மிஸ் ஜெபீன்
நாவல் பகுதி
மிஸ் ஜெபீன்
பெருமகிழ்வின் பேரவை
அருந்ததி ராய்
தமிழில்: ஜி. குப்புசாமி
அவர்கள் வீட்டு மாடியின் பால்கனியில் மிஸ் ஜெபீனும் அவளுடைய அம்மாவும் பத்திரமாக உட்கார்ந்துகொண்டு கீழே சவ ஊர்வலம் வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தத் தெருவிலிருந்த பழங்கால வீடுகளின் மரத்தாலான பால்கனிகளில் பெண்களும் குழந்தைகளும் சவத்தின்மீது தூவுவதற்காகப் பூக்களோடு நெருக்கியடித்து நின்றிருந்ததைப் போலவே மிஸ் ஜெபீனும் ஆரிஃபாவும் ஒரு கிண்ணம் நிறைய ரோஜாப் பூக்களோடு உஸ்மான் அப்துல்லா அவர்கள் வீட்டைக் கடக்கும்போது தூவுவதற்காகக் காத்திருந்தனர். மிஸ் ஜெபீன் குளிருக்காக இரண்டு ஸ்வெட்டர்களும் கம்பளிக் கையுறைகளுமாக ஒரு குட்டிப் பொட்டலம்போல இருந்தாள். தலையில் சின்னதாகக் கம்பளியால் நெய்த வெள்ளை ஹிஜாப்பும் அணிந்திருந்தாள். அந்தக் குறுகலான தெருவில் ஆயிரக்கணக்கானோர் ‘ஆஸாதி! ஆஸாதி!’ எனக் கோஷமிட்டபடிச் செல்ல, மிஸ் ஜெபீனும் அவளுடைய அம்மாவும் கூடவே கோஷமெழுப்பினர். குறும்புக்காரியான மிஸ் ஜெபீன் ஆஸாதி என்பதற்கு பதிலாகச் சிலமுறை மாதாஜி என்று கோஷமிட்டாள். ஆஸாதி கோஷமெழுப்பும் போதெல்லாம் ஒரே மாதிரியாக ஒலிப்பதென்பதால் விளையாட்டாக அவள் மாதாஜி என்றும் சேர்த்துக் கத்துவது வழக்கம். அப்போதெல்லாம் அவளுடைய அம்மா அவளுக்கு முத்தம் தருவாள். இப்போதும் குனிந்து முத்தமிட்டாள்.
அந்த ஊர்வலம் ஆரிஃபாவும் மிஸ் ஜெபீனும் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட நூறு அடி தூரத்திலிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையின் 26வது அணிப்பிரிவின் முகாமைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. தகரத்தாலும் மரப்பலகைகளாலும் அமைக்கப் பட்டிருந்த அந்தச் சாவடியின் இரும்பு வலையிட்ட சன்னலிலிருந்து இயந்திரத் துப்பாக்கிகளின் குழல்கள் வெளியே துருத்திக்கொண்டிருந்தன. அந்த முகாமைச் சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, சுருள்முள் வேலியமைக்கப்பட்டிருந்தது. அந்த முள்வேலிச் சுருள்களில் கூடுதலாக ராணுவத்துக்கு வழங்கப்படும் ஓல்டு மாங்க், ட்ரிபிள் எக்ஸ் ரம்களின் காலி பாட்டில்களும் ஜோடிஜோடியாக மாட்டப் பட்டு, அவை காற்றில் மணியோசைபோல ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. பழங்கால முறையென்றாலும் உபயோககரமான எச்சரிக்கை மணி அமைப்பு. முள்வேலியை யாராவது அசைக்க முற்பட்டால் பாட்டில்களின் சத்தம் எச்சரித்துவிடும். தேசப்பாதுகாப்பில் மது பாட்டில்கள். இந்த ஏற்பாட்டில் கூடுதல் அனுகூலமாக ஆசாரமான முஸ்லிம்களை வெறுப்பேற்றுகிற உத்தியும் சேர்ந்திருந்தது. அதைப் போலவே (ஆசார முஸ்லிம்கள் வெறுத்தொதுக்கும்) தெரு நாய்களுக்குத் தவறாமல் உணவிட்டு அவற்றையும் கூடுதல் பாதுகாப்பு வளையமாக அந்த முகாமில் வைத்திருந்தனர். அப்போது வீரர்கள் சவ ஊர்வலத்தை அமைதியாக, எச்சரிக்கையோடு கவனித்துக்கொண்டிருந்தனர். பதற்றப்படவில்லை. ஊர்வலம் முகாமை நெருங்க, உள்ளே அமர்ந்திருக்கும் வீரர்கள் நிழலில் மறைந்துகொள்ள, அவர்களின் குளிர்காலச் சீருடைகளுக்கும் குண்டு துளைக்காத கவச ஆடைக்கும் அடியில் சில்லென்று வியர்த்துக்கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு வெடிச்சத்தம் கேட்டது. பலமான சத்தம் அல்ல, ஆனால் திடுக்கிடவைக்குமளவுக்குச் சத்தமாக ஒலித்தது. ராணுவ வீரர்கள் பாதுகாப்பிடத்திலிருந்து வெளியே பாய்ந்துவந்தனர். அந்த நிராயுதபாணியான கூட்டத்தை நோக்கி அவர்களின் இயந்திரத் துப்பாக்கிகளைக் குறிபார்த்துச் சுட்டனர். அது மிகக் குறுகலான தெரு. அவர்கள் தற்காப்புக்காக அல்ல, கொல்வதற்காகச் சுட்டனர். மக்கள் அலறிக்கொண்டு திரும்பி ஓடியபோதும் துப்பாக்கிக் குண்டுகள் பின்தொடர்ந்து வந்து முதுகுகளிலும் தலைகளிலும் கால்களிலும் தாக்கின. கலவரமடைந்திருந்த ராணுவ வீரர்களில் சிலர் சன்னல்களிலிருந்தும் பால்கனிகளிலிருந்தும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை நோக்கித் துப்பாக்கிகளைத் திருப்பிச் சுட்டனர். துப்பாக்கிகளில் மிச்சமிருந்த குண்டுகள் தீரும்வரை சுட்டனர். மனிதர்களின்மீது, இரும்புக்கிராதிகளின் மீது, சுவர்களின்மீது, சன்னல் கண்ணாடிகளின்மீது குண்டுகள் பாய்ந்தன. மிஸ் ஜெபீன் மீதும் அவளுடைய அம்மா ஆரீஃபாவின் மீதும்.
உஸ்மான் அப்துல்லாவின் சவப்பெட்டியின் மீதும் அதைச் சுமந்து வந்தவர்கள் மீதும் குண்டுகள் பாய்ந்தன. அவரது சவப்பெட்டி உடைந்து, சடலம் மீண்டும் கொல்லப்பட்டு, சுற்றப்பட்டிருந்த வெள்ளைவெளேரென்ற சவத்துணி சகிதம் கோணல்மாணலாக மடங்கித் தெருவில் விழுந்தது. இறந்தவர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் நடுவில் இரண்டுமுறை கொல்லப்பட்டு விழுந்தது.
சில கஷ்மீரிகள் இரண்டுமுறை இறந்துபோகிறார்கள்.
அந்தத் தெரு காலியான பிறகுதான் துப்பாக்கிச் சூடு நின்றது. அங்கே மிச்சமிருந்தவையெல்லாம் இறந்தவர்களின் படுகாயமுற்றவர்களின் உடல்கள், காலணிகள். ஆயிரக்கணக்கான காலணிகள்.
இன்னும் அங்கே இருந்தது குரலெழுப்ப யாருமில்லாத, செவியடைக்கும் கோஷம்:
ஜிஸ் கஷ்மீர் கோ கூன் ஸே சீஞ்ச்சா!
ஓ கஷ்மீர் ஹமாரா ஹை!
எங்கள் ரத்தத்தால் பாசனம் செய்த கஷ்மீர்!
அந்தக் கஷ்மீர் எங்களுக்கே சொந்தம்!
அந்தப் படுகொலைக்குப் பிறகான நடவடிக்கைகள் துரிதமாக நிறைவேறின - பலமுறை பழக்கப்பட்டிருந்த துல்லியத்தோடு. ஒருமணிநேரத்துக்குள் உடல்கள் காவல்நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு அப்புறப்படுத்தப்பட்டன. காயமுற்றவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தெரு சுத்தமாகத் தண்ணீர் பீய்ச்சியடித்துக் கழுவப்பட்டது. தேங்கியிருந்த ரத்தக் குட்டைகள் சாக்கடையில் கலந்தன. கடைகள் திறக்கப்பட்டன. அமைதி திரும்பியதாக அறிவிக்கப்பட்டது. (அமைதி எப்போதுமே அறிவிக்கப்படுவதுதான் வழக்கம்.)
அந்த வெடிச்சத்தத்துக்குக் காரணம் அடுத்த தெருவில் கிடந்த ஒரு காலி ‘மேங்கோ ஃப்ரூட்டி’ பெட்டியின் மீது ஒரு கார் ஏறியதால் உடைந்த சத்தம் என்று பிற்பாடு தெரியவந்தது. யாரைக் குற்றம் சொல்வது? அந்த ‘மேங்கோ ஃப்ரூட்டி’ (ஃபிரெஷ் அண்டு ஜுஸி)யைத் தெருவில் போட்டது யார்? இந்தியாவா கஷ்மீரா அல்லது பாகிஸ்தானா? அதன்மீது காரை ஓட்டியது யார்? படுகொலையின் காரணத்தை விசாரிக்கத் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டது. உண்மைகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. யார் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. இதுதான் கஷ்மீர். இது கஷ்மீரின் குற்றம்.
வாழ்க்கை தொடர்ந்தது. மரணமும் தொடர்ந்தது. யுத்தமும் தொடர்ந்தது.
மூஸா யெஸ்வியை அவனுடைய மனைவியும் மகளும் நல்லடக்கம் செய்த போது பார்த்தவர்கள் எல்லாரும் அவன் எவ்வளவு அமைதியாகக் காணப்பட்டான் என்பதை விசேஷமாகக் கவனித்திருந்தார்கள். அவனிடம் சோகம் தென்படவில்லை. தனக்குள் ஒடுங்கியிருந்தவனாக, அவன் அந்த இடத்திலேயே இல்லாதவன்போல, சுற்றி நடப்பவற்றில் கவனமில்லாதவனாக இருந்தான். அவன் கைது செய்யப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்; அல்லது அவனுடைய இதயத்துடிப்பு. ஒருவேளை அது ஒரு சாதாரண அப்பாவி மனிதனுக்கு இருப்பதைவிடப் படுவேகமாக அல்லது மிக மெதுவாக இருந்திருக்கலாம். சில பயங்கரமான சோதனைச் சாவடிகளில், ராணுவ வீரர்கள் இளைஞர்களைச் சோதனை செய்யும்போது சில நேரங்களில் அவர்களுடைய நெஞ்சில் காதை வைத்துக் கேட்பார்கள். சில ராணுவ வீரர்கள் ஸ்டெதஸ்கோப்புகள்கூட வைத்திருப்பதாக வதந்திகள் உண்டு. யாருடைய இதயமாவது மிக மெதுவாகவோ மிக வேகமாகவோ துடித்தால் “இவனுடைய இதயம் சுதந்திரத்துக்காகத் துடிக்கிறது” என்று அவனை ‘கார்கோ’, அல்லது ‘பப்பா II’ அல்லது ‘ஷிராஸ் சினிமா’வுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். கஷ்மீர் பள்ளத்தாக்கின் மிகப் பிரபலமான, மிகக் கொடூரமான விசாரணை முகாம்கள் இவை.
மூஸாவைச் சோதனைச் சாவடியில் வைத்துக் கைதுசெய்யவில்லை. நல்லடக்கத்தை முடித்துவிட்டுத் திரும்பியதும் அவனை வீட்டிலிருந்து கைதுசெய்து அழைத்துச்சென்றார்கள். உங்கள் மனைவி, மகளின் நல்லடக்கத்தின்போது அந்தளவுக்கு மவுனமாக இருந்தால் அது கவனிக்கப்படாமல் போகாது, அதுவும் இந்த நாட்களில். முதலில் எல்லாருமே மவுனமாகத்தான் இருந்தார்கள். பயத்துடன். பனிச்சேறு மண்டியிருந்த, அந்த மந்தமான சிறுநகரத்தின் ஊடே அந்தச் சவஊர்வலம் மரண அமைதியோடு ஊர்ந்துசென்றது. எழுந்த ஒரே சத்தம், ஆயிரக்கணக்கான செருப்புகள் மஸார்-இ-ஷொஹாடாவை நோக்கிச் செல்லும் ஈரச்சாலையில் எழுப்பிய ஸ்லாப்-ஸ்லாப்-ஸ்லாப். பதினேழு சவப்பெட்டிகளை இளைஞர்கள் தோளில் சுமந்து சென்றார்கள். பதினேழு + ஒன்று. அதாவது மீண்டும் ஒருமுறை கொல்லப்பட்ட உஸ்மான் அப்துல்லாவையும் சேர்த்து. ஏற்கெனவே ஒருமுறை இறந்துவிட்டதால் அவரை இரண்டுமுறை கணக்கில் சேர்க்க முடியாது. எனவே தகர சவப்பெட்டிகள் பதினேழு + ஒன்று பனிக்காலச் சூரியனில் கண்சிமிட்டியபடித் தெருக்களில் நகர்ந்துசென்றன. நகரைச் சூழ்ந்திருந்த மலைத்தொடரின் உச்சியிலிருந்து அந்த ஊர்வலத்தைப் பார்ப்பவர்களுக்கு எறும்பு வரிசை ஒன்று பதினேழு + ஒன்று சர்க்கரைத்துகள்களைச் சுமந்துகொண்டு, எறும்புப் புற்றிலிருக்கும் ராணியிடம் ஒப்படைப்பதற்காகச் சென்றுகொண்டிருப்பதைப்போலத் தெரிந்திருக்கும். வரலாற்றையும் மானிட மோதல்களையும் படிக்கின்ற ஒரு மாணவனுக்கு இந்த ஊர்வலம் சற்று மாறுபட்டு, ஆனால் இதேபோன்றுதான் தோன்றியிருக்கும்! உயர்பீடத்திலிருந்து சிந்திய உணவுப் பருக்கைகளைச் சுமந்துசெல்லும் எறும்பு வரிசை. போர்கள் நிகழும்போது இதெல்லாம் அற்பமான விஷயம். யாரும் கவனம் செலுத்தவில்லை. எனவே இது தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. பல தசாப்தங்களாக இது விரிந்து, மடங்கி, மேலும் மனிதர்களைப் பிணைப்பற்ற கூட்டில் சேர்த்துக்கொண்டு நிகழ்ந்தபடியே இருக்கிறது. மாறிவரும் பருவகாலங்களைப் போல இதன் கொடூரங்களும் மாறிக்கொண்டே வருகின்றன. ஒவ்வொரு முறையும் புதிய வாசத்தோடு இது மலர்ந்துகொண்டிருக்கிறது. இழப்பும் அதன் பிறகான புதுப்பித்தலும் கலவரமும் அதற்கடுத்த அமைதியும் எழுச்சியும் அதைத் தொடர்ந்து தேர்தல்களும் என இதற்கென ஒரு பிரத்தியேகச் சுழற்சி இயங்கிக்கொண்டிருக்கிறது.
அந்தக் குளிர்காலக் காலைநேரத்தில் எறும்புகள் சுமந்துசென்ற சர்க்கரைத் துணுக்குகளில் மிகச்சிறியதாக இருந்ததற்குப் பெயர் மிஸ் ஜெபீன் என்றிருந்தது.
பயத்தில் ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமலிருந்த எறும்புகள் அழுக்குப் பழுப்பில் உறைந்திருந்த பனிச்சாலைகளின் ஓரங்களில், தத்தமது ஃபெரான் அங்கிகளுக்கடியில் கதகதப்பாகக் கைகளை மார்போடு கட்டிக்கொண்டு வரிசையாக நின்றிருக்க, அங்கிகளின் கைகளற்ற கைப்பகுதிகள் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தன. ஆயுதப்போராட்டத்தின் மத்தியில் கைகளற்ற மாந்தர்கள். வெளியே வந்துநிற்பதற்கும் பயந்திருந்தவர்கள் தமது வீட்டுச் சன்னல்களிலிருந்தும் பால்கனிகளிலிருந்தும் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் (இப்படி நின்று பார்ப்பதிலும் இருக்கின்ற அபாயங்களை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றாலும்.) அவர்கள் அனைவருக்கும் ராணுவத்தினரின் துப்பாக்கிக்கண்கள் தம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன என்பது தெரிந்தேயிருந்தது. ராணுவத்தினர் நகரில் எல்லா இடங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தனர். கூரைகளின் மேல், பாலங்களில், படகுகளில், மசூதிகளில், தண்ணீர்த் தொட்டிகளில். அவர்கள் உணவகங்களிலும் பள்ளிகளிலும் கடைகளிலும் ஏன், சில வீடுகளிலும்கூட நிறுத்தப்பட்டிருந்தனர்.
அன்றைய தினம் காலை மிகவும் குளிராக இருந்தது. பல வருடங்கள் கழித்து ஏரி உறைந்திருந்தது. பனிப்பொழிவு இருக்குமென்று வானிலை அறிக்கை சொன்னது. சோகத்தில் ஸ்தம்பித்திருந்தவர்களைப்போல மரங்கள் இலைகளற்ற, பட்டை உரிந்த நிர்வாணக்கிளைகளை வானோக்கி உயர்த்தியிருந்தன.
மயானத்தில் 17 + 1 சவக்குழிகள் தயாராக இருந்தன. சுத்தமாக, புதிதாக, ஆழமாக. ஒவ்வொரு குழியிலிருந்தும் வெட்டப்பட்ட மண் அதற்குப் பக்கத்திலேயே கருப்பு சாக்லெட் பிரமிடுகளாகக் குவிக்கப்பட்டிருந்தன. ஒரு முன்யோசனைக் குழு ரத்தக்கறை படிந்திருந்த ஸ்ட்ரெட்சர்களையும் எடுத்து வந்திருந்தது. பிணக்கூராய்வு முடிந்ததும் உடல்களைக் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தபோது பயன்படுத்திய ஸ்ட்ரெட்சர்கள். அவற்றை மரங்களுக்கடியில் வரிசையாகக் கடைபரப்பி வைத்தனர். உடல்களைப் புசிக்கும் ராட்சத மலைப் பூ ஒன்றின் ரத்தக்கறை படிந்த இதழ்களைப்போல.
அந்த ஊர்வலம் மயானத்தின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், ஓட்டப்பந்தய வீரர்கள் தொடக்கப்புள்ளி தலைக்காலில் நடுங்கியபடி இருப்பதைப்போலக் காத்திருந்த செய்தியாளர்களின் படை சீனியர், ஜுனியர் தர வேறுபாடுகளை மறந்து பாய்ந்துவந்தது. சவப்பெட்டிகள் கீழிறக்கப்பட்டு, திறக்கப்பட்டு, சில்லிட்டிருந்த தரையில் வரிசையாக வைக்கப்பட்டன. கூட்டம் செய்தியாளர்களுக்கு மரியாதையுடன் வழிவிட்டு விலகிநின்றது. செய்தியாளர்களும் புகைப்படக்காரர்களும் இந்தப் படுகொலைகளைப் பதிவு செய்யாமற்போனால் இவையெல்லாமே அழிக்கப்பட்டு, இறந்துபோனவர்கள் உண்மையாகவே மறைந்துபோவார்கள் என்பது அந்த மக்களுக்குத் தெரியும். அதனால்தான் அந்த உடல்கள் நம்பிக்கையோடும் அடங்காத சினத்தோடும் பத்திரிகையாளர்கள் முன்பு படைக்கப்பட்டன. மரணப் பெருவிருந்து. ஒதுங்கிநின்று அழுதுகொண்டிருந்த உறவினர்கள் அருகில் வந்து புகைப்படச் சட்டகத்துக்குள் நிற்கும்படி அழைக்கப்பட்டார்கள். அவர்கள் துயரமும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். வரப்போகும் வருடங்களில், யுத்தம் என்பது ஒரு வாழ்க்கை நடைமுறையாக ஆகியிருக்கும்போது, கஷ்மீரின் துயரங்களைப் பற்றியும் இழப்புகளைப் பற்றியும் புத்தகங்களும் காட்சிப் படங்களும் இருக்கும்.
அந்தப் படங்கள் எதிலும் மூஸா இருக்கமாட்டான்.
இந்த சந்தர்ப்பத்தில் மிஸ் ஜெபீன்தான் எல்லோருடைய கவனத்தையும் ஈர்ப்பவளாக இருந்தாள். காமிராக்கள் அவளுக்கருகில் சென்று, கவலையுற்ற கரடியின் உறுமல்போல ஒலியெழுப்பியபடிப் படங்களாக எடுத்துத் தள்ளின. எடுத்த அத்தனைப் படங்களில் ஒன்று மட்டும் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டு ‘கிளாஸிக்’ அந்தஸ்தைப் பெற்றது. அடுத்த பல வருடங்களுக்கு அந்தப் படம் செய்தித்தாள்களிலும் பத்திரிகைகளிலும் யாரும் படிக்காத மனித உரிமை அறிக்கைகளின் அட்டைகளிலும் இடம் பெற்று வந்தது உருக்கமான தலைப்புகளோடு. பனியில் பரவும் ரத்தம், கண்ணீர்க் கணவாய், இத்துயரங்கள் தீராதோ?
ஆனால் நாட்டின் மற்றப் பகுதிகளில் மிஸ் ஜெபீனின் இந்தப் புகைப்படம் அந்தளவுக்குப் பிரபலமடையாமற் போனதற்குக் காரணங்கள் வெளிப்படையானவை. சோகத்தைக் கடைவிரிக்கும் சூப்பர் மார்க்கெட்டில் யூனியன் கார்பைட் விஷவாயுக் கசிவில் இறந்துபோன அந்த போபால் சிறுவன்தான் பெரும் கிராக்கியில் இருந்தான். இடிபாடுகளுக்கு நடுவில் கழுத்தளவு புதைந்திருக்கும் அச்சிறுவனின் கண்கள் விஷவாயுவால் குருடாக்கப்பட்டு, விரியத் திறந்து ஒளியற்றதாக உறைந்திருக்கும் அப்புகைப்படத்துக்குப் பல முன்னணிப் புகைப்படக்காரர்கள் காப்புரிமை கோரிவந்தனர். அந்தப் பயங்கர இரவில் நடந்த கொடூரக்கதையை அந்தக் கண்களைப் போல வேறெதுவும் விளக்குவதாக இல்லை. உலகெங்கும் அந்தக் கண்கள் பத்திரிகைகளின் வழவழப்பான அட்டைகளிலிருந்து வெறித்துப் பார்த்தன. கடைசியில் அதுவும் எந்தப் பலனையும் ஏற்படுத்தவில்லை. மிக சுவாரஸ்யமான கதையாக அது கொழுந்துவிட்டெரிந்து பின் அடங்கிப்போனது. விஷவாயுக் கசிவில் இறந்துபோன, பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு இழப்பீடு கோரித் தொடரப்பட்ட போராட்டம் எவ்வளவு உக்கிரமாக நடைபெற்றதோ, அதேயளவு தீவிரத்துடன் அந்தப் புகைப்படத்தின் காப்புரிமைக்கான சட்டப் போராட்டமும் நடந்தது.
[காலச்சுவடு பதிப்பகம் வெளியிடவுள்ள நாவலிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதி]