ஆவணப்படமாகும் கவிஞர் ஆத்மாநாமின் வாழ்க்கை
கவிஞர் ஆத்மாநாமின் அண்ணன் மகள் யஷஸ்வினி திரைப்பட இயக்குநராகவும் ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
பெங்களூரில் வசிக்கும் யஷஸ்வினி இந்தியச் சூழலில் இடப்பெயர்வு, தொழிலாளர்கள் நிலை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆவணப் படங்களை உருவாக்கியிருக்கிறார். தன்னுடைய சித்தப்பா ஆத்மாநாமைப் பற்றிய ஆவணப்படத்தைத் தற்போது உருவாக்கிவருகிறார்.
யஷஸ்வினி 2019இல் கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகத்தின் உதவியுடன் ‘தட் கிளவுட் நெவர் லெஃப்ட்’ என்னும் திரைப்படத்தை இயக்கினார். இது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஸிவீழீளீsணீளீணீபீமீனீவீமீ ஸ்ணீஸீ தீமீமீறீபீமீஸீபீமீ ரிuஸீstமீஸீஇல் ரெசிடென்ட் ஆக இருக்கும் இவர் சவுண்ட் ஆர்ட் படிப்பதற்காக லண்டனில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் ஆர்ட்டில் நல்கை பெற்றிருக்கிறார்.
ஆத்மாநாம் குறித்து யஷஸ்வினி எடுத்துவரும் ஆவணப்படம் குடும்ப உறுப்பினர்களின் பார்வைவழியே கவிஞரின் வாழ்வை ஆவணப்படுத்தும் முயற்சியாகும்.இந்தப் பட உருவாக்கம் தொடர்பாக அவர் முன்வைக்கும் வேண்டுகோள் இது:
40 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தம்பியின் கவிதைகளைப் படித்த என் தந்தை, அந்தக் கவிதைகள் எனக்குப் புரிய வேண்டும் என்பதற்காக அவற்றைக் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க முடிவுசெய்தார். சித்தப்பாவின் கவிதைகளைப் படித்துவிட்டு அப்பாவுடன் நான் அந்தக் கவிதைகளைப் பற்றிப் பேசினேன். தன் தம்பியுடனான பல்வேறு அனுபவங்களை அப்பா நினைவுகூர்ந்தார். அவர்கள் சென்ற இடங்கள், கலந்துகொண்ட நிகழ்வுகள், மறக்க முடியாத தருணங்கள் ஆகியவற்றை அப்பா என்னிடம் பகிர்ந்துகொண்டார். குடும்பத்தில் அப்போது நிலவிய போராட்டங்கள், மனநலம் சார்ந்த சவால்கள் ஆகியவற்றால் இவற்றை நினைவுகூர்வது கஷ்டமாக இருப்பதாக அப்பா என்னிடம் சொன்னார். இந்த ஆவணப்படம் கவிஞர் ஆத்மாநாமின் கவிதைகளின் மூலம் அவரைப் பற்றிய நினைவுகளை மீட்டெடுக்க முனைகிறது.
படப்பிடிப்பின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு தொடர வேண்டியிருக்கிறது. அதன் பிறகு படத்தொகுப்பு, ஒலியமைப்பு, வண்ணங்களைத் திருத்துவது எனப் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் உள்ளன.
இந்தப் படத்தை எடுத்து முடிக்கக் கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய் செலவாகும். இலக்கிய ஆர்வலர்களிடமிருந்து வரும் நன்கொடை மூலம் ஆத்மாநாம் ஆவணப்படத்துக்கான நிதியைத் திரட்ட விரும்புகிறேன். இந்தப் படம் குறித்துக் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் என்னைத் தொடர்புகொள்ளலாம்.
ஆத்மாநாமின் படைப்பாற்றலின் சாரம் பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆவணப்படத்தை உருவாக்க விரும்புகிறேன். இந்தப் படம் சிறப்பாக அமைவதற்கு உங்கள் ஒத்துழைப்பையும் உதவியையும் எதிர்நோக்குகிறேன்.
தொடர்புக்கு: யஷஸ்வினி
yashaswini.r@gmail.com