கண்ணாடிச் சொற்கள்
அமிதாவ் கோஷுக்கு இந்த ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்பட்டிருப்பது பலருக்கும் வியப்பூட்டும் செய்தியாகவே இருந்திருக்கும். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களை சாகித்திய அகாதெமி அங்கீகரித்து வருவதைப்போலன்றி, இந்தியாவிலேயே இலக்கிய விருதுக்காக மிக அதிகமான பரிசுத் தொகையை வழங்கும் ஞானபீடம், தொடங்கப்பட்ட 1965ஆம் வருடத்திலிருந்து இதுவரை இந்திய ஆங்கில எழுத்தாளர்களை நோக்கித் திரும்பியதில்லை. ராஜாராவ், அனிதா தேசாய், முல்க் ராஜ் ஆனந்த், ரோஹின்டன் மிஸ்ட்ரி, சல்மான் ருஷ்டி, விக்ரம் சேத், நீரத் சௌத்ரி, அருந்ததி ராய், ஜும்பா லஹிரி ஆகியோருக்கு வழங்கப்படாத விருது அமிதாவ் கோஷுக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் ஆங்கிலம் இரண்டு வழிகளில் உள்ளே நுழைந்தது. ஷேக்ஸ்பியர், மில்டன் போன்ற இலக்கியவாதிகள் மூலமாகவும் கிழக்கிந்திய கம்பெனியின் மூலமாகவும் என்று குறிப்பிடும் நேரு, “ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களுக்குத்தான் நாம் எதிரிகளேயொழிய ஆங்கில மொழிக்கல்ல” என்றார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதிகாரபூர்வத் தேசிய மொழிகளாக இருபத்திரண்டு இந்திய மொழிகளோடு ஆங்கிலமும் இருப்பது அது உலகப் பொதுமொழி என்பதால் மட்டுமல்ல. எல்லா இந்தியர்களின் தாய்மொழியோடும் ஆங்கிலம் துணை மொழியாகவே அவர்கள் வாழ்வில் கலந்திருப்பதால்தான்
இந்திய ஆங்கில எழுத்தாளர்களின் மீது பொதுவாக வைக்கப்படும் விமரிசனங்கள் / குற்றச்சாட்டுகள் சில உண்டு. இந்தியமொழி எழுத்தாளர்கள் அளவுக்குத் தரமானவர்கள் அல்லர்; அவர்கள் எழுதுவது மேலைநாட்டு வாசகர்களோடு பரவலான உலக வாசகர்களுக்காக; உண்மையான இந்திய ஆன்மாவை அவர்கள் பிரதிலிப்பதில்லை. ஓரளவு ஒப்புக்கொள்ளவேண்டிய இந்தக் கருத்துகளோடு ‘ஷோகேஸ் எழுத்தாளர்கள்’, ‘குருவி மண்டை’ போன்ற பிரயோகங்களும் வீசப்படுவதுண்டு.
ஆனால் இத்தகைய விமர்சனங்களை அமிதாவ் கோஷ் மீது சுமத்தமுடியாது. பல இந்திய ஆங்கில எழுத்தாளர்களை விடவும் முழுமையான ‘இந்திய’ எழுத்தாளர் அவர். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அசலான ‘வங்க’ எழுத்தாளர்.
இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் வெளிநாட்டு வாசகர்களுக்காக எழுதுகிறார்கள் என்ற விமர்சனத்துக்கு முக்கிய காரணமே பலருடைய எழுத்தில் பௌதிக இந்தியத்தன்மை இருந்தாலும் இந்திய ஆன்மா இல்லாமையே. வெள்ளைக்காரன் சிரமப்பட்டு இந்திய மொழியில் பேசுவதைப்போலவே பலருடைய படைப்புகள் இருப்பதால் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுகின்றன. மேலும் முதலாம் உலக நாடுகளின் வாசகர்கள் இந்திய நாவலில் எதைப் பார்ப்பதற்கு விரும்புகிறார்களோ அதை மட்டும் எழுதுகிறார்கள் என்ற விமர்சனமும் பல இந்திய ஆங்கில எழுத்தாளர்கள்மீது சரியாகவே வைக்கப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் அருந்ததி ராயைப்போலவே அமிதாவ் கோஷும் விதிவிலக்காக இருப்பவர். ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ எப்படி ஒரு முழுமையான கேரள நாவலாக இருந்ததோ, அப்படியே அமிதாவ் கோஷின் நாவல்களும் வங்காள உணர் தகவைக் கொண்டிருப்பவை. அவருடைய நாவல்கள் உலகின் எந்தப் பகுதிக்கு நகர்ந்தாலும், ஒரு வங்காளியின் பார்வையிலேயே சொல்லப்படுகின்றன. புது தில்லியில் நேரில் கண்ட 1984ஆம் வருட சீக்கியப்படுகொலைகள் அவரிடம் தீவிரமான தாக்கத்தை உண்டாக்கினாலும் அந்த பாதிப்பில் எழுதிய ‘Shadow Lines’ நாவலில் அறுபதுகளின் டாக்கா படுகொலைகளையே பின்னணியாகக் கொள்கிறார் .
மெலிதான மாய யதார்த்த வகைமையில் எழுதப்பட்ட அமிதாவ் கோஷின் முதல் நாவலான ‘ஜிலீமீ ‘The Circle of Reason’இல் ‘அனைத்தையும்’ சொல்லிவிட வேண்டுமென்ற இளம் நாவலாசிரியனின் தவிப்பு தெரியும். ஒரு சிறிய வங்காளக் கிராமத்தைச் சேர்ந்த விநோதமான திறமைகளைக் கொண்ட அனாதைச் சிறுவன் ஆலு, மண்டையோடுகள் குறித்த ஆய்வில் ஆர்வம்கொண்டிருக்கும் அவனுடைய மாமாவும் குருவுமான பலராம் போஸ், வீண்பழிசுமத்தப்பட்டு அரபிக்கடல் மார்க்கமாக மத்திய ஆசியா - வட ஆப்பிரிக்காவரை ஓடுகின்ற ஆலு, அவனுக்குக் கிடைக்கும் ‘உள்ளொளி தரிசனங்கள்’ என்று கலவையான மாயச்சித்திரங்களோடு தனது வருகையை அறிவித்த அமிதாவ் கோஷ், அடுத்த நாவலிலிருந்து தனது பாதையை மாற்றிக்கொண்டார்.
அடிப்படையில் அமிதாவ் கோஷ் ஒரு பேராசிரியர் என்பது அவருடைய பலமும் பலவீனமும். இது அவருடைய இரண்டாவது நாவலிலிருந்து புலப்படத் தொடங்குகிறது. சமூக மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்று, தில்லியிலும் பின்பு நியூயார்க்கிலும் முழுநேரமாகவும் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றிவரும் அமிதாவ் கோஷ் தனது புனைவுகளை மாபெரும் ஆய்வுப்பணியை ஈடேற்றுவதைப்போல கட்டமைக்கத் தொடங்கியது அப்போதிலிருந்துதான். முதலில் விரிவான களப்பணி. பிறகு நுட்பமான தரவுகள் சேகரிப்பு. அதன் பின் நாவலை ஒரு மாபெரும் மாளிகையைப்போல கட்டமைத்தல். அவரது அடுத்த நாவல்களான ‘The Shadow Lines’, ‘The Culcutta Chromosome’, ‘The Glass Palace’ ஆகியவை இதுபோன்று கட்டமைக்கப்பட்ட அறிவார்ந்த நாவல்களே. ‘The Hungry Tide’ சற்று மாறுபட்ட நாவல். இது வங்கத்தின் சுந்தரவனக்காடுகளில் தொடங்குகிறது. எண்ணற்ற தீவுகளை உள்ளடக்கிய இப்பிரதேசத்தில் கடல் ஓதம் உயர்ந்துகொண்டே வந்து பெரும் நிலப்பரப்பை மூழ்கடித்துவிட்டுப் பிறகு உள்வாங்கிப் பின்னகர்ந்து சென்றுகொண்டிருப்பதையும், இந்த அபாரமான நிலப்பகுதியின் மக்களிடையே தொன்றுதொட்டு நிலவிவரும் கலாச்சார நம்பிக்கைகளையும் இயற்கையோடு இயைந்த வாழ்வையும் வளங்களையும் அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து கொள்ளையடிக்க வரும் சுயநலமிகளையும் இவர்களோடு ஆற்றுமுதலைகள், மீன்களைக் குறித்து ஆய்வு செய்யவரும் மாணவியையும் கொண்டு ஓர் அபாரமான நாவலைப் படைக்கிறார்.
ஒவ்வொரு நாவலை எழுதுவதற்கு முன்பும் அமிதாவ் கோஷ் எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் கடுமையான உழைப்பும் அலாதியானவை. அவருடைய சமீபத்திய முக்கதைகளான ‘Sea of Poppies’, ‘River of Smoke’, ‘Flood of Fire’ ஆகியவை அவருடைய பெரும் படைப்பு எனலாம். கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்ட அபின் வர்த்தகத்தால் பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் நடந்த ‘ஓப்பியம் போர்’ குறித்த வலுவான வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட பிரம்மாண்டப் புனைவு.
‘நிழற்கோடுகள்’ நாவலின் பெயரற்ற கதைசொல்லிக்குத் தன் சித்தப்பா த்ரிதீப் வர்ணித்திருந்த லண்டன் நகரக் காட்சிகள் உண்மையாகவே தெரிவதைப்போல, ‘The Glass Palace’ நாவலின் ராஜ்குமாருக்குத் தொலைவில் கேட்கிற அறிமுகமற்ற சத்தம் ஆங்கிலேய பீரங்கிகள் உண்டாக்குபவை என்று தெரிகிறது. இந்நாவலிலும் நீர்நிலைகள், கடற்பயணங்கள். அமிதாவ் கோஷுக்குக் கடல் யாத்திரைகளைச் சொல்லி அலுப்பதில்லை.
ஆனாலும் அமிதாவ் கோஷின் எழுத்துக்களில் தென்படும் விநோத அம்சத்தைக் குறிப்பிட வேண்டும். நாவல்களை எழுதும்போது அவர் வரலாற்றுப் பேராசிரியராகவும் புனைவற்ற எழுத்துக்களில் அற்புதமான கலைஞனாகவும் உருவெடுத்துவிடுவதும்தான் அது.
மிகவும் சிரத்தையுடன் கட்டமைத்து எழுதப்படும் அவருடைய நாவல்கள் சற்றுச் செயற்கையாக செய்யப்பட்டவையாகவே அமைந்துவிடுகின்றன. ஒரு கலைஞனின் படைப்பெழுச்சியாக அவை உருவெடுப்பதில்லை. கவனமான வாசகர் எவருக்கும் அமிதாவ் கோஷின் நாவல்கள் மூளையைக் கவரும் அளவுக்கு இதயத்தில் வியாபிப்பதில்லை. இந்த வகையில் அவரை போர்ஹெஸ்ஸோடு ஒப்பிடலாம்.
ஆனால் அமிதாவ் கோஷின் கட்டுரைகள் முற்றிலும் வேறுவகையானவை. இன்று இந்தியாவின் மிகச்சிறந்த அ-புனைவு எழுத்தாளர் அமிதாவ் கோஷ்தான். இந்திரா காந்தி கொல்லப்பட்டபின் புதுதில்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை நேரில் கண்டு எழுதிய ‘‘Ghosts of
Mrs.Gandhi’ என்ற நான்கு பக்கக் கட்டுரை அவரது முந்நூறு பக்க நிழற்கோடுகளை விடக் காத்திரமானது. 2004ஆம் வருட சுனாமி அந்தமான் நிகோபார் தீவுகளைப் புரட்டிப்போட்ட பிறகு அங்கு சென்ற கோஷ் எழுதிய கட்டுரையை (‘The Town By The Sea’) கண்ணீர் சிந்தாமல் வாசிக்க முடியாது. தனது வரலாற்றுப் புலமையின் பலத்தோடு கம்போடியா அங்கோர்வாட் ஆலய வளாகத்தைப் பற்றி எழுதியிருந்த ‘Dancing in Combodia’. ‘Stories in Stone’ என்ற இரண்டு கட்டுரைகளும் கவித்துவமானவை. தனது மாநிலத்துக்கு அருகில் இருந்தாலும் கல்லூரித் தினங்களிலிருந்தே மர்மப் பிரதேசமாகவும் இந்தியர்களை வெறுக்கும் தேசமாகவும் நினைத்திருந்த பர்மாவுக்குச் சென்றதையும் அவுன் சான் சூயியைச் சந்தித்ததையும் மிகவும் சுவையோடு விவரிக்கும் ‘At Large in Burma’ என்ற கட்டுரை அவர் புனைவற்ற எழுத்தின் உச்சம்.
அமிதாவ் கோஷின் அரசியல் நிலைப்பாட்டை சோஷலிஸம் என்றோ இடதுசாரி என்றோ தீர்மானமாக வகைப்படுத்திவிட முடியாது. அவர் ஒரு பரிபூரண வங்கத்துவவாதி என்பதே பொருத்தமாக இருக்கும்.
அவருடைய ‘Glass of Fire’ நாவல் 2001ஆம் வருடம் காமன்வெல்த் எழுத்தாளர் விருதுக்கான இறுதிப்பட்டியலுக்குத் தேர்வானபோது அதுநாள்வரை வெளிப்பட்டிராத அமிதாவ் கோஷின் கோபமான முகம் உலகுக்குத் தெரிந்தது. பரிசுப்பட்டியலிலிருந்து தனது நாவலை விலக்கிவிடுமாறு காட்டமாக அறிவிப்பு வெளியிட்டார். காமன்வெல்த் என்ற அடைப்புக்குள் எழுத்தாளர்களைச் சுருக்கி, பரிசு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமேயான இப்பரிசுக்குத் தனது நாவல் தேர்வானபோது , தனது பதிப்பாளரிடம் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்திருந்ததாகவும் பதிப்பாளர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை என்றும் சொன்னார். அந்த அறிவிப்பில் அவர் முத்தாய்ப்பாகச் சொன்ன வாக்கியம் இது: “ஆங்கிலத்தில் எழுதுவதாலும் இம்பீரியல் பிரிட்டனால் ஆளப்பட்டு வந்த பகுதியைச் சேர்ந்தவன் என்பதாலும் இப்பரிசுக்கு என் நாவலைத் தகுதியாக்குகிறீர்கள் என்றால், இந்த விருதுக்கான பெயரை ‘நார்மன் கான்க்வெஸ்ட்’ (Norman Conquest) இலக்கிய விருது என்றும் மாற்றிக்கொள்ளலாமே!”
இதுதான் அமிதாவ் கோஷின் அடையாள முத்திரை என்றும் கொள்ளலாம்.
மின்னஞ்சல்: gkuppuswamy62@yahoo.com