முற்றுப்பெறாத சௌராஷ்ட்ர நாவல்
எம்.வி. வெங்கட்ராமின்
முற்றுப்பெறாத நாவல்
மீ காய் கெரூ
(நான் என்ன செய்யட்டும்)
(ப-ர்): ரவிசுப்பிரமணியன்
பரிசல் புத்தக நிலையம்
235, P பிளாக், எம்.எம்.டிஏ. காலனி,
அரும்பாக்கம், சென்னை - 600 106
தொடர்புக்கு: 93828 53646
பக். 96
ரூ. 130
சாகித்ய அகாதமி விருது பெற்ற மணிக்கொடி காலகட்ட எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம். பல துறைகளில் நவீன தமிழ் இலக்கியத்துக்கு அரிய பங்களிப்புகள் செய்தவர். அவருடைய ‘காதுகள்’, ‘நித்யகன்னி’, ‘வேள்வித் தீ’ - ஆகிய நாவல்கள் புகழ்பெற்றவை. முக்கியமாக அவருடைய ‘காதுகள்’ நாவல் செவி மருட்சியின் ‘Auditory hallucination’இன் அதிர்வுகள் குறித்துத் தமிழில் வெளிவந்த ஒரு வித்தியாசமான முதல் படைப்பு.
கும்பகோணத்தில் வாழ்ந்த செளராஷ்டிரா சமூகத்தின் நெசவாளர் பிரிவைச் சேர்ந்த எம்.வி. வெங்கட்ராம் அச்சமூகத்தின் பல்வேறு குணாம்சங்கள் பற்றியும், பட்டு நெசவுத் தொழிலின் ஏற்ற இறக்கங்கள் பற்றியும் சிறுகதைகளில், நாவலில் தொடர்ந்து எழுதியவர். அவருடைய எழுத்துக்கள் பல்வேறு தொகுப்புகளாக வெளிவந்துள்ள நிலையில், எழுத்துப்பிரதியாக இருந்த அவருடைய ‘மீ காய் கெரூ’ (நான் என்ன செய்யட்டும்) நாவலின் முற்றுப்பெறாத பகுதிகளைத் தற்போது புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன்.
‘மீ காய் கெரூ’ நாவலின் நான்கு அத்தியாயங்களே இன்று நமக்குக் கிடைத்தாலும் அவை எம்.வி. வெங்கட்ராமின் மேதமையைத் தாங்கி நிற்கின்றன. முக்கியமாக, கும்பகோணத்தில் வாழ்ந்த செளராஷ்டிரர்களின் வாழ்நிலை, வணிகம், பழக்க வழக்கங்கள், வறட்டுக் கெளரவம், பெண்ணின் வாழ்வியல், சுதந்திரத்தை அங்கீகரிக்காத ஆண்களின் விருப்பு வெறுப்பு, மூடப்பழக்க வழக்கங்களுக்குள் பெண்ணை முடக்கும் கொடுமை ஆகியவை இந்த நாவலில் கவனப்படுத்தப்படுகின்றன. தறிநெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள கும்பகோணத்தின் அடுத்தடுத்த தெருக்களில் வசிக்கும் வசதி படைத்த இரு குடும்பங்களின் இடையே நிகழும் சம்பவங்களை மைய மாகக் கொண்டது இந்த நாவல். கெளரவப் பிரச்சினை காரணமாகப் பெற்றோர் வீட்டுக்கு வந்த மணமான பெண்ணைத் திரும்பவும் கணவன் வீட்டுக்கு அனுப்பாமல் ரகுராமன் மீரா தம்பதிகளைத் தவிக்கவிடுகிறார்கள் இரு வீட்டாரும். ரகுராமன் முற்போக்கு மனப்பான்மை கொண்ட படித்தவனாக இருந்தும் பணத்தையும் கெளரவத்தையுமே குறியாகக் கொண்ட பெற்றோர்களின் சொல்லை மீற முடியவில்லை. ஒரு கட்டத்தில் காலத்தின் மனப்போக்கை உணர்ந்தவர்களாகக் கணவன் மனைவி ஒன்றுசேர அனுமதிக்கிறார்கள் இருவீட்டாரும். ரகுராமன் செளராஷ்டிரர் சங்கத் தலைவனாகப் பிரஸ்தாபிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது. நாவலில் ஒரு இடத்தில் பாவின் ஜரிகை நூல் சிக்கிக்கொள்கிறது. அதுபற்றிக் கதாநாயகன் ரகுவின் நினைப்பு இது.
“ஏதோ யோசனை. அலமாரி கொக்கியிலே மாட்டியிருந்ததைக் கவனிக்காமே, இழுத்துவிட்டேன்.”
“நான் மிகவும் ஜாக்கிரதையானவன். ஆனால் இரு கண்களையும் அகலமாய்த் திறந்து வைத்திருக்கும்போதே போகக் கூடாதவை போகின்றன, வரக் கூடாதவை வருகின்றன; ஏன் அப்படி?”
“எதுவுமே இப்படித்தான் நடக்கிறது. மாட்டிக் கொண்டிருப்பது தெரியாமல் இழுத்துவிடுகிறோம்; கஷ்டப்படுகிறோம். அது மட்டும் மெய் அல்ல. மாட்டிக் கொண்டிருப்பது தெரிந்து மெதுவாக வெளிப்பட முயலுகிறோம். அப்போதும் கஷ்டப்படுகிறோம். ஏன் அப்படி?”
நாவலின் கதைக்கு உள்ளாகவும் அதே விஷயம் நாவலுக்குப் புறமாகப் பொதுவாகவும் இப்படிப் பேசும் பல இடங்கள் உள்ளன. மிகவும் நேரடியான சித்திரிப்பு கொண்ட இந்த நாவல் நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் முதல்முறையாகப் பதிப்பிக்கப்பட்டாலும் இன்றும் ஓர் உயிரோட்டமான வாசிப்பை நமக்கு வழங்குகிறது. இந்த நாவலின் மீதிப் பகுதிகள் கிடைக்காமல் போனது ஒரு துரதிர்ஷ்டமே. ஆனால் கிடைத்த பகுதிகளைத் தமிழ்ச் சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்து இலக்கியத்துக்கு ஓர் அரிய தொண்டினைச் செய்திருக்கிறார் ரவிசுப்பிரமணியன். அண்மையில் எம். வி. வெங்கட்ராமின் நூற்றாண்டையொட்டி அவருடைய எழுத்துகள் குறித்து உருவான கவனத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது இந்த நாவலின் வரவு. ‘மனிதன் சுதந்திரமாய்ப் பிறக்கிறான். ஆனால் எங்கு நோக்கினாலும் தளைப்பட்டவனாகவே காணப்படுகிறான்’ என்ற ரூஸோவின் கருத்தை மேற்கோள் காட்டிச் செல்லும் இந்த நாவல் எந்தக் காலகட்டத்திலும் மனித சுதந்திரம் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள் குறித்த உரையாடலை உப பிரதியாகத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.
மின்னஞ்சல்: velirangarajan2003@yahoo.co.in