கடிதங்கள்
கடிதங்கள்
ஒரு விளக்கம்
‘பாரதி: உயிர் பெற்ற தமிழர் பாட்டு - பதிப்புக் குழறுபடிகள் - ஒரு குறிப்பு’ என்ற தலைப்பிலான எம்.ஏ. நுஃமான் கட்டுரையைப் படித்தேன் (காலச்சுவடு 253). பாடல் வரிசைமுறைக்கு அரசாங்கப் பதிப்பையும் பாடல்களின் பாடத்துக்குத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பையும் நான் கைக்கொண்டதை முன்னுரையில் குறித்திருக்கிறேன்; தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் பதிப்பையே (1987) நான் கருதினேன். அதில் பாடல் தவறாக இருந்தமையால் அதை அடியொற்றிய என் பதிப்பிலும் தவறு நேர்ந்துவிட்டது. வேறு சில பாடல்களில் இம்மாதிரி பிழைகளைக் கவனித்த நான் இதை எப்படியோ தவறவிட்டுவிட்டேன். மேலும் பாட பேதங்களை எல்லாம் களைந்த சுத்தப் பதிப்பு என் நோக்கமில்லை; இதையும் நான் குறித்து இருக்கிறேன்; என்னுடையது வாசிப்புப் பதிப்பு. இருப்பினும் இதற்கு மன்னிப்பைக் கோருவது என் கடமை.
நான் முதல் பதிப்பை அடியொற்றிச் செய்தேன். தமிழ்ப் பல்கலைக்கழகம், மூன்றாம் பதிப்பில் (2001) இப்பாடலைத் திருத்திச் சரியாக வெளியிட்டுவிட்டது; முந்தையதைத் தவறு என்றும் சொல்லியுள்ளனர். 273 பாடல்களைக் கண்ணழித்து, சந்தி பிரித்து, அருஞ்சொற்பொருளுடன் பதிப்பித்த நான்தான் திருத்திய மூன்றாம் பதிப்பைப் பார்க்கவில்லை. ஒரே ஒரு பாட்டில் தவற்றைக் கண்டுபிடித்துச் சொல்லும் எம்.ஏ. நுஃமான் அவர்களாவது திருத்திய பதிப்பைப் பார்த்துவிட்டு எழுதி இருக்கலாம்.
பழ. அதியமான்
க. திருநாவுக்கரசு எழுதியுள்ள ‘கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாகும் இந்திய விவசாயம்’ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களின் பாதிப்புகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
நாற்பத்தைந்து நாட்களுக்கு மேலாகக் கடுங்குளிரிலும் கொட்டும் மழையிலும் போராடி வரும் விவசாயிகளைக் கொச்சைப்படுத்திப் பேசிவரும் பாஜகவினர் பாசிசத்தின் வரவேற்பாளர்களே. நாடாளுமன்றப் பெரும்பான்மை எத்தகைய தீய செயல்களுக்கும் அங்கீகாரம் பெறுவதென்றால் ஜனநாயக ஆணிவேரையே பிடுங்குவதாகும்.
போராடும் விவசாயிகளை நீதிமன்றம் சென்று நிவாரணம் தேடுமாறு அரசுத் தரப்பில் கூறுவதற்கு முக்கியக் காரணமே, நீதிமன்றம் அரசுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வழங்கும் என்ற தெளிவான நம்பிக்கையாகும். தமிழக முதல்வர் மனச்சாட்சி உள்ளவ ராக இருந்தால் க. திருநாவுக்கரசு எழுதியுள்ள கட்டுரையைப் படித்து அதற்கு மறுப்புத் தெரிவிக்கட்டும். காலச்சுவடுக்கு நன்றி தெரிவித்து திமுக க. திருநாவுக்கரசின் இந்தக் கட்டுரையைத் துண்டுப் பிரசுரமாக இலட்சக்கணக்கில் அச்சிட்டு வெளியிட்டால் உண்மை அறியும் வாக்காளர்கள் அதிமுக , பாஜக கூட்டணியை அடியோடு வெறுப்பார்கள்.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு 626 132
வண்ணநிலவனின் கட்டுரை ரஜினிகாந்தின் முற்றுப்பெறாத அரசியல் வருகை பற்றித் தீர்க்கமாக அலசுகிறது. ரஜினியின் அரசியல் நுழைவு முயற்சி, ஊடகங்களின் தாக்கத்தால் என்றால் அது சரியே. தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் ரஜினி போன்று வெளிமாநிலத்தில் அதுவும் காவிரி நீர் வருவதை அளந்து கண்காணிக்கும் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவருக்கு ஏற்றது இல்லை. இந்தக் கணக்கில் எம்.ஜி.ஆர். வரமாட்டார். அவர் தமிழ்நாட்டில் வளர்ந்தவர், தமிழில் படித்தவர்.
சினிமா செல்வாக்கை மட்டும் நம்பி அரசியலில் வெற்றி பெற்றவர் அல்ல எம்.ஜி.ஆர். அந்த வகையில் என்.டி. ராமராவ் மட்டும்தான் இந்திய மாநிலங்களில் சினிமா செல்வாக்கினால் (மட்டும்) மாநில ஆட்சியை, அதுவும் குறுகிய காலத்தில், கைப்பற்றியவர். அதற்கு ராமர், கிருஷ்ணர், கிருஷ்ணதேவராயர் போன்ற பாத்திரங்களில் அவர் நடித்தது பெருந்துணையாக இருந்தது. அவருக்கும் ஓர் அரசியல் பொறி தூண்டுதலாக அமைந்தது. ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த அஞ்சையாவை அன்றையப் பிரதமர் ராஜிவ் காந்தி, அரசியல் பக்குவம் இன்றி நடத்திய விதம் வினையாகிப் போனது. ஆந்திர மக்களை அது உசுப்பிவிட்ட நிலையில் என்.டி.ஆர். கட்சியை ஆரம்பித்தார்.
திமுகவில் இருபது ஆண்டுக் காலம் இருந்த எம்ஜிஆர், அரசியல் நெளிவுசுழிவுகளை நேரில் பார்த்தவர். அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு முதல்வர் வாய்ப்பு கிடைக்க அரசியல் சாணக்கியர் கருணாநிதிக்கே எம்ஜிஆரின் ஆதரவு தேவையாயிருந்தது.
திமுகவின் வளர்ச்சியில் 1960இல் வெளியான எம்ஜிஆரின் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் வந்த “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா” என்ற திமுககாரர் கண்ணதாசனின் பாடல் தட்டிவிட்ட தாக்கம் இளைஞர்களிடம் கனன்று நின்றதை 1962ஆம் ஆண்டுத் தேர்தல் வெளிப்படுத்தியது. 1955இல் வெளியான ‘மதுரை வீரன்’ படம் எம்ஜிஆருக்கு மட்டும் புகழ் சேர்க்கவில்லை. திமுகவிற்கும் வாக்காக மாற உதவியது. இதுபோன்ற நிகழ்வுகளையெல்லாம் சரிவர வெளிக்காட்டாமல் ஊடகங்களின் மேம்போக்கான விவாதம், கட்டுரை, செய்திகளை நம்பி ரஜினிகாந்த் ஏமாந்து போனது விந்தைதான்.
இப்போது ரஜினியை நம்பித் தவறாகக் கணித்து யோசனை கூறிய கட்சிகளை, நபர்களைப் பரிதாபமாகப் பார்க்க வேண்டியுள்ளது. அவர்களை ரஜினி உள்ளாற நம்பிய என்பது அந்த வெற்றி நடிகரின் சிந்தனையும் செயலும் தீர்க்கமாக இருக்கவில்லை என்று காட்டுகிறது.
அமுதன்
இடைப்பாடி
ஜனவரி இதழில் ‘இனவாதக் கொரோனா’ என்ற தலையங்கமும் பன்னாட்டுச் சிந்தனையாளர்களது நியாய உணர்வுக் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையும் தக்க தருணத்தில் வெளிவந்துள்ளன. உலக மானிட இனத்துக்கு விளைவித்த கொடுமையைக் காட்டிலும், இறந்துபோன மனித உடல்களை ‘எரித்தே தீருவோம்’ என்ற இலங்கை அரசின் பெருங்கொடுமை, உறவுகளின் இறப்புக்களைத் தாங்க முடியாத துக்க ரணங்களில் உழலும் மனித இதயங்களை மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்டு மிகவும் கோரப்படுத்தியுள்ளது. அதுவும், சில இனத்து மக்களை மட்டுமே குறிவைத்துப் பழிதீர்க்கும் இந்தத் தீச்செயல் கொடிதினும் கொடிதானது.
இந்த இதழின் இன்னுமொரு தனிச்சிறப்பு, அந்தக்காலச் சமூக அடித்தளத்தில் உழன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு அபூர்வமான பொதுவாழ்வுப் பெருந்தகைகள் பற்றிய கட்டுரைகள். ஏறக்குறைய எழுபது ஆண்டுக்கால இடைவெளியில் வாழ்ந்த இருவருக்கும் எப்படியோ ‘பிள்ளை’ என்ற பொதுப்பெயர் சேர்ந்துள்ளது. அயோத்திதாசப்பண்டிதர் பற்றிய கட்டுரைகள் பல காலச்சுவடு இதழ்களில் வெளிவந்து சிறப்புச் சேர்த்ததைத் தொடர்ந்து, அதிக அறிமுகமில்லாத இந்த இருவரைப்பற்றிய விரிவான இரண்டு கட்டுரைகளும், ஒதுக்கப்பட்ட சமூகப்பரப்பில் பல்லாற்றானும் சிறந்து விளங்கிப் பன்முக ஆற்றலுடனான இவர்களது மக்கள் சேவையை வாசகர்களுக்கு அறியத்தருகின்றன. கோ.பெ. கோயில்பிள்ளை இடதுசாரி அரசியல் பின்புலத்துடன் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகம் விழிப்புணர்வுப் பெற்று மேம்பாடடைய வாழ்நாள் முழுவதும் பல்வேறு சோதனைகளைத் துணிவுடன் எதிர்கொண்டு பாடுபட்டு நிறைவான பொதுவாழ்வு வாழ்ந்துள்ளார்.
ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் படைத்துள்ள ‘மதுரைப்பிள்ளை’ பற்றிய கட்டுரை, பல்வகை சாதியக் கட்டமைப்புத் தடைகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த அக்காலத்திலேயே, சமூக அடித்தளத்திலிருந்து மீண்டு மிளிர்ந்துவந்த மதுரைப்பிள்ளைக்கு இயல்பாய் வாய்க்கப் பெற்ற செல்வச் செழிப்பு, வள்ளல் தன்மை, சீரிய கல்விப்பணி, இதழியல், படைப்பாளிகளைப் போற்றிப் பெருமை ஆகியன சேர்த்த உன்னதமான விசாலப்பார்வையும் ஆன்மீகப்பணியும் படிப்போரைப் பிரமிக்க வைக்கின்றன.
சி. பாலையா
புதுக்கோட்டை