புலன்களின் எல்லை கடந்து
விரும்பத்தக்க உடல் (நாவல்)
உய்பெர் அதாத்
பிரெஞ்சிலிருந்து தமிழில்
க ஆ வெங்கட சுப்புராய நாயகர்
ஏறக்குறைய உலகம் முழுவதும் பரவலாக நிலவிவரும் உள்நாட்டுப் போர்ச்சூழல், கண்மூடித்தனமான தாக்குதல்கள், அதிகரிக்கும் காவல்துறைக் கண்காணிப்புகள் ஆகியவை ஐரோப்பியத் தலைநகர் எதையும் விட்டுவைக்கவில்லை. எனினும், கோடையின் தொடக்க நாட்களில் பாரீஸ் மீண்டும் இளைப்பாறிக்கொண்டிருந்ததுபோல் தோன்றியது. ஜூன் மாதம் இரண்டாம் வாரம்வரை நீடித்த வசந்தகாலக் கடும் மழை, சூரியனுக்கு வழிவிட்டு விலகிக்கொண்டது. சூரியன் இல்லாமல் வெளிச்சத்தைக் காண முடியுமா? விழித்தெழுந்த செதெரீக் எர்க், ஜன்னல்மீது அசையும் பிம்பங்களைப் பார்த்தபடியே நெர்வால் எழுதியதை நினைத்துப்பார்த்தான். “கனவின் ஒளி கதிரவனால் வருவதில்லை”. அவன் பாரீஸ் வந்தநாள் முதல், ரூய் துய் ரெகார் எனும் வீதியில் கனவுகளை அனுபவிக்கத் தொடங்கினான். ஒளிமயமான அக்கனவுகள், சூரியன் இல்லாததால் மட்டும் அல்ல, அது இல்லை என்ற பிரக்ஞையும் இல்லாதது அவனை அதிகமாக அச்சுறுத்தியது. மேலும், கனவின்போது பிரக்ஞையைப் பற்றிய கேள்வி எழுமா?
பழைய சுருள்களுக்கேயுரிய கரகரப்புத் தன்மையுடன், 6 மணி ஆனதைக் குறிக்கக் கட்டடத்திலுள்ள கடிகாரம் அடித்து ஓய்ந்தது. நிச்சயமாக அது மேல்மாடியில் இருந்திருக்க வேண்டும். தொடையில் ஏற்பட்ட வெப்பம், புறஉணர்வுகளில் புதிரான மாற்றம் உண்டாகி இருப்பதை அவனுக்கு நினைவூட்டியது. உண்மையில் தான் எனச் சொல்ல முடியாத ஒன்றுக்கும் போர்வைக்குள் இருக்கும் இந்தப் பெண்ணுக்கும் இடையில், கண்களுக்குப் பின்புறம், மூளையில் சுட்ட முடியாத புள்ளி ஒன்றில், கண் குழிகளின் ஆழம்வரை இனிமையானதொரு அனுபவம் பரவியது. லோர்னா தன் உஷ்ணமான கையால் மார்புத் தசையைத் தடவினாள். பின், விரல் நுனியால் மெதுவாக வயிற்றுப் பகுதித் தசைகளின் பாதையை வருடிக்கொண்டே போய், தன் உள்ளங்கையைத் தொடை நடுவில் உள்ள பிளவில் இறக்கி, ஏற்கெனவே விறைப்புடன் இருந்த ஆணுறுப்பைப் பிடித்தாள். கண்மூடித்தனமாக அதை இழுத்தும் விடுவித்தும் சுயஇன்பம் அனுபவிக்கச் செய்தாள். அப்போது இதுவரை வெளிவராத காட்சிகளும் பழைய நினைவுகளும் வெளிப்பட்டன. லோர்னாவும் அவனும் அப்போதுதான் அறிமுகமாகியிருந்தார்கள். எப்படியாவது புலன்களின் எல்லையைக் கடந்தாக வேண்டும் என்பதுபோல் உடல் ஈர்ப்பின் காரணமாக மிகவும் முரட்டுத்தனமான உறவு தொடங்கிவிடுகிறது. தொடக்கத்தில், இப்படி ஒருவருக்கொருவர் சங்கடம் கலந்த நிர்க்கதியான நிலையில் தொட்டுக்கொண்டும் சேர்ந்துகொண்டும் இருந்த விதத்தையும், இன்று தனக்குள்ளும், தனக்கும் மாற்றானுக்கும் என வாழும் முறையையும் ஒப்பிடாமல் இருக்க செதெரீக்கால் இயலவில்லை. ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப் பிறகு, இந்தப் புதிய உடலுடன் ஒத்துப்போவது என்பது உடலுறவுரீதியில் ஒரு களவாகத் தோன்றுகிறது. ஒருவகையில் இது சங்கடமானதொரு அத்துமீறல், கிட்டத்தட்ட ஒரு கற்பழிப்பு என்று சொல்லலாம். மேலும், லோர்னாவிற்கு ஏற்படும் குதூகலம் இவனுடைய சங்கடத்தை அதிகரிக்கிறது. தன்னைக் காட்டிலும் அவள் இன்பம் காண்பதைப் பார்க்கும்போது உண்டாகும் பொறாமை உணர்வு இதற்கெல்லாம் சிகரமாக அமைகிறது. விரல்களால் அவனது இடுப்பை இறுக்கிப் பிடித்தபடி இந்த ஆண் உடம்பிற்குள் தன்னைத் துருத்திக்கொண்டு, அவன்மீது பார்வை செலுத்தாமலேயே சிணுங்குகிறாள். தான் இன்பம் துய்க்கும் அதே இடத்திலேயே அத்துமீறப்படுவதாகவும் ஏமாற்றப்படுவதாகவும் அவனுக்குத் தோன்றியது. எலும்புகளாலான குறுகலான வடிவம் ஒன்றின்மீது வீற்றிருக்கும் தலை மட்டுமே என இருக்கும் தன்னால் எவ்வாறு அந்நியன் ஒருவனுடன், விரும்பத்தக்க தன் சொந்த உடலை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்?
“என் இஷ்டத்திற்குச் செயல்பட என்னை அனுமதிப்பது எனக்குப் பிடித்திருக்கிறது! ஆ! உன்னை அனுபவிக்கப்போவதுபோல் உணர்கிறேன்” என லோர்னா காதருகில் வந்து கிசுகிசுத்தாள்.
இப்போது, அவள் நெஞ்சின்மீது முகம் புதைத்தபடித் துவண்டு கிடந்தாள். மார்பின் இடது காம்பைச் சுற்றியிருந்த முடிகளை விளையாட்டாக அவளுடைய உதடுகள் கவ்வியபடி இருந்தன. எந்த நேரத்திலும், அவள் முத்தமிடவுமில்லை. அவனது முகத்தைத் தொடவுமில்லை. முறுக்கேறிய அவனுடைய உடலைத் துய்ப்பதிலேயே குறியாக இருந்தாள். ஒரு தலையை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? மேலும், உடலுறவின் உச்சக்கட்டத்தின்போது, அவனுக்கே உண்டான உணர்வுகூட வெறுமனே துய்ப்பது போன்ற எண்ணமாக மட்டுமே இருக்க வேண்டும். மின் வளையங்களாக அவளைத் தழுவும் அவளது அற்புதமான கூந்தலில் மலைப்பாம்பு ஒன்றின் குளிர்ச்சி இருந்தது. லோர்னா கொஞ்சம் நிமிர்ந்தாள்.
முகம் மட்டும் தொடர்ந்து கீழே பார்த்தபடி இருந்தது.
“வேறு மாதிரியாக நாம் வாழ்ந்தாக வேண்டும் என்றாலும் நாம் மீண்டும் சந்தித்துக்கொண்டதில் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா! என்ன நான் சொல்வது சரியா?” எனத் தன் வழக்கமான குரலில் கேட்டாள்.
“நாம் பிரியப்போகிறோம் என்பது முன்னமே உறுதியாகி
விட்டது”.
“நான் உன்னை இழக்கத் தயாராக இல்லை செதெரீக். நீ விரும்பினால் உன் வீட்டிலேயோ வேறு எங்காவதோ அவ்வப்போது நாம் சந்திக்கலாம்”.
வெளிச்சத்தில் அவனுடைய கழுத்தில் காணப்பட்ட தழும்பைப் பார்த்து ஈர்க்கப்பட்டவள் ஒரு கணம் மௌனமானாள்.
கண்களைத் திருப்பிக்கொண்டு, “நான் நன்றாக அனுபவித்தேன். உனக்கு எப்படிப் பிடித்திருந்ததா?”
அவளுடைய கேள்வியின் அபத்தம் குறித்து யோசித்துப் பார்த்தான்.
“ஆமாம். உடலுறவு சிதறிய சில்லுகளை ஒட்டவைக்கும். ஆணுறுப்பிலிருந்து மூளைக்கோ அல்லது தலைகீழாகவோ அது நிகழும். என்னை வெகுவாக நேசித்தாய், அதே நேரம் முன்பைவிடச் சற்றே குறைவாகவும், முன்பு எல்லாம் . . .”
“வெகுவாகவும் குறைவாகவுமா? என்ன சொல்ல வருகிறாய்?”
எவ்விதப் பதிலையும் எதிர்பாராமல், இக்கேள்வியை அவள் சாதாரணமாகக் கேட்டாள். உள்ளங்கையை முகவாய்க்கு முட்டுக்கொடுத்து அவளுடைய தலையை நிமிர்த்திக்கொண்டபோது, பருத்த மார்பகங்கள் ஒன்றோடு ஒன்று உருண்டுகொண்டன. இறுக்கமான தசைகளுடன் இருந்த முழங்கை மணிக்கட்டிலிருந்து நழுவும் தங்க நிற வளையங்கள் இரண்டும் மணியோசை எழுப்பின. தன் காதலனின் கையில் நீல நிறக் கோடு ஒன்றைப் பார்த்துத் திடுக்
கிட்டாள்.
“பச்சை குத்தியுள்ளது!” எனக் கத்தினாள். “மூன்று வளையங்கள். இது செல்திக் குறியீடு. மூன்று கால்கள் என்பது சூரியனின் இயக்கத்தைக் குறிப்பதாகும். அல்லது, மூன்று உலகங்கள், அதாவது ஆன்மாக்கள், வாழ்பவர்கள், இறந்தவர்கள் இவர்களுடைய உலகம்...”
அவளிடம் பெரும் ஆர்வம் வெளிப்பட்டதைக் கவனித்தான். அதில் நேசம் அல்லது ஓரளவு காமம் எனும் உணர்வும் ஆச்சரியம் கலந்த ஒவ்வாமையும் இருந்ததைப் புரிந்துகொண்டான். தான் இப்படி ஆச்சரியப்பட நேர்ந்துவிட்டதால் சங்கடமடைந்த லோர்னா, தன்னையும் அறியாமல் அவனைப் பார்த்தாள். முன்போல் உண்மையில் அடையாளம் காண முடியாத இந்தத் தலையைப் பார்த்து நடுக்கம் ஏற்பட, உதடுகளைக் கடித்துக்கொண்டாள். குறைந்தபட்சம் அவனுடைய முகம் என்ற அளவிலாவது அவன் மாறிவிடவில்லை. காதோரத்தில் சில நரைத்த முடிகள், கண்களில் தேங்கியுள்ள ஆழ்ந்த சோகம் இவை தவிர வேறெந்த மாற்றமும் அவனிடம் இல்லை. ஆனால், அவளுடைய விருப்பத்தைத் தூண்டும் இந்த உடல் முன்புபோல் முகத்துடன் ஒத்திசையவில்லை. அது அசைவதும் இயங்குவதும் வேறுவிதமாக உள்ளது. அதிலிருந்து வீசும் நெடி அவளது அடி வயிறுவரை சென்று தொந்தரவுக்குள்ளாக்குகிறது. மிகவும் அந்தரங்கமானதொரு நெருக்கத்தில், அந்நியன் ஒருவனைச் சங்கடத்தோடு விரும்ப முடியுமா? கொபானில், ஏவுகணைகளும் தானியங்கித் துப்பாக்கிகளும் கொண்ட ராணுவக்குழு ஒன்று இளம் கிளர்ச்சியாளன் ஒருவனைப் பொதுமக்கள் முன்னிலையில் தலை துண்டித்துக் கொன்றதை அவள் பார்த்திருக்கிறாள். ஜெர்மன் இதழ் ஒன்றில் பணியாற்றிய சக பத்திரிகையாளர் ஒருவருடன் விடுதியின் மேற்கூரையில் பதுங்கியிருந்து இக்காட்சியைக் கண்டிருக்கிறாள். தலை மட்டும் மண்மீது விழுந்து, ரத்தக்குவியலாகக் கிடந்தது. ஆனால், ஏதோ தன்மானம் எனும் அனிச்சை உணர்வினால் தசைகளை விறைப்பாக்கி மண்டியிட்டபடி இருந்த உடல் கொஞ்ச நேரம் சரிந்து விழாமல் தாக்குப்பிடித்தது. தன் கோடாரிக் கத்தியைச் சுத்தப்படுத்துவதில் கொலைத்திட்டத்தை அரங்கேற்றியவனின் உதவியாளன் மும்முரமாக இருந்தான். அவன் புழுதியும் ரத்தமும் தோய்ந்திருந்த தலையை அதன் முடியைப் பிடித்துத் தூக்கிக் குப்பைப்பை ஒன்றில் போட்டான். அதே நேரம், தலையிழந்த பிணத்தின் தோள்பட்டைகள் மட்டும் கொடூரமான முறையில் மண்டியிடுவதுபோல் தரையைத் தொட்டபடி இருந்தன. எங்குச் சென்றாலும், இக்காட்சி அவள் மனதைத் தொடர்ந்து தொல்லை தந்ததோடு நீண்ட நாட்கள், செதெரீக்கைக் காணாமல் தடுத்துவிட்டது. வன்முறைக் காட்சிகள் வாடிக்கையாகிப் போனதொரு பணியில், சில சந்தர்ப்பங்கள் பைத்தியம் பிடிக்கும் அளவு அமைந்துவிடக்கூடும். செதெரீக்கின் தலை ஒவ்வொரு இரவும், கனவின் ஒளி வெள்ளத்திலும் புழுதியிலும் உருண்டுவிடும். தண்டனை பெற்றவனின் உடல் மட்டும் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில், அதேபோன்று கொடூரமான முறையில் மெல்லத் துவண்டு விழும்.
பச்சை குத்தப்பட்ட பகுதிமீது வேடிக்கையாகத் தன் ஆள்காட்டி விரலை லோர்னா வைத்துத் தடவினாள்.
இப்படி அவள் தொடுவதை உணர்ந்ததும், செதெரீக் சற்றே சிரிக்க முயன்றான்.
“அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவனாக இருக்கும் என நினைக்கிறாயா? மூன்று வளையங்கள் என்பது அயர்லாந்து நாட்டுப்புற நம்பிக்கை இல்லையா? செல்திக் யாழ்க்கருவியும் செல்திக் சிலுவையும்!”
தன் கையை வேகமாக விலக்கிக்கொண்ட லோர்னா, சட்டெனத் துள்ளி எழுந்து உட்கார்ந்தாள்.
“நேரமாகிவிட்டது. நான் ஒரு நிறுவனத்திற்குச் சென்றாக வேண்டும்.”
சிதறிக்கிடந்த தன்னுடைய உடைகளைத் தேடும் முயற்சியில், அதிகாலை வெளிச்சத்தில் சுருண்டுபடுத்தாள். அடர்ந்த கருங்கூந்தலுக்குக் கீழ், அவளுடைய நெகிழ்ந்து கொடுக்கும் மார்புகளும் பிட்டங்களும் அசைந்தன. அவளுடைய நிர்வாணம், ஒரே பளிங்கினாலான அழகிய வீனஸ் சிலையைப் போல் அத்தனை ரம்மியமாக இருந்தது. கை, கால்கள் உட்பட அவளிடம் எதிலும் எந்தக் குறையுமில்லை. ஸ்னீதின் அஃபுரோதித் சிலையில் உள்ளவை போன்று இருந்தன. நீண்ட தொடைகளின் மீது அசையும் பிட்டங்களோடு குளியலறை நோக்கி அவள் வேகமாகச் செல்வதை செதெரீக் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் மீதுள்ள விருப்பம் உடலுடன் எவ்விதப் பிணைப்புமின்றி, கண்களுக்கு எட்டாத ஆழத்திலிருந்து, எங்கிருந்தோ அவனை ஆட்கொண்டது. அவள் பார்வையை விட்டு மறையும்போது, மீண்டும் ஒருமுறை தான் இழந்த பகுதிகளில், ஒருவித ஆவியுணர்வை வலியோடு அனுபவித்தான். அதாவது, தன்னிடமிருந்து மூர்க்கமாகப் பிடுங்கி எறிவதைப் போன்று உணர்ந்தான். அசாதாரண அறுவைச்சிகிச்சையின் இத்தகைய பக்கவிளைவுகளைத், தன் பங்கிற்கு வேறு ஒன்றாக மாறும் அளவிற்கு தன் ஆன்மாவும் ஒரே நேரத்தில் அனுபவிக்குமோ?
தலைவலி மேலிட, மலையில் உள்ள ஏரிமீது குவியும் மேகக்கூட்டங்களின் காட்சி மனதில் குடியிருக்க, கனவின் ஆழ்ந்த பள்ளத்தாக்கில் அவன் உறங்கிக்கொண்டிருந்தான். அவனைக் கொன்றுவிடுவதாக மிரட்டல் வந்திருந்தது. பறவையின் மண்டைஓட்டு வடிவத்தில் வந்திருந்த ஏராளமான அனாமதேயக் கடிதங்களைச் சற்று முன்தான் பிரித்து, வேகமாக அவற்றை உள்ளங்கையால் கசக்கிக் குப்பைக்கூடையில் வீசியிருந்தான். பத்திரிகை அலுவலகத்திலிருந்து வெளியேறும்போது, சாக்கடை முனையிலிருந்து பல பறவைகள் கூட்டமாகப் பறந்தோடின. ஆனால், அவற்றை அவன் கண்டுகொள்ளவில்லை. இப்பறவைக்கூட்டத்தின் பயணத்தினிடையே அந்திப்பொழுது பரவியது. அன்றைய பொழுது குறித்துத் திருப்தியடையாதவனாய், பொது விடுமுறைக்கு முந்தைய நாளின் பரபரப்பில் இயங்கிய பரபரப்பான கும்பலில் கலந்துபோனான். யாரோ ஒருவன் காரணமேயில்லாமல் அவன் தோள்மீது மூர்க்கமாக இடித்துவிட்டுச் சென்றான். மூச்சடைக்க அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டு பாதையைத் தொடர்ந்தான். இரவு உணவுக்காக அவனை எதிர்பார்த்து லோர்னா காத்திருப்பாள். இந்த எண்ணம் மட்டுமே அவனது மகிழ்ச்சியை நீடிக்கப் போதுமானதாக இருந்தது. ஒருசில அடிகளில், இதோ அவளுடைய வீட்டிற்கு முன் வந்துவிட்டான். மின்தூக்கியைத் தவிர்த்துவிட்டு, இருட்டில் மூழ்கியிருந்த படிக்கட்டுகளில் ஏறினான். காட்சி முடிந்து திரை விழும்போது தோன்றும் துன்பவியல் நாடக நடிகையைப் போல் தனித்துவமான அழகுடைய லோர்னா, இரவு உடையுடன் அவனை வரவேற்றாள். பயந்துபோய் இருந்த லோர்னாவின் முகத்தைப் பார்த்ததும், தன்னைக் குறித்த விளக்கம் தர வேண்டிய கட்டாயத்துக்கு அவன் ஆளானான். ஆனால், அவள் எதையும் கேட்கத் தயாராக இல்லை. கைகளை ஆட்டியபடி, சீக்கிரமே அலறத் தொடங்கினாள். தன்னை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை என்பது அவனுக்குத் திடீரெனப் புரிந்தது. “நான்தான். தெரிகிறதா. நான்தான் செதெரீக் எர்க்” என அவளுக்குப் புரியவைக்க முயன்றான். இந்த வார்த்தைகளை உச்சரித்தபோது, முகப்பு அறையில் இருந்த பெரிய கண்ணாடியில் தன் அன்னியமான முகத்தைப் பார்த்ததும், தன்னை இடித்துச்சென்ற நபரின் நினைவு வந்தது. அவள் முன் உள்ளது உண்மையில் அவன்தான் என்று எப்படி லோர்னாவை நம்பவைக்க முடியும். ஒரு களேபரத்தில் தன் தோற்றம் மட்டும் அவனிடமிருந்து களவாடப்பட்டுவிட்டது என்பதை எப்படி அவளுக்குப் புரியவைப்பான்? ஆயிரக்கணக்கான பறவைகளின் கூச்சலைவிடச் சத்தமாக இருந்த அவளுடைய அலறலைக் கண்டு பயந்த அவன், தன்னிடமிருந்து உருவத்தைத் திருடிச் சென்றவனைப் பிடித்துவிடுவதாக உறுதியளித்துவிட்டு திரும்பிவரும் நம்பிக்கை எதுவுமின்றி வெளியேறி இருட்டான படிக்கட்டுக் கூண்டிற்குள் சென்று மறைந்தான். அங்கிருந்த படிக்கட்டு ஒவ்வொன்றும் அளவிலும் இயல்பிலும் திமிங்கலத்தின் முதுகெலும்பு போல் இருந்தன.