ஏப்ரல் இதழில் ‘கேள்விகளின் நெடுவாசல்’ தலையங்கம், நெடுவாசல் குறித்த கட்டுரை, ‘தற்காலிக விடை’, ‘பேச மறந்த சூரியன்’ ஆகியவை குறிப்பிடத்தக்கன. தலையங்கத்தின் இறுதியில் குறிப்பிட்டதுபோல் நமக்கான அரசுகள் எங்கேயும் இல்லை; அதுதான் உண்மை. அதற்கான சூழலை நோக்கிய பாதை ஏற்கனவே அடையாளம் காட்டப்பட்டதுதான். இப்போதுதான் தெளிவாக நம் மக்களுக்குத் தெரிகிறது. அவ்வளவு எளிதில் அடைய முடியாத பாதையை ஓரிரண்டு போராட்டங்களில் மட்டும் அடைய முடியாது. நெடிய போராட்டங்களுக்குத் தங்களைத் தொடர்ந்து உட்படுத்துவார்களா என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. அடுத்து, கட்சிகளை உடைக்கும் உள்ளடி வேலைகளில் பாஜக தேர்ந்திருக்கிறது என்பதை ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை அக்கட்சி கையாண்ட விதத்திலேயே தெரிந்துகொள்ளலாம். இது தற்காலிக வெற்றிதான் என்பதை நிரூபிக்க எதிர்க்கட்சிகள் வரும் காலங்களில் என்ன உபாயங்களைக் கையாளப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விருப்பு வெறுப்புக்கு அப்பால் ‘பேச மறந்த சூரியன்’ கட்டுரை மிளிர்ந்தது; அதோடு மனதையும் தொட்டது. நன்றி.
ஆர்.கே. மணிகண்டன்,
ஊரப்பாக்கம்
நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவள் இல்லை. எந்த இயக்கமும் என்னை இயக்கவில்லை. கலைஞரின் அந்தத் தெள்ளு தமிழ் துள்ளு நடைதான் என் உள்ளத்தையும் அள்ளியது. இன்று அவரது மௌனம் கலைஞர் விரும்பிகளை எவ்வளவு காயப்படுத்தும் என்று எழுத வார்த்தைகள் வசப்படவில்லை. கலைஞரை நிறைய முறை நேருக்குநேர் பார்த்துள்ளேன். (நான் ஓர் ஓய்வுபெற்ற தலைமைச் செயலக அலுவலர்) தன்னருகே மிகத் திறமையான அதிகாரிகளை வைத்துக்கொள்வார். ஆனால், முடிவு மட்டும் அவரே எடுப்பார். இன்னும் கோப்புகளில் எழுதியுள்ள குறிப்புகள்மீது சந்தேகம் கேட்பதில் அவருக்கு நிகர் அவரே. மேலும், தலைமைச் செயலகச் சங்கம் அழைக்கும் விழாவிற்கெல்லாம் விரைந்து வந்து பங்கேற்பார். எம்ஜிஆரும் ஜெயலலிதா அம்மையாரும் அப்படி வந்ததாய் நினைவில்லை. கலைஞரின் மொழிவளம், பேசும்திறன் அளப்பரியது. அம்மையார் ஜெயலலிதா யாரையுமே மதிக்காதவர். தான் வரும்போது அனைவரும் ஆங்காங்கே நின்றுவிட வேண்டும் என நினைப்பவர்.
ஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் படித்த முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவன் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டார். இவர்கள் எல்லாம் பெரிய படிப்பு, படிப்பவர்கள். P.MPhil, Phd என்பது சாதாரணமானது அல்ல. இவர்கள் விளிம்பு நிலையைச் சேர்ந்தவர்கள். பல்கலைக் கழகங்கள் தரும் மனஅழுத்தம், இதுவே தற்கொலைக்குக் காரணமாம். பாஜக சாதி மதத்தை வளர்க்கும் கட்சி. அது பிளபுபடுத்தி ஆளப் பார்க்கிறது. மக்களின் பிளவில் அக்கட்சி தற்போது வாழ்கிறது. ஆனால் அதையெல்லாம் பெரிது பண்ணுகிற வயதா இது? எதிர்த்து நின்று போராட வேண்டாம், படிக்க வேண்டியதுதானே? நுனிநாக்கு ஆங்கிலம் வெறும் அங்கீகாரத்தை அல்ல, ஆட்சியைக்கூடத் தரும். உதாரணம், அம்மையார் ஜெயலலிதா. இவரைப் படித்தவர் என்று பாராட்டியது நாம்தானே! அப்படியிருக்க இந்த இளைஞர்கள் தூக்கிட்டுச் சாவதை ஏற்க முடியாது. “எப்போது சமத்துவம் மறுக்கப்படுகிறதோ அப்போதே எல்லாமே மறுக்கப்படும்” என்று பதிவுசெய்திருக்கிறார் முத்துகிருஷ்ணன்.அவர் ஜேஎன்யுவில் பேராசிரியராகும் தகுதிக்கு உயர்ந்திருக்க வேண்டியவர். மகனை இழந்ததுபோல் வேதனையுற்றேன்!
சுப. உதயகுமாரனின் ‘அவர்கள் என்ன மீன்களா?’ கட்டுரை நன்று தமிழ்நாட்டு மீனவர்களை மைய அரசு இந்தியர்களாகவே கருதவில்லை என்பதைத் தமிழ்நாடே அறியும். இலங்கையில் இருந்துவரும் தலைவர்களை மோடி அரசு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்றதைப் பார்த்தபோது, எனக்குக் கடலே தமிழ்நாட்டு மீனவன் இரத்தத்தால் சிவந்து காணப்பட்டதாய் சிவந்தேன். இதுவும் அரசியல்வாதிகளின் பம்மாத்து விளையாட்டுகளில் ஒன்று. கொலை, அரசியல்வாதிகளின் கலை. மொத்தத்தில் காலச்சுவடு என்னை மிகவும் பாதிக்கிறது. என் பாதிப்பின் வெளிப்பாடே இக்கடிதம்.
ஞா. சிவகாமி,
போரூர்.
‘பேச மறந்த சூரியன்’ விமர்சனக் கட்டுரையாகவே இருந்தது. இப்படி தலைப்பு கொடுத்துவிட்டு, கலைஞரின் சிறப்பியல்புகள், அவர்தம் அரசியல் செயல்பாடுகள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி எழுதியிருப்பின் உகந்த கட்டுரையாகத் திகழ்ந்திருக்கும். சொந்த விருப்பு வெறுப்புகளை எழுதுவது, அதுவும் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவர் - சமூகப்பணி புரிந்தவர் பற்றி எழுதுவது நாகரிகமாகப் படவில்லை.
தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்வும் கட்டுரையில் அங்கங்கே காணமுடிகிறது. உதாரணமாக ‘ரயில் கிளம்பிப் போனதை உறுதிசெய்த பிறகே தண்டவாளத்தில் தலையை வைத்தார் கருணாநிதி என்றும் இன்றுவரையில் அந்த நிகழ்வைப் பலரும் விமர்சித்திருக்கிறார்கள்’ என்றும் கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்தக் கருத்தை உறுதி செய்துகொண்டு கட்டுரை ஆசிரியர் எழுதுவதுதானே நேர்மை, நியாயம்? ‘கல்லக்குடி கொண்டான்’ என்ற பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டார் என்றும் கருத்துப்பட எழுதுகிறார்.
பேராசிரியர் அன்பழகன், ‘கலைஞரைப் போல் யாராலும் உழைக்க முடியாது,’ என்று கூறியிருக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தாத அரசியல்வாதி யார் இருக்கிறார்? மறைந்த முதல்வர் ஜெயலலிதா எவ்வாறு செயல்பட்டார்? நூறுஅடி தள்ளி தலைவர்கள், மக்களை இருத்தித் தான்மட்டும் அமர்ந்துகொள்ளவில்லையா?
எதிர்க்கேள்வி போடுவது கலைஞர் தம் திறமை! ‘ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?’ கேள்வி. ‘ஆண்டவன் நம்மை ஏற்கிறானா எனப் பார்ப்போம்!’ பதில்! உடனடியாகப் பதில் தருவதில் இருக்கும் சாமர்த்தியம்! திறமை!
திருமங்கலம் ஃபார்முலா பற்றி கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அதற்கும் முன், சென்னையில் ஒரு கட்சி, சாமி படத்தின்மீது சத்தியம் பெற்றுக்கொண்டு பணம் கொடுத்தது. அதைவிட மேலாக அந்த நாளில் சென்னை மேயர் தேர்தலில் மு.க. ஸ்டாலின் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறக் கூடாது என்பதற்காக, அத்துமீறி நுழைந்து பல லட்சக்கணக்கான வாக்குகளைச் செல்லாதவைகளாக மாற்றி வாக்கு வித்தியாசத்தைக் குறைத்தனர்! எவ்வளவு சாமர்த்தியம்?
‘நொண்டிப் பார்ப்பான்’ என்று சொல்லவும் தயங்க மாட்டார்’ எனும் வார்த்தை அப்பட்டமான காழ்ப் புணர்ச்சியாகப் படுகிறது. கலைஞர் ஓர் அரசியல்வாதி! மாற்றுக் கட்சியினரையும் நேசிப்பவர் - மதிப்பவர். கொள்கை வேறுபாடு இருக்கலாம். அதற்காகத் தனிப்பட்ட முறையில் அப்படியான வாக்கியத்தை உபயோகிப்பாரா? ‘சொல்லத் தயங்க மாட்டார்’ என கற்பனை செய்துகொண்டு விமர்சிப்பது நியாயமா? தகுமா? விமர்சனப் பண்பாகுமா?
உழைப்பால் உயர்ந்து உடல்நலம் குன்றியுள்ள 92 வயது நிரம்பிய கலைஞரை வாழ்த்தியும் அவர்தம் தொண்டினைப் பாராட்டி அவர்தம் தொண்டர்களை உற்சாகமூட்டியும் அமைய வேண்டிய கட்டுரை, விமர்சனக் கட்டுரையாக, காழ்ப்புணர்ச்சி மிக்க கட்டுரையாக - வடிவெடுத்திருப்பது வருந்தத்தக்கது. அதுவும் காலச்சுவடில் இப்படி ஒரு கட்டுரையா? நெஞ்சம் வேதனை அடைகிறது!
ப.அ. இராமமூர்த்தி,
மதுரை.
‘பேச மறந்த சூரியன்’ கட்டுரை படித்தேன். பொதுவாகவே எந்த மொழியாக இருந்தாலும் அதனை அறிவுசார்ந்த விசயமாகவே கையாள வேண்டும். ஆனால் திராவிடக் கட்சிகள் அதனை அரசியல் சார்ந்த விசயமாக மாற்றிவிட்டன. உலக அரசியல் வரலாற்றில் ஒரு மொழியை எதிர்த்து இயக்கங்கள் நடத்திய பெருமை தமிழக திராவிடக் கட்சிகளையே சாரும்.
கலைஞரைப் பொறுத்தவரை இரட்டை அர்த்த வசனங்களின் முன்னோடி என்றால் மிகையல்ல! சட்டமன்றத்தில் காங்கிரஸ் பெண் உறுப்பினர் திராவிட நாடு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் என்ன என்று வினவிய கேள்விக்கு ‘நாடாவை அவிழ்த்துப் பாவாடையைத் தூக்கிப் பார்’ என்று கூறிய பதில் இன்றும் சபைக்குறிப்பில் இருக்கிறது. இந்திரா காந்தியை எதிர்த்துத் திமுகவினர் மதுரையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திரா காந்தி அடிபட்டதால் அவரின் உடையில் பட்டிருந்த ரத்தத்தை ‘மாதவிடாய்’ ரத்தம் என்று சொன்னார்.
சனாதன தர்மம் என்றால் என்ன என்பார். ஆனால் அவர்கள் குடும்பத்தார் நடத்தும் பத்திரிகைகளுக்கெல்லாம் குங்குமம், குங்குமச்சிமிழ், சுமங்கலி, பூமாலை என சென்டிமெண்டான பெயர்களாகச் சூட்டிக்கொள்வார். கலைஞரின் படைப்புகளை நிறைய சிலாகித்து எழுதுவார்கள். உண்மையில் கலைஞரைக் காட்டிலும் சிறப்பாக எழுதும் பலர் திமுகவில் இருந்தார்கள். ஆனால், எங்கே நம்முடைய எழுத்துக்களின் சிறப்பை அறிந்து தலைவர் மனம்நொந்து விடுவாரோ என மனம்வெதும்பினார்கள். உதாரணம் எஸ்.எஸ். தென்னரசு; இவரின் எழுத்தைப் போற்றிப் புகழ்ந்த விமர்சகர்கள் நிறைய பேர். ஏதாவது நூல் வெளியீட்டு விழாவில் பங்கெடுப்பார். நூலில் திராவிடர், ஆரியர் என்ற சொற்களைப் பார்த்தாலே (திராவிட கட்சியைச் சேர்ந்தவர்கள் எழுதும் நூலில் வேறு என்ன விசயம் இருக்க முடியும்?) “இந்த நூல் அந்த நூலை அறுக்கும்” என்று பிராமணர்களை மறைமுகமாகத் தாக்குவார். ஆனால், தான் நடத்திவரும் திமுக அறக்கட்டளை, அண்ணா அறக்கட்டளை இரண்டையுமே திறமையான பிராமணத் தணிக்கையாளர்களைக் கொண்டு தணிக்கை செய்துகொள்வார்.
அரசியல்வேறு அரசாங்கம் வேறு என்ற நிலையை மாற்றிச் சீர்கெடுத்த பெருமை கலைஞரையே சாரும். சாதாரண முதுகலைப் பட்டதாரியை மக்கள் தொடர்பு அதிகாரி என்ற பெயரில், மந்திரிமார்களின் மகன், மருமகன், மந்திரிமார்களின் மனைவியரின் உறவினர், துணைவியரின் உறவினர் என சுத்தமான, நூறு சதவிதம் கட்சிக்காரர்களை அதிகாரிகளாக நியமித்து அவர்களை எந்த அரசு விதிகளையும் பின்பற்றாமல் தலைமைச் செயலர் அந்தஸ்து வரை பதவி உயர்வு வழங்கி அரசு விதிகளைக் கேலிக்கூத்தாக்கினார். திமுக மாவட்டச் செயலாளரை நீதிபதியாக்கினார்; அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார். (நீதிபதி ரத்னவேல் பாண்டியன், முன்னாள் நெல்லை மாவட்ட திமுக செயலாளர்) சமீபகாலத்தில் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த சபாபதிமோகன் என்பாருக்குப் பரிசாகத் துணைவேந்தர் பதவி அளித்தார். முரசொலியில் தம்பிக்கு கடிதம் எழுதுவார். “கொடியோடு வரச் சொன்னால் நீ தடியோடு வருவாய் - ஏனென்றால் நீ என்னுடைய தம்பி அல்லவா?” என்று கொம்பு சீவிவிடுவார்.
எம்ஜிஆரை ‘மலையாளி’ என்பார். சந்தர்ப்பம் வரும்போது ‘மாடர்ன் தியேட்டரில் எட்டுபேரும் ஒரே பாயில் படுத்து தூங்கி எழுந்த நட்பு எங்களுடையது’ என்பார். எல்லாவற்றுக்கும் மேலாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் தலைவர் உதயகுமார் பற்றிச் சொல்லாம். அந்த மாணவர் கலைஞருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பான பல்கலைக்கழகக் குழு விவாதத்தில் கலைஞரை எதிர்த்துத் தனது கருத்தைப் பதிவுசெய்த ஒரே வாரத்தில் மர்மமான முறையில் இறந்தார்; அந்த வழக்கில் அந்த மாணவரின் பெற்றோர்களையே உதயகுமார் என்ற பெயரில் எங்களுக்குப் பையனே இல்லை என்று அரசு இயந்திரம் மூலம் சாட்சி சொல்ல வைத்தார். அதனால்தானோ என்னவோ தன்னுடைய குடும்பத்தினரையே ‘யார் நீங்கள்?’ என்று இன்று கேட்கும்படியான சூழலை காலம் பாடமாகக் கற்பித்திருக்கிறது.
இறுதியாக கலைஞரின் அரசியல் சார்ந்த வாழ்வும் சரி, அரசு சார்ந்த வாழ்வும் சரி முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பது நிதர்சனம். இவை அனைத்தையும் மீறி ‘சிறந்த சாணக்கியர்’ என்றும் ‘சிறந்த நிர்வாகி’ என்றும் அரசியல் நோக்கர்களும் அரசியல் விமர்சகர்களும் சான்றளிப்பதுதான் தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய ஆச்சரியமான நகை முரண்.
இரா. இராமதுரை,
பொங்கலூர்.
தி. பரமேசுவரி எழுதியுள்ள ‘பேச மறந்த சூரியன்’ கட்டுரையில் காங்கிரசிலேயே தன்னையொரு பிம்பமாக வடிவமைத்துக்கொண்டவர் காமராசர் என்று எதன் பொருட்டு கூறினாரென்பது புரியவில்லை; உரிய காரணம் எதையும் கூறவில்லை.
ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் தமிழக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளான வேளையில் காமராசர் முதலமைச்சரானார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் அவர் ஏகமனதாகத் தேர்வு செய்யப்படவில்லை. தம்மை எதிர்த்து நின்ற சி. சுப்பிரமணியத்தைவிட அதிக வாக்குகள் பெற்றதாலேயே தேர்வானார்.
கோஷ்டிச் சண்டை, காங்கிரஸ் கட்சியின் பரம்பரை வியாதியென்பதை அனைவரும் அறிவர். எனினும்
சி. சுப்பிரமணியம், பக்தவத்சலம் போன்றோரைத் தம் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டதன் மூலம் கோஷ்டிப் பகைக்கு முடிவு கண்டார்.
ராஜாஜிக்கு மாற்றாகக் காமராசர் முதல்வர் பதவியை ஏற்றபோது அண்ணா, “குணாளா! குலக் கொழுந்தே!” என்று வரவேற்றார். பெரியார் மகிழ்வுடன்
“பச்சைத் தமிழர்” என்று பாராட்டினார். காமராசர் முதல்வராவதற்கு முன்பிருந்தே முழுநேர அரசியல்வாதியாக இருந்தவர், வேறு எந்தப் பிம்பமும் அவருக்கு இருந்ததில்லை.
அவர் விரும்பியிருந்தால் முதலமைச்சரான பின் சட்டமேலவை உறுப்பினராக எளிதில் தேர்வாகியிருக்கலாம்; ஆனால், குடியாத்தம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். “சட்டத்துக்காக மக்களில்லை; மக்களுக்காகவே சட்டம்” என்ற கருத்தை நடைமுறைப்படுத்தி ஆட்சிசெய்த ஒரே காரணத்தால்தான் அவருடைய ஆட்சிக்காலம் பொற்காலம் எனப்படுகிறது.
ஒருபோதும் அவர் தம்மை மட்டும் முன்னிறுத்தியவர் அல்லர்; இன்றளவும் அவருடைய அமைச்சரவையில் பிரதான பங்கு வகித்த சி. சுப்பிரமணியம், கக்கன், ஆர். வெங்கட்ராமன், திருமயம் ராமையா ஆகியோரை மக்கள் நினைவிற் கொண்டுள்ளனர். அதிகாரப் பகிர்வில் காமராசருக்கு முழுநம்பிக்கை இருந்தது.
ஜெயலலிதாவைப் போன்று தமக்கு எதிராக எவரும் அணி சேர்ந்துவிடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு எக்காலத்தும் கிடையாது. காமராசர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பன்முறை சிறை சென்றவர்; கருணாநிதியும் அரசியல் காரணங்களுக்கான போராட்டங்களினால் சிறைக்கூடம் ஏகியவர்; ஆனால் எம்ஜிஆர் அப்படியன்று.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில் எம்ஜிஆர் கோவாவில் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்தார் எனக் கூறப்பட்டு வந்தது. ஜெயலலிதாவைப் பொறுத்த அளவில் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றதால் மட்டுமே சிறை சென்றவர். மரணம் அவரைக் காப்பாற்றியிராவிடில் இந்நேரம் அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருப்பார்.
‘அம்மா’ என்ற பிம்பத்தை ஜெயலலிதாவே எவ்விதக் கூச்சமுமின்றிக் கட்டமைத்தவிதம் நாடறியும். திரைப்பட நடிகை என்ற பிம்பத்தை மக்கள் மனத்திலிருந்து அகற்றுவதற்காக அவர் மேற்கொண்ட உடையமைப்பு அவருடைய நோக்கத்தை முற்றாக நிறைவேற்றி விட்டது.
அதிகாரத்தை முழுமையாகத் துஷ்பிரயோகம் செய்து ‘எனக்குக் குடும்பம் இல்லை’ என அறிவித்துவிட்டு அபராதமே 100 கோடி ரூபாய் தண்டனை பெற்றவரின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் யாரைப் போய்ச் சேரும்? பிம்ப அரசியல் செய்ய வேண்டிய அவசியம் செயல்பாட்டாளரான காமராசருக்குச் சற்றும் கிடையாது.
தெ. சுந்தரமகாலிங்கம்,
வத்திராயிருப்பு.