க்கைப் பாதை.
மின்னஞ்சல்: chitra.ananya@@gmail.com