எம். யுவன்
1
அரவமின்றி மேலேறும் புகையைப் போலவா
புகாரின்றி உதிர்ந்திறங்கும் பழுத்த இலை போலவா
ஈர்ப்புக்கிணங்கி ஒழுகும் நீரோட்டம் போலவா
காற்றை எதிர்த்துப் பறக்கும் புட்கள் போலவா
சொட்டுச் சொட்டாய் நிரம்பும் சிரட்டை போலவா
தரைதழுவத் தாவும் அருவி போலவா
திசையறியாது இழுபடும் சருகு போலவா
இலக்கை நோக்கிப் பாயும் அம்பு போலவா
கந்தைத் துணியில் பதிந்த சித்திரம் போலவா
கனவில் துரிதமுறும் காட்சி போலவா
முழுக்க விரிந்தபின் சுருங்கும் துருத்தி போலவா
யுகங்கள் கடந்தும் இடம்பெயராப் பாறை போலவா
வானம் நோக்கி ஏங்கும் குன்று போலவா
ஆழத்தில் ரகசியம் காக்கும் சுனையைப் போலவா
தங்கிச் செல்லும் யாத்ரீகன் போலவா
இருந்த இடத்தில் இருந்தவாறே
எதிரெதிர் முனைகோக்கும் வானவில் போலவா
கைப்பணம் பறிகொடுத்த உலோபி போலவா
கொடுவாளைக் கருதாது குழை தின்னும் ஆடு போலவா
வெளித் தெரியாமல் அரிக்கும் வியாதி போலவா