பெருவெடிப்பில் தோன்றும் சிறுதுளிர்கள்
சீவாளி
பேரழிவின் பெருவெடிப்பில் தோன்றும் சிறு துளிர்கள்
பெருஞ்செடிகளாகும் மண்கொள்ளாக் காட்சிக்குப்
பேரமைதியின் பேருருவம்
சால மிகுத்துப் பெய்கிறது
பெயர்த்தெடுக்கிறது
குடையின் ஓரம் வழியும் ஈரம்
சூழக் காத்திருக்கும் சூறாவளியின்
சொல் மகசூல் தனை
வானிலை அறிக்கையின் தகவல் பிழைக்கு
இன்னுமொரு திடீர் மழையின் இழையாக்குகிறது
வாய்க்கரிசிக்கு வாய்க்கும் நெல்மணிகள்
மணிவெளிச்சத் தேர்வில்
குதிருக்குள் பதுங்குகின்றன
தேரா மன்னனுக்கு செப்புவதுடையவரின் கூற்று
பெருஞ் சாபத்தின் ஊற்றாகி
மாரியின் ஒவ்வோரு துளியிலும்
ஒரு ரத்தச் சொட்டின் ஞாபகத்தைக்
கலைக்கும் கொலைக்கும் இடையே
ஒரு உரையாடல் உருமாற்றாத்தைக்
கேள்விக்கும் தீர்ப்பிற்கும்
போதும் போதும்
என்ற அற்ற வெளியின்
சுற்றமற்றச் செயலின்
தூயதீபத்தில் ஏற்றி
மறைகிறது
போதகம்
ஆராவாரத்திற்கும் அமைதிக்கும் இடையே
தன் சமாதானத்தைத் தானே மீறிக் கொண்டிருக்கிறது
கற்கடற்கரையின் காதல் நாடகம்
நிறவெறிக்கும் இருள்மாரிக்கும் இடையே
தன் ஓவியத்தைத் தானே தீட்டிக் கொண்டிருக்கிறது
நிலவொளியின் நிழல்வெளி தாகம்
நன்னாரி சர்பத்தும் நன்னீர் மீன்களும் கடலில் கலக்கும் மாயவித்தையைத்
தன் எதார்த்தத்திற்குத் திருப்பிக் கொண்டிருக்கிறது
பயணியின் அனுபவக் கடல்
பாறையின் அந்தப் பக்கத்திற்கும் இந்தப் பக்கத்திற்கும் இடையே
இறுக்கி அணைத்துக் கிடக்கும் இரு வேறு மரக்கரங்களின்
மன்மத மனங்கள் சாதரணத்திற்குச் சவால் விடுகின்றன
சிரிப்பான் முகம் கிடைத்த வெட்டிய இளம் நுங்கின்
கண்களைப் பெருவிரலால் தோண்டித் தின்னும்
இவனுக்கும் இவளுக்குமா
இத்தனை இன்பம் வைத்தாய் இறைவா
ஆசீர்வாதத்திற்கும் அலங்கோலத்திற்கும் அலைபாயும்
ஒவ்வொரு நாளும் ஒரு சினிமா
ஒரே சினிமா தான் எனினும்
வாழ்வின் பிறழ்விற்கு
ஒன்றே காயம்
இருவரே காரணம்
மின்னஞ்சல்: nundhaa@gmail.com