அனார் கவிதைகள்
பித்து நடனம்
தப்ரீஸ் மலையிலிருந்து
புறப்படும் புறாக்கள் நாம்
உன் செந்நிற ஆன்மா
என் பச்சை நிறத்துடன்...
இணைபிரியாது பறந்துகொண்டிருக்கின்றது
ஆழ்ந்த மௌனத்தினுள் நிகழும் நம் உரையாடல்கள்
இருள் முற்றிய நடுக்கடலின்
சூள்விளக்குகளாய் மிதக்கின்றன
ஸமாவின் நடனச் சுழற்சியில்
ஒன்றையொன்று ஆரத்தழுவும்
சமமான மேகங்களாய்ப் பிணைகிறோம்
செக்கச் சிவப்பினால்
கருமையை விழுங்குகிறது ஆகாயம்
துயரின் தானியக் கதிர்களைப் பசியாறியபடி
அரூபத்தை வலம்வந்த அவ்விரு புறாக்கள் வந்தமர
மௌனம் சாதித்தபடி அனுமதிக்கும் தப்ரீஸ் மலை
ரூமியின் வளர்ப்புப் பூனை