ஜனரஞ்சக மதிப்பீடுகளை தாங்கும் ரூபா
புலம் பெயர்ந்து இந்திய துணைக் கண்டத்தில் வாழும் தமிழர்கள், தமது திரை அபிலாசைகளைப் படைப்பினூடாக வெளிப்படுத்துகின்றனர். ஒரு கணினி மென்பொறியியலாளரான லெனின் சிவமும் தனது முழு நேர வேலையைத் துறந்து, திரைப்பட இயக்குநராகியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு சில குறும்படங்களை இயக்கித் தனது திரையுலகப் பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் ‘இனியவர்கள்’ என்ற முழுநீளத் திரைப்படத்தை நெறியாள்கை செய்துள்ளார். ‘1999’ படம் அவரைச் சர்வதேசத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. ‘கன் அன்ட் றிங்’ பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஷோபாசக்தியின் கதையை, லெனின் நெறியாள்கை செய்துள்ளார். கடந்த மாதம் கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் அது திரையிடப்பட்டது.
கோகுல் என்ற இளம் பருவ இளைஞன், தன்னைப் பெண்ணாக உணர்கின்றார்; பெண்ணாக வாழ விரும்புகிறார். ரூபாவாக வாழ்வைத் தொடருகின்றார். அவருக்கும் திருமணமான, குழந்தை களுள்ள அந்தோனிக்குமான காதலே ரூபா. படத்தின் ஆரம்பத்திலேயே அந்தோனி ஓர் இருதய நோயாளி எனக் காட்டப்படுகின்றது.
இது படத்தின் முடிவில் அந்தோணி இறப்பதற்கு ஏதுவாகின்றது. ஆண்-பெண், ஆண்-திருநங்கை என்ற உறவு ரீதியான சிக்கல்களை இப் படம் முன்வைக்கின்றது. அந்தோனி என்ற கதைசொல்லியினூடாகவே இப் படம் நகர்கின்றது. பெற்றோர் - குழந்தைகள், பெற்றோர் - திருநங்கை எனும் இவ்விரு சமூகக் கட்டமைப்பும் எதிர் - எதிர் நிலைகளிலேயே உள்ளன. ஓர் ஆண், தன்னைப் பெண்ணாக மாற்றிக்கொள்ளும்போது குடும்பம், குடும்பம் சார்ந்த நெருங்கிய உறவுகள், குடும்பம் சார்ந்த சமூகம், பொதுச் சமூகம், அரசியல் சமூகம்-சட்டம் போன்ற அமைப்புகளின், ஒழுக்கவியல் கோட்பாடுகளின் எதிர்நிலையைச் சந்திக்க வேண்டும். இதன் கட்டுப்பாடுகளை, ஒழுக்கக் கோட்பாடுகளை உடைக்க வேண்டும். ரூபா அதைச் செய்துள்ளாரா? கதைசொல்லியான அந்தோனி அந்த நிலையைத் தாண்ட விடவில்லை. தனிப்பட்ட ஆசைகளுக்கும் கனவுகளுக்குமிடையில் சமூக ஒழுக்க நெறிகள் ரூபாவைத் தடை போடுவதை, அவள் எதிர்கொள்ளும் உணர்வு நிலைகளை, நுட்பமாகக் காட்சிப்படுத்தத் தவறிவிட்டார் இயக்குநர்.
பொதுச் சமூகத்துக்குரிய உணர்வுகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், ரூபாவின் உணர்வுகளுக்குக் கொடுக்கப்பட்டதா? இன்று ஒரு மனிதரின் பாலியல் தேர்வு என்பது அவரது தனிமனித சுதந்திரம். கனடாவில் அதனைச் சட்டம் அங்கீகரிக்கின்றது.
அவ்வாறான புறச் சூழலில் வாழும் ரூபாவை, அதுவும் சட்டரீதியாகப் பெண்ணாக மாறுவதற்குரிய சிகிச்சைக்கான அங்கீகாரமுள்ள நாட்டில், ரூபா தனது ஆணுறுப்பை வெட்டி, தன்னை ஒரு முழுமையான பெண்ணாக மாற்றிக் காட்ட வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? திருநங்கைகளுக்கான கடவுள், அவரது சடங்குகள் போன்ற விடயங்கள் மேற்கத்தியப் பார்வையாளர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்டதா? திருநங்கைகளின் புற உலகைப்பற்றி அக்கறையின்றிக் காட்சிப்படுத்திவிட்டு, அவர்கள் வழிபடும் தெய்வத்துக்கும் சடங்குகளுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம், சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கான திறவுகோலாக காட்சிப்படுத்தப்பட்டனவா என்ற ஐயத்தை ஏற்படுத்து கின்றது.
படத்தின் மூலக் கதை ஐரோப்பாவில் நிகழ்கின்றது. ஐரோப்பாவிற்கும் கனடாவிற்கும் ஒரு தனி மனிதரின் பாலியல் தேர்வுகள் குறித்த பார்வைகளும் சட்டங்களும் வித்தியாசமானவை. படம் ரொரன்றோவில் நிகழ்கின்றது. பிரதியாக்க அமைவிடத்து, திருநங்கை சமூக உருவாக்கத்துடன் பிணைக்கப்படாது, குழப்பமான பிம்பங்களையே பதிவு செய்துள்ளது.
கனடாவில் Pride parade எனப்படும் lesbian, gay, bisexual, transgender and intersex (LGBTI) ஊர்வலம் வருடா வருடம் நடைபெறுகின்றது. உலகின் பல நகரங்களிலும் வருடா வருடம் இவ் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. உலகில் அதிக மக்கள் கலந்துகொள்ளும் ஊர்வலம் நடைபெறும் நகரங்களில் ரொரன்றோவும் ஒன்று. கோகுல் கனடாவில் கல்வி கற்கின்றார். இங்கு அவருக்கு இலகுவாகத் தன்னைப் பெண்ணாக மாற்றுவதற்குப் பல தகவல்கள் கிடைத்திருக்கும். ஏன் அவர் மும்பை சென்றார்?
படத்தில் திருநங்கைக்கான ஒரேயொரு தேர்வாகப் பாலியல் தொழில் காட்டப்படுகின்றது. அதற்கான இணைப்பாக ரூபா மும்பைக்குச் சென்று சில காலம் வாழ்கின்றார்; இங்கு திருநங்கைகள் சமூகத்தின் உயர் பதவிகளில் உள்ளனர்.
மூலக் கதை ஷோபாசக்தி. படத்தில் அந்தோனியாகவும் நடித்துள்ளார்; ஓர் இரும்பு மனிதனாகவே சோபா படம் முழுவதும் வலம் வருகின்றார். பிள்ளைகளுடன் உரையாடும் பொழுதும், இவரது முகத்தில் புன்னகையைக் காணமுடியாது. முரட்டு முகத்துடனேயே காதல் கொள்கின்றார். இவரது நடிப்பின் முதிர்ச்சியின்மை தெளிவாகவே வெளிப்படுகின்றது.
கோகுல் - ரூபாவாக மாறுவதாகக் கட்டுடைத்த படம் இறுதியில் அந்தோனியின் இறப்பின் மூலம் தற்கொலை செய்துகொண்டுள்ளது.
திருநங்கைகளின் உலகத்தைப் பற்றிய முறையான ஆய்வின்மை தெரிகின்றது. மேற்கத்திய, முதலாளித்துவச் சமூக மதிப்பீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.
கோகுல் ரூபாவாக இயல்பாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளார். சக்கரவர்த்தி, தேனுகாகாந்தரஜா, சொர்ணலிங்கம் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவில் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். வெளிப்புறக் காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஷோபாசக்தி கதைப்பது தெளிவாகவே கேட்கவில்லை. அதே போல் சில பாத்திரங்களின் உரையாடல் தெளிவற்றுள்ளது. சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கென தயாரிக்கப்படும் திரைப்படங்கள் தொழில்நுட்பக் குறைபாடுகளைத் தவிர்க்க வேண்டும். படத்தின் திரைக்கதையில் லெனின் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
லெனின் சிவம் தொடர்ச்சியாகத் தமிழ்ப் படங்களைச் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கும் சமூகத்துக்கும் கொண்டு செல்கின்றார். இப் படம் சர்வதேச ரீதியாகப் பெற்றுள்ள கவனம், லெனின் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்கின்றது.
மின்னஞ்சல்: rathan100@gmail.com