அறியப்படாத ஆளுமை: கு. பரமசிவம்
அவர் வாழ்ந்த காலத்தில் அங்கீகரிக்கப் படவில்லை. புகழ் வெளிச்சமோ விருதுகளோ அவரை வந்தடையவில்லை. எனினும் புறச்சூழலால் அதிகம் பாதிக்கப்படாத ஆழ்கடல் போன்று தமிழ்ப் பணியையும் வாழ்வையும் அமைத்துக்கொண்டவர். சிறந்த பேராசிரியராக, நூலாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, இரு மொழிப் புலமை பெற்றவராக, சொற்பொழிவாளராக, கட்டுரையாளராக, பன்முக ஆளுமை கொண்டவர் பேராசிரியர் கு. பரமசிவம். மு.வ., தமிழண்ணல், சஞ்சீவி போன்ற தமிழ் ஆளுமைகளுக்கு நடுவே தமிழாகவே வாழ்ந்தவர்.
மிகக் குறைந்த தகவல்களோடுதான் கு. பரமசிவம் பற்றிய தேடுதலைத் தொடங்கினேன். ஆனால் தேடத் தேட அவருடைய தமிழ்ப் பற்றும் பணியின் ஆழமும் எல்லை தாண்டிய மொழிப் புலமையும் பிரமிப்பை ஏற்படுத்தின. அவர் பல நூல்களை எழுதிக் குவிக்கவில்லை. ஆனால் அவர் எழுதியவை இன்றளவும் மறுபதிப்பிற்கான தேவையைக் கொண்டிருக்கின்றன.
“என்றோ சந்தித்த / அவன் பெயர் / அவள் பெயர் / எதிரிலிருக்கும் உன் பெயர் / எனக் காலம் / எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும் / எனக்கு என் பெயர் தவிர’’ என்று கல்யாண்ஜியின் கவிதை ஒன்று உண்டு. இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும். எவ்வளவு நெருங்கிய உறவுகளாக இருந்தாலும் காலப்போக்கில் அவர்கள் குறித்த நிகழ்வுகள், நினைவுகள் மறைந்துவிடுவது இயல்பு. ஆனால் ஆசிரியர் மாணவர் உறவுக்கு இது பொருந்தாது. நமது வாழ்க்கையை மாற்றிய, நமக்கு முன்னுதாரணமாக இருந்த, தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர்கள் நம் நினைவை விட்டு நீங்குவதில்லை. அப்படி ஒரு ஆசிரியராக, இறந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் கு.ப.
இந்தக் கட்டுரைக்கான தகவல்களுக்காக அலைபேசியில் பலருடன் உரையாட நேர்ந்தது. அதில் குறிப்பிடத் தகுந்தவர் கு.ப.வின் மாணவரான சுந்தர் காளி. அவரோடு பேசும்போது, ‘தன் ஆசிரியர். தன்னை உருவாக்கியவர்’ என்று வாஞ்சையுடனும் உற்சாகத்துடனும் குறிப்பிட்டார். கு.ப. இறப்பதற்குப் பத்து நாட்களுக்கு முன்பு தன்னுடன் மொழியியல் குறித்து உரையாடியதையும் கடினமான மொழியியல் வகுப்பைக்கூட எளிமையாகச் சமகால உதாரணங்களுடன் விளக்குவார் எனக் கு.ப. பற்றிய பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். இத்தனை வருடங்களுக்கு பின்னரும் தம் ஆசிரியரைப் பற்றிப் பேசும்போது அவர் குரலில் வெளிப்பட்ட அன்பும் அபிமானமும் சொல்லில் அடங்காது.
கு. பரமசிவம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூரில் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் பிறந்தார். அவரது பள்ளிக் கல்வியில் பாடப்பிரிவு கணிதமும் அறிவியலுமாக இருந்தபோதும் தமிழில் ஆர்வமுடையவராக இருந்தார்.
கு.ப.வின் வளரிளம் பருவம் மிகுந்த வறுமையில் கழிந்தது. அவருடைய தந்தையார் தினமும் காலையில் திருநீறிட்டுத் தேவாரப் பாடல்களை ஓதும் வழக்கம் உடையவர். இவரோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இப்படி பல முரண்களைக் கொண்டிருந்தபோதும் தந்தையார் இறக்கும்வரை ஒருமுறைகூட அவர் எதிரில் அமர்ந்ததோ எதிர்த்துப் பேசியதோ இல்லை என்று கு.ப.வின் சகோதரர் நினைவுகூர்ந்தார்.
இளமைப் பருவத்திலிருந்தே தன்னைத் தொடர்ந்து வந்த வறுமையை அவர் பொருட்படுத்தாமல் இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளைச் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே பல பேச்சுப் போட்டி, சிறுகதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வெல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
தொடக்கத்திலிருந்தே இலக்கணக் கல்வியில் ஆர்வம் கொண்டிருந்த அவருடைய கவனம் மொழியியல் துறைக்குத் திரும்பியது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 1970இல் மொழியியலில் டிப்ளமா பட்டம் பெற்றார். பின்னர் புல்ப்ரைட் பயணக்கொடை (Fulbright Traval Grant) பெற்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஜேம்ஸ் மெக்காலே என்ற மொழியியல் அறிஞரின் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். மொழியியலில் புதிய கண்டுபிடிப்பிற்காக 79 பக்கங்களே கொண்ட Effectivity and Causativity in Tamil என்று ஆங்கிலத்தில் அளிக்கப்பட்ட ஆய்வேட்டிற்கு சிகாகோ பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் அளித்தது.
கு.ப. 1957இல் மயிலாடுதுறை AVCC கல்லூரியிலும் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். முனைவர் பட்டம் மேற்கொள்ள அமெரிக்கா சென்றபோது சிகாகோ, கலிபோர்னியா, விஸ்கான்சின் ஆகிய பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பித்தார். பின்னர் அமெரிக்கன் கல்லூரியின் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
அமெரிக்கன் கல்லூரி தன்னாட்சி பெற்றபோது தமிழ்ப் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதில் பெரும்பங்காற்றிய பெருமை கு.ப.வுக்கு உண்டு. அக்கல்லூரியில் ஆரம்பத்தமிழ் சான்றிதழ் பட்டயப் படிப்பு இருந்தது. அப்பட்டயப் படிப்பு மேற்கொண்ட அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழ்க் கற்பித்தார். இலக்கியம், மொழியியல், வரலாறு, சமூகவியல், மானுடவியல், சமயம், அரசியல், அறிவியல் போன்ற துறைகளில் ஆய்வு மேற்கொண்ட பல அயல் நாட்டு மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். அவர் வீட்டில் பல அயல்நாட்டு மாணவர்கள் தங்கியிருந்து ஆர்வத்துடன் தமிழ் கற்று வந்ததையும், அவர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் தமிழகப் பாரம்பரிய உடை அணிந்து விருந்தை ரசித்து உண்பதையும் பலமுறை நேரில் கண்டிருப்பதாக அவரது நெருங்கிய உறவுகள் தெரிவித்தனர். ( மதுரை கு. பரமசிவத்திடம் தமிழ் கற்றதாக மார்த்தா ஆன்செல்பி காலச்சுவடில் வெளிவந்த ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார்).
இலக்கியம் குறித்து அவர் சொற்பொழிவாற்றும் போது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுக் கால இலக்கியப் பரப்பில் அலைந்து மீளும் உணர்வு ஏற்படும் என்று அவரது அயல்நாட்டு மாணவர் ஒருவர் குறிப்பிட்டதாக சுந்தர் காளி அமெரிக்கன் கல்லூரி மலர் ஒன்றில் எழுதியிருப்பார்.
வகுப்பறையில் மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களும், அவர் அளித்த விளக்கங்களுமே ‘இக்காலத் தமிழ் மரபு’ நூல் உருவாகக் காரணமாக இருந்தது என்று கு.ப. இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார். தமிழ் மொழியின் அமைப்பை விளக்கிச் சொல்லும் முதல் நூலாக இந்நூல் விளங்குகிறது. நூலின் முன்னுரையில் மொழிக்கல்வி குறித்து, ‘ஒருவன் தாய்மொழியாகிய தமிழைப் பேசுவதனாலேயே அவன் தமிழறிவு பெற்றவனாகிவிட மாட்டான். மொழியைப் பேசுவது வேறு. மொழியைத் தெரிந்துகொள்வது வேறு. முந்தியது செய்திறன்; பிந்தியது அறிதிறன். பல்வேறு காரணங்களால் மொழியைப் பேசும்போதும் எழுதும்போதும் பிழைகள் நேரலாம். எது பிழை, எது சரி என்று உணரும் திறனே அறிதிறன். அத்தகைய திறனைப் பெறுவதே மொழிக் கல்வியாகும் என்று விளக்கியிருப்பார்.
சொல்லமைப்பு, உரையாடலில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தலைப்பையும் பல எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கியிருப்பார். இணைக்கப்பட்ட பெயர்கள் (conjoined nouns) குறித்த விளக்கத்தில் நடைமுறையில் பேசுவதிலும் எழுதுவதிலும் ஏற்படும் பிழைகளை விளக்கும்போது, ‘ஓர் இணைப்பில் ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்கள் இருப்பதனால், அவ்விணைப்பை எழுவாயாகக் கொண்ட வாக்கியத்தின் பயனிலைப் பன்மையாகவே அமைய வேண்டும். அதுவே இலக்கண நெறியும் தருக்க முறையும் ஆகும்’ என்று கூறி நடைமுறையில் பயனிலை ஒருமையாகவே எழுதப்படுவதை, ‘வார்த்தைகளுக்குப் பொருளாழமும் வேகமும் ஏற்படுகிறது. (‘புதுமைப்பித்தன்; பாட்டும் அதன் பாதையும்’) ‘சமையல் குறிப்பும், பட்டியலும் நீளமாக இருந்தது.’ ‘படிப்பும், உத்தியோகமும் அவளை நிமிர்ந்து நிற்க வைத்தது. (வாஸந்தி; நிஜங்கள்; ஆனந்த விகடன் 19-12-1978) என்பன போன்ற பல எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கியிருப்பார்.
அவ்வாறே, ‘ஒவ்வொரு’ என்ற சொல்லைக் கையாளு கையிலும் ஏற்படும் குழப்பத்தை விளக்க முற்படும்போது, ‘ஒவ்வொரு வீடுகளில் புருஷன் பெண்டாட்டியைத் தலையில் வைத்துக்கொண்டு ஆடுகிறான் என்பது போன்ற வாக்கியங்களை உரையாடலில் கேட்கிறோம். இங்கு ஒவ்வொரு என்பது ஒருமை. வீடுகள் என்பது பன்மை. இத்தகைய ஒருமை, பன்மை மயக்கம் ஒருவகை. சிலரது எழுத்தில், ‘ஒவ்வொரு காயும் படுக்காளிச் சண்டிமாடு போலப் படு உபத்திரவம் செய்கின்றன’ (தி.ஜ.ர; கேரம் ஒரு ரணகளம்) போன்ற வாக்கியங்கள் வருகின்றன. இங்கு ஒவ்வொரு காயும் என்பது ஒருமை, செய்கின்றன பன்மை. இத்தகைய ஒருமை பன்மை மயக்கம் மற்றொரு வகை. இவ்விரு மயக்கமும் தவறேயாகும். சொல்லளவிலும் பொருளளவிலும் ஒவ்வொரு என்பது ஒன்றையே குறிக்கும். ‘ஒவ்வொரு வீட்டில் என்றும், ஒவ்வொரு காயும்... செய்கிறது என்றும் பேசுவதும் எழுதுவதுமே சரியாகும்” என்று எளிமையாக விளக்கியிருப்பார்.
வினையடைகளின் சிறப்பை விளக்கும்போது, ‘தமிழ் வினையடைகளில் ஒருவகையாகிய செய்து, செய்ய என்னும் எச்சங்களுக்கு மற்றொரு சிறப்பு உண்டு. அதாவது, அவ்விரண்டும் சேர்ந்தோ தனித்தனியாகவோ ஒரு வாக்கியத்தில் எத்தனை வேண்டுமானாலும் வரலாம். காட்டிலே சீதையைக் காணவில்லை என்று தெரிந்தவுடனே, டெலிபோனைக் கையிலே எடுத்து, மிதிலையைக் கூப்பிட்டு, ஜனகரிடம், ‘மாமா! மைதிலி அங்கே வந்தாளா?’ என்று கேட்டு, அவர் இல்லை என்று சொன்னபிறகு அயோத்தியை அழைத்துப் பரதனிடம், ‘தம்பி! உனதருமை அண்ணி அங்கே வந்தாளா?’ என்று விசாரித்துத் தெரிந்துகொள்ள இராமனால் முடிந்ததா? இராமன் காலத்தில் இல்லாத வசதி நம் காலத்தில் இருக்கிறது.’’ (கு. பரமசிவம் ‘இக்காலத்தமிழ் மரபு’ பக். 258) என அவர் விளக்குவார். கடினமான இலக்கண விதிகளை இவ்வாறான சான்றுகள் எளிமை ஆக்குகின்றன. நூல் முழுவதும் இத்தகைய எளிய நடை விரவியிருப்பதைக் காண முடிகிறது.
மற்றொரு நூல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக 1984இல் வெளிவந்த ‘மொழியியல் அறிமுகம்’ என்னும் நூலாகும். மொழியியல் குறித்த அறிமுகத்திற்கு அடிப்படை நூலாக அமைந்துள்ளது.
மொழியாகப் பயன்படும் ஒலிகளைப் பேச்சொலிகள் என்பர். இப்பேச்சொலிகளைப் பற்றிய ஆராய்ச்சியே ஒலியியல் ஆகும். இது முதல் நிலை. பேச்சும் எழுத்தும் எல்லா மொழிகளிலும் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, தமிழில் இலை என்று எழுதுகிறோம்; எலெ என்று பேசுகிறோம்; பேச்சில்கூட எலெ என்பதிலுள்ள எகரங்கள் எடு என்பதிலுள்ள எகரத்தைப்போல உச்சரிக்கப்படுவதில்லை. இந்த எகர வேறுபாடுகளை ஆராய்வது ஒலியியல். எலெ என்பதன் முதலிலுள்ள எகரத்தை எடு என்பதன் எகரத்தைப்போல உச்சரித்தாலும் பொருள் மாறிவிடாது. ஆனால் எகரத்துக்குப் பதில் அகரத்தை உச்சரித்தால் (அலெ என்றாகிப்) பொருளே மாறிவிடுகிறது. இவ்வாறு பொருள் மாற்றத்துக்குக் காரணமான ஒலிகளையே ஒலியன்கள் என்கிறோம் என்று ஒலியன்கள் குறித்து எளிமையாக அறிமுகம் செய்துவிட்டு, ஒலியனியல் அறிமுகம் தொடங்கி ஆக்கமுறை ஒலியனியல்வரை ஏழு தலைப்புகளில் ஒலியனியல் குறித்து விளக்கியுள்ளார். இவ்வாறே ஒலியியல், உருபனியல், தொடரனியல், பொருளனியல், நைடாவின் விதிகள் உள்ளிட்ட பல செய்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. Effectivity and Causativity in Tamil என்ற தலைப்பிலான கு.ப.வின் முனைவர் பட்ட ஆய்வேட்டை Dravidian linguistics Association 1979இல் நூலாக வெளியிட்டுள்ளது.
கு.ப. அயல்நாட்டு மாணவர்களுக்குத் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தமிழ் கற்பித்து வந்தார். அதன் விளைவாக அவர் ஜேம்ஸ் லிந்தோம் (James lindholm) என்ற பேராசிரியருடன் இணைந்து Basic tamil reader and grammer என்னும் நூலை எழுதி மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். அந்த நூலே இன்றுவரை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் அயல்நாட்டு மாணவர்கள் தமிழ் கற்கப் பாட நூலாகப் பயன்பட்டு வருகிறது.
மகாகவி பாரதியாரின் கவிதைகளை மொழியியல் நோக்கில் அணுகியிருக்கும் ‘பாரதி தமிழ்’ என்ற கட்டுரை கழக மணிவிழா மலரில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில் ஒலியனியல், உருபனியல், தொடரனியல் ஆகியவற்றின் அடிப்படையில் பாரதியார் கவிதைகளில் காணப்படும் பழைமை, புதுமைக் கூறுகள் விளக்கப்பட்டுள்ளன.
சான்றாக, ‘மெய்வரிசையில் ககரம் பன்னீருயிருடன் மொழி முதலில் வருமென்று இலக்கண நூல்கள் கூறும்..........சகரமுதல் தமிழ்ச் சொற்களைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.’ (பார்க்க; கு. பரமசிவம், 1980) சகர மெய் ஔ என்னும் ஓருயிர் தவிர பிறவற்றோடு கூடி மொழி முதலில் வரும் என்பாரும் உண்டு. பாரதி புதிய ஆத்திசூடியில்,
சரித்திரம் தேர்ச்சி கொள் சைகையில் பொருளுணர் சௌரியம் தவறேல்
எனும் தொடர்களை அமைத்துள்ளார். இவற்றில் சரித்திரம் சௌகரியம் ஆகியன வடசொற்கள். ‘சைகை, செய்கை என்பதன் திரிபு எனக் கொள்ளலாம். கௌ முதல் சொல்லின்மையும் ச, சை, சௌ என வரும் சொல்லாட்சியும் புதுமைக் கூறுகள் எனலாம்’ என்று விளக்கியிருப்பார்.
இவ்வாறே ஞகர மெய் ஆகாரத்தோடு கூடி ஞாயிறு என்னும் ஒரே ஒரு தமிழ்ச்சொல் மட்டும் இக்காலத்தில் வழக்கில் உள்ள நிலையில் பாரதி, ஞாயிறு போற்று, ஞமலி போல் வாழேல், ஞிமிறென இன்புறு என்றெல்லாம் பயன்படுத்தியிருப்பது பழைமைக்கூறென விளக்கியிருப்பார். பாரதியார் புதிய ஆத்திசூடியில் யவனர், யௌவனம் ஆகிய சொற்களைப் பயன்படுத்தியிருப்பதைப் புதுமை எனச் சுட்டியிருப்பார்.
குற்றியலிகர விதிக்கேற்ற வகையில், ‘மகா அரியாம்’ (தாகூர் பாடல் மொழிபெயர்ப்பு)’ ‘என்பதியா ரறிவார்’ (கோமதி மகிமை) பயன்படுத்தியும், ‘நம்மில் யாவருக்கும்’ (வந்தே மாதரம்) ‘எங்கள் யாறே’ (எங்கள் நாடு) முதலியவற்றில் குற்றியலிகரம் புதுமைக்கூறென விளக்கியிருப்பார்.
இன்றளவும் பாரதியின் கவிதைகள் உணர்வு நிலையிலும் அறிவுநிலையிலும் வியந்து ரசிக்கப்பட்டும், ஆய்வு நோக்கில் ஆராயப்பட்டும் வரும் நிலையில் மொழியியல் நோக்கில் பாரதியை அன்றே அணுகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இக்கட்டுரையைக் குறித்து ய. மணிகண்டன் தன்னுடைய ‘பாரதியும் சங்க இலக்கியமும்’ என்ற நூலில், “குறை கூறும் நோக்கிலன்றியும், வெறுமனே சொற்களைத் திரட்டிப் பட்டியல் போடுதலன்றியும், பொறுப் புணர்வோடும் உண்மை காணும் நாட்டத்துடனும், ஆய்வு நெறிமுறை சான்ற நிலையிலும் பழந்தமிழ் சார்ந்த புலமை மீதூரப்பெற்ற மொழி நடையை, சொல்லமைப்பைப் பாரதி படைப்புகள் குறிப்பிடத்தக்க நிலையில் கொண்டுள்ளன என்பதை நுட்பமாக நோக்கி மூத்த மொழியியல் அறிஞர் கு. பரமசிவம் அவர்கள் கருத்துக்களையும் சான்றுகளையும் முன்வைத்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கு.ப. செந்தமிழ்ச் செல்வியில் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது பல படைப்புகள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு பெயர்ச்சொல்லே ஓர் இனத்தையும் குறிக்கலாம், தனியொருவரையும் அல்லது தனியொன்றையும் குறிக்கலாம் என்ற கருத்தை நிறுவும்விதமாக ‘இனப்பொருளும் தனிப்பொருளும்’ என்ற கட்டுரையும், ‘செய்திகள் வாசிப்பது’ என்ற வாக்கிய அமைப்பு தவறு என்ற அறிஞர் தமிழண்ணலின் கருத்தை மறுத்து ‘செய்திகள் வாசிப்பது’ என்ற வாக்கிய அமைப்பு சரியே என மொழியியல் நோக்கில் நிறுவியிருக்கும் ‘வாசிப்பது தவறா, வாசிப்பது தவறேயா’ என்ற கட்டுரையும், பருப்பொருளுக்கும் (Concrete nouns,) நுண்பொருளுக்கும் (abstract nouns) உள்ள வேறுபாட்டை விளக்கும் உளநிலைப்பெயர்கள் என்ற மொழியியல் சார்ந்த கட்டுரைகளும் செந்தமிழ்ச் செல்வியில் வெளியாகியுள்ளன.
மேலும், ‘திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க இவரது எழுத்தாளுமை, எடுத்துரைப்பியல் குறித்து நார்மன் கட்லர் (Norman Cutler), பௌலா ரிச்மன் (Paula Richman) ஆகியோர், ‘These articles ranging in subject matter from ancient and medieval literature to history and grammar. guided their readers toward an appreciation of the aesthetic, narrative and analytic qualities of Tamil literature. Through such writing K.P. helped Tamilians without specialized training to become familiar with their literary heritage’ என்று கூறியிருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
‘The Study of Stolen love’ என்ற தலைப்பில் இறையனார் களவியலையும் நற்றிணைப் பாடல்கள் சிலவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவை தவிர, Caravan இதழில் சினேகலதா சாட்டர்ஜி எழுதிய ‘O God’ என்ற கவிதையை ‘அடக் கடவுளே’’ என்ற தலைப்பிலும், வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின் Go! Go! My Friend கவிதையை ‘எழுந்திடடா என் தோழா’ என்ற தலைப்பிலும், சர் வால்டர்ஸ்காட்டின் கவிதையை ‘நடைப்பிணம்’ என்ற தலைப்பிலும் மொழிபெயர்த்திருக்கிறார்.
புகழ்பெற்ற பல ஆங்கில நாவலாசிரியர்களின் குறிப்பாக Jane Austen, Charles Dickens, Sir Walter Scott, Emily Bronte, Johann David Wyss, Thackeray, Balantien ஆகியோரது இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றுள் Quentin Darward – குவெண்டின் டர்வர்டு, Ivenhoe – ஐவன்கோ, Guy Mannering – கை மானரிங், Kenil worth – கெனில் வொர்த், Robroy – ராப்ராய், Oliver Twist – ஆலிவர் டுவிஸ்ட், Black Arrow – கருங்கணை, Emma – எம்மா, Three musketeers – மூன்று வீரர்கள், Coral island - பவளத்தீவு, David Copperfield – டேவிடு காப்பர் பீல்டு, Adventures of Huckleberry - ஹக்கிள்பெரியின் வீரச்செயல்கள், Swiss Family Robinson – சுவிஸ் குடும்ப ராபின்சன், Wuthering Heights – சிறக்கும் உச்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. 1960களில் இம்மொழிபெயர்ப்புகள் ஆங்கில நாவல்கள் குறித்த அறிமுகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும். இவையனைத்தும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வந்திருக்கின்றன.
அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரியும்போது, கல்லூரி தேசிய மாணவர் படையின் அதிகாரியாகவும், கல்லூரி மாணவர் யூனியன் ஆலோசகராகவும், கல்லூரிக் கூட்டுறவுப் பண்டகசாலையின் செயலராகவும் விளங்கியதுடன், கர்ட்டன் க்ளப் நாடகங்கள் உட்பட பல நாடகங்களில் நடிகராகவும் தோன்றியிருக்கிறார்.
1986இல் இந்திய ஆய்வுக்கான அமெரிக்க நிறுவனத்தில் (American Institute of Indian Studies) துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுத் தனது இறுதிக்காலம்வரை அங்கேயே பணியாற்றினார். 1989இல் கோடைக்காலப் புத்தொளிப் பயிற்சிக்காக பென்ஸில்வேனியா சென்றார்.
தமிழையும் தமிழ் சார்ந்த பணிகளையுமே தனது உயிராகக் கருதிய கு.ப. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். நோய் தீவிரமான நிலையில் அவர் உணவே உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மிகக் குறைந்த அளவு உட்கொண்ட திரவ உணவோ அவர் தோற்றத்தை முற்றிலும் உருக்குலைத்துவிட்டது. அவருடைய மணிவிழாவிற்கு முன்னதாக ஐம்பத்தொன்பதாவது வயதில் மரணம் அவரை நெருங்கிவிட்டது. ஒரு மரணத்தின் நிகழ்வாகப் புற உலகத்தால் அறியப்படுவது உயிர் நீங்குவதை மட்டுமே. ஆனால் ஒரு மனிதனின் ஆசைகள், விருப்பங்கள், வாழ்வியல் கனவுகள், வகுத்துவைத்த திட்டங்கள் என எல்லாவற்றையும் மரணம் களவாடிவிடுகிறது. தெரிந்தே மரணத்தை எதிர்கொள்வது மிகப் பெரிய வலி. நோயுடனும் வலியுடனும் போராடிய நிலையிலும் நல்ல நினைவாற்றலுடன் தன்னைச் சந்திக்க வந்த மாணவர்களுடன் மொழியியல் குறித்து உரையாடிய கு.ப. 1992ஆம் வருடம் ஜனவரி மாதம் பொங்கல் திருநாளன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.
அவர் இன்னும் சில ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால் ஆய்வுலகத்திற்குக் கொடையாக சிலபல நூல்கள் அவர் சிந்தனையில் முகிழ்த்திருக்கும். அது இயலாது என்று உணர்ந்ததாலோ என்னவோ, இறப்பதற்குப் பத்து நாட்கள் முன்னதாக, தான் வீட்டில் அமைத்திருந்த மிகப் பெரிய நூலகத்தின் பெரும்பகுதி நூல்களைத் தான் பணிபுரிந்த அமெரிக்கன் கல்லூரிக்குக் கொடையாக அளித்துவிட்டார்.
கு.ப. சில தினங்களில் இறந்துவிடுவார் என்று தெரிந்த நிலையில் அவரைக் கௌரவிக்கும் விதமாக அவரிடம் தமிழ் பயின்ற அயல்நாட்டு மாணவர்கள் சங்க இலக்கியச் செய்யுள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து A GIFT OF TAMIL (Translations from Tamil literature in Honour of K.Paramasivam ) என்ற நூலை வெளியிட்டு அவரைக் கௌரவித்தனர். அந்தக் காலகட்டத்தில் வேறெந்தப் பேராசிரியருக்கும் கிடைக்காத சிறப்பு அது. நெருக்கமானவர்களால் கே.பி. என்று அழைக்கப்படும் கு.ப. பன்முக ஆளுமைகொண்ட பேராசிரியராக அவரிடம் படித்த மாணவர்களின் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தில் உயிர்ப்புடன் இருக்கிறார்.
துணை நூற்பட்டியல்
1. A Gift of Tamil (Norman Cutler, Paula Richman ).
2. The American college Magazine 1991 – 92.
3. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மணிவிழா மலர்.
4. (செந்தமிழ்ச் செல்வி தொகுப்பு இதழ்கள் 1955,1956, 1958, 1959, 1961, 1986- 87)
5. கழகத்தின் 1008ஆவது வெளியீட்டு விழா மலர்.
6. இக்காலத் தமிழ் மரபு கு.பரமசிவம், அகரம் பதிப்பு, 1983.
7. இக்கால மொழியியல் அறிமுகம். கு.பரமசிவம், அடையாளம், 2016.
8. மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும், முனைவர் ய. மணிகண்டன், பாரதி புத்தகாலயம் 2011.
மா. பூங்குமரி: தனியார் கல்லூரி ஒன்றில் பணிபுரிகிறார்.
மின்னஞ்சல்: poongumari@gmail.com