என்று முடியும் இந்த அவலம்-?
கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி சங்கரன்கோவிலில் முருகன் எனும் 32 வயது நிரம்பிய வேன் டிரைவர் ஒருவரைக் காவலர்கள் பொதுவெளியில் அடித்துக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றார்கள். ஏனென்று விசாரிக்கச் சென்ற உறவினர்களிடம், பேச்சு மூச்சில்லாமல் இருக்கும் முருகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி சொன்னார்கள். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது மருத்துவமனையில் தெரியவந்தது. உடலை வாங்க மறுத்தும் காவலர்களைக் கைதுசெய்யக் கோரியும் உறவினர்கள் 15 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். உடலை வாங்கவில்லையென்றால் உடலை அடக்கம் செய்துவிடுவோம் என்று காவல் துறை கூறியது. பிணக்கூராய்வு அறிக்கையில் காயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் நிலையிலும் மரணத்திற்கான காரணம் மறைக்கப்பட்டது.
இறந்தவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த மரணம் தொடர்பான வழக்கைக் குற்றவியல் தண்டனைச் சட்டம் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 176இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மூன்று போலீசாரை இடைநீக்கம் செய்த அரசு அவர்களைக் கைது செய்யவில்லை. மறைந்த முருகனின் குடும்பத்திற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எந்த நிவாரணமும் இதுவரை வழங்கவில்லை. முருகனின் மனைவி சார்பாக வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
இந்தச் சம்பவம் தமிழகக் காவல் துறையின் செயல்பாடுகளில் விதிவிலக்காக நிகழவில்லை. 2024 ஜனவரி மாதம் கோவை சென்னிமலை காவல் நிலையத்தில் எம். பாலகிருஷ்ணன் என்பவர் மரணமடைந்தார்.
2024 ஏப்ரலில் மதுரை சிறையில் இட்லி கார்த்திக், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ராஜா, ஆவடி காவல் ஆணையர் எல்லையில் அமைந்துள்ள செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் சாந்தகுமார், பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஜெயக்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளார்கள்.
2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேடன் என்பவர் இரவுக் காட்சி திரைப்படம் பார்த்துவிட்டுத் திரும்பியபோது காவலர்கள் சந்தேகத்தின் பெயரால் அவரைக் காவல் நிலையத்திற்குக் அழைத்துச் சென்றார்கள். விசாரணை முடிந்து வேடனை போலீசார் அதிகாலை மூன்று மணிக்கு வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். வீட்டிற்கு வந்த அவர் சிறிது நேரம் தூங்கியிருக்கிறார். பின்னர் அவரது பெற்றோர் வேடனை எழுப்பியபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
2023 ஜூன் 18ஆம் தேதி தென்காசியில் புளியங்குடி காவல் நிலையத்தில் தங்கசாமி என்பவர் மரணமடைந்தார். அவர் உடலில் ஆழமான காயங்கள் இருந்ததாகப் பிணக்கூராய்வு அறிக்கை கூறியது.
2022ஆம் ஆண்டு சென்னையில் விக்னேஷ் என்பவர் காவல் நிலையத்தில் மரணமடைந்தார். பிணக்கூராய்வுச் சோதனையில் அவர் உடலில் 13 காயங்கள் கண்டறியப்பட்டதையடுத்து ஆறு காவலர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருக்கும் பல்பீர் சிங் சிறிய குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து அவர்களின் பற்களைப் பிடுங்கியும் விரைகளை நசுக்கியும் குரூரமாகச் சித்திரவதை செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் தமிழகத்தில் காவல் நிலையங்களில் துன்புறுத்தல்களும் அவற்றால் மரணங்களும் தொடர்ந்து நடைபெறுவதைச் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 20க்கும் மேல் இப்படிப்பட்ட மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார். பழனிசாமி ஆட்சியின்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனுமான இருவருக்கு நிகழ்ந்த கொடூரமான சித்திரவதைகளையும் அதனால் அவர்கள் மரணமடைந்ததையும் யாரும் மறந்திருக்க முடியாது. அண்மையில் ஒரு வழக்கு விசாரணையின்போது அந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி பி. புகழேந்தி, அதன் பிறகும் தமிழ்நாட்டில் காவல் நிலையத் துன்புறுத்தல்கள் குறையவில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
காவல் துறை அத்துமீறல்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல. 2016முதல் 2022வரை தமிழ்நாட்டில் நீதிமன்றக் காவலின்போது அல்லது காவல் நிலைய விசாரணையின்போது 478 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தேசிய அளவிலான புள்ளிவிவரம் கூறுகிறது. நாடு முழுவதும் இந்தக் காலகட்டத்தில் இப்படி 11419 மரணங்கள் பதிவாகியிருக்கின்றன. தென்னகத்தில் தமிழகத்தில்தான் இத்தகைய மரணங்கள் அதிகம். தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. 2021 டிசம்பர்வரையிலான புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் 1775 பேர் காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் 37 சதவீதம்பேர் பட்டியலின வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். பட்டியலின வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் தமிழக மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள நிலையில் இது அவர்களுக்கு எதிரான பாரபட்சத்தை வெளிப்படையாகக் காட்டுகிறது.
காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தடுத்துக் காவல்நிலைய மரணங்கள் இல்லாத நிலையை உறுதி செய்யும் வகையில் காவல் துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தமிழக காவல் துறை, ‘குரலற்றவர்களின் குரல்’ என்ற அமைப்புகளின் சார்பில் மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியில் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகக் காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். காவல் துறை தொடங்கப்பட்டதிலிருந்தே காவல் துறை துன்புறுத்தல் புகார்கள் உள்ளன என்று இக்கருத்தரங்கில் சைலேந்திர பாபு பேசினார். “கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2018ஆம் ஆண்டு 18 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவே அதிகபட்சமாகும். 2021இல் நான்கு பேர், 2022இல் இரண்டு காவல் நிலைய மரணங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன. காவல் மரணங்கள் நிகழக் கூடாது என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் காவல் துறையினர் செயல்பட வேண்டும்” என்றார். “தமிழ்நாடு காவல் துறை பாரம்பரியமிக்க காவல்துறை. யாரையும் அது துன்புறுத்தாது. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில சம்பவங்கள் நிகழுகின்றன; அதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்திவருகிறோம்” என்றும் அவர் கூறினார்.
2012க்கும் 2022க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே நிகழ்ந்திருப்பதாக சைலேந்திர பாபு கூறுகையில், 2016முதல் 2022வரையிலான ஆறு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் இத்தகைய 478 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகத் தேசிய அளவிலான புள்ளிவிவரம் கூறுகிறது. சைலேந்திர பாபு தரும் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை ஒருபுறம் இருக்க, சில மரணங்கள் “மட்டுமே” என்று அவரும் “அங்கொன்றும் இங்கொன்றுமாக” என்று கூறுவது ஒவ்வொரு மனித உயிருக்கும் மதிப்பளிக்கும் அணுகுமுறையைக் காட்டவில்லை.
காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. ஒவ்வொருவரின் ‘தனிப்பட்ட சுதந்திரம்’ தொடர்பாகச் சட்டம் மிகவும் கவனமாக உள்ளது. முறையான சட்ட அனுமதியின்றி யாரையும் காவலில் வைக்க அது அனுமதிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவின் சட்டரீதியான நடைமுறையின்படி மட்டுமே ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்க முடியும். ஒருவரைக் கைதுசெய்யும்போது தான் எதற்காகக் கைதுசெய்யப்படுகிறோம் என்னும் காரணத்தை அவருக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும். விசாரணையின்போது அவர் காவலர்கள் கேட்கும் தகவல்களைத் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது; மௌனமாக இருக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது; மௌனமாக இருப்பதாலேயே அவர் குற்றம்செய்தவராகிவிட மாட்டார் என்று அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 20 குறிப்பிடுகிறது. பிணையில் வெளிவருவதற்கான உரிமை, நீதிபதியின் முன்பு நிறுத்தப்படும் உரிமை, சட்ட ஆலோசகரிடம் கலந்தாலோசிக்கும் உரிமை, மருத்துவப் பரிசோதனைக்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைக் கைதுசெய்யப்பட்டவர்களுக்குச் சட்டம் வழங்குகிறது. உரிய காரணம் இல்லாமல் கைது செய்யக் கூடாது, கைது செய்யாமல் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கவோ துன்புறுத்தவோ கூடாது என்றும் சட்டம் தெளிவாகக் கூறுகிறது.
உரிய காரணங்களோ ஆதாரங்களோ இல்லாமல் காவல் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுபவர்களில் பலரும் ஒடுக்கப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களாகவும் மதச் சிறுபான்மையினராகவும் இருப்பது தற்செயலானதல்ல. எடுத்துக்காட்டாக, கடந்த மார்ச் மாதம் சங்கரன்கோவிலில் காவல் நிலையத்தில் மரணமடைந்த முருகன் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். பட்டியலின வகுப்பினருக்கு எதிரான இத்தகைய அத்துமீறல்களுக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இருந்தபோதிலும் இத்தகைய அராஜகங்கள் அரங்கேறுவது வழக்கமாகவே உள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் கிடைக்கும் பாதுகாப்புக்கான உத்தரவாதம் பிறரைக் காட்டிலும் குறைவாக இருப்பதும் அரசு அமைப்புகள் அவர்கள்மீது காட்டும் அலட்சியமும் இந்தப் போக்கில் வெளிப்படுகின்றன. ஒப்பீட்டளவில் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகும் நிலையில் அவர்கள் இருப்பதை இது காட்டுகிறது.
காவல் நிலையத்தில் காவலர்களின் கொடூரமான தாக்குதலால் விசாரணைக் கைதி ஒருவர் இறந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு த.செ. ஞானவேல் இயக்கி, சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது ஏற்று நடத்திய வழக்கின் அனுபவங்களை அடியொற்றியது. இந்தப் படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதை வெகுவாகப் பாராட்டியிருந்தார்.
“காவல் நிலையம் ஒன்றில் நடந்த இதேபோன்ற தாக்குதல்தான் சென்னை மத்திய சிறையில் 1976ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் இரவு எனக்கும் நடந்தது. என் மீது விழுந்த பல அடிகளைத் தாங்கியவர் மரியாதைக்குரிய சிட்டிபாபு அவர்கள். அதனால் அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்திரவதைகளை ‘சிறை டைரி’யாக சிட்டிபாபு அவர்கள் எழுதியுள்ளார்கள். இந்த நினைவுகள் அனைத்தும் நேற்று ஜெய் பீம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது மனக்கண் முன் நிழலாடியது” என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
“நடந்த ஒரு நிகழ்வை மையமாக வைத்துப் புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும் அது பார்வையாளர் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகமிகக் கனமானதாக இருக்கிறது. நேர்மையும் மனசாட்சியும் கொண்ட அதிகாரிகளால் உண்மை நிலைநாட்டப்படும் என்பதைக் காட்டியுள்ளீர்கள்’’ என்றும் அவர் பாராட்டியிருந்தார்.
முதல்வர் வெளியிட்ட உணர்வுப்பூர்வமான இந்தக் கருத்துக்கள், இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கையை அவரிடமிருந்து எதிர்பார்க்கவைத்தன. ஆனால் படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகியும் இன்னமும் காவல் துறை மரணங்களோ துன்புறுத்தல்களோ முடிவுக்கு வருவதற்கு அரசு திட்டவட்டமான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஞானவேலின் ‘ஜெய் பீம்’, வெற்றி மாறனின் ‘விசாரணை’ போன்ற படங்கள் காவல் துறையின் அத்துமீறலை அப்பட்டமாகச் சித்திரித்தாலும் நாயகர்களைக் காவல் துறை அதிகாரிகளாகக் கொண்ட படங்கள் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்துவதைத் தார்மீகக் கடமையாகவும் நாயக சாகசமாகவுமே சித்திரிக்கின்றன. அண்மையில் வெளியான ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் அவர் விளையாட்டுப்போலக் கைதி ஒருவரின் காதைத் தனக்கே உரிய ‘ஸ்டைலில்’ அறுத்துவிட்டுக் கெக்கலி கொட்டிச் சிரிப்பார். காவல் துறையின் குற்றங்களை மகிமைப்படுத்தும் இதுபோன்ற அணுகுமுறைகள் மிகவும் ஆபத்தானவை. குற்றமிழைப்பவர்களைக் கடுமையாகக் கையாள வேண்டும் என்று வாதிடுபவர்கள் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்துவதும் சட்டப்படி குற்றம்தான் என்பதைப் பொருட்படுத்துவதில்லை. காவலர்கள் இழைக்கும் இந்தக் குற்றத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதுபற்றி அவர்கள் பேசுவதில்லை.
குற்றத்தை நிரூபிப்பதற்கான தடயங்களைத் திரட்டுவதற்காகவே காவல் துறையினர் கைதிகளைத் துன்புறுத்தி அவர்களிடமிருந்து ‘தகவல்’களைப் பெற முனைகிறார்கள். தடயங்களைத் திரட்டுவதற்கான தடய அறிவியல் துறைபோன்ற அறிவியல்பூர்வமான வழிகள் நடைமுறைக்கு வருவது இத்தகைய போக்கைக் குறைக்க உதவும். காவல் நிலையங்களைக் கண்காணிப்பதற்கான வழிமுறைகளும் அதிகரிக்கப்பட வேண்டும். மனித உரிமை சார்ந்து பணிபுரியும் அரசு, தனியார் அமைப்புகள் எப்போது வேண்டுமானாலும் காவல் நிலையங்களுக்குச் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி இருந்தால் இத்தகைய அத்துமீறல்கள் குறையும். குற்றவியல் புலனாய்வு தொடர்பாகக் காவல் துறையினருக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இதில் தேர்ச்சி இல்லாததால்தான் தடயங்களைச் சேகரிக்கத் தடாலடி வழிமுறைகளில் இறங்குகிறார்கள். சமுதாயத்தில் உயர் அடுக்குகளில் இருப்பவர்கள், அதிகாரப் பீடத்தில் இருப்பவர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஆகியோர் தொடர்பான வழக்குகளில் மேலிடத்திலிருந்து வரும் நெருக்கடி விசாரணைக் கைதிகள் மீதான வன்முறைக்குக் காரணமாக அமைகிறது. அரசியல்வாதிகளிடமிருந்தும் உயரதிகாரிகளிடமிருந்தும் வரக்கூடிய இத்தகைய நெருக்கடிகளைக் கணிசமாகக் குறைப்பது அவசியமாகிறது. இத்தகைய நெருக்கடிகள் கேட்பாரற்ற கைதிகளின் உடல்களின் மீதான சித்திரவதையாக மாறுவதை அவர்கள் உணர வேண்டும்.
சட்டத்திற்கும் பொதுநீதிக்கும் புறம்பான காவல் நிலையத் துன்புறுத்தல்களுக்கான காரணங்கள் அளப்பரியவை. சட்டம் என்ன சொன்னாலும், நடைமுறையில் கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகாரம் என்னும் கூர்மையான கத்தியும் அரசியல் பாதுகாப்பு என்னும் வலுவான கேடயமும் காவல் துறையின் கைகளில் இருப்பதுதான் முக்கியமான காரணங்கள். எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் காவலர்களைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளிக்கிறது. சாமானிய மக்களின் பாதுகாப்பு, வாழ்வுரிமை, சட்டப்பூர்வமான உரிமைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் அணுகுமுறையை எந்த அரசும் மேற்கொள்வதில்லை. உரிய காரணம் இன்றி, உரிய ஆவணங்கள் இன்றி யாரையும் கைதுசெய்யக் கூடாது, காவல் நிலையத்தில் விசாரணை என்னும் பெயரில் யாரையும் துன்புறுத்தக் கூடாது என்பவற்றை நடைமுறைப்படுத்தப் புதிய சட்டம் எதையும் இயற்ற வேண்டாம்; இருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தினாலே போதும். இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சட்டம் தரும் அடிப்படையான, எளிய உரிமையைப் பெற சாமானிய மக்கள் போராட வேண்டியிருப்பதே ஆளும் வர்க்கத்தின் அநீதிக்கான சான்று. சமூக நீதி, சமூக நலப் பணிகள், கல்வி, உள்கட்டமைப்பு, மருத்துவக் கட்டமைப்பு எனப் பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கு முன்னோடியாக விளங்கும் தமிழகம் இவ்விஷயத்திலும் முனைப்புடன் செயல்பட்டு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.