காந்தியை அறிய...
மகாத்மா காந்தி
தொகுப்பு:
டாக்டர் சர்.எஸ். ராதாகிருஷ்ணன்
தமிழில்: வெ. சாமிநாத சர்மா
முல்லை பதிப்பகம்,
323/10 கதிரவன் காலனி,
அண்ணாநகர் மேற்கு
சென்னை - 600 040
தொடர்புக்கு: 98403 58301
பக். 440
ரூ. 500
மகாத்மாவின் 70ஆம் ஆண்டு பிறந்ததின நிகழ்வு 1939 அக்டோபரில் கொண்டாடப்பட்டபோது, மகாத்மாவைப் பற்றிய உலக அறிஞர்களின் கருத்துக்களை, விமர்சனங்களை, பார்வைகளைத் தொகுத்து காந்திஜி என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு நூல் வெளியிட்டனர். நூலைத் தொகுத்தவர் முதல் குடியரசுத் தலைவரும் தத்துவப் பேராசிரியருமான டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன். இந்த நூலை இரங்கூன் புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது (1941). அப்போது ரங்கூனில் இருந்த வெ.சாமிநாத சர்மா தமிழில் மொழிபெயர்த்தார். இந்த நூலை முல்லை முத்தையா 1947இல் மறுபடியும் வெளியிட்டார். அதன் திருத்திய பதிப்பு 2023இல் வந்திருக்கிறது.
இந்த நூலில் மகாத்மாவைப் பற்றி 63 பேரின் விமர்சனங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த 63 பேர்களில் தமிழர்கள் மூன்றுபேர்; இந்தியர்கள் 16பேர்; இதர 47 பேர்களும் வெளிநாட்டவர்கள். இவர்களில் இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி நாட்டினர். இவர்களில் ஆனந்த சே குமாரசாமி, ஆர்பர்ட் ஈன்ஸ்டன், ரொமைன் ரோலந்த், ரவீந்திரநாத் தாகூர், கல்வியாளர் மரியா மாண்டிஸ்ஸெரி, கேம்பிரிட்ஜ் வரலாற்றுப் பேராசிரியர் எச்.ஜி.அட், வட்டமேசை மாநாட்டுத் தலைவராய் இருந்த லார்ட் ஸாங்கே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கிரேக்க மொழி பேராசிரியர் ஆல்பர்ட் முர்ரே எனப் பலர்.
இவர்கள் வேறுவேறுபட்ட சிந்தனை, கருத்துக்களை உடையவர்கள். மகாத்மாவின் கருத்தின் உறுதி, மனிதத் தன்மையின் நிறைவு, நகைச்சுவை உணர்வு, பழைமையின் பிரதிநிதித்துவம், புதுமையின் சங்கமம், அவர் கண்டுபிடித்த ஆயுதத்தின் வலிமை எனப் பல விஷயங்களை இவர்கள் பேசுகிறார்கள்.
ஒவ்வொருவரின் பார்வையும் வேறுபட்டிருந்தாலும் இவர்கள் சேரும் மையப்புள்ளி ஒன்றாக இணைகிறது. அமெரிக்க ப்ரின்டென் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆல்பர்ட் ஈன்ஸ்டின் என்ற மேதை, ‘மகாத்மா மகான். இவரது காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது பெருமை. ஒடுக்கப்பட்டவர்கள் விடுதலைபெற மனிதத்தன்மை நிரம்பிய ஒரு சாசனத்தை இவர் கண்டுபிடித்தார், என்கிறார். சிறந்த நாவலாசிரியரும் விவேகாநந்தரைப் பற்றி எழுதியவருமான பிரஞ்சு எழுத்தாளர் ரொமைன் ரோலந்த் மகாத்மாவைத் தன் குரு நாதர் என்கிறார். இவர் இயேசு நாதருக்குச் சமமாக மகாத்மாவை வைக்கிறார். இப்படியாக இந்தத் தொகுப்பில் எழுதியவர்கள் எல்லோரும் மகாத்மா என்னும் புள்ளிக்கு வருவதில் தயக்கம் காட்டவில்லை, மாறுபாடும் கொள்ளவில்லை. சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு உலகளவில் மகாத்மாவைப் பற்றி இருந்த பார்வையை அறிய இந்த நூல் ஒன்று போதும். நூலின் இறுதியில் கட்டுரை ஆசிரியர்கள் பற்றிய சிறுகுறிப்பு உள்ளது.
மின்னஞ்சல்: perumalfolk@gmail.com