பாக்கெட் கடிகாரம்
இஸ்தான்புல்:நிலவறைக் கைதிகளின் நினைவுக் குறிப்புகள்
(மொழிபெயர்ப்பு நாவல்)
புர்ஹான் ஸென்மெஸ்
தமிழில்
முடன்வன் குட்டி முகம்மது அலி
பக்.240
ரூ.300
அலி அங்குமிங்கும் தொடர்ந்து நடந்தான். தான் மட்டும் அங்கிருந்து வெளியேறிச் செல்வதைக் காட்டிலும் துப்பாக்கிச் சத்தம் வரும் இடத்திற்குச் சென்று அங்கிருந்த பிற நட்புக் குழுக்களுக்கு உதவியாக இருக்க விரும்பினான். ஒவ்வொரு முறையும் சிறிய குழுக்களைத் தவிர்த்தான். அடர்ந்த மரங்களுக்கிடையே வந்து கடைசித் தோட்டாக்களைத் துப்பாக்கியினுள் வைத்தபோது முற்றிலுமாகக் களைத்துச் சோர்ந்திருந்தான். மூச்சிரைத்தது; பீதியில் உடல் வியர்க்கப் பனி படர்ந்த தரையில்கால்கள் மடங்கிக் கீழே விழுந்தான். வியர்வை நிற்கும்வரை சிறிது காத்திருக்கலாம் என நினைத்தான். எந்தப் பக்கம் செல்லலாமென யோசித்துக்கொண்டிருந்தபோது மேலே மரக் கிளைகள் எதேச்சையாக கண்ணில் பட்டன. இருள் கவியத் தொடங்கியது. அது இரவு நேரம் என்பதை அப்போது தான் உணர்ந்தான். மேகங்கள் கலைந்து வானம் தெளிவாக இருந்தது. பேனாவின் மை நீரில் பரவுவதுபோல இருள் வேகமாகப் பரவத் தொடங்கிற்று. மரங்கள் வளர்ந்துகொண்டிருப்பது போலத் தோன்றின. அது நிலா இல்லாத இரவு. யாரோ தனது பெயரைச் சொல்லி அழைக்கும் குரல் மிக அருகே கேட்க, அவன் கை தன்னிச்சையாக ஆயுதத்தைத் தேடியது.
“அலி.”
அருகேயிருந்த சிவப்பு பைன் மரத்தின் கீழ் தெரிந்த நிழலை நோக்கிச் சென்றான். அந்த நிழல் தனது குழுவிலிருந்த மைன் படி என்று தெரிந்ததும் கீழே குனிந்தான். அடிமரத்தின் தடிமனான பகுதியில் சாய்ந்தவாறு மைன் படி தரையில் அமர்ந்திருந்தாள். மிகுந்த சிரமத்துடன் மூச்சு விட்டுக்கொண்டிருந்தாள்.
“நிறைய ரத்தம் போய்விட்டது” என்றாள்.
“எங்கே சுட்டார்கள்?”
“நெஞ்சில்.”
“உன்னை இங்கிருந்து வெளியே கொண்டுசெல்கிறேன்.”
“அதற்காக முயற்சிகூடச் செய்யாதே. நான் சாகப்போகிறேன் என்பது எனக்குத் தெரியும்.”
“இல்லை. நாம் போகிறோம்.”
“மற்றவர்கள் தப்பிச் சென்றிருப்பார்கள் என்று நம்புகிறேன்.”
“துப்பாக்கிச் சத்தம் நின்றுவிட்டது.”
“அவர்கள் தப்பிச் சென்றிருக்க வேண்டும்.”
“என்னால் உன்னைத் தூக்கிக்கொண்டு போக முடியும். காட்டிற்கு வெளியே இருட்டில் போவது எளிது.”
“அலி, எதையும் நீ முழுவதுமாய் முடிக்காமல் விட மாட்டாய் என்பது தெரியும். இப்போது என்னை மறந்துவிடு. இன்று ஏற்கனவே நாம் பேசிக்கொண்டபடி போ. நமது திட்டத்தை நிறைவேற்று.”
“திடீர் தாக்குதல் பற்றியா சொல்கிறாய்?”
“ஆம் விசாரணை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த நீ போக வேண்டும். அங்கே சித்திரவதைக்கு ஆளாகும் மக்களை நீ காப்பாற்ற வேண்டும்.”
“நாம் இருவரும் சேர்ந்து செய்யலாம்.”
“வர விருப்பம்தான். என் காதலன் அங்கே இருக்கிறான். அவனைக் காப்பாற்ற, அரவணைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வேன்...” பேச்சை முடிப்பதற்கு முன் மைன் படி கண்களை மூடினாள். பீதி அடைந்த அலி அவள் முகம் மரத்துவிட்டதோ எனச் சந்தேகித்தான். தூரத்தில் கிழட்டு ஆந்தை அலறும் சத்தம் கேட்டது. மைன் படி மீண்டும் கண்ணைத் திறந்தாள். “எனக்குத் தாகமாக இருக்கிறது” என்றாள். ஒரு கை பனிக்கட்டியை அள்ளி அவளிடம் நீட்டினான் அலி.
“இதை உனது வாயில் போட்டுக் கரையும்படி செய்.”
“நான் யாரைக் காதலிக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா அலி?”
“தெரியும்.”
“அவனிடம் அதைச் சொன்னதே இல்லை. நான் பயந்தாங்கொள்ளி.”
“கவலைப்படாதே. அவனும் உன்னைக் காதலிக்கிறான்.”
“நிஜமாகவா? நீ சொல்வது சரியா?”
“உங்கள் இருவரையும் பற்றி நாங்கள் பேசிக்கொண்டோம், நீங்கள் இருவரும் காதலிப்பது எல்லோருக்கும் தெரியும். தெரியாதவர்கள் நீங்கள் இருவர் மட்டுமே.” மைன் படி ஆழமாக மூச்சை இழுத்தாள். அடி மரத்தின் தடித்த பகுதியில் ஓய்வாகத் தலைசாய்த்துக்கொண்டாள். மேலே நட்சத்திரங்களைப் பார்த்தாள். அடுத்தடுத்துத் தென்பட்ட எரிமீன்கள் அவளை மெய்சிலிர்க்கச்செய்தன. குழந்தையாக இருந்தபோதும் இந்தக் காட்சி அவளிடம் இதே உணர்வையே எழுப்பிற்று.
“எரிமீன்களை நீ பார்த்தாயா?”
“ஆம்.”
“நான் வேண்டிக்கொண்டேன்.”
“கவலைப்படாதே. இரவில் முதல் நட்சத்திரத்தை வானில் கண்டால் நீ வேண்டிக்கொள்வது நிறைவேறும்.”
“முகத்தில் தீ சுட்டதுபோல் உணர்கிறேன்.”
“உன்னை எப்போது அவர்கள் சுட்டார்கள்?”
“ஒரு மணிநேரத்திற்கு முன்பு சுடப்பட்டதும் அங்குமிங்கும் தடுமாறி கடைசியில் இந்த அடி மரத்தருகே விழுந்தேன்.”
“ரத்த வாடையை வைத்து அவர்கள் உன்னைக் கண்டுபிடிக்கக்கூடும்.”
“விடியும்வரை எந்தச் சுவடையும் அவர்கள் பின்தொடர மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் காலை வரை நான் இருக்க மாட்டேன்.”
“இருட்டிலும் அவர்கள் இங்கு வரலாம். நாம் இங்கே இருக்க வேண்டாம். காட்டிற்குச் சிறிது தள்ளி இருக்கும் வீடொன்றில் நாம் ஒளிந்துகொள்ளலாம்.”
புர்ஹான் ஸென்மெஸ்
“அலி. இனி எனக்குப் பயமேதும் இல்லை. நான் காதலிக்கும் அந்த மனிதர் என்னையும் விரும்புகிறார் என நீ கூறியதால் நான் இப்படிச் சொல்கிறேன் என்று நினைக்கிறாயா?
“உனக்குப் பயமில்லை என்பது நல்லதுதான்.”
“எனவே என் காதலை அவனுக்குத் தெரிவிக்கத் தேவையில்லை. அவனை நான் என்னை அணைத்துக்கொண்டாலே போதும்.”
“தன் மனதிலிருப்பதை வெளிப்படையாகச் சொல்ல உன்னை விடவும் அவனுக்குப் பயம் அதிகம் போலிருக்கிறது.”
“இதனால்தான் அவன் என்னை அப்படிப் பார்த்தானா?”
“எப்படி?”
“அவன் பார்க்கும் விதமே இப்படித்தான். . . இப்போது. . . சித்திரவதைக் கூடத்தில் கடுமையான வேதனையில் துடித்துக்கொண்டிருப்பாள் என்று நினைக்கிறாயா?”
“நாம் அவனைக் காப்பாற்றப் போகிறோம்.”
“என்னுடன் பேசி உனது நேரத்தை வீணாக்காதே அலி. போய் நமது நண்பர்களைப் பார். துன்புற்றுக்கொண்டிருக்கும் நமது மக்களைக் காப்பாற்று.”
தூரத்தில் கிழட்டு ஆமையின் அலறல் மீண்டும் கேட்டது. மரக் கிளைகளின் சடசட ஒலி. துப்பாக்கி சுடும் சத்தம் அருகே கேட்டது.
மைன் படியைத் தரையில் கிடத்தி அவள் அருகே படுத்தான் அலி. சுற்றுமுற்றும் உள்ள பகுதியை நோட்டமிட்டான். மரங்களையும் புதர்களையும் கவனமாகக் கண்காணித்தான். அங்கே யாரையும் பார்க்க முடியவில்லை. இருள் நிரம்பியிருந்த து. நிலா இல்லாத அந்த இரவில் வெகு தூரம் பார்க்க நட்சத்திரங்களின் வெளிச்சமும் போதுமானதாக இல்லை. மூச்சை அடக்கிக்கொண்டு காட்டை உற்றுக் கவனித்தான். எங்கோ சிறிது தூரத்தில் பறவைகள் சிறகடிக்கும் சத்தம் காதில் விழுந்தது. “இங்கேயே காத்திரு. வேறெங்கும் போய்விடாதே. நான் அங்கு சென்று அந்தப் பகுதியைக் கவனமாக நோட்டமிட்டு வருகிறேன்” என்றான்.
ஒன்றும் பேசாமல் மெல்ல நடந்தான். மரங்களுக்குப் பின்னால் தேடினான். மேலே மரக்கிளைகளைப் பார்த்தான். யாரும் இல்லை. வழி தவறித் தவறான பாதைக்கு வந்துவிட்டதாக முடிவுக்கு வந்தான். திரும்பும்போது சடாரெனத் துப்பாக்கி குண்டு அவனருகே பாய்ந்து வர, தடுமாறிக் கீழே விழுந்தான். காலில் ஏற்பட்ட கடுமையான வலியால் துடித்தான். ஒரு கையால் காயமடைந்த காலை இறுகப் பற்றி மற்றொரு கையால் பனித்திரளைத் துழாவித் தன் துப்பாக்கியைத் தேடினான். அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் வாய்ப்பை அவர்கள் அவனுக்குத் தரவில்லை. அவனைச் சூழ்ந்துகொண்டார்கள். அவன் முதுகையும் தலையையும் மிதித்துக் கீழே தள்ளிக் கை விலங்கிட்டார்கள்.
(நூலிலிருந்து ஒரு பகுதி)