பிரபஞ்சன் (1945 - 2018) – முன்னோடி - ஆசான்
1986இல் ஈரோட்டில் நண்பர்களுடன் இணைந்து ‘பிறகு’ என்னும் பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றைத் தொடங்கினோம். அந்த அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில் பங்கேற்பதற்காக பிரபஞ்சனும் அசோகமித்திரனும் வந்திருந்தார்கள். அந்த அமைப்பின் முதலும் கடைசியுமான கூட்டம். ஈரோடு நகரில் அசோகமித்திரன் பங்கேற்ற முதல் இலக்கிய நிகழ்வும் அதுதான். அதைத் தவிர வேறொரு பெருமையும் அதற்குண்டு. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரபஞ்சன் அதற்குப் பிறகு குமுதம் வாரஇதழில் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை இழந்தார். நிகழ்ச்சியின் இறுதியில் பங்கேற்றிருந்த வாசகர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்துக்கொண்டிருந்தார்கள்.
துடுக்கான வாசகர் ஒருவர், தீவிரமான எழுத்தாளரான நீங்கள் ஏன் குமுதம் போன்ற சாக்கடையில் பணிபுரிந்துகொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டிருந்தார். பிரபஞ்சனும் அதற்குத் துடுக்காகவே பதிலளித்தார், குமுதம் ச