இன்று வந்து மாண்டவன்
ஓவியங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
செல்வமணி அன்றைய கனவில் வந்தான்; அப்படி அவன் கனவில் வருவதற்கு எந்தக் காரணமும் இல்லை. செல்வமணி இவனோடு கூடப் படித்தவன். அவன் மட்டும்தான் கூடப் படித்தானா? வகைதொகையில்லாமல் படித்தவர்கள் ஆண்களும் பெண்களுமாய் எத்தனையெத்தனைபேர்? பிரியத்திற்குரிய பலரும் கனவில் வராமல் இவன் வந்தது ஏன்? படிப்பு முடிந்துவந்த நாள்முதலாய், கடைசிப் பரீட்சை எழுதிவிட்டு வெளியே வந்த அந்த நிமிசத்திலிருந்து செல்வமணி காணாமல் போய்விட்டான்; அவனை மட்டும் சொல்வானேன், எல்லோரும்தான் காணாமல் போய்விட்டார்கள். ஒருவர் கண்ணில் பிறிதொருவர் பட்டுவிடக் கூடாதென்று எல்லோரும் ஏகமனதாகத் தத்தம் மனத்துக்குள் முடிவெடுத்திருக்க வேண்டும்; இல்லையென்றால் முப்பத்தெட்டுப் பேருக்கும் முப்பத்தெட்டுத் தி