மகாதேவன் கற்றுத்தந்த பாடம்
தெரிசனங்கோப்பு, மறைந்த மகாதேவன் சாருக்கு முன்னாலேயே எனக்கு அறிமுகமான ஊர். என் அப்பாவின் நாட்பட்ட நாளதாபிதப் புண்ணிற்கு (non healing varicose ulcer) மகாதேவன் சாரின் தாத்தா ஒய். மகாதேவ ஐயரிடம் வைத்தியம் செய்துகொள்ளச் சென்றிருக்கின்றேன். அப்போது எனக்குப் பத்து வயதிருக்கலாம். மூலிகைகளை அரைத்துப் புண்களுக்குப் பற்றிட்டு வந்தபோது, “இப்படி இலை தழையெல்லாம் வச்சு கட்டி புண்ணு குணமாகுமாப்பா?” என நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். அதன் பின்னர் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பின் ஒரு மருத்துவ வகுப்பில் டாக்டர் எல். மகாதேவன் ஆற்றிய உரைதான் பெரும் பிரமிப்போடு அவரை நெருங்கவைத்தது. மூட்டு வலியைக் குணமாக்க ஆயுர்வேத வழிமுறைகளைத் தத்துவ விளக்கத்துடனும் நவீன அறிவியல் விளக்கத்துடனும் அவர் அந்த உரையில் எடுத்துச் சொன்னார். என்னை நான் அறிமுகம் செய்துகொண்டு அவரை நெருங்கியபோது, அவர் என் உரைகளை, எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து என்மீது அன்பும் மதிப்பும் கொண்டிருந்ததை உளமார அவர் சொன்னது இப்போதும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
பெரும்பாலும் கருத்தரங்குகளில் மட்டுமே அதிகம் நேரில் சந்தித்துக்கொண்டாலும், தொலைபேசியில் பேசியது ஏராளம். எஸ்.கே.எம். நிறுவனம் நடத்திய பல கருத்தரங்குகளில் நானும் அவரும் அருகருகே அமர்ந்து உரையாற்றியிருக்கிறோம். சவால்கள் நிறைந்த பல நோய்களை எப்படி அணுகுவது எனத் திக்குற்று நின்ற பொழுதுகளில் அவரின் வழிகாட்டுதலைக் கேட்டு நின்ற பொழுதுகள் நிறைய உண்டு. மூளைக்கட்டியால் திடீரென பார்வை இழந்த ஒரு பெண்ணுக்குச் சித்த-ஆயுர்வேதக் கூட்டுச் சிகிச்சையில் லேசாகப் பார்வை மீண்டுவர, “தொடர்ந்து முயற்சி செய்வோம் சிவராமன். சரகரும் அகத்தியரும் சேர்ந்து நமக்கு உதவுகிறார்கள்போலத் தெரிகிறது. உங்கள் மருந்தோடு இந்த ஆயுர் சிகிச்சையைச் சேர்ந்து செய்யுங்கள் “ எனக் கைப்பேசியில் அவர் தன் கருத்தைப் பதிவிட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செய்தி அனுப்பினார். அவர் மறைந்த அன்று என் உதவி மருத்துவர் அந்தச் செய்தியை எனக்கு அனுப்பிவைத்துக் கண்கள் முழுக்க நீர் முட்டச்செய்தார். “மாணிக்ககிருதத்தை ஏன் நீங்கள் க்ரான்ஸ் நோய்க்குப் பயன்படுத்தக் கூடாது, ருமாட்டாய்டில் சீந்தில் பால்கஞ்சி சரியாக வருமே” என்கிற அவரது சித்த மருத்துவ ஆர்வம் இப்போதும் மெய்சிலிர்க்க வைக்கும். ஆகச் சிறந்த அறிஞராக இருப்பினும் குழந்தைக் குசும்போடு வரும் அவரது ஆயுர்வேதம் கலந்த நகைச்சுவை எவரையும் கவரும். சுற்றியுள்ள அத்தனையையும் முக்குற்ற அடிப்படையில் விளக்கும் அவரின் பார்வை இதுவரை எந்த ஆசிரியரும் தொடாத ஒன்று.
கடைசியாக அவரது பெற்றோரின் மறைவுச் செய்தி கேட்டு அவரைச் சந்தித்த சமயத்தில் நான்கு மணிநேரம் உரையாடினோம். “நாம் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நூல் எழுத வேண்டும் சிவராமன்! எனது அடுத்த சென்னைப் பயணத்தில் உங்கள் மருத்துவமனைக்கு வருகிறேன். அன்றே திட்டமிடுவோம்” என்று உரையாடலின் முடிவில் சொன்னார். இயற்கை வேறு முடிவை வலியோடு கொடுத்துவிட்டது.
தன் பேச்சையெல்லாம் ஒலிவாங்கியில் பதிவிட்டு அன்றைய தினமே அதனை அச்சிட்டுப் பிழை நீக்கி நூலாக்கும் அவரின் கடின உழைப்பை நான் இதுவரை எவரிடமும் கண்டதில்லை. 73 ஆயுர்வேத நூல்கள் (அதில் 14 சித்த மருத்துவ நூல்கள், 17 ஆங்கிலத்தில் எழுதிய ஆயுர்வேத நூல்கள்), 10 டிஜிட்டல் நூல்கள் என அவர் மருத்துவ உலகிற்குத் தந்த நூல்கள் ஏராளம். மருத்துவர் மகாதேவன் எழுதிய பெரும்பாலான நூல்கள் முழுமையான அனுபவக் குறிப்புகளும் ஆசிரியரின் விளக்கமும் கொண்ட மூல நூல்கள். எளிய சுரம்முதல் தீராப் புற்று, நரம்பியல் நோய்கள்வரை அனைத்தைப் பறியும் தத்துவார்த்த அடிப்படையில் அவர் தரும் விளக்கம் தனித்துவமானது. அல்சீமர் நோயின் மூளையின் நரம்பிடுக்கில் குறைந்த ஒரு புரதத்தின் நுட்பத்தை ஆயுர்வேத முக்குற்றப் பார்வையில் மீட்டெழுப்புவது எப்படிச் சரியாக அமையும் என இரு அறிவியலுக்கும் பொருத்தமான ஒரு அணுகுபாதையை அறிவித்த சமகால ஆசிரியர் மகாதேவன் மட்டுமே.
என்னால் எல்லாம் முடியும் என்கிற மேட்டிமைத்தனமோ, இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்கிற மூளைச் சோர்வோ இன்றி, நாம் நம் துறை, நம் தத்துவம் சார்ந்து காய்தல் உவத்தல் இல்லாமல் எப்படி அணுக வேண்டும் என்று மட்டும் பார்க்கும் வித்தைதான் அவர் பல ஆயிரம் மாணவர்க்குக் கற்றுத்தந்த மருத்துவப் படிப்பாகும்.
மின்னஞ்சல்: herbsiddha@gmail.com