வருமுன் காக்க
எப்போதாவது புயல் தாக்கிக்கொண்டிருந்த தமிழகத்தில், எப்போதும் புயல் தாக்கும் நிலை உருவாகியிருக்கிறது. 1994ஆம் ஆண்டு பெயரிடப்படாத புயல் சென்னைக்கும் கடலூருக்கும் இடைப்பட்ட பகுதியைத் தாக்கியழித்த பிறகு, 2005முதலான கடந்த பதின்மூன்றாண்டுகளில் பத்துப் புயல்கள் தமிழகத்தைத் தாக்கியுள்ளன; பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் பிணம் தின்றுதான் தீர வேண்டும். புயல்களோடான வாழ்க்கையே இனி நம் வாழ்வியல் யதார்த்தம் என்றாகும்போது, அவற்றை ஆழமாகப் புரிந்துகொள்வதும் அவற்றுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும்தான் அறிவுடைமை.
ஆனால் நடப்பது என்ன? எங்கோ ஒரு மூலையிலிருக்கும் கிராமத்தில் போராட்டம் நடக்கிறதென்றால் அரசின் அனைத்துத்துறை அதிகாரிகளும் அலுவலர்களும் அங்கே வந்துவிடுகிறார்கள். எங்ஙனம் போராட்டக்காரர்களை முடக்குவது என்று திட்டமிட்டு அதை அடக்கிவிடுகிறார்கள். ஆனால் இயற்கைப் பேரிடர் நடக்கும்போது அனைத்து அரசுத்துறைகளும் காணாமல் போவதெப்படி? மாபெரும் அரசு இயந்திரம் அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று தம் கடமையை நிறைவேற்ற முடியாமல் போவதேன்?
புயலால் கடும் சேதமும் உயிரிழப்புகளும் நிகழ்ந்தாலும் அங்கு மத்திய, மாநில அமைச்சர்கள் வந்து பார்ப்பதில்லை. கஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மத்திய உள்துறை அமைச்சரோ பிரதமரோ வரவில்லை. மக்களோடு வந்து நிற்க வேண்டிய முதல்வர் ஒருவாரம் கழித்து வானில் பறந்து பார்வையிடுகிறார். மத்திய ஆய்வுக்குழுவும் ஆற அமர வருகின்றது. எல்லாம் வெற்றுச் சம்பிரதாயங்கள்! அவர்களின் வருகையே வீண் செலவுக்குரியதாகவும் கால விரயமாகவும் ஆகிவிடுகின்றன. ஆய்வுக்குப் பின்னரும் மத்திய அரசிடமிருந்து இன்னும் எவ்வித நிதியுதவியும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் கொதிப்புற்ற மனம் நாளதுவரை ஆறவில்லை. அவர்கள் ஆங்காங்கே போராட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் மட்டும் அரசின் அடக்குமுறைக் கரம் உடனடியாக அந்தப் பகுதிகளில் நீள்கிறது; பசியிலும் பொருளாதார இழப்பிலும் துயருற்ற மக்களை ஈவிரக்கமில்லாமல் சிறையில் தள்ளுகிறது.
உண்மை இதுதான், அரசு இயந்திரத்துக்கு ஆபத்து என்றால் ஓடோடிப் போய் நடவடிக்கை எடு; மக்களுக்கு அழிவு, துயரமென்றால் ஓடிப்போய்விடு! இதுதான் அரசின் நடைமுறை. புயலால் தாக்கப்படும் பகுதிகளை முடிந்தவரை துல்லியமாகக் கணக்கிடுவதும் அவ்வப் பகுதிகளில் சாதக பாதகங்களைப் பட்டியலிடுவதும் அவற்றைப் பொதுமக்களுக்கு அறிவித்து அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்குவதும் அந்நடவடிக்கைகளில் முழுமூச்சாக நின்று ஒத்துழைப்பதும்தானே அரசின் முன் தயாரிப்புகளாக இருக்க முடியும்? இங்கோ பேரிடர் முடிந்தபின்னரும் வராதவர்கள், முன்னரே வந்துநின்று முனைந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பது மடமை. வரும் முன்னும் காக்கவில்லை,- வந்தபின்னும் பார்க்கவில்லை. வீதிகளில் அனாதரவாக நிற்கும்போதாவது மக்களின் கண்ணியத்தைப் பேணும் வகையில் நடவடிக்கைகள் இருக்கின்றனவா என்றால் அதுவும் இல்லவேயில்லை. பாதிக்கப்பட்டுப் பரிதவிக்கிற மக்களின் அடிப்படை மனித கண்ணியத்தைப் பேணுவதற்கு அரசு சிந்திக்க வேண்டாமா?
பேரிடர் நிகழும்முன் கூடிநிற்பதற்கான இடத்தைத் தேர்வுசெய்வதோ, ஏற்கெனவே இருக்கும் பேரிடர் மீட்புக் கட்டடங்களைப் பேணுவதோ இல்லை. மக்களைக் குறைசொல்வதற்குப் பதிலாக அரசுகளை மட்டும் குறைகூறுவது நியாயமா என்ற கேள்வியைச் சிலர் எழுப்புகிறார்கள். குடிமைச் சமூகம், அரசியல் சமூகம் எனும் இவ்விரண்டில் எந்தப் பக்கம் அதிக செல்வமும் செயல்படுத்தும் ஆள்பலமும் அதிகார பலமும் செம்மையான கட்டமைப்புகளும் அமையப்பெற்றிருக்கின்றன என்பதையே முதலில் கருத்திற் கொள்ளவேண்டும். இவ்வாறு கருதினால் குடிமைச் சமூகத்தைக் குறைசொல்ல நா எழாது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடக்கும் நிவாரண நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்படுவதும் இல்லை. பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகள் வழங்க வருகையில் அவர்கள் வழிகாட்டப்படுவதுமில்லை. தனிநபர்களோ அமைப்புகளோ எங்கே செல்ல வேண்டும், எவ்வகை உதவிகளைச் செய்ய வேண்டும் என்கிற அறிவுறுத்தல்கள் அரசின் தரப்பில் இல்லவே இல்லை. உள் பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களோ உதவிகளோ வழங்கப்படாமல், முதன்மைச் சாலையருகே முதலில் பார்ப்பவர்களிடம் நிவாரணங்கள் வழங்கப்பட்டுவிடுகின்றன. அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகத் தன்மையோடு நடக்கின்றன. இதனால் மீண்டெழுவதும் மறுகட்டமைப்பு செய்வதும் தாமதமாகின்றன; மறுபடியும் மறுபடியும் சுழியத்திலிருந்தே தொடங்கிச் சூனியமாகிப் போகின்றன.
‘உடுக்கையிழந்தவன் கைபோல’ ஓடிவர வேண்டிய அரசு ஒன்றும் செய்யாமல் ஒதுங்கிக்கொள்ள, அங்கே ஓராயிரம் குழப்பங்களும் குளறுபடிகளும் நடக்கின்றன. களத்தில் அடிபட்டுக் கிடப்பவனை மாடுமுட்டிக் கொன்றதுபோல், கண்ணியமற்ற ‘மக்கள் மேலாண்மை’ இன்னும் கஷ்டங்களையே உருவாக்குகின்றது. பேரிடரைவிட அரசிடரும் அரசியலிடரும் அதிக அவலங்களை உருவாக்குகின்றன.
இருள்குவிந்த கீழ்மை நிலையிலும் தலைநிமிர்ந்த குடிமை மாண்புகளும் முகிழ்க்கத்தான் செய்கின்றன. அரசுகளை, அரசியல்வாதிகளை, அதிகாரிகளை மக்கள் கேள்வி கேட்கிறார்கள்; ஊரைவிட்டு விரட்டுகிறார்கள்; தாம் வஞ்சிக்கப்படுவதை உணர்கிறார்கள்; உள்ளூர் இளைஞர்கள் சாதி, மதம் கைவிட்டு ஒன்றாய் நின்று தம் மக்களுக்குத் தங்களாலான அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். அடித்திடும் புயல்களிலிருந்து வெடித்தெழும் குடிமைச் சமூகம் ஒரு பெரும் ஆறுதலாகவே இருந்தாலும், மக்கள் கடக்க வேண்டிய தூரம் என்னவோ நீண்டே கிடக்கிறது.