நம்பிக்கை தரும் தேர்தல் அறிக்கை
பெருவாரியான மக்கள் தேர்தல் அறிக்கைகளைப் படித்துப் பார்த்து வாக்களிப்பதில்லை என்றாலும் அந்த அறிக்கையில் உள்ள முக்கியமான வாக்குறுதிகளும் கொள்கை அறிவிப்புகளும் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் போய்ச் சேர்ந்துவிடுகின்றன. ஒரு சில அறிவிப்புகள் காரணமாகவே தேர்தல் அறிக்கைகள் முக்கியத்துவம் பெற்றதும் உண்டு. தேர்தல் அறிக்கைகளின் தாக்கங்கள் எப்படியிருந்தாலும் அவை களத்தில் நிற்கும் கட்சிகளின் நோக்கையும் திட்டங்களையும் பற்றிய பிரகடனங்களாக இருப்பதால் தேர்தலுக்குப் பிறகு வரக்கூடிய ஆட்சியின் போக்கைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. தேர்தல் அறிக்கையில் சில அறிவிப்புகளை முன்வைக்கும் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் அந்த அறிவிப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மட்டுமல்ல; அதற்கான உரிமையும் - சட்டத்திற்கு உட்பட்டு - அக்கட்சிக்குக் கிடைத்துவிடுகிறது.
ஒரு கட்சி வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் அதன் தேர்தல் அறிக்கையும் அதிலுள்ள கொள்கைப் பிரகடனங்களும் முக்கியமானவைதாம். அந்தக் கட்சி ஆட்சியை எப்படி அணுகுகிறது என்பதற்கான வாக்குமூலம் அது. அந்த வகையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பார்க்கும்போது அதிலுள்ள ஆரோக்கியமான சில கூறுகள் ஆறுதலளிக்கின்றன.
ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள் ஆளுங்கட்சியில் சேர்ந்ததும் அவர்களுக்குத் தூய்மைப் பத்திரம் வழங்கப்படுவதும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள்மீது அமலாக்கத் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசு அமைப்புகளின் நடவடிக்கைகள் சீறிப் பாய்வதும் அண்மைக் காலத்தில் பெருகியிருக்கும் அவல யதார்த்தங்களில் ஒன்று. இப்படி ‘ஆளுங்கட்சி சலவை இயந்திரத்தால்’ வெளுக்கப்பட்டவர்கள்மீது விசாரணை நடக்கும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. இது தவிர தேர்தல் பத்திர மோசடி, பணமதிப்பிழப்பு, காஷ்மீர், புதுவை, ஆந்திரம் ஆகியவற்றுக்கான மாநில அந்தஸ்து வழங்குதல் எனப் பல்வேறு நேரடியான அரசியல் அறிவிப்புகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருப்பது இயல்பானதுதான். இவற்றுக்கு மத்தியில் தனிநபர் உரிமைகள், மாநில உரிமைகள், சமூக நீதி, பாலினச் சமத்துவம் ஆகியவை தொடர்பான வாக்குறுதிகளும் இடம்பெற்றிருப்பது இந்தத் தேர்தல் அறிக்கையைத் தனித்த கவனத்துக்கு உரியதாக்குகிறது.
சமூக, பொருளாதார, சாதிவாரிக் கணக்கெடுப்பு, நீட் முதலான தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக்கொள்வதற்கான உத்தரவாதம், பட்டியலினத்தவர்கள்மீதான துன்புறுத்தலைத் தடுக்கச் சட்டம், தேசியக் கல்விக் கொள்கையை மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்குப் பிறகே நடைமுறைப்படுத்துதல், ஒன்றிய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, 12ஆம் வகுப்புவரை இலவசக் கட்டாயக் கல்வி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான காலிப் பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்புதல், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் ஏராளமான மொழிகளைச் சேர்த்தல், பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு தவிர்த்தல், திருமணம் - வாரிசுரிமை - தத்தெடுத்தலில் ஆண்/ பெண் இடையேயான பாகுபாடுகளைக் களைதல், பால் புதுமையினருக்கான நலச் சங்கங்களை அடையாளம்கண்டு அங்கீகரித்தல், பொதுப்பட்டியலில் உள்ள பல துறைகளை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது குறித்த ஆய்வு, மாநிலங்களுக்கான உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எனப் பல்வேறு வாக்குறுதிகளும் அறிவிப்புகளும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
மாநில உரிமைகள், சமூக நீதி, பாலினச் சமத்துவம், பால் புதுமையினரின் நலன், மொழியுரிமை ஆகிய முக்கியமான பல அம்சங்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு பேசுவது இன்றைய பின்னணியில் மிகவும் முக்கியமானது. மக்களின் உணவு, உடை, காதல் திருமணம், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயணம்செய்து வசிப்பது போன்ற தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட மாட்டோம் என்றும் காங்கிரஸின் அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் அண்மைக் காலத்தில் உடை, காதல், திருமணம், உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தனிநபர் சுதந்திரத்திற்குத் தீவிரமான அச்சுறுத்தல் ஏற்பட்டுவரும் நிலையில் இந்த வாக்குறுதி முக்கியத்துவம் பெறுகிறது. மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நியாயமற்ற முறையில் தலையிடும் அனைத்துச் சட்டங்களும் விதிகளும் ரத்துசெய்யப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது. வெறுப்புப் பேச்சு, மதமோதல்கள், வெறுப்புக் குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் அறிவிப்பு சீரழிந்து கிடக்கும் சமூக உறவுகளைச் சீரமைக்கக்கூடிய முன்னெடுப்பாகும். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்னும் அறிவிப்பு மானுட கண்ணியத்தைக் காக்கும் உணர்வின் வெளிப்பாடு. ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது என்னும் அறிவிப்பு இந்தியாவின் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டதன் அறிகுறி.
இந்தியாவைப் போன்ற ஒரு தேசத்தின் பன்முகப் பண்பாட்டையும் சூழல்களையும் கருத்தில்கொள்ளும் ஒரு கட்சியால்தான் இத்தகைய வாக்குறுதிகளை அளிக்க முடியும். தனிநபர் உரிமைகள், சமூக நீதியின் தேவை, கூட்டாட்சிக் கோட்பாட்டின் முக்கியத்துவம் ஆகியவற்றை மதிக்கும் போக்கும் இந்த அறிவிப்புகளில் வெளிப்படுகிறது. தனிநபர்களின் உணவு, காதல், திருமணம் ஆகியவற்றில் தலையிட மாட்டோம் என்று 21ஆம் நூற்றாண்டில் ஒரு ஜனநாயக நாட்டில் சொல்ல வேண்டியிருப்பதே நாட்டின் ஜனநாயகச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் காட்டுகிறது. இந்த அபாயத்தின் பின்னணியில்தான் இத்தகைய அறிவிப்புகளின் முக்கியத்துவமும் துலங்குகிறது.
பல ஆண்டுகளாக முற்போக்குச் சிந்தனையாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஜனநாயகம், சமத்துவம், தாராளவாதம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட சிந்தனையாளர்களும் பல்வேறு விதங்களில் முன்வைத்துவரும் கோரிக்கைகள் இவை. மைய நீரோட்ட அரசியல் சக்திகள் இந்தக் குரல்களைப் பெருமளவில் அலட்சியப்படுத்திவந்திருக்கின்றன. முற்போக்கும் சமத்துவ நோக்கும் கொண்ட சட்டங்களும் கொள்கைகளும் இந்தியாவில் உள்ளன என்றாலும் மாறிவரும் உலகச் சூழலுக்கேற்பத் தன் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் தகவமைத்துக்கொள்ளும் போக்கு இந்திய ஆளும் வர்க்கத்திடமோ ஆளுங்கட்சியாகக்கூடிய கட்சிகளிடமோ போதிய அளவு காணப்படவில்லை. பாதுகாப்பான பழமைவாதம் என்பதே பெரும்பாலான கட்சிகளின் இயல்பாக இருந்துவருகிறது. காதல், உணவு, திருமணம் போன்ற பண்பாட்டுக் கூறுகளில் மட்டுமின்றி மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை ஒழித்தல், சாதியின் அடிப்படையில் இடங்களை வரையறுப்பதை ஒழித்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான தேவைகளைக் கருத்தில் கொண்ட உள்கட்டமைப்பு, பாலினச் சமத்துவம் என்பனபோன்ற சமூக அளவிலான கூறுகளையும் அரசியல் கட்சிகள் போதிய அளவு கவனத்தில் கொள்ளாத நிலையே இன்றளவும் உள்ளது. இந்நிலையில் உலகளாவிய மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு சமூக மாற்றங்களையும் நிர்வாக அணுகுமுறைகளையும் பரிந்துரைக்கும் குரல்களுக்கு மதிப்பளித்து இதுபோன்ற கோரிக்கைகளைத் தனது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கியிருப்பது பாராட்டத்தக்கது.
காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தாலும் அமராவிட்டாலும் இந்த அறிக்கைகள் முக்கியமானவை. மைய நீரோட்டத்திலுள்ள பிரதான கட்சியொன்று இந்தக் கொள்கைகளை வெளிப்படையாக ஆதரிக்கும்போது அவை பொதுவெளியில் விவாதத்துக்கு வருவதற்கும் பரவலாகக் கவனம் பெறுவதற்குமான வாய்ப்புகள் உருவாகின்றன. இவற்றினூடாகத்தான் மாற்றங்கள் மெதுவாகவேனும் நடைமுறைக்கு வரும். இன்று காங்கிரஸ் மட்டுமே பேசும் இந்தக் கொள்கைப் பிரகடனங்களை நாளை மற்றக் கட்சிகளும் பேசும் சூழலும் உருவாகும். அந்நிலையில் இவை நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்பும் பிரகாசமாகும்.