முடிவற்ற தேடல்
நான் பேருந்து நிலையத்தை அடைந்தபோது காலை பத்து மணிக்கும் மேலாகியிருந்தது. தலைநகருக்குச் செல்லும் பேருந்துகள் எதிரில் வரிசையாக நின்றிருந்தன. நீண்ட பயணம் போவதற்கு முன்னேற்பாடாக ஒரு தேநீர் குடிக்க நினைத்தேன். அப்போது கைபேசி அடிக்கவும் எடுத்துப் பேசினேன். “இப்ப வெளியே போயிட்டு இருக்கேன். நாளைக்கு வந்து சரிசெய்து கொடுக்கறேன்,” என்றேன். தோளில் தொங்கிய பையை ஒருமுறை தொட்டுப் பார்த்துக்கொண்டேன். என் கடைக்குத் தேடிவந்து ஒருவர் கொடுத்திருந்த முன் பணம் அதில் பத்திரமாயிருந்தது. அவருடைய கனரகப் போக்குவரத்து அலுவலகத்துக்குப் புதிதாக ஓர் உயர்ந்த கணினி தேவையாம். நான் உதிரி பாகங்களை வாங்கி வந்து இணைத்து மென்பொருட்களைப் புகுத்திப் பொருத்தித் தரவேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஓர் உருப்படியான வேலை. பேருந்து நிலையத்தின் மூலையிலிருந்த தேநீர்க்கடைக்குச் சென்றேன். அங்கு ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பயணிகளும் ச