எழுத்திலும் நேரிலும்

இறந்தவர் பற்றிய கட்டுரையில் அதை எழுதுகிறவர் பற்றியே அதிகம் வரும் என்ற குற்ற உணர்வுடன் அசோகமித்திரன் பற்றி எழுதுகிறேன். இதைத் தவிர்க்க இக் கட்டுரையில் அவருடைய எழுத்துக்கள் பற்றியும் வரும்; அவருக்கும் எனக்குமான தொடர்பு பற்றியும் வரும். ஒரு நாலு பத்தாண்டுகளுக்கு முன் பொங்கல் வாரத்தில் சென்னையில் நடந்த இலக்கியக் கருத்தரங்கில் அசோகமித்திரனை முதல்முதலாகச் சந்தித்தேன். அந்த நாட்களில் எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொள்வது இலேசான காரியமில்லை. ஆசிரியரின் படங்களுடன் கட்டுரைகள், கதைகள் அச்சிடும் பழக்கம் அப்போது இல்லை. இன்றுபோல் சமூக வலைத்தளங்கள் இல்லை. இவர்தான் என்று அறிந்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அந்த முதல் சந்திப்பிலேயே அவரிடம் ஒரு கதை கேட்டிருந்தேன். அந்த நாட்களில் ஒரு பத்திரிகைக்கு நான் ஆசிரியராக இருந்தேன். ‘தருகிறேன்’ என்றார். சொன்னபடியே அனுப்பியும் இருந்தார