கருங்கடற் கரையும் வெண்பனி நிலமும்
புகழ்பெற்ற கவிஞர்களில் இருவர் அடுத்தடுத்து மறைந்திருக்கிறார்கள். கரீபியக் கவிஞர் டெரக் வால்காட் 2017, மார்ச் 17 அன்றும் ரஷ்யக் கவிஞர் யெவ்கெனி யெவ்டுஷெங்கோ ஏப்ரல் 1 அன்றும் காலமானார்கள். சமகால உலகக் கவிதைகளின் தொகுப்புகள் அனைத்திலும் நிச்சயமாக இருவரும் இடம்பெற்றிருப்பவர்கள் என்பதைத் தவிர இருவருக்கும் இடையில் ஒற்றுமைகள் இல்லை. எனினும் இருவரையும் வாசிப்பின் வாயிலாக அறிந்து வைத்திருக்கும் வாசக மனம் சில ஒப்பீடுகளை நிரல்படுத்திப் பார்க்கவே விரும்புகிறது. இருவரும் ஏறத்தாழ சம வயதினர். அவரவர் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டங்களில் வாழ்ந்தவர்கள். மேற்கு இந்தியத் தீவுகளில் காலனி ஆட்சி நடைபெற்ற காலத்திலும் அதற்கு எதிரான போராட்ட நாட்களிலும் வாழ்ந்தவர் வால்காட். கம்யூனிச ஆட்சிக்கு உட்பட்டிருந்த குருஷேவின் சோவியத் ரஷ்யாவிலும் பின்னர் சிதறுண்டு உருவான ஜனநாயக கோர்பச்சேவின் ரஷ்யாவிலும் வாழ்ந்தவர் யெவ்டுஷெங்கோ. இரண்டு விதமான சமூக அமைப்புகளுக்குள் இருந்தபோதும் அந்தந்த அரசுகளுக்கு அனுசரணையாக இயங்கியவர்கள் என்ற புகார் இருவர் மீதும் உண்டு. ஆட்சியிலிருந்த அரசை விமர்சித்தபோதும் அரசின் சல