உயர் மலரே துயர் கடலே
ஆயுர்வேத மருத்துவத்தில் மேதையாகக் கருதப்படும் டாக்டர் எல். மகாதேவன் என் இருபது ஆண்டுக் கால நண்பர். எங்கள் குடும்பத்தின் மருத்துவப் பாதுகாவலர். 2024, ஏப்ரல் 8 அன்று உறக்கத்தில் அகால மரணமடைந்தார். எங்கள் குடும்பத்தின்மீது அவர் கொண்டிருந்த வாஞ்சை அளவிட முடியாதது. எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பது யதார்த்தம்; எங்களோடு எண்ணற்ற மருத்துவர்கள், மாணவர்கள், நோயாளிகள் ஆகியோரோடு தெரிசனங்கோப்பு ஊருக்கும் ஆயுர்வேதத்திற்கும்.
2001 ஆக இருக்கலாம். சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு ரயிலில் வருகையில் மகாதேவனைச் சந்தித்தார் சு.ரா. அவருடன் உரையாடியதில் மகாதேவனின்மீது அவருக்கு நல்லெண்ணம் ஏற்பட்டதில் வியப்பில்லை. சு. ரா. வின் அழைப்பின் பெயரில் அவர் முதல்முறையாக வீட்டிற்கு வந்தபோதுதான் நான் டாக்டரைச் சந்தித்தேன். அவரிடம் சு.ரா.வைக் கவர்ந்த விஷயம் என்ன என்பது உடனடியாகத் துலங்கியது. ஆதாரம் இன்றி அவர் மருத்துவம் பேசவில்லை. ஆயுர்வேதம் பற்றிய சுயவிமர்சனமும் மதிப்பீடும் அவரிடமிருந்தன. அப்போதிருந்தே என்னுடைய மருத்துவ ஆலோசகரானார். ஆயுர்வேதம் பலனளிக்கும் என்று அவர் நம்பும் பிணிகளுக்கு மருத்துவம் பார்ப்பார் அல்லது தகுதியான அலோபதி மருத்துவர்களைப் பரிந்துரைப்பார். அப்போதே ஒருங்கிணைந்த மருத்துவ வட்டங்களில் பல நாடுகளில் அறியப்பட்டவராக இருந்தார். விமானப் பயணத்தில் அவருக்கு ஒவ்வாமை இருந்தது. எனவே ஒலிப்பேழைகளில் அவரது உரைகளை ஒரு கோப்பாகத் தயார்செய்து அனுப்பிவந்தார். பழந்தமிழ், வடமொழிப் புலமையுடனும் ஆங்கிலப் பயிற்சியுடனும் பன்னாட்டு மருத்துவ உலகில் வலம்வர வேண்டியவருக்கு இப்படி ஒரு ஒவ்வாமை தடையாகிவிட்டதே என்று வருந்தினேன். ஆனால் தெரிசனங்கோப்பில் அவர் ஒரு ஆலமரம்போல வேர்விட்டிருந்தார் என்பது காலப்போக்கில் விளங்கியது.
அவரை நான் அறிந்த 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளில், அறிவியல் அடிப்படை இன்றி அவர் எப்போதும் பேசியதோ எழுதியதோ இல்லை; குணப்படுத்த முடியும் என்ற போலி நம்பிக்கையை யாருக்கும் அளித்ததில்லை. அதே நேரம் தன்னைக் காண வரும் நோயாளியிடம் ‘உங்களைக் குணப்படுத்த நான் 100% முயற்சி செய்வேன்’ என்று ஆத்மார்த்தமாக உரைக்கையில் அவர்கள் ஆசுவாசத்தில் நிமிர்வதைப் பலமுறை கண்டிருக்கிறேன். நம்பிக்கை விதைத்த அவர் அவ்விதமே செயல்படவும் செய்தார்.
ஆயுர்வேதம், சித்த மருத்துவம், அலோபதி மருத்துவம் மூன்றும் நன்கு அறிந்தவர். ஆயுர்வேதத்தின் அடிப்படையான நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். இதனால் அகில இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றார். அவருடைய நூல்கள் சிலவற்றை வெளியிடும் வாய்ப்பு ‘காலச்சுவடு’க்குக் கிடைத்தது. எமக்குக் கிடைத்த வாய்ப்பைத் தனக்குக் கிடைத்த பெருமிதமாக எண்ணிய பெருமகன் அவர். 2008ஆம் ஆண்டு அவரைச் சந்திக்கையில் ‘உணவே மருந்து’ நூலின் கைப்படியை எனக்களித்து, ’இந்நூலை காலச்சுவடு வெளியிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’ என்றார். நான் உள்ளூரத் தடுமாறினேன். அவர் புலமைபற்றிய முழு நம்பிக்கை எனக்கு இருந்தாலும் அக்காலத்தில் ‘காலச்சுவடு’ இலக்கியம், ஆய்வு நூல்களைத் தாண்டி அதிகம் வெளியிடவில்லை. இருப்பினும் மகாதேவன் மீதிருந்த மதிப்பிலும் அன்பினாலும் அந்நூலை வெளியிட முடிவு செய்தேன். 2009 ஜனவரி புத்தகச் சந்தையின் முதல் சனிக்கிழமை காலையில் அச்சகத்திலிருந்து வந்த முதல் 20 பிரதிகளை அரங்கில் எடுத்து வைத்தார்கள். நான் 12.00 மணிக்கு உள்ளே நுழைகையில் கடைசிப் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருந்தன. பலப் பலப் பதிப்புகளைக் கண்டு இன்றும் விற்பனையாகிக்கொண்டிருக்கும் அந்நூல் ‘காலச்சுவடு’ மருத்துவ நூல்வரிசைக்கு முன்னோடியாகவும் வேறு பல துறை நூல்களை வெளியிட ஊக்கம் வழங்கிய நூலாகவும் அமைந்தது.
இப்போதும் மகாதேவன் ‘காலச்சுவடு’க்காக இரண்டு நூல்களை உருவாக்கிக்கொண்டிருந்தார்.
மகாதேவனின் சில நூல்களைக் ‘காலச்சுவடு’ வெளியிட்ட பின்னர், அவர் பெயர் தமிழ் அறிவுலகில் அறிமுகமாயிற்று. பல காலங்களில் பல நண்பர்கள் அவரைக் கலந்தாலோசிக்க வேண்டி என்னைத் தொடர்புகொள்வதுண்டு. கட்டணம் பற்றிய கருத்தே இன்றிப் பலருக்கும் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் முதல் கட்ட ஆலோசனை வழங்கியிருக்கிறார். சிலர் சென்னையில் அவரைக் கலந்தாலோசித்துள்ளார்கள். பலர் தெரிசனங்கோப்பு வந்து தங்கிப் பயன் பெற்றுள்ளார்கள். ‘காலச்சுவடு’ பணியாளர்கள் பலருக்கும் அவரது சேவை கைகொடுத்தது. பெருந்தொற்றுக் காலத்தில் ‘காலச்சுவடு’ அலுவலகத்திற்கு அவரது மருத்துவர்கள் வந்திருந்து அனைவருக்கும் பரிசோதனைகள் செய்து ஆலோசனைகளும் வழங்கினார்கள்.
மருத்துவத்தின் சபலங்களுக்குத் தன் ஆன்மாவை இழக்காத அபூர்வமான மனிதர். அபூர்வமான நகைச்சுவையுணர்வு கொண்டவர். அவரது மருத்துவமனைக்குச் செல்கையில் அங்கிருக்கும் அறிவிப்புகளைப் படிப்பது எனக்குப் பிடித்த வழக்கம். மாதிரிக்கு இரண்டு:
1. எனக்குத் தேவையான குடை, டார்ச் லைட், கடிகாரம் எல்லாம் என்னிடமே இருப்பதால் மருத்துவப் பிரதிநிதிகள் அவற்றை அன்பளிப்பாகத் தருவதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
2. எம்ஆர்ஐ எடுக்க விரும்புவோர் டாக்டர் மகாதேவனிடம் சீட்டுப் பெற்றுச் செல்லலாம். ஸ்கேன் சென்டரில் ரூ 4500க்குப் பதிலாக ரூ.2000 கொடுத்தால் போதுமானது. டாக்டரிடம் சீட்டுப் பெற டாக்டரிடம் மருத்துவம் பார்க்க வேண்டியதில்லை.
ஒருமுறை நண்பர் ஒருவரை அழைத்துச் சென்றேன். அவரிடம் உடலுபாதைகள்பற்றி உரையாடுகையில் ஒரு சந்தேகத்தை எழுப்பினார். நீண்ட நாட்களாக உட்கொண்டுவரும் ஒரு மருந்தின் பெயரைச் சொல்லி, இம்மருந்திற்குச் சில பின்விளைவுகள் உள்ளனவா டாக்டர் என்று உட்பொருளுடன் கேட்டார். டாக்டர் தன்னைச் சுற்றி நின்ற பயிற்சி மருத்துவர்களில் ஒருவரை ஒரு குறிப்பிட்ட நூலை எடுத்துவரச் சொல்லிப் புரட்டிப் பார்த்தார். பின்னர் நண்பரிடம் இப்படிச் சொன்னார்: “ஆமாம், இருக்கிறது. ஆனால் பாருங்கோ அது பின்விளைவில்லை, முன்விளைவு!” நண்பரின் வெடிச்சிரிப்பு அடங்க மறுத்தது!
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு மருத்துவரின் கேபிள் தொலைக்காட்சி விளம்பரங்களில் ஒட்டகப் பாலை மருந்தாகப் பரிந்துரைக்கையில் அவர்தம் வளாகத்தில் ஒரு ஒட்டகம் வலம்வரும் காட்சியைக் காட்டுவார்கள். அவர்களுக்கு அது ஒரு ஆண் ஒட்டகம் என்று மகாதேவன் தபால் அட்டையில் எழுதிப்போட்ட பின்னர் அந்த விளம்பரத்தைக் காணவில்லை!
டாக்டர் மகாதேவன் கடுமையான உளவியல்சார் பிரச்சினைகளுடன் கடும் போராட்டத்தை நடத்திவந்தார். மருத்துவத்தின் உதவியுடனும் சுயஎள்ளலுடனும் அவற்றை இத்தனை ஆண்டுகளாகச் சமாளித்துவந்தார். இயல்பாக இயங்கக் கடும் போராட்டம் நடத்தியவாறே நோயாளிகளைக் கவனிப்பது, உரைகள் நிகழ்த்துவது, நூல்களை எழுதுவது (ஒரு கணக்கெடுப்பின்படி 72 நூல்கள்), மாணவர்களை வழிநடத்துவது, கல்லூரிகளில் பாடம் எடுப்பது என அனைத்துப் பரிமாணங்களிலும் இயங்கிவந்தார். அந்தப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
ஏப்ரல் எட்டாம் இரவு அவசரச் சிகிச்சைக்காக அவரை ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்கையில் அது எனக்குத் தெரியவந்தது. நானும் அந்த மருத்துவமனைக்கு விரைந்தேன். நான் சென்ற சிறிது நேரத்தில் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் குழுமத் தொடங்கினார்கள். தமது ஆசிரியரின் பூதஉடலுடன் அவர்கள் அனைவருக்கும் பேசி முடிக்க எண்ணற்ற செய்திகள் இருந்தன. பல வாக்குறுதிகள் அளித்து மீண்டும் வர அழைத்துக்கொண்டிருந்தார்கள். மறுநாள் மாலை ஈமச் சடங்குகளுக்குப் பின்னர் முகத்தை மூடுவதற்கு முன் இறுதியாகப் பார்வையிடும் வாய்ப்பு மாணவர்களுக்கே அளிக்கப்பட்டது. அப்போதும் உரையாடல் தொடர்ந்தது. சில வாரங்களுக்கு முன்னர் மணிப்பூரிலிருந்து வந்த மாணவர்கள் திகைத்துப்போயிருந்தனர். தலையில் குல்லாவுடன் ஒரு இளைஞர் உள்ளும் வெளியுமாக நிலையற்று நடந்துகொண்டிருந்தார். பின்னர் ஆறு மணி தாண்டியதும் வெளியேறினார். மாணவர்கள் இறுதி மரியாதையளித்து வெளியேறுகையில் , ‘சாதிக் அஹ்மத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எங்கே?’ என்று ஒரு பெண் குரல். ‘அவர் தொழுகைக்கு மசூதி சென்றிருக்கிறார்.’ ‘சரி முகத்தை மூடிடுங்கோ.’
‘தேசிய தன்வந்திரி விருதை’ 2023 நவம்பரில் பெற்ற பின்னர் பல்வேறு சிறப்புகளும் வாய்ப்புகளும் அவரை நோக்கி வந்துகொண்டிருக்கையில் விடைபெற்றுச் சென்றுவிட்டார். மகாதேவனைச் சுற்றி அவர்மீது பேரன்பும் அக்கறையும் கொண்டிருந்த குடும்பமும் மருத்துவச் சமூகமும் இருந்தன. அவருடைய இரு கரங்களான மருத்துவர் ஜெயலட்சுமியும் தனியுதவியாளர் சஜுவும் தாயுமானவர்கள்போல அவரைக் கவனித்துக்கொண்டார்கள். இருப்பினும் சுடர்மிகு அறிவு கொண்டவரின் மனம் ஓயாத தத்தளிப்பிலிருந்தது. தத்தளிப்பின் உச்சத்தில் மூச்சுத் திணறும்போது எனக்கும் மைதிலிக்கும் அவர் அனுப்பும் ஒலிச் செய்திகள் மனத்தைப் பிழியும். அச்செய்திகளுக்குப் பின்னிருக்கும் உழற்சிக்கு அர்த்தப்பூர்வமாகப் பதில் அளிக்க முடியாமல் நான் திகைத்ததுண்டு.
காடாற்றுக்குப் பின் அக்கொந்தளிப்பு அடங்கியிருக்கும்.