என் அறையே பெரு நிலம்
குளியல் அறையே குளிர்ந்த காடு
இப்பொழுது என் காட்டருவியில் நீராடுகிறேன்
அறையில் காணும் மரங்களிலெல்லாம்
எனது பெயரையே செதுக்கியிருக்கிறேன்
இது என் அறை
என் நிலம்
என் வனம்
என் வானம்.
காற்று மெதுவாய்
தேன் கூட்டுக்குள் நுழைய
எழும்பிப் பொங்குகிறது தேன்
வழியும் தேனில் ஒரு துளி
என் நாவில்.
மர உச்சியில் அடைகாக்கப்படும் முட்டைபோல்
இரவில் கட்டிய தேன்கூடுபோல்
ஆற்றிலிருந்து கடல் நோக்கிப் பயணிக்கும் மீனைப்போல்
மழைச்சாரலில் வெளியேறும் பட்டாம்பூச்சிபோல்
பைக்கில் நான் அப்பாவோடு.