மாறும் வியூகங்கள்
தமிழ்நாட்டின் அரசியல்களம்தான் பழகிவந்த பாதையிலிருந்தும் தடுமாறிக்கொண்டிருக்கிறது. கட்சிகள் பழையனவாக இருந்தாலும் தலைமைகள் புதியனவாக இருப்பதும் கவனத்திற்குரியது.
ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடம், மாநில அரசை இயக்கவிடாமலும் இயங்கவிடாமலும் தடுத்துக் கொண்டிருக்கிறது. மாநிலம் கடும் வறட்சியையும் நிதி நெருக்கடியையும் எதிர்கொண்டிருக்கும் தருணத்தில் மாநில அரசின் செயல்பாடு கவலையை ஊட்டுகின்றது. தமிழக விவசாயிகள் புதுடெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆளும் அணி, மாநில அரசு நிர்வாகத்தை நடத்துவதைக் காட்டிலும் தன் கட்சி அணிஅணியாகப் பிரிந்துகிடப்பதிலுள்ள சிக்கலில்தான் சோம்பிக்கிடக்கிறது.
அதிமுகவின் துணைப்பொதுச் செயலாளரான தினகரன், அதிகார மையத்தை நோக்கிச் செல்லவிருந்த பாதை தடைப்பட்டதும் கட்சிக்குப் பெரும் திணறல் உண்டானது ஒருவகையில் நல்லதே. இத்தருணத்தைப் பயன்படுத்தினார் ஓ. பன்னீர்செல்வம். கட்சியின் பெயரும் சின்னமும் தக்கவைக்கப்பட வேண்டுமானால் கட்சியின் அணிகள் இணைவதன் மூலமே சாத்தியமாகும் என்றார் அவர். இது கட்சியின் இணைப்புக்கான சிந்தனையை இருதரப்பிலும் உருவாக்கிவிட்டது. ஆனாலும், சசிகலாவும் தினகரனும் வெளியேற்றப்பட்டால்தான் இணைப்பு சாத்தியம் என்று பன்னீர் செல்வம் சொன்னதால் சுழன்றடித்த காற்று, இப்போது தினகரனையும் கட்சிக்கு வெளியே கொண்டுபோய்ப் போட்டுவிட்டது. ஓ. பன்னீர்செல்வம் இடம் பொருள் ஏவல் கண்டு செயல்படுவதில் நிபுணர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
அதிமுகவைப் பொருத்தமட்டில் இது ஓர் அரிய சந்தர்ப்பம். இந்தப் போக்கிற்கு இன்னும் கொஞ்சம் விசையூட்டினால், அது சசிகலாவையும் அவர் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களையும் அரசியலற்றவர்களாக்கி விடும். தமிழக அரசியல் தெளிவுபெறுவதற்கு அது ஓர் அத்தியாவசியமான நடவடிக்கை. இந்த இடத்தில்தான் பாஜகவின் தலையீடு குறித்த சிந்தனைகள் எழுகின்றன. ஜெயலலிதாவின் மறைவையடுத்து அந்த இடத்திற்கு எடப்பாடி பழனிசாமியைக் கொண்டுவர சசிகலா முற்பட்டதாகவும் அதனை மத்திய அரசு தந்திரமாகத் தடுத்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆகவே, பன்னீர்செல்வம் பாஜகவின் வழிகாட்டல்படி தமிழக அரசியலில் செயல்படுகிறார் என்கிற தோற்றம் உருவாகியிருக்கிறது.
ஆனால், பன்னீர் செல்வம் தன் சமயோசிதச் செயல்பாட்டினாலும் கருத்துரைப்புகளாலும்தான் தக்க விளைவுகளை உருவாக்குகிறார். முதல்வர் பதவியைத் துறப்பது குறித்து பன்னீர் செல்வத்திற்கு ஏற்பட்ட திடீர் மனமாற்றம் மிகப்பெரிய நாடகத்தை நிகழ்த்த அவருக்கு உந்துதல் அளித்தது. தன்னை ஜெயலலிதாவின் ஆன்மா வழிநடத்துவதாகவும், அது சசிகலாவை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்த தன்னைக் கோருவதாகவும் கூறி, அதனை ஒருங்கிணைக்கும் வண்ணம் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்தார். ஒரு தேர்ந்த ராஜதந்திரியால் மட்டுமே இப்படியான காட்சிகளை உருவாக்க முடியும். அதுவரையிலும் ஜெயலலிதாவின் விசுவாசி என்ற தோற்றத்தைத் தவிர அவர் சாய்ந்துநிற்க வேறு எந்த சாய்மானமும் இருந்ததில்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும் இருக்கச் சொன்னால் இருப்பார், எழுந்திருக்கச் சொன்னால் எழுந்திருப்பார் என்ற அடிமைத்தன விசுவாசத்தை மக்களின் மனத்தில் உருவாக்கியவர் அவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அந்த நிழல் மட்டுமே அவரின் அடையாளம்; காலப்போக்கில் அழிந்துபோய்விடும் அல்லது தன்னை மாசுபடுத்தும் என்று கருதப்பட்ட அந்தப் பலவீனத்தைத் தன்னுடைய அரசியல் வியூகமாக மாற்றினார். சசிகலாவின் சாம்ராஜ்யம் முழுவதையும் அடித்துவீழ்த்த அவருக்கு இதுவே போதுமானதாக இருந்தது. அதுவரையிலும் அவரைத் தொடர்ந்துசொல்ல ஒரு கட்சி உறுப்பினர்கூட இல்லையென்ற நிலை மாறியது. தியானம் மேற்கொண்ட அந்த முக்கால் மணி நேரத்தில் தொண்டர்களை ஜெயலலிதாவின் சமாதி நோக்கித் திரள்திரளாகக் குவியச்செய்த அந்த வல்லமை ஆச்சரியத்திற்குரியது.. சாதாரண பன்னீர்செல்வம் அதிமுகவின் முதுகெலும்பு போல நிமிர்ந்தார். சசிகலாவின் அத்தனை பலத்தையும் அடுத்தடுத்த பேட்டிகளாலும் அறிக்கைகளாலும் நிலைதடுமாறச் செய்தார். ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தை அரசுடைமையாக்குவோம் என்று அவர் அறிவித்தது பெண்களையும் கட்சித் தொண்டர்களையும் போராளிகளாக்கியது. அவர்கள் நேரடியாக வேதா நிலையத்தின்முன் திரண்டு உள்ளிருப்போரை வெளியேறச் சொல்லும் நிலையை உருவாக்கியது. ஜெயலலிதாவின் மரணத்தில் மக்கள் மத்தியிலே நிலவிவந்த மர்மக் கதைகளுக்கு அவரும் குரல்கொடுத்தார். இவ்வாறாக, அவர் எடுத்த ஒவ்வொரு கணைகளும் சசிகலா குழுவினரின் அடிப்படைகளைத் தோல்வியுறச் செய்தது.
உண்மையில் இத்தகைய தந்திரங்கள் எதிர்க்கட்சியின் தரப்பிலிருந்து வந்திருக்க வேண்டும். பன்னீரின் அதிரடிகள் அதிமுகவின் பலத்தைத் தன் பக்கம் உறிஞ்சிக்கொண்டிருந்த அதே நேரத்தில் திமுகவின் ரகசிய ஆசைகளையும் ஒருசேர உறிஞ்சியெடுத்தது. அனைவரின் கவனத்தையும் தன்மேல் குவியச் செய்ததின் மூலம் ஸ்டாலினைச் செயல்பாடுகளில்லாமல் ஒதுங்கவைத்தார். தமிழகத்தில் இதுவரை செயல்பட்டுவந்த பெரிய அதிகார மையங்களின் செல்வாக்கிற்கு இணையாக பன்னீர் எடுத்த பேருருவமே அவரைநோக்கி பாஜகவையும் இழுத்துவந்திருக்கின்றது.
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கிவரும் சந்தர்ப்பத்தில், பாஜக தன்னை வலுவாக்கிக்கொண்டாலொழிய வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். அதே சமயத்தில் தமிழக அரசியலில் காலூன்ற அது மூன்று தலைமுறைக்காலமாக எடுத்துவரும் முயற்சிகளனைத்தையும் திராவிட இயக்க அரசியல் தடுத்தாட்கொண்டிருக்கிறது. இப்போது ஜெயலலிதா இல்லை என்கிற வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அது உள்ளே நுழையப் பார்க்கின்றது. பன்னீர்செல்வத்திற்கும் மையத்திலிருந்து இத்தகைய வலு வேண்டும் என்ற அவா உண்டு. ஆகவே, அவர்கள் ஒருவரையொருவர் நெருங்கிவரும் சந்தர்ப்பங்கள் இலகுவாக அமைந்துள்ளன. இந்தப் போக்கு நீடிக்குமேயானால், பாஜகவும் பன்னீர்செல்வத்தின் கைக்கடக்கமான கருவியாகத்தான் இருக்க முடியும் என்று உறுதியாக நம்பலாம். இதனை மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் உணர்த்துகின்றன.
பாஜகவின் மூர்க்கமான ஆசைக்குத் தடைக்கல்லாக சசிகலாவும் அவர்தம் குடும்பத்தினரும் இருக்கிறார்கள் என்ற கருதுகோள் எந்த அளவிற்கு வலுவானது? அப்படியான வலுமிக்க இந்துத்துவா எதிர்ப்புச் செயல்பாடுகள் சசிகலாவிடமோ அவரின் குடும்பத்தினரிடமோ இல்லை. ஆனால், பன்னீர்செல்வம் அணிக்கும் சசிகலா அணிக்குமான இடைவெளியை பாஜக சரியாகப் புரிந்துகொண்டது. நடைபெறவிருந்த ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரப் பணிகளால் சசிகலாவின் பெயரை எங்கும் முழங்க முடியவில்லை. அவரின் படத்தைப் பெரிய அளவிலோ சிறிய அளவிலோ வாக்காளர் மத்தியில் பிரசன்னப்படுத்த முடியவில்லை. ஜெயலலிதாவின் மரணத்திலும் அவருடைய முன்னாளையத் தோல்விகளிலும் சசிகலாவுக்கே பிரதானமான பாத்திரம் இருந்ததாகத் தமிழகம் கருதிவருகிறது. அக்குடும்பத்தின் ஊழல்களும் அதிகார நாட்டங்களும் ஒவ்வொருவரையும் அருவருக்கச் செய்தன. எனவே, பாஜக தன் வியூகத்தை வகுக்க வேண்டுமானால், அது சசிகலாவையும் அவரின் குடும்பத்தினரையும் மக்களின் மனப்போக்கின் ஊடாகவே நின்றுதான் செயல்படுத்த முடியும்.
பிரதமர் மோடி பெரும் ஊடக பலத்தால் தன்னை ஊழலுக்கு எதிரானவர் போன்று சித்திரித்துக்கொண்டு வருவதில் முன்னேறியுள்ளார். அவரின் பிம்பம் வளரும் சமயத்தில் சசிகலா போன்ற தேவையற்ற சுமைகள் தன்னை நிலைகுலைத்துவிடலாகாது என்று மோடி கருதியிருக்கலாம். மாங்காய்களைத் தட்டிவீழ்த்த தோளளவுக்குக் கல்லெடுத்து வீசுவதைக் காட்டிலும் கைக்கடக்கமான கற்களை வீசி வீழ்த்திவிடலாம் என்று கருதுகிறார் அவர். பாஜகவின் இத்தகைய எளிமையான கணக்குகளைச் செல்லுபடியற்றதாக்க தமிழக அரசியல் தலைமைகளே முனைப்பான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.
மாநில அரசின் முடக்கம், பிரபலமற்ற தலைமை ஆகியவற்றால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை இன்னமும் திமுகவால் கையாள முடியவில்லை. 45ஆண்டுக் காலமாகக் கட்சியின் மையத்திலிருந்தே அதன் செயல்பாடுகளைக் கவனித்தும் செயல்பட்டும் வந்திருக்கும் ஸ்டாலின் திமுகவின் கொள்கைகளில் கையாளுகின்ற சமரசப் போக்குகள் அக்கட்சியின் தடுமாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம். கட்சியின் தலைமைப் பீடத்தைக் கைப்பற்றிவிட்டாலும் இன்னமும் குடும்ப பாரம் அவரின் தலையை அழுத்துகின்றது. கட்சியில் அவரைச் சூழ்ந்திருப்போரெல்லாமே, இவரைப் போன்றே அந்தந்தப் பகுதிகளின் இரண்டாம் மட்ட வாரிசுகளே! ஏற்கெனவே, ஊழல்களாலும் வட்டார அதிகார மையங்களாலும் கட்சிக்கு நேரிட்ட சிந்தனைத் தடுமாற்றங்களை அவரால் மீறி வரமுடியவில்லை.
இந்நிலையில், தினகரன் அரசியலிலிருந்து விலகிவிடுவதாக அறிவித்திருக்கிறார். அவர் மீதான வழக்குகள் அவரை வேட்டையாடலாம். பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பேச்சுவார்த்தை நடத்த அமைத்துள்ள குழுக்கள், தமிழகம் எதிர்கொண்டுள்ள அபாயங்களையும் வறட்சியையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு விரைவான இணைப்பை மேற்கொள்வது நல்லது. இதுநாள் வரையிலும் தமிழக அரசியலை முன்னெடுத்துவந்த பாதைகளை விட்டு இப்போது உருவாகப் போகின்ற அதிமுக விலகிச்சென்றுவிடும் வாய்ப்பில்லை. இந்த நம்பிக்கைகளோடு தமிழக அரசியல் களத்தின் தன்மையைத் துலங்கச் செய்வதில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு.