பார்த்திபராஜாவின் மறுப்பு
Courtesy: Pinterest
14.04.2023
காலச்சுவடு ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம். 2023 ஏப்ரல் காலச்சுவடு இதழில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் எனப் பட்டியலிட்டு எழுதிய தலையங்கத்தில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டுக் கருத்துரைத்திருக்கிறீர்கள்.
தமுஎகச அமைப்பிலிருந்து நான் வெளியேறியதைக் குறித்து, ‘தானாக வெளியேறியதாகத் தெரிகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். குறைந்தபட்சம் அந்த அமைப்பின் பொறுப்பாளர்களிடமோ அல்லது என்னிடமோ இதுகுறித்துக் கேட்டிருக்கலாம்.
தமுஎகசவுக்கு என்னைக்குறித்து வந்த புகார் என்பது வாய்மொழியாக. அமைப்பின் பொறுப்பாளர்கள் என்னிடம் குற்றச்சாட்டுக் குறித்து விசாரித்தபோது, 23 ஆண்டுகளுக்கு முன்பாக நான் குற்றத்தில் ஈடுபட்டேன் என்ற அந்தக் குற்றச்சாட்டை மறுத்தேன். ‘நீங்கள் மறுக்கிற பட்சத்தில், விசாரணைக்குழு அமைத்துத்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்’ என்று அவர்கள் சொன்னார்கள். ‘தாராளமாக விசாரியுங்கள்; அப்போதுதான் இந்தக் குற்றச்சாட்டின் பின்னணி தெரியவரும்; குற்றம் சுமத்தியவர்களின் வேறுபல அம்சங்களும் தெரியவரும்’ என்று சொன்னேன்.
குற்றம் சுமத்தியவர், தன் பெயர் வெளிவருவதை விரும்பவில்லை எனவும், குற்றம் நடந்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டதால் நிரூபிக்க முடியாதெனவும் சொன்னதாக அறிந்தேன். இந்நிலையில் நான் அமைப்பிலிருந்து விலகுவதாகக் கடிதம் அளித்தேன். அதனை ஏற்றுக்கொண்டதாக அமைப்பின் பொதுச் செயலாளர் எனக்குத் தகவலும் அனுப்பினார். இதுதான் அமைப்புக்குள் நடந்தது.
குற்றச்சாட்டினை முன்வைத்தவர்கள் நேரடியாக முன்வைக்கவில்லை. நான் சட்ட ரீதியில் இதனை எதிர்கொள்வேன் என்பது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் குற்றம் சுமத்தியவர்கள் கடந்த இருபதாண்டுகளாக என்மீது வேறுவேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தோற்றுப்போய், இப்போது பாலியல் குற்றச்சாட்டைக் கையில் எடுத்திருக்கிறார்கள். பண மோசடி செய்தேன்… சாதி ஆதிக்க மனோபாவத்தோடு நடந்துகொண்டேன்… எனப் போகிறபோக்கில் தட்டிவிடப் பார்த்தும் நான் காலூன்றி நிற்பதைக் கண்டு திகைத்திருக்கிறார்கள்.
என் மீதான குற்றச்சாட்டை முன்வைத்து, ‘பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல்’ என்னும் தலைப்பிலான பதிவை வெளியிட்டுள்ளீர்கள். எனது பெயரைக் குறிப்பிட்டு, என்னால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் குரல் என்று பதிவு குறிப்பிடுகிறது. “பேசியவர் தன் பெயரை வெளியிட விரும்பவில்லை” என்று அடிக்குறிப்புத் தருகிறது பதிவு.
எனது பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடும் காலச்சுவடு, என் மீது குற்றம் சுமத்துபவரின் பெயரை வெளியிட விரும்பாமை குற்றம் சாட்டுபவரின் விருப்பம் (விரும்பாமை) என்கிறது.
என்னைப் பற்றிய இந்தப் பதிவில் குறிப்பிடப்படுவது தேசிய நாடகப் பள்ளியில் படித்த இவரா, அவரா என்ற கிசுகிசுத்தலை உங்கள் பதிவு செய்திருக்கிறது. தேசிய நாடகப் பள்ளியில் படித்தவர்கள்… அவர்கள் படித்த காலம் பற்றி அறியாதவர்கள்… ‘நாடகத் துறையில் உள்ள இவரா… அவரா…?’ என்று தேடிக்கொண்டிருக்க வைத்திருக்கிறது.
என் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்கும் அவருடைய பெயரோடு பதிவை வெளியிட்டிருத்தலே நியாயமாகும். அவ்வாறு வெளியிட்டிருக்கும் பட்சத்தில் என்னால் குறிப்பிட்ட அந்த அவதூறு குறித்துச் சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள உதவிகரமாக இருந்திருக்கும்.
‘கோணங்கி, முருகபூபதி ஆகியோரைத் தொடர்புகொண்டோம்; அவர்கள் பதிலளிக்கவில்லை. பதிலளிக்கும் மனநிலையில் இல்லை என்று அவர்களது குழுவின் பொறுப்பாளர் தெரிவித்தார்’ என்கிறார் காலச்சுவடு பொறுப்பாசிரியர். என்னைக் குறித்த பதிவும் இடம் பெற்றிருக்கும் பட்சத்தில் என் தரப்பு விளக்கத்தைக் கேட்க ஏன் என்னைத் தொடர்புகொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது. இவ்வளவுக்கும் நான் காலச்சுவடு இதழால் தொடர்புகொள்ள முடியாத ‘தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கும்’ நபரும் அல்ல.
‘இவனுக்கெல்லாம் என்ன தன் தரப்பு விளக்கம், நியாயம் இருக்கப் போகிறது,’ என்று காலச்சுவடே கருதிக்கொண்டதா?
‘குற்றம்சாட்டுபவரின் குரல் என்று பதிவிடுவேன்… அவர் பெயரையும் சொல்ல மாட்டேன்… குற்றம்சாட்டப்பட்ட உன்னிடமும் விளக்கம் கேட்க மாட்டேன்... நீயே விழுந்து புரண்டு எழுந்து துடைத்துக்கொள்’ என்பது என்ன அறம்?
குற்றம்சாட்டுபவரின் பெயரோடு முன்வைக்கப் படுமானால், இக்குற்றச்சாட்டின் பின்னணி, குற்றம் நடந்ததாக அவர் சொல்லும் நாள், அதற்கு முன் பின் வரலாறுகள் ஆகியவற்றை நானும் விரிவாக வெளியிடத் தயாராக இருக்கிறேன். அதைப்போலவே இந்த அவதூறினைக் குறிப்பிட்ட நபர் சட்ட ரீதியாகச் சந்திக்கவும் வேண்டுமென எச்சரிக்கிறேன்.
நன்றி.
கி. பார்த்திபராஜா
திருப்பத்தூர்.