பணமதிப்புநீக்க அரசியலின் ‘உண்மையை உணர்தல்’
அரசியல்வாதிகள் தங்களது வசதிக்கேற்றபடி பொய்களைப் புனைவது, புள்ளிவிவரங்களை - தரவுகளை மட்டுப்படுத்துவது, உண்மைகளைத் திரிப்பது ஆகியவை அனைவருக்கும் தெரிந்த உண்மை. ‘வசதிக்கேற்றபடி’ என்பதன் வரம்பை நிர்ணயிப்பது தாங்கள் நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகளை மறைக்கும் அரசியல் அவசரமே, அதிலும் குறிப்பாக தங்களது ‘தலையெழுத்தை நிர்ணயிக்கும்’ தேர்தல் வரவுள்ள நிலையில்! பல்வேறு பொருளாதார, சமூகக் கொள்கைத்திட்டங்கள் குறித்து அப்பட்டமான பொய்களைச் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறது அரசு; 2014இல் வாக்காளர்களுக்கு நரேந்திர மோடி அள்ளிவீசி, ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு அவற்றை நிறைவேற்றுவதைப் பற்றி அக்கறை கொள்ளாததை நேரடியாகத் தொடர்புபடுத்துவது எந்த வகையிலும் எளிமைப்படுத்தல் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பாரதீய ஜனதா கட்சி குறித்த நமது அனுபவத்தின் அடிப்படையில் இதைச் சொல்ல முடியும். ஆனால் இந்த ஏமாற்றுகளை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தின் ஏமாற்றுகளை அவர்கள் ‘பெரிதும் மிகைப்படுத்தப்பட்ட உண்மைகள்’ (‘பொய்கள்’ அல்ல என்பதை கவனிக்கவும்) என்றும், இந்தியாவை ‘சுத்தப்படுத்துவதற்கான’ மாற்றத்தை நோக்கிய வலிமையான வேண்டுகோள் என்றும் அதை எண்ணும் துணிவு ‘தமது அரசுக்கு மட்டுமே’ இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இந்த வார்த்தை ஜாலக்காரர்கள் என்னதான் ஆதரித்தபோதிலும் பாஜகவின் சமீபத்திய பொருளாதார ஏமாற்றுகள் ஆரோக்கியமான பொருளாதாரத் தர்க்கத்திலிருந்து வெகு தூரத்திலிருக்கின்றன. இந்தக் குற்றத்திற்கான பெரும் பங்கு, பணமதிப்பு நீக்கத்தை ‘அற நடவடிக்கை’ என்று தானாகவே அழைத்துக் கொள்கிற அரசையே சேரும்.
ஆதாரங்களை மறுப்பது/திரிப்பது என்பதற்கும் மேலாகச் சென்று, உண்மைக்குப் புறம்பானவற்றை நியாயப் படுத்தும் வகையில் பாஜக அரசு உண்மைகளைச் சர்வாதி காரத்துடனும் அகங்காரத்துடனும் தூக்கி யெறிவது அதிக கவலைக்குரிய விஷயம். சமீபத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சகம், விவசாயத் துறையின்மீது பணமதிப்புநீக்கம் ஏற்படுத்திய (எதிர் மறையான) பாதிப்புகளைச் சுட்டிக்காட்டிய மதிப்பீட்டு அறிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டதுடன் வேறுபட்ட முடிவுகளைக் கொண்ட அறிக்கையையும் வெளியிட்டது. மேலும் முதல் அறிக்கையைத் தயாரித்த அதிகாரிகள் தாங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மீறிவிட்டதாக அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியது. இது இந்த அரசின் வெட்கமற்ற துணிவையும், ‘இது பொய்தான், ஆனால் யாருக்கு அக்கறை’ என்ற அதன் அலட்சியத்தையும் காட்டுகிறது. இப்போது விவாதத்திற்குரிய கேள்வி என்னவெனில் இதற்கான அக்கறையைக் கொள்ள வேண்டியது யார்? தனது பதில்சொல்லும் பொறுப்பைப் பற்றி அரசு அக்கறை கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிற அதே நேரத்தில், வாக் காளர்களும் எதிர்க்கட்சிகளும் அரசிடம் ‘விளக்கம்’ (தவறான ஆட்சிக்கான பதில்) கோரும் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. சாதாரண மக்களின் உணர்வுகளை, தப்பெண்ணங்களை வலுவாகத் தூண்டிவிட்டு, தம் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ‘பொய்களைத் திருப்பிவிட்டு’ (சமூக ஊடகங்களின் உதவியுடன்) செயல்படும் நிலையில், இந்திய ஜனநாயகத்தில் விவாதங்களுக்கான வெளி குறைவது இருக்கட்டும், உரையாடலுக்கான வெளியே சுருங்கிவருகிறது.
ஆகவே பணமதிப்பு நீக்கத்தின் அறிவார்ந்த உள்ளடக்கத்தை இன்றைய அரசியல் விவாதங்கள் தவறவிடுகின்றன என்பதில் ஆச்சர்யமில்லை. இந்த ஆண்டு நாடு முழுவதும் நடந்த விவசாயிகளின் போராட்டங்கள்/ஊர்வலங்கள், குறிப்பாக 2018 நவம்பர் 30ஆம் தேதி டெல்லியில் நடந்த போராட்டத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் வேளாண் நெருக்கடி, வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான விலைகள், கடன் பிரச்னை, கடன் தள்ளுபடி போன்றவை குறித்த கிராமப்புற மக்களின் உணர்வுகளை வெற்றிகரமாக வெளியுலகிற்குத் தெரியும்படிச் செய்திருக்கின்றன. ஆனால் தவறுதலாகப் பணமதிப்புநீக்கம் ஏற்படுத்திய அழிக்க முடியாத பொருளாதார நட்டத்தைப் பற்றிக் கவனத்தில் கொள்ளாது விட்டுவிட்டன. உதாரணமாக அரசாங்கக் கொள்முதல் வலுவாக இல்லாவிட்டால் விவசாயிகளுக்குப் பலன் கிடைக்காது என்ற நிலையிலுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்கும் கோரிக்கையை வைப்பதற்குப் பதிலாக வலுவாகவும் தீவிரமாகவும் கொள்முதல் செய்வதற்கான திட்டத்திற்கு ஒருமித்த கருத்தை உருவாக்கியிருக்க வேண்டும். குறிப்பாக, ‘ரொக்கப் பணம் இல்லாததன்’ காரணமாக கிராமப்புற வேலைகளும் வருமானமும் பெரிதும் சுருங்கியுள்ள நிலையில் இது அவசியமானது.
இந்திய அரசியலுக்குள் பாஜக கொண்டுவந்துள்ள ‘பின் - உண்மை’ வகைப்பட்ட அரசியலானது ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பிடமும் சார்புடைய உண்மைகளை உருவாக்கியிருக்கிறது. இது தரவுகளிலிருந்து தனக்கு வேண்டுமென்பதைத் தெரிவு செய்துகொள்வதன் அடிப்படையிலானது. உதாரணமாக, 2018 டிசம்பர் 3ஆம் தேதி தி இந்து நாளிதழில் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ‘விவசாயிகளின் வீட்டுவாசலில் வேலை உருவாக்கம்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியிருந்ததும், ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பற்றி 2018 அக்டோபர் 10ஆம் தேதி வாக்குறுதியளித்ததும் இரு தரப்பினரும் தத்தமது வாக்கு வங்கிகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான தற்காலிக அரசியல் பேச்சுகள் மட்டுமே. இவர்கள் யாரும் அடிப்படையான கேள்விகளுக்குத் தெளிவான பதில்களை அளிப்பதில்லை. கிராமப்புறங்களுக்கான விவசாயமல்லாத வேலைவாய்ப்புகளுக்குப் பெரிய ஆதாரமாக இருக்கும் அமைப்புசாரா துறைகள் பணமதிப்புநீக்கத்தாலும், சரக்கு சேவை வரியாலும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் நிலையில் விவசாயமல்லாததைப் பல்வகைப்படுத்துவது எப்படி சாத்தியம்? அமைப்புசாரா உற்பத்தித் துறை, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்துத் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கையில் புது வேலை உருவாக்கம் எப்படி சாத்தியமாகும்?
ஆளும் அரசின் பொய்களைக் கேள்விக்குட்படுத்தும் அதே நேரத்தில் போராட்டக்காரர்கள்/எதிர்க்கட்சிகள் மென்மையான விவகாரங்களிலேயே அதைச் செய்கிறார்கள் என்பது நெருடலான விஷயம். மேலும் அரசின் மொழியை அப்படியே ஒத்திருக்கும் அவர்களது ஒரே மாதிரியான ‘அற’ மொழியானது பொருளாதார மதிப்பீட்டைத் தோற்கடித்துவிடுகிறது. இந்த வகையில் வாக்காளர்கள் தங்களது தலைவர்களை/அரசைத் தேர்ந்தெடுக்கத் தேவையான ‘தகவல்களை’ எதிர்க்கட்சிகள் வாக்காளர்களுக்குத் தராமல் தவறுகின்றன அல்லது தள்ளிவிடுகின்றன. இத்தகைய தவறவிடல்கள் இந்த அரசு இடைவிடாது உண்மைகளைப் புறந்தள்ளிவருவதற்குச் சமமானது. பணமதிப்பு நீக்கத்தால் கட்டமைப்புரீதியாக ஏற்பட்ட மாற்றங்களின் பின்னணியில் விவசாயப் பிரச்சினைகளை ஆராய்வதற்கான வலுவான ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளை எதிர்க்கட்சிகளும் போராட்டக்காரர்களும் எடுக்கவில்லையென்றால் பாஜக அரசின் மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை உண்மை போன்று தோன்றும்; யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் வாக்காளர்களிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தும். பாஜகவின் பொய்கள் அறச் சீற்றத்தை ‘எதிர்த்திசையில்’ திருப்பிவிட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். ‘மாற்றம்’ பற்றிய பேச்சுகளைக் குடிமைச் சமூகத்தின் ஒரு பிரிவு கவனித்துக்கொண்டிருக்கும் நிலையில் பணமதிப்புநீக்கமானது பாஜகவின் ‘அற’ அழைப்பில் பொதிந்திருக்கும் அராஜகமான வெளிப்பாடு என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கிறது. 2019 தேர்தலானது பின் - உண்மை அரசியலை மறுதலிக்கும் புதிய மொழியைக் கண்டடைவதில் குடிமைச் சமூகத்தின் உணர்வை அதிகபட்சம் பயன்படுத்தக்கூடியதாகவும், இந்திய ஜனநாயகத்தின் வலிமைக்கான சோதனையாகவும் இருக்கும்.
தலையங்கம், எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, டிசம்பர் 8, 2018
மின்னஞ்சல்: kthiru1968@gmail.com