மண்ணும் மனிதர்களும்
சில கருதுகோள்களை அவை வழங்கிவரும் காலம்தொட்டுக் கணக்கிட முயன்றால் அவை பழையதுபோலத் தோன்றக்கூடும். அவற்றுள் சில குறிப்பிட்ட காலம் என்பதன்றிக் குன்றாத ஒளியுடன் தொடர்ந்து செல்வாக்குடன் மிளிர்வதைக் கண்டிருக்கலாம். பால்யம் உள்ளிட்ட பதின்வயதுகளின் அனுபவச் சேகரங்களே ஒருவனை/ளை வாழ்நாள் முழுதும் பின்தொடரும். இவையிரண்டும் ஒருவருக்கு அளிப்பதென்ன, அவர் அதிலிருந்து பெற்றுக் கொள்வதென்ன, என்னும் வினாக்களிலிருந்து தப்பிச் செல்லும் எழுத்தாளர்கள் வெகுசிலராகவே இருக்கலாம். அனுபவ முதிர்ச்சி கூடிய காலத்திலும்கூட சொல்லிலும் செயலிலும் மாயவிளக்காகவோ அரூப நிழலாகவோ அதன் மிச்சங்களைக் காணலாம். போலவே பிறந்து ஆடிக் களித்த மண்ணும். இதற்கு நவீன தமிழில் உதாரணங்களாகக் கூறத்தக்கவர்கள் மிகுதி என்றபோதும் அவர்களுள் பிரதானமானவர் ந. முத்துசாமி. ஒரு கட்டத்தில் கதைகளிலிருந்து விலகி நாடகத்திற்குள் சென்று இருபதாண்டுகளுக்குப் பின் மீண