மே 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      நீதிமன்றத் தீர்ப்புகளும் இலங்கை அகதிகளும்
      கருமேனியாற்றங்கரையில் ஒரு காண்டாமிருகம்
      நித்தியின் யாழ்ப்பாணக் காலம்
      பேரப் பிள்ளைகள் கோலோச்சும் நாட்கள்
      அறியப்படாத ஆளுமை: கு. பரமசிவம்
    • கதை
      நீலமலை இளவரசி
      நாக தரிசனம்
    • மேடை
      புதுமைப்பித்தன்: மேடையில் உயிர்பெறும் சித்திரம்
    • வைக்கம் போராட்ட நூற்றாண்டு பிறகு அவர்கள் நடந்தார்கள்
      கண்ணழிந்து பெற்ற உரிமை
    • தொடர் 80+
      தொன்மொழிக்குள் தன்னைத் தொலைத்தவர்
    • எதிர்வினை - 2
      அடையாளத்தை வெளியிடாதிருக்கும் உரிமை
    • விருது
      விஜயா வாசகர் வட்டம் வாசகர்களைக் கௌரவிக்கும் விருது
      மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2023
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      பார்த்திபராஜாவின் மறுப்பு
    • மதிப்புரை
      ஒற்றைப் புள்ளியை நோக்கிய பயணம்
      புனைபெயரில் எழுதப்பட்ட தன்வரலாறு
      காவிய நேர்த்தி கொண்ட தன்வரலாறு
    • வாக்குமூலம்
      வேதனையின் அழியாத சுவடுகள்
    • கு. அழகிரிசாமி 100 நேர்காணல்
      “பாரதிக்குப் பின் பாடாத கவியே நல்ல கவி!”
    • கவிதைகள்
      கவிதைகள் மே 2009 - மே 2023
    • தலையங்கம்
      சாதிக்கொரு நீதி: சமூக நீதி அரசியலின் நிஜ முகம்
    • கவிதை
      தன்வயப்படுத்தும் கிழமை
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2023 மதிப்புரை ஒற்றைப் புள்ளியை நோக்கிய பயணம்

ஒற்றைப் புள்ளியை நோக்கிய பயணம்

மதிப்புரை
து. கலைச்செல்வன்

நெடுநேரம்
(நாவல்)
பெருமாள்முருகன்

வெளியீடு: 
காலச்சுவடு பதிப்பகம்
61, கே.பி. சாலை,
நாகர்கோவில் - 629 001
பக். 344    
ரூ. 390

கொரோனா காலகட்ட நெருக்கடியில் மனிதர்கள் தங்கள் ஊருக்குள்ளும் நான்கு சுவர்களுக்குள்ளும் அடங்கிக்கிடந்த காலத்தில் காணாமல் போன அம்மாவைத் தேடும் மகனின் பயணத்தை மையமிட்டது பெருமாள்முருகனின்  ‘நெடுநேரம்’ நாவல். அம்மா, மகனின் பாசப் போராட்டமோ புனிதப்படுத்தலோ இல்லாமல், யதார்த்தமான வாழ்வியலைக் காட்சிப்படுத்துகிறது. ஏழு நாட்களில் முற்றுப்பெறும் நாவல் பின்னோக்கு உத்தியால் மூன்று தலைமுறைகளின் வாழ்வைச் சுட்டுகிறது.  அதன்வழி சாதிய வெளி, கிராமம் - நகரம், ஆண் - பெண், மேல்குலம் - கீழ்க்குலம், அகமணம் - புறமணம், சிறுதெய்வ வழிபாடு, மீவியல் காலம் முதலிய பல்வேறு கோணங்களில் வாழ்வை அணுகுவதற்கான கூறுகளைக் கொண்டுள்ளது.

மூன்று தலைமுறையின் சாதிய உணர்வுப் படிநிலை மாற்றத்தைப் பதிவு செய்கிறது நாவல். பாட்டி, தாத்தா தலைமுறையின் காதல் சுட்டப்படவில்லை. கம்மங்காட்டில் எருமைக் கன்று மேய்க்கும் இடத்தில் அம்மாவின் காதல் காட்டப்படுகிறது. நிலம் உள்ளவன் தேங்குலம், அல்லாதவன் பூங்குலம்; உயர்ந்தவன் தேங்குலம்,  தாழ்ந்தவன் பூங்குலம்; இரண்டிற்குள்ளும் கொடுக்கல் வாங்கல் கிடையாது. தேங்குலத்தைச் சார்ந்த மங்காசுரி பூங்குலத்தைச் சார்ந்த மதுரனைக் காதலிக்கிறாள்.  இதனால் ஏற்படும் சாதிய வன்மமும் காதல் உடைப்பும் மங்காசுரியின் வாழ்வைக் குலைத்துப்போடுகின்றன. பூங்குலம், தேங்குலம் ஆகிய குலப்பெயர்கள் குறியீடாக வருகின்றன. பூவில்லாமல் தேனில்லை என்ற இயல்பு வெளிப்படுகிறது. யதார்த்த வாழ்வின் முரணாகப் பூவும் தேனும் அமைகின்றன.

கல்வியும் பொதுவெளிச் செயல்பாடும் சாதியத்தின் இறுக்கத்தைக் குறைக்கின்றன. அழகாசுரேசுவரன் வேற்றுக்குலப் பெண்ணைக் காதலிக்கிறான். அவன் அயல்தேசத்தில் வேலை செய்யும் பொறியியல் பட்டதாரி. அவன் அப்பா குமராசுரர் முதல் தலைமுறைப் பட்டதாரியாக அரசு வேலைக்குச் சென்றவர். அவருக்குத் தன்மகனின் காதல் திருமணத்தில் உடன்பாடில்லாத போதும், பெரிய அளவிலான எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை. தன் எதிர்கால வாழ்வைக் குறித்தோ தனது பொதுவெளிச் செயல்பாடு குறித்தோ சுயமாகத் தீர்மானிக்க இன்றைய தலைமுறையால் முடிகிறது. ஆனால் சாதியத்திற்குப் பொதுவெளி குறித்த அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. அழகாசுரேசுவரன் காதலிப்பதாகச் சொன்னபோது அவன் அப்பா குமராசுரர், “கல்லூரியில் படிக்கும் காலத்தில் விடுதியில் சேர்த்துவிட்டதுதான் தப்பு. அதுதான் பையனை மாற்றிவிட்டது” (ப.17) என்று எண்ணுகிறார். ஆனால் இதே அப்பாதான், “வெளியூர் வேலைக்கே போ. இங்கிருந்தா உங்கம்மா காலக் கட்டிக்கிட்டே கெடப்ப. அது உன்னோட எதிர்காலத்துக்கு நல்லதில்ல. எதுலயும் நீ சுயமா நிக்கோணும். அதுக்குப் பழகோணும். வெளிய போ” (ப.37) என்று மகனைக் குறுகிய இல்லவெளியிலிருந்து பரந்த பொதுவெளிக்கு அனுப்புகிறார். பொதுவெளி வாழ்க்கையைக் கற்றுத்தருவதால் ஆண்  பொதுவெளியில்  இயங்க வேண்டியவன் என்று குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது. ஆணைப்  பொதுவெளியில் இயங்க அனுமதித்தாலும் நேரம் வாய்க்கும்போதெல்லாம் சாதி தனக்கென்ற ஒரு தனிவெளியினைக் கட்டமைக்க முயல்கின்ற ஆதிக்க மனநிலையைக் காண முடிகிறது.  

ஆணாதிக்கப் பொதுவெளியில் ஆண்களை எதிர்த்துச் செயல்படும் சில பெண்களும் முடக்கக் காலத்தில் செயலற்றுக் குறுகிய இல்லவெளிக்குள் முடக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஆண்கள் சில காரணங்களை வைத்துக்கொண்டு பொதுவெளியில் இயங்கினர். நாவலில் முருகாசுரன் பூவாசுரத்திலிருந்து வாகனத்தின் வழியாகத் தன் இல்லத்தை அடைந்தபோதும், இல்லத்திலிருந்து கிராமத்தை நோக்கிப் போகும் பயணத்தின்போதும் முற்றிலும் பெண்களற்ற பொதுவெளி காட்டப்படுகிறது. 

பெண் எப்போதும் ஒரு பாதுகாப்பு வளையத் திற்குள்ளோ தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலோ பயணப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.  வீட்டைக் கடந்து பெண்கள் செல்லும் பொதுவெளிகூடத் தனிவெளியாக உருவாக்கப்படுகிறது.  பெண்களுக்கான பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பேருந்துகள், பெண்கள் மட்டுமே பணியாற்றும் பணியிடங்கள் போன்றவற்றில் பொதுவெளிகள் அழிக்கப்பட்டுப் பெண்கள் புழங்கும் தனிவெளி உருவாக்கப்படுகிறது. ஆண்களுக்குப் பொதுவெளியும் சாதியத் தனிவெளியும் இருப்பதுபோல பெண்களுக்கான பொதுவெளி இல்லை. பெண்களின் பொதுவெளிச் செயல்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதையே சாதியச் சமூகம் விரும்புகிறது.

காதல் உருவாகும் இடங்கள் இரண்டு. ஒன்று கல்விக்கூடம்; இன்னொன்று பேருந்து. இரண்டையும் தவிர்த்துவிட்டால் காதலைத் தடுத்துவிடலாம் என்பது அப்பாவின் எளிய சூத்திரம்.  (ப. 20)

கல்விக்கூடம், பேருந்து ஆகிய பெண்களுக்கான பொதுவெளிச் செயல்பாட்டையும் தவிர்க்க சாதியச் சமூகம் முயல்கிறது.  பெண்கள் தன் வெளிக்குள் இருந்துகொண்டுதான் எதையும் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் குழந்தைப் பருவம் முதலே கட்டமைக்கப்படுகிறது.  அடைபட்ட இக்குறுகிய வெளியைப் பெண்கள் விரும்புவதில்லை. ஆனால் குடும்பம் என்ற நிறுவனம் பெண்களின் பொதுவெளியை மட்டுப்படுத்துகிறது. மங்காசுரியின் அடைபட்ட வாழ்வு, சுதந்திரத்தோடு செயல்படுவதற்கான ஏக்கம் போன்றவை பரந்து விரிந்து வளர்வதற்கு இயலாத தொட்டிச்செடியின் வேர்கொண்டு காட்சிப்படுத்தப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட  குலத்தோரும்  பொதுவெளிச்  செயல்பாட்டிற்கு  வர வேண்டும் என்ற எண்ணத்தை  நாவலாசிரியர் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. தேங்குலத்தைச் சார்ந்த பெண்களை அவர்களின் இல்லங்களின் வழியாகக் காட்டு கிறார். ஆனால் பூங்குலத்தாரைப் பொதுவெளியில் இயங்குபவர் களாகவே காட்டுகிறார். அவர்களைக் குறுகிய வெளிக்குள் அடக்கவில்லை. பூங்குலத்தைச்  சார்ந்த மதுரன், அவனது நண்பர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அவன் குலத்தைச் சார்ந்தவர்கள், பாட்டிக்குத் துணையாகப் படுத்துக்கொள்ளும் மஞ்சியம்மா போன்ற பலரும் பொதுவெளியில் இயங்குபவர்கள்; அங்கிருந்தே ஊடாடுபவர்கள். அவர்களைக் குறுகிய இல்லவெளிக்குள் அடக்காமல் பொதுவெளிச் சுதந்திரத்தை அளித்துப் பரந்த வெளியில் உலவவிட்டிருப்பது முக்கியமானது. 

நகரவெளியில் இயங்கும் குமரா சுரர் தன் மகன் அழகாசுரேசுவரனின் வேற்றுக்குலத் திருமணத்திற்குக் கிராமத்திலிருந்து யாரையும் அழைக்கவில்லை. அவர்கள் வேற்றுக்குலத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தன்னை ஏளனமாகப் பேசுவார்கள் என்றும் அஞ்சுகிறார். ஊரறிந்த இரகசியமான அம்மாவின் காதலைப் பற்றி எடுத்துச் சொல்லும் பூங்குலத்தைச் சேர்ந்த கிராமவாசியான மஞ்சியம்மா,  “கன்னுச்சாமீ... இதையெல்லாம் நாஞ் சொன்னன்னு ஆருகிட்டயும் சொல்லீராதய்யா... என்னமோ இந்த ஊருல இத்தன நாளு பொழச்சாச்சு. இன்னம் இருக்கற காலத்தயும் தள்ளிக்கிட்டுப் போவோணும்...”  (ப.336)  என்று கூறுகிறார். இதைப் போலவே கிராமவெளியின் சாதிய வன்மம் சார்ந்த பதிவுகள்  ‘தேங்குலத்துக்காரங்களப் பாத்தாக் கை கட்டி வாய்ப் பொத்தி ஒதுங்கி நிக்கிற சனம் பூங்குலம்’,  ‘பொடக்காலியில நிக்கறவன ஊட்டுக்குள்ள கொண்டா ராலாமுன்னு பாக்கறியா?’,  ‘பூ நாயே, பூப்போட்ட சட்ட கேக்குதா உனக்கு?’,  ‘பூங்கொலத்தானுங்க படிக்கப் போனா இப்படித்தான்’ என்று பல இடங்களில் காணக் கிடக்கின்றன.

நகரவெளியில் இதுபோன்ற இறுக்கமான சாதிய எதிர்ப்பை யும் வன்மத்தையும் காண முடிவ தில்லை. ஆனாலும் சாதியத்தின் பாவக்கணக்குப் பற்றிய அறிவுரைகள் இருக்கத்தான் செய்கின்றன. குமராசுரர் தன் மகனின் காதல் திருமணத்தை மறுப்பதற்காக, ‘என்ன இருந்தாலும் அவுங்க நமக்குக் கீழடா. அவுங்க வீட்டுக்குப் போனாத் தண்ணிகூட வாங்கிக் குடிக்க மாட்டம்டா. இப்ப எப்படிச் சம்பந்தியாப்  போயிக் கை நனைக்கறது?’  (ப.16)

‘நம்ம கொலத்துப் பொண்ணத் தொடறது புண்ணியம். வேற கொலத்துப் பொண்ணத் தொடறது பாவம்டா. இதெல்லாம் உனக்குப் புரியாது. நெனச்சாலே அருவருப்பா இருக்குது’ (ப.16) என்று கோபத்தையும் தன் சாதியப் புனிதப்படுத்தலையும் அப்பா மேற்கொள்கிறார். சாதியம்தான் பிரச்சினையே தவிர மற்றவை அல்ல; அதற்காக என்னென்னவோ காரணங்களை எடுத்து வைக்கிறார் குமராசுரர்.

 ‘அவங்கெல்லாம் காரத்தப் போட்டுக் கலக்கிக் கொழம்பு வைப்பாங்க. பச்ச மொளவாயக் கடிச்சுத் திங்கற கொலமடா அது,’ (ப. 15) என்று குமராசுரர் காட்டமாகப் பேசுவது தன்சாதிய வெளிக்குள் மகனைக் கொண்டுவர முடியாத இயலாமையின் வெளிப்பாடாகவே அமைகிறது.  நகரவெளி சாதிய இறுக்கத்தைக் குறைக்கிறது. கிராமத்துக் காதலில் அல்லது அம்மா தலைமுறைக் காதலில் பரிமாற்றமாகப் புல்லுக்கட்டு இருந்ததையும் நகரத்துத் தலைமுறையினர் காதலில் பரிமாற்றமாக பீர் இருப்பதையும் காட்சிப்படுத்துவதின் வழி தலைமுறை மாற்றத்தையும் நகரவெளி, கிராமவெளி மாற்றத்தையும்  காண முடிகிறது.

அகமணமுறையே சாதியத்தின் தோற்றத்திற்கு அடிப்படைக் காரணம். அகமணமுறையில் அமைந்த திருமணத்தையே எச்சாதியும் விரும்புகிறது. புறமணமுறையை ஒழுக்கக்கேட்டின் உச்சமாகச் சாதியச் சமூகம் பார்க்கிறது. முறையற்ற வகையில் யாரும் யாருடனும் உறவு கொள்வதில் சாதியத்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால் முறை என்று வருகிறபொழுது அது தன்னுடைய மதிப்பையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள முயல்கிறது.  வெளிப்படையான புறமணமுறை தன் சாதியத்தின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது; சாதியத்தின் புனிதம் கெட்டொழிகிறது; சந்ததிப் பெருக்கம் தன் சாதியிலிருந்தே தோன்ற வேண்டும் என்று தீவிரமாகச் செயல்படுகிறது.

பள்ளிப் பருவத்தில் மங்காசுரியின் காதலை அறிந்ததும் எதிர்ப்பு கிளம்புகிறது.  அவ்வெதிர்ப்பின் காரணமாக அகமணமுறைக்குப் பணிகிறாள் மங்காசுரி. பிற்காலத்தில் அம்மாவின் வாழ்வு பற்றிப் பாட்டி பேரனிடம் குறிப்படும்போது, ‘எப்படியோ எம் பையனுக்கு முந்தி விரிச்சு உங்களயெல்லாம் பெத்துக் குடுத்தா. வம்சத்துக்குக் கொற வெக்கலியப்பா வெக்கல. அந்தவரைக்கும் மானக்கேடு வராம காப்பாத்திக் குடுத்தா,’ (ப. 302) என்று குறிப்பிடுகிறார்.  வம்ச விருத்திதான் மானக்கேடு வராமல் காப்பாற்றியது என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.  இவ்வகமணம், புறமணம் பற்றிய சிக்கல்களை  இந்நாவலில் மட்டுமல்ல, பெருமாள்முருகனின் பிற நாவல்களிலும் காணலாம். 

பொன்னுவின் அக்கா காதல் வாழ்வு ‘ஏறுவெயி’லில் வருகிறது. அதில் அக்காவின் புறமணத்தை முறித்து அவள் அப்பாவும் அவர் சாதியைச்  சார்ந்தவர்களும் அகமணமுறையில் வேறு திருமணம் செய்விக்கின்றனர். ‘கங்கணம்’ நாவல் முழுக்க அகமண முறையில் திருமணம் அமைவதற்கான பாடுகளைச் சொல்கிறது. புறமணமுறையிலான திருமணத்தைப் பற்றிய தன்சாதியின் ஏளனப் பேச்சுக்கும் அதனால் ஏற்படும் அசிங்கத்திற்கும் அஞ்சியவனாக மாரிமுத்து காட்டப்படுகிறான். ஆனாலும் இறுதியில் அம்மாவின் சாதி ஒன்றாகவும் அப்பாவின் சாதி வேறொன்றாகவும் கொண்ட குடும்பத்தின் வழியிலேயே திருமணம் நடைபெறுகிறது. அத்திருமணமும்  அழைப்பிதழ், மண்டபம் போன்றவற்றில் வெளிப்படைச் சாதிய அடையாளம் இல்லாமல் அல்லது சாதியத்தின் அதிகாரத்தைக் குலைக்காமல் நடைபெறுகிறது. 

‘மாதொருபாக’னில் அகமணமுறையே சுட்டப்படுகிறது. ஆனாலும் சந்ததிப் பெருக்கமானது யாரென்றே தெரியாத ஒரு சாதியிலிருந்து தோன்றுகிறது. சாமி கொடுத்த பிள்ளையாக இருந்தாலும் சந்ததிப் பெருக்கம் தன் சாதியின் வழியாகவே நிகழ வேண்டும் என்று சாதியம் எண்ணுகிறது. ‘பூக்குழி’ நாவல் புறமணமுறையால் ஏற்படும் இன்னல்களை குமரேசன், சரோஜா வழி காட்சிப்படுத்துகிறது. ‘நெடுநேரம்’ என்ற இந்நாவலில் திருமணம் அகமணமுறை. சந்ததிப் பெருக்கமும் தன் சாதியச் சந்ததியே ஆகும். ஆனால் இறுதியில் அகமணமுறையை உடைத்துப் புறமணமுறையைக் கைக்கொள்ளும்  நெறி காட்டப்படுகிறது.

‘இப்ப அவள யாரு என்ன பண்ண முடியும்? அவனத்தான் யாரு என்ன பண்ண முடியும்? ஓடி ஓடித் தொரத்துச்சே ஊரு. அந்த ஊரு இப்ப எங்க போச்சு? அந்த ஊரு இப்ப என்ன பண்ணும்? ஊரோட மூஞ்சியில சாணிய அள்ளி அப்பிட்டா உங்கம்மா’ (ப. 343) என்ற மஞ்சியம்மாவின் அடுக்கடுக்கான கேள்விகள் புறமணமுறையின் தேவை, சாதிய எதிர்ப்பு ஆகியவற்றை நாவல் மையமிட்டிருப்பதைக் காட்டுகின்றன.

இவரது  நாவல்கள்  போற்றுபவை  சிறுதெய்வங்களே. இந்நாவலிலும் எருமைக்கறி உண்ணும் முருகாசுரன் போற்றப்படுகிறான். முருகாசுரனின் வீரதீரச் செயல்கள் மீவியல் தன்மையோடு உள்ளன.

பகலும் இரவும் பற்றிய மதிப்பீடுகள் காலத்திற்குத் தக மாற்றமடைகின்றன. மரபைப் பின்பற்றுபவர்கள் இரவு ஆபத்தானது என்றும் அருவருக்கத்தக்கது என்றும் குறிப்பிடுகின்றனர். இம்மரபைச் சார்ந்தவர்கள் பழைய விழுமியங்களைக் கைக்கொண்டவர்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் இரவைத் தங்கள் மகிழ்வுக்குரிய களமாகக் கொண்டவர்கள்; இரவே மனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது; அதன்வழியே வாழ்வைக் காண முடியும். இரவைப் பகலாகக்  கொண்டு சுற்றுகிறது இன்றைய தலைமுறை. இரவுவெளி மீதான ஒளிப்பார்வையினை இவரது பெரும்பாலான நாவல்களில் காணலாம். இரவைப் பகலாக்க முயலாமல் இரவை இரவாகவே கொண்டாடுவது மகிழ்வானதாக இருக்கிறது.

நாவலின் தொடக்கம் நகரவெளியாக இருந்தாலும் கிராமம் நோக்கிச் செல்லும்போது ஏரியும் நெல் விளையும் மருதநிலமும் அதனைத் தொடர்ந்து ஆடு, மாடு,  எருமை, கடலைக்கொடி கொண்ட முல்லை நிலமும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒரு பயணத்தின் வழியில் காட்சிப்படுத்தும் காட்சிகள் மூன்று தலைமுறையின் வாழ்வு மாற்றத்தை, சாதிய இறுக்கத்தைப் பதிவு செய்வதாக அமைகின்றன. உறவு, சாதி, ஊர் போன்ற அனைத்துப் பற்றுக்களையும் உதறிவிட்டு அன்பு என்னும் ஒற்றைப் புள்ளியை நோக்கிய தேடலுக்காகவே  ‘நெடுநேரம்’ நாவலை வாசிக்கலாம்.

 

து. கலைச்செல்வன்: முனைவர் பட்ட ஆய்வாளர், ஈ.வெ.ரா. கல்லூரி, திருச்சி.

            மின்னஞ்சல்: kalaitamilma@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.