மொழியியல் விஞ்ஞானி சோம்ஸ்கி
மதிப்புரை
மொழியியல் விஞ்ஞானி சோம்ஸ்கி
இரா. தமிழ்ச்செல்வன்
நோம் சோம்ஸ்கி
சு. இராசாராம்
காலச்சுவடு பதிப்பகம்
669. கே.பி. சாலை
நாகர்கோவில் - 1
பக். 432
ரூ. 490
உலகப் புகழ்பெற்ற மொழியியல் அறிஞராகவும் சமூகப் போராளியாகவும் அறியப்படுபவர் ஆவ்ரம் நோம் சோம்ஸ்கி. அவர் அறிமுகப்படுத்திய ஆக்கமுறை மாற்றிலக்கணக் கோட்பாட்டையும் அவரையும் அறிந்துகொள்வது மொழிப் புலத்தில் தவிர்க்க இயலாதது. சோம்ஸ்கியின் ஆளுமையை ஆழமானதாகவும் நுட்பமானதாகவும் ‘நோம் சோம்ஸ்கி’ என்ற தனது நூல் மூலம் தமிழில் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பினை வழங்கியிருக்கிறார் பேராசிரியர் சு. இராசாராம்.
சமூக - அரசியல் போராளி என்கிற அடையாளத்தால் அறியப்படும் நோம் சோம்ஸ்கி, மொழியியல் ஆளுமை என்கிற இடத்தைத் தனது ஆக்கமுறை மாற்றிலக்கணக் கோட்பாட்டிற்குக் கிடைத்த கல்விசார் அங்கீகாரத்தால் பெற்றிருக்கிறார். அரசின் செயல்பாடுகள் தொடர்பாக சோம்ஸ்கி முன்வைக்கிற விமர்சனங்கள், அதனைத் தொடர்ந்து அவர் மேற்கொள்ளும் போராட்டங்கள் முதலானவை சமூக, அரசியல் போராளி என்கிற அடையாளத்தை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன. அவர் இந்த அடையாளங்களைப் பெற்றிருப்பதில் அவருடைய குடும்பப் பின்புலமும் கல்விச் சூழலும் முக்கியமான அடித்தளங்கள் ஆகும். இந்தப் பின்புலத்திலிருந்து நூல் தொடங்குகிறது.
மொழியியலில் சோம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாடு ‘புரட்சி’ எனப் போற்றப்படுகிறது. வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு அவர்களைத் தயார்படுத்தும் பொருட்டு, மொழியியலின் போக்குகள் குறித்த செய்திகள் அறிமுகத்தின் தொடர்ச்சியாக விளக்கப்படுகின்றன. இக்கோட்பாடு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் மொழியியலில் இருந்த மரபிலக்கணம், பொதுமை இலக்கணம், ஒப்புமை மொழியியல், அமைப்பு மொழியியல், வண்ணனை மொழியியல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படைகளை விவரித்து சோம்ஸ்கியப் புரட்சியை அறிமுகப்படுத்த கரம்பிடித்துக் கூட்டிச்செல்கிறார் நூலாசிரியர்.
ஆழமாக நிலைபெற்றிருந்த அமைப்பு மொழியியலை வலுவிழக்கச் செய்த ஆக்கமுறை மாற்றிலக்கணக் கோட்பாடு 1967ஆம் ஆண்டு கல்விசார் அங்கீகாரம் பெற்றதாக அறிய முடிகிறது. அமைப்பு மொழியியலின் போதாமையை விளக்குவதற்கு சோம்ஸ்கியக் கோட்பாட்டாளர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அதற்கான எதிர்வினைகள் என மொழியியல் ஆய்வுக் குழுவினர்களிடையே பத்தாண்டுகள் நீடித்த கருத்து மோதல்கள், கோட்பாட்டு விமர்சனங்கள் ‘சோம்ஸ்கியப் புரட்சி’ என்ற தலைப்பில் விரிவாக எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. இந்த இயலை அமைப்பு மொழியியல், சோம்ஸ்கிய மொழியியல் என்பதற்கான வேறுபாடுகளை அறியும் ஒப்பீட்டுப் பகுதியாகக் கருதலாம்.
தொடர்ச்சியாக, மொழியியலில் இந்தப் புரட்சியை சோம்ஸ்கி நிகழ்த்துவதற்கான கருத்தியல் பின்புலமும் அவர்தன் கோட்பாட்டிற்கான அடிப்படைகளை உருவாக்குவதற்கு உதவிய கருத்தியல் மூலங்களும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. மொழியியல் புலத்தின் அடிப்படைகளை, சோம்ஸ்கியக் கோட்பாட்டின் தொடக்கங்களை முழுமையாகப் படிப்பவர்களுக்குள் கடத்திவிடுவதன் பொருட்டு எழுதப்பெற்ற மேற்கூறிய இயல்களை அடுத்து சோம்ஸ்கிய மொழியியல் விளக்கப்படுகிறது. ஆக்கமுறை மாற்றிலக்கணத்தின் அடிப்படையிலிருந்து தொடங்கி, அதன் ஒவ்வொரு பரிமாணமும் விவரிக்கப்படுகின்றது. கோட்பாட்டினை விரிவாக விளக்கிவிட்ட பின்னர் சமூக, அரசியல் போராளி என்ற இன்னோர் அடையாளத்தை அறிவதற்கான பகுதி வருகிறது. நிறைவுப் பகுதியாக வரும் இதில் சமூக, அரசியல் தளத்தில் சோம்ஸ்கியின் முன்னெடுப்புகள் முன்வைக்கப்பட்டு அவரின் பன்முக ஆளுமை பேசப்பட்டுள்ளது.
ஆக்கமுறை மாற்றிலக்கணம் மொழியியலில் செல்வாக்குப் பெற்ற காலத்தில் மிகுதியான மாணவர்கள் அமெரிக்க மொழியியல் கழகத்தில் தம்மை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டார்கள். 1950ஆம் ஆண்டு 829 உறுப்பினர்கள், 1960இல் 1768, 1970இல் 4383 எனக் கழக உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. இவ்வளர்ச்சியைச் சோம்ஸ்கியப் புரட்சியின் விளைவாக நூலாசிரியர் சுட்டுகிறார். ஏராளமான சான்றுகள் மூலம் கோட்பாட்டுப் பகுதிகள் விளக்கப்பட்டுள்ளன. நூல் முழுமையும் 171 சான்றுகள் இடம்பெற்றுள்ளன. அடிக்குறிப்புகள், கூடுதல் தெளிவிற்காக இயல் இறுதியில் அளிக்கப்பட்டுள்ள நூல் பட்டியல், நயமான மொழிநடை, செறிவான கலைச்சொல்லாக்கம் என நூல் கூர்மையாக்கப்பட்டுள்ளது.
தனது முனைவர்பட்ட ஆய்வுக் காலமான 1966ஆம் ஆண்டிலிருந்து சோம்ஸ்கியிடம் கொண்டிருந்த பயிற்சியைச் செரித்து, நிதானித்து நிரல்படத் தமிழ்ச் சூழலுக்குத் தந்திருக்கிறார் சு. இராசாராம். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம், மைசூர் இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்திலும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் ஆசிரியப் பணி, இங்கிலாந்திலுள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டேவிட் வில்கின்ஸிடம் பயனாக்க மொழியியலில் பயிற்சி எனத் தாம் பெற்ற அனுபவங்களைக் கொண்டு நூலைத் தகுதிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் சு. இராசாராம். கல்வியியல், கணினி அறிவியல், உளவியல், புலன் உணர்வியல் எனப் பல துறைகளில் தாக்கம் பெற்ற மொழியியலைத் தமிழ் ஆய்வுச் சூழலில் இந்த நூல் மூலம் பேசுபொருளாக்கி யிருக்கிறார். சோம்ஸ்கி பற்றிய அரிய பதிவாகும் இந்நூல்.
மாசாசூசெட்ஸ் நிறுவனத்தில் மொழியியல் பேராசிரியராக இருந்த நோம் சோம்ஸ்கியிடம் பயிற்சிபெற்ற பேராசிரியர் கி. அரங்கன் அவர்களை நோம் சோம்ஸ்கியையும் ஆக்கமுறை மாற்றிலக்கணத்தையும் தமிழ்ச் சூழலில் தொடங்கி வைத்தவராகக் குறிப்பிடலாம். அவர் முன்நகர்த்தியதை இன்னும் ஓர் அடி முன்னே நகர்த்தித் தான்சார்ந்த ஆய்வுச் சூழலுக்கு மிகப்பெரிய பங்களிப்பை இந்நூல் மூலம் வழங்கியிருக்கிறார் சு. இராசாராம்.
‘குவாண்டம் இயற்பியல், மரபணுவியல், மொழியியல், அறிவுத்தேற்றவியல் ஆகிய நான்கும் இருபதாம் நூற்றாண்டில் உலகில் ஏற்பட்ட புரட்சிகளாகப் பார்க்கப்படுகின்றன. இவற்றில் மொழியியல், அறிவுத்தேற்றவியல் இரண்டும் இந்தியாவைத் தொடாமலேயே சென்று விட்டன’ என்கிறார் ஷிவ் விஸ்வநாதன். அப்படியான தொய்வில் உள்ள துறையாகக் கருதப்பெறுகிற மொழியியல் துறைக்கு மலர்ச்சியைத் தரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது இந்நூல்.
அரசின் தவறான கொள்கை முடிவுகளை எதிர்த்து, கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால் அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்ஸனின் Most Wanted பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார் நோம் சோம்ஸ்கி. அதேவேளையில் கல்வி, சமூகச் சூழல்களுக்கும் இவர் மிகவும் தேவைப்பட்டவராகத் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறார். இந்நூலும் தமிழ்ச் சூழலுக்கு அப்படித்தான், ‘Most Wanted.’
மின்னஞ்சல்: tamil.jnu@gmail.com