செப்டம்பர் 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • அஞ்சலி: நாராயண் (1940-2022)
      கோத்திரங்களின் கதைசொல்லி…
    • கட்டுரை
      கள்ளக்குறிச்சி: கல்விச் சந்தையில் குழந்தைகளின் அபயக் குரல்
      தமிழின் செறிவுகளோடு ஒரு யாத்திரைஉறவின் கிள்ளிவிட முடியாத முளை
      சல்மான் ருஷ்டி நூறாண்டு வாழ்க!
      சாத்தானின் வேலை இன்னும் ஓயவில்லை
      தனித்து நிற்கும் திரைக் கலைஞர்
      இவ்வுலகும் அவ்வுலகும் (தமிழ்ச் சமூக வரலாற்றில் சாதிக் கண்டனம்)
      பெண்களின் உரிமைகளும் இந்து தேசியவாத அரசியலும்
      தொன்மங்களை நவீனப்படுத்திய கவிஞர்
    • கண்ணோட்டம்
      கோவையில் ஒரு புத்தக எழுச்சி
    • கதை
      நல்ல துப்பாக்கி
    • பாரதியியல்
      பாரதியின் “லோக குரு - 4” கண்டறியப்பட்ட மூலமும் காலமும்
    • தொடர்
      தமிழ் சினிமாவின் முதன்மையான வரலாற்றாசிரியர்
    • அஞ்சலி: வெங்கடேஷ் சக்ரவர்த்தி (1952-2022)
      கருத்தாக்க அடர்வனத்தில் ஒரு பயணம்
    • 2022 செவாலியே விருதுகளுக்கு வாழ்த்துகள்
      செவாலியே கண்ணன்
    • மதுரை புத்தகக் காட்சி- 2022 புத்தகப் பகுதி
      நிகழாத குற்றம்
      வழிகாட்டும் விளக்குகள்
      ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்…
      ‘இசைக்கு மிஞ்சின இன்பம்’
      வென்றிலது என்ற போதும்…
      பாக்கெட் கடிகாரம்
      செய்யாமல் செய்த உதவிக்கு…
      நான்காவது ஆணி
    • சுரா கடிதங்கள்
      சுரா கடிதங்கள்
    • திரை
      திரைக்கு உரமூட்டும் கதை
    • கவிதைகள்
      தங்க ரீகல் -1
      கைக் கூட்டம்
      பெருவெடிப்பில் தோன்றும் சிறுதுளிர்கள்
    • தலையங்கம்
      அம்பலத்திற்கு வரும் அராஜகங்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2022 தலையங்கம் அம்பலத்திற்கு வரும் அராஜகங்கள்

அம்பலத்திற்கு வரும் அராஜகங்கள்

தலையங்கம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் 100ஆவது நாளன்று நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை ஆணையம் கண்டறிந்திருக்கும் தகவல்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் தன்னுடைய 3000 பக்க அறிக்கையைக் கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. மூன்று மாதங்கள் ஆகியும் அரசு அதை அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில் அதிலுள்ள சில விவரங்கள் ஆங்கில மாதமிருமுறை இதழான ஃப்ரன்ட்லைனில் வெளியாகின. அதிர்வலைகளை எழுப்பும் அந்த விவரங்கள் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்துப் பல உண்மைகளை அம்பலப்படுத்துகின்றன.

போராட்டத்தின் 100ஆவது நாளன்று (2018, மே 22) நிகழ்ந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பதின்மூன்று பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு இச்சம்பவம் பெரும் நெருக்கடியை உண்டாக்கியது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அதிமுக அரசு அமைத்தது. நான்கு ஆண்டுகள் கழித்து நிறைவுற்ற ஆணைய விசாரணை அறிக்கையின் முக்கியமான சில பகுதிகளைக் கொண்ட கட்டுரையொன்றை ஃப்ரன்ட்லைன் இதழில் இளங்கோவன் ராஜசேகரன் எழுதியிருக்கிறார். அந்தத் தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இந்த அறிக்கையை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லலாம். ஏனெனில் காவல்துறையின் அத்துமீறல்கள் யாருக்கும் வியப்போ அதிர்ச்சியோ தர வாய்ப்பில்லை. அத்துமீறல்கள் குறித்த விசாரணைக் குழு அறிக்கைகள் காவல் துறையைக் குற்றம்சாட்டாமல் பூசிமெழுகுவதும் வழக்கம்தான். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய முதல்வர்கள் காலத்திலும் காவல்துறையின் மனித உரிமை மீறல்களும் அத்துமீறல்களும் அதிகாரப்பூர்வமாகப் பதிவானதில்லை. விசாரணை ஆணையங்கள் மயிலிறகால் அறிக்கையை எழுத, ஆட்சியாளர்கள் பஞ்சினால் உறையிடப்பட்ட பிரம்பைக் காட்டிக் காவல்துறையைக் கண்டிப்பதாகப் பாவனை செய்துவந்தனர். தவறு இழைத்தவர்கள் உரிய கண்டிப்போ தண்டனையோ பெற்றதில்லை. இந்தப் பின்னணியில்தான் அருணா ஜகதீசனின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

மேற்படி கட்டுரையின்படி அருணா ஜெகதீசன் அறிக்கை போலீசார் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதையும் பூங்காவில் ஒளிந்துகொண்டு சுட்டதையும் பதிவுசெய்திருக்கிறது. கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் தொலைவிலிருந்து சுடக்கூடிய துப்பாக்கிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கூட்டத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களால் எந்தப் போலீசாருக்கும் படுகாயம் இல்லை என்றும் அறிக்கை கூறுவதாக தெரியவருகிறது.

இந்தச் சம்பவத்தைக்  காவல்துறைத் தலைமையின் அப்பட்டமான தோல்வி என வர்ணிக்கும் அறிக்கை, போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் மிக அலட்சியமாக அணுகியுள்ளார் என்றும் கூறுகிறது. பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிட்டுக் கோவில்பட்டியில் தங்கியிருந்த ஆட்சியர் எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளதையும் வீட்டில் இருந்துகொண்டே சமாதானக் கூட்டத்திற்குத் தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளதையும் அறிக்கை பதிவுசெய்கிறது.

அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைத்துள்ளதாக கட்டுரை கூறுகிறது.

இந்தச் சம்பவத்தில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சத்திலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாகவும் இழப்பீட்டை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மனித உரிமை மீறல்கள், அத்துமீறல்கள் தொடர்பான எண்ணற்ற குற்றச்சாட்டுக்களை அன்றாடம் எதிர்கொள்ளும் துறை காவல்துறை. குற்றம் நிகழாமல் தடுத்தல், குற்றவாளிகளைக் கண்டுபிடித்தல், சட்டம் ஒழுங்கைக் காத்தல் ஆகிய தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகச் சட்டத்திற்குப் புறம்பான வழிகளைப் பல சமயங்களில் கைக்கொள்ளும் இந்தத் துறை அதிகாரப் பீடங்களுடனான நெருக்கம் காரணமாகவும் அதிகார அமைப்பின் மிக முக்கியமான தூணாக இருப்பதன் காரணமாகவும் இதுபோன்ற மீறல்களுக்கான நடவடிக்கைகளிலிருந்தும் பெரும்பாலும் தப்பிவிடுகிறது. காவல்நிலைய மரணங்கள் தொடங்கிக் கலவரங்களின்போது நடக்கும் கொலைகள்வரை எந்தக் குற்றத்திற்கும் எந்தக் குற்றச்சாட்டிற்கும் காவலர்கள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவது மிக அரிதாகவே நிகழ்கிறது. அரிதினும் அரிதாக இந்த அறிக்கை காவல்துறையின் வன்முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வெளியான பிறகு இந்த அறிக்கையை முறையாகப் பொது வெளியில் வெளியிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் கோரிக்கை வலுப்பெற்றுவருகிறது. காவல்துறையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக்கூடிய இந்த அறிக்கையைத் தாமதமின்றி வெளியிட்டு உரிய நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு இருக்கிறது.

“அறிக்கை நான்கு தொகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளதால் அதைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளச் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு அவை சட்ட ஆலோசகர்களின் பரிசீலனையில் உள்ளன. சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்த பின், நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்படும்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.

அறிக்கையைப் பொதுவெளியில் வைத்து நடவடிக்கை எடுக்குமாறு எழும் கோரிக்கைகளுக்கு மத்தியில் அறிக்கை விவரங்களை இப்படி அம்பலப்படுத்துவது முறையா என்னும் விவாதங்கள் ஊடகங்களில் நடைபெற்றுவருகின்றன. அறிக்கையின் தகவல்கள் வெளியானதை அதிமுகவினர் எதிர்ப்பது இயல்பானதே. அதே சமயம், அதிமுக அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக்கூடிய இந்த வாய்ப்பை திமுக முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் அதை ஏன் வெளியிடவில்லை என்னும் கேள்விக்கு திமுக பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அறிக்கை அம்பலமான பிறகே திமுக அமைச்சர் அதுபற்றிப் பேசுகிறார். அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கிறார். சம்பவம் நடந்தபோது அதிமுக அரசு பதவியில் இருந்தாலும் காவல்துறையைக் குற்றம்சாட்டக்கூடிய அறிக்கை எந்த அரசையும் சங்கடத்தில் ஆழ்த்தக்கூடியதுதான். அரசுக்கும் காவல்துறைக்குமான உறவு அத்தகையது.

விசாரணை ஆணையச் சட்டத்தின்படி, ஓர் ஆணையத்தின் அறிக்கையைப் பெற்றவுடன், எந்த அரசும் சட்டமன்றத்தில், அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆறு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் பெரும்பாலும் வெளியிடப்படுவது இல்லை என்பதே யதார்த்தம். அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையைப் பல ஆண்டுகளுக்கும் முன்பாகவே மத்திய அரசு திருத்தம் செய்துவிட்டது என்று ஜல்லிக்கட்டுப் போராட்டக் கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் ச. பாலமுருகன் ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வெளியிடுவது கட்டாயமில்லை என்று ஆகிவிட்டது என்கிறார். ஜல்லிக்கட்டுப் போராட்டக் கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அதற்கான குழு தாக்கல் செய்து இரு ஆண்டுகள் ஆகியும், அரசு இன்னும் அதைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவில்லை. இதேபோன்ற ஏராளமான விசாரணை ஆணைய அறிக்கைகள் வெளியிடப்படாமலேயே இருக்கின்றன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக இத்தனை விவரங்கள் அம்பலமான பிறகு அறிக்கையை மூடி மறைப்பது கிட்டத்தட்டச் சாத்தியமற்றதாகிவிடுவதோடு விபரீதமாகவும் அது அமையும். திமுக அரசு இதைப் புரிந்துகொண்டு விரைவில் அறிக்கையை வெளியிட்டு அதன்மீதான நடவடிக்கைகளை முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும்.

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்த விரிவான விவாதம் நடத்தி, அத்துறையைக் கண்காணித்து நெறிப்படுத்துவதற்கான அமைப்பை உருவாக்குவது குறித்துத் தீவிரமாக யோசிப்பதற்கான வாய்ப்பாகவும் இந்த அறிக்கை முன்வைக்கும் முடிவுகளும் பரிந்துரைகளும் அமைந்திருக்கின்றன. காவல் நிலையத்தில் விசாரணைக் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றிய ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் பாராட்டிய முதல்வர் அத்தகைய காவல்துறையைச் சீர்திருத்துவதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான அழுத்தத்தைப்  பொது அறிவுஜீவிகளும் மனித உரிமையில் நம்பிக்கை கொண்ட ஊடகங்களும் முன்னெடுக்க வேண்டும்.

ஆரவாரமில்லாத சாதனை

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 அன்று நிறைவு பெற்றன. 186 நாடுகளிலிருந்து இரண்டாயிரத்துக்கும் அதிகமான வீராங்கனைகளும் வீரர்களும் பங்கேற்றனர். இப்போட்டிகளின் ஏற்பாடும் வடிவமைப்பும் உபசரிப்பும் தங்குமிட ஏற்பாடுகளும் சர்வதேசத் தரத்தில் அமைந்திருந்தன. உலக அரங்கிலிருந்து வந்த பலரும் இந்த ஏற்பாடுகளைப் பாராட்டியிருக்கிறார்கள். தொடக்க விழாவும் நிறைவு விழாவும் நடந்த விதம் செய்ந்நேர்த்தியையும் கலையுணர்வையும் பிரதிபலித்தன. சர்வதேச அளவிலான நிகழ்ச்சி எப்படி அமைய வேண்டுமோ அதற்கேற்பத் திட்டமிடலும் செயலாக்கமும் இருந்தன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமையாளர்களை ஒருங்கிணைத்து இதைச் செய்து முடித்த தமிழக அரசும் முதல்வர் மு.க. ஸ்டாலினும் சிறப்பான பாராட்டுக்கு உரியவர்கள்.

நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதத்தைப் போலவே நிகழ்வின் இறுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையும் கவனத்துக்குரியது. பல விதங்களில் தமிழகத்தின் வழக்கமான மேடைப் பேச்சின் நிலைப்படிவங்களைத் தாண்டியதாக இவ்வுரை அமைந்திருந்தது. திராவிட பாணி மேடைப்பேச்சுகளின் மிகை அலங்காரங்களையும் சொல்லணிகளையும் பெருமளவில் தவிர்த்த இந்த உரை திராவிட இயக்கப் பேச்சுக் கலையின் சத்தான அம்சங்கள உள்ளடக்கியிருந்தது. ஸ்டாலினின் பேச்சு தனித்துவமான கவனத்துக்குள்ளானதற்குச் சில காரணங்களைப் பட்டியலிடலாம்.

கவனமாகத் தயாரிக்கப்பட்ட அந்த உரை பேசவந்த கருத்தைச் செறிவாக மையப்படுத்தியது. கச்சிதமான கால அளவுடன் தமிழிலும் சர்வதேச பங்கேற்பாளர்களுக்காக ஆங்கிலத்திலுமாக அது அமைந்திருந்தது. சர்வதேச நிகழ்வின் மேடை என்னும் ஓர்மையுடன் அவ்வுரை தயாரிக்கப்பட்டிருந்தது.

செஸ் ஒலிம்பியாட்டை வெற்றிகரமாக நடத்தியது முழுக்க முழுக்கக் கூட்டுச் செயல்பாடு என்பதை முதல்வரின் உரை தயக்கம் இன்றிப் பதிவுசெய்தது. பெருமைகளையெல்லாம் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கழுத்து தாங்காத அளவுக்குப் புகழ்மாலைகளைச் சூட்டிக்கொள்ளும் மரபிலிருந்து மாறுபட்ட போக்கு இது. நிகழ்ச்சியின் சகல தளங்களிலும் அதன் வெற்றிக்குப் பங்களித்தோரைத் தனித்தனியாகக் குறிப்பிட்டு அங்கீகரித்துப் பேசியதும் ஆரோக்கியமான அணுகுமுறை.

நிகழ்வு, அதன் ஏற்பாடுகள், ஏற்பாட்டாளர்கள், பங்கேற்பாளர்கள், விளையாட்டுத்துறை சார் அரசின் எதிர்காலக் கவனங்கள், அறிவிப்புகள் என மிகுந்த கவனத்துடன் இந்த உரை அமைந்திருந்தது. மிகப்பெரிய சர்வதேச நிகழ்வான இதை நான்கு மாதங்களில் திட்டமிட்டு நடத்திய துறைசார் அதிகாரிகள், அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டு அமைப்புகள் ஆகியவற்றுக்கான முறையான நன்றிகூரலாகவும் அவ்வுரை அமைந்திருந்தது.  

தொடக்க வரவேற்பு விளி, திராவிடப் பாணியாக இருந்தாலும் அதுவும் ஏற்பாட்டாளர்களுக்கும் பங்களிப்பாளர்களுக்கும் முறையான அங்கீகாரத்தை வழங்குவதாகப் பொருத்தம் கருதி அமைந்தமை கவனத்துக்குரியது.

முதலமைச்சரின் உடல்மொழியும் பேசிய விதமும் திராவிட மேடைப் பேச்சின் மிகையான நாடகீய அம்சங்களைத் தவிர்த்து நெகிழ்வான உடல்மொழியுடன், இயல்பான தொனியில் அமைந்திருந்தது. முதல்வர் பல பத்தாண்டுகளாக மேடையில் உரையாற்றுபவராக இருப்பினும் இந்த சர்வதேச சபையின் உரைக்காக அவர் தனிக்கவனம் எடுத்து தயார் செய்திருந்தது பாராட்டுக்குரியது. இது அப்பேச்சின் சாரத்தை இன்னும் நெருக்கமாகவும் வலுவாகவும் உணரவைத்தது.

புகழுக்கோ படிமங்களுக்கோ முக்கியத்துவம் தராமல் எது தேவையோ அதை முன்னிறுத்திச் செயல்படுவது, முறையான திட்டமிடல், ஒவ்வொரு நடவடிக்கையிலும் செய்ந்நேர்த்தியைப் பேணுதல் ஆகியவையே சர்வதேச நிகழ்ச்சியொன்றை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான பண்புகள். இந்தப் பண்புகளுடன் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிகழ்த்திய செயல்பாட்டுக்குப் பொருத்தமான முத்தாய்ப்பாக இந்த உரை அமைந்திருந்தது. இத்தகைய செயல்பாடுகள் அரசின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கக்கூடியவை என்பதில் ஐயமில்லை.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.