வற்றாத ஆறுகளைச் சாகடித்தல்
ஓர் ஆறு ஆறாக இருக்க அதில் நீர் ஓட வேண்டும். அப்போதுதான் ஆற்றில் ஓடும் நீரைப் ‘பயன்பாட்டிற்கு’ உட்படுத்த முடியும், அது ‘வீணாவதை’த் தடுப்பதை நியாயப்படுத்த முடியும். ஆனால் இப்போது இந்தப் பயன்பாடு ஆறு ‘உயிருடன்’ இருக்கிறதா என்பதை நிர்ணயிக்க முடியாத அளவிற்கு அதிகரித்துவிட்டது! மின்சாரம் தயாரிக்க ஆற்றின் போக்கு கால்வாய்களில் திருப்பிவிடப்படுகிறது அல்லது ஆறு முழுவதும் கழிவுகளாலும் நச்சுக்களாலும் நிரம்பியிருக்கிறது அல்லது ஆறானாது ஏதோ வடிகால் போன்று கருதப்பட்டு வெட்டிப் பிறவற்றுடன் இணைக்கப்படுகிறது; இந் நிலையில் ஓர் ஆறு உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பதைச் சொல்வதே கடினமாகும். ஓர் ஆறு உயிருடன் இருக்கவே உதவி தேவைப்படுகின்ற நிலையில் அது உயிருடன் இருக்கிறதா என்று சொல்வது கடினம். ஓர் ஆற்றின் இயல்பையே சந்தேகத்திற்குள்ளாக்குகிற வகையில் அதன் போக்கு மாற்றப்படும்போது, ஆற்றின் உள்ளார்ந்த இயல்பான அதன் நிலவியல் - சூழலியல் செயற்பாடுகள் தடுக்கப்படுகிறபோது அந்த ஆறு உயிருடன் இருப்பதை நிர்ணயிப்பதே கடினம். ஓர் ஆறு சிதறல்களாகத்தான், துண்டுதுண்டாகத்தான் இருக்குமென்றால் அதன் சூழலியல் ஒருங்கிணைப்பு மறுக்கப்படும் வகையில், தன்னைத்தானே அது புதுப்பித்துக்கொள்ள முடியாமல் மீறலுக்குள்ளாகும் என்றால் அது உயிருடன் இருக்கிறது என்று சொல்வதே கடினம்.
பிற ஆறுகளும் சம அளவிலேயே ஆபத்திலிருக்கின்றன; சம அளவிலேயே முக்கியத்துவம் உடையவை என்றாலும் கங்கைக்கு அரசின் கூடுதல் கவனம் அளிக்கப்பட்டும், அப்படி அளிக்கப்படுவதன் காரணமாகவும் கங்கை ஆபத்தான நிலையிலிருக்கிறது. ‘கங்கை விடுத்த அழைப்பை’ ஏற்று நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிட்டார். ஆனால், இந்துத்துவாவின் வழியிலேயே கங்கைத்துவாவும் அடிப்படை உணர்ச்சிகளைத் தூண்டிவிடவே பயன்படுத்தப்பட்டது, கங்கையின் நலன் காற்றில் பறக்கவிடப்பட்டது. சுற்றுச்சூழல் பொறியியலாளராக இருந்து சந்நியாசியாக மாறிய ஜி.டி. அகர்வாலின் மரணம் யாருக்கும் தெரியவராமலே போனது. கங்கையின் குரல் பிரதமருக்குக் கேட்க வேண்டுமென்பதற்காக 112 நாட்கள் உண்ணாவிரதமிருந்தவர் அவர். மணல் அள்ளுதல், மின்சார உற்பத்தி ஆகியவற்றால் கங்கை பல இடங்களில் ஒழுகிச் செல்லும் ஓடையாகக்கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்தாக வேண்டுமென்பதுதான் அகர்வாலின் கோரிக்கையும் ஒட்டுமொத்த உத்ராகண்ட் மாநிலத்தின் தொடர்ச்சியான கோரிக்கையும் ஆகும். கங்கையின் வற்றாமைக்கு மூலமான இமயமலையும் காய்ந்தும் தேய்ந்தும் அழிந்தும் வருகிறது.
ஒட்டுமொத்த ஆற்று நீரும் ஆற்றுப்படுகைகளிலிருந்து திருப்பிவிடப்பட்ட பிறகு இருபதாயிரம் கோடி திட்டமான நமமி கங்கை அளித்த வாக்குறுதியான தடைபடாத, தூய்மையான நீரோட்டம் எப்படி சாத்தியம்? கங்கையின் ‘முழுமை’யை மீட்டுக்கொண்டுவருவது நமமி கங்கையின் நோக்கம் என்பதால் தடையில்லாத, தூய்மையான நீரோட்டம் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். ஆனால் யதார்த்தத்தில் ஓர் ஆறு ஆறாக இருக்கத் தேவையான குறைந்தபட்ச நீரோட்டத்தைக்கூட திட்டத்தின் உரிமையாளர்களால் கடைப்பிடிக்க முடியவில்லை, இதைக் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்படவில்லை, குறிப்பிடப்பட்ட நீரோட்ட அளவுகூடத் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருந்தது.
யதார்த்த நிலைமைகளைச் சரிசெய்வதையும் அதற்கான பொருண்மையான நடவடிக்கைகளை எடுப்பதையும் விடுத்து அடையாளபூர்வமாகப் பிரச்சினையை அணுகி அதைச் சிறுமையாக்குவதன் மூலமோ அல்லது கார்ப்போரேட் நலன்களுக்கு உண்மையாக இருக்கும் வகையில் ஆற்றின் நீரோட்டத்தைக் குறைக்கும் வகையிலோ பெரும் திட்டங்களை அறிவிப்பது என்று பிரதமர் எதிர்த் திசையில் சென்றுகொண்டிருக்கிறார். ஆற்றின் போக்கைச் சுதந்திரமாக விடுவது, நீரோட்ட அளவைக் குறையாது பார்த்துக்கொள்வது, அதில் கலக்கும் கழிவுகளைக் கண்காணிப்பது, தண்ணீரைப் பெருமளவிற்கு எடுப்பதைக் கண்காணிப்பது, காடுகளைப் பாதுகாத்து அதிகரிப்பது, ஆறுகளுக்கு உதவியாக இருக்கும் நீர்நிலைகளைப் பலப்படுத்துவது ஆகியவற்றை விடுத்து ஆற்றைப் புதுப்பிப்பது என்பதை ஆற்றின் கரையோரங்களை அழகுபடுத்துவது என்பதாகப் பல சமயங்களில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இது ஆற்றின் கரைகளில் கட்டடங்கள் உருவாகவும் ஆக்ரமிப்புகளுக்கும் வணிகச் செயல்பாடுகளுக்கும் ஆறு உயிருடன் இருக்கிறது என்று காட்டவும் பிற நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் திருப்பிவிடப்படுவதற்கு வழிவகுத்தது.
கங்கையின் தொடக்கப் பகுதிகளில் அதன் நீரோட்டம் இல்லாது ஆக்கப்பட்ட பிறகு ஹல்தியா - வாரணாசி இடையேயான 1600 கிமீ தூரத்திற்கான ஜல் மார்க் விகாஸ் என்னும் 5369 கோடி ரூபாய் திட்டம் உலக வங்கி உதவியுடன் செயற்படுத்தப்படுகிறது. ஆற்றுக்கு ஏற்பட்ட, ஏற்படவுள்ள பாதிப்பைப் புறக்கணித்துவிட்டு அந்நிறுவனம் அனுப்பிய சரக்கைப் பிரதமர் மோடி வாரணாசியில் வரவேற்றார். 1500 டன் நிறைகொண்ட கப்பல்கள் போகுமளவிற்குக் கங்கையின் கொள்ளளவு இல்லாததால் அதைப் பல கால்வாய்களுடன் சேர்ப்பது, ஆற்றை ஆழப்படுத்துவது, படிந்திருக்கும் மணலை அகற்றுவது போன்றவை இந்தத் திட்டத்தில் செய்யப்படுகின்றன. எடுக்கப்படும் மணல் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. மணல் அள்ளுவதற்கான ஒப்பந்தங்கள் அதானியின் நிறுவனம் உட்படபல பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தரப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் கடுமையான மாசுபடுதல் முற்றிலுமாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளது. மீன்கள் அழிவது குறித்தோ மீனவர்கள், படகோட்டிகளின் வாழ்வாதரங்கள் அழிவது குறித்தோ இவர்களுக்குக் கவலையில்லை. வாரணாசி யிலுள்ள ஆமைகள் சரணாலயத்தைப் பட்டியலிலிருந்து நீக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. ஏற்கெனவே அழிவின் விளிம்பிலிருக்கும் கங்கை ஆற்று டால்பின்கள் முற்றிலுமான அழிவை நோக்கிச் செலுத்தப்படுகின்றன.
ஓர் ஆற்றின் உயிர்ப்பு, ஆரோக்கியம் என்பது அதனுடன் இணக்கமாக வாழும் உயிரினங்களுக்கு அதனால் ஆதரவளிக்க முடிவதில்தான் இருக்கிறது. ஆனால் அதை வணிக நோக்கங்களுக்கான நீர்வழிப்பாதையாக, ஆற்றலுக்கான மூலமாக, மதச் சுற்றுலாவிற்காகப் பயன்படுத்திக்கொள்வதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. ஆற்றிலிருந்து எவ்வளவு எடுக்கலாம் என்று பார்ப்பது தொடரும்வரை அதன் மாசுபடுதல் தொடரும். இந்த மீறல்களைப் பிடியாணையின்றிக் கைது செய்வதற்கான குற்றங்களாக அறிவித்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள தேசிய ஆறு கங்கை (புதுப்பித்தல், பாதுகாப்பு, மேலாண்மை) மசோதாவின் கீழ் ஆயுதம் தாங்கிய கங்கை பாதுகாப்புக் காவலர்களை அமர்த்தினாலொழிய பெரிய அளவில் அரசாங்கமே செய்துகொண்டிருக்கும் இந்தக் குற்றங்களைத் தடுத்துவிட முடியாது.
தலையங்கம், எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, டிசம்பர் 1, 2018
தமிழில்: க. திருநாவுக்கரசு