கோவையில் ஒரு புத்தக எழுச்சி
கொடிசியா நடத்திய கோவை புத்தகச் சந்தை 22 ஜூலை இறுதியில் பத்து நாட்கள் மிக வெற்றிகரமாக நடந்தது. ஒரு புத்தகச் சந்தை நடைபெறத் தேவையான கட்டமைப்புடன் தமிழகத்தில் நடக்கும் ஒரே புத்தகச் சந்தை கோவை புத்தகச் சந்தை. பெரும் இடப்பரப்பில் அமைந்த அரங்குகளுக்கு உள்ளேயும் வெளியேயும் வாசகர்களின் வசதியை மனத்தில் கொண்டு போதிய இடம் விட்டு அமைக்கப்பட்ட சந்தை இது. வாசகர்கள் தள்ளுமுள்ளு இல்லாமல் சந்தையில் சுற்றிவரக்கூடிய வகையில் அதன் கட்டமைப்பு இருந்தது. கழிவறை வசதி போதிய அளவில் இருந்தது. கழிப்பறைகளின் தூய்மை பேணப்பட்டதையும் குறிப்பிட வேண்டும். உணவக ஏற்பாடுகள் புத்தகச் சூழலைக் கெடுக்காத வகையில் இருந்தன. பொது அரங்குகளில் தினமும் பல கூட்டங்கள் நடந்தன. ஆனால் அங்கே நடக்கும் எந்த நிகழ்வும் புத்தக அரங்குகளில் நூல்களைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கும் வாசகர்களைச் சந்தைக்கு வெளியே இழுக்கவில்லை. மாறாக புதிய வாசகரை சந்தைக்கு உள்ளே கொண்டு வந்தன. நூல்களை வாங்க விரும்பும் வாசகர்களின் தேவைகளைக் கவனத்தில் கொண்ட புத்தகங்களை மட்டும் முதன்மைப் படுத்திய சந்தையாக இருந்தது.
கொடிசியாவில் பல தொழில்கள் சார்ந்த சந்தைகள் பல நடத்தித் தேர்ச்சி பெற்ற குழு துரிதமாகத் திறமையுடன் செயல்படுகிறது. ஆடம்பரம் இல்லாவிடினும் உலகத் தரத்திலிருக்கும் கட்டமைப்புகொண்ட இச்சந்தையில் ஒரு வாசகர் கண்ணியம் இழக்காமல், உடல் நலம் பாதிக்கப்படாமல், புத்தகச் சந்தைக்கு வருகைதந்து, குறுக்கீடுகள் இல்லாத பாதைகள் வழி சுதந்திரமாக நடந்து, தேவையான இடவசதி அளிக்கப்பட்டுள்ள கடைகளில் நுழைந்து, பிராணவாயு குறைபடாது சூழலில் நின்று வசதியாகவும் நிதானமாகவும் புத்தகங்களை வாங்க முடியும். தேசிய அளவிலான புத்தகச் சந்தையாகும் சாத்தியம் கோவை புத்தகச் சந்தைக்கு உண்டு. அரிதினும் முயன்றால் உலகக் களத்தை நோக்கியும் செல்ல முடியும்.
பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்னர்வரை சென்னை புத்தகச்சந்தை முதல் நிலை என்றால் அதற்கு பத்து இடங் களுக்குப் பின்னர் கோவை, ஈரோடு, மதுரை புத்தகச் சந்தைகள் இருந்தன. இந்த ஆண்டு கோவை தெளிவாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறிவிட்டது. முழு முயற்சி எடுத்தால் சென்னையின் விற்பனையில் 75 சதவீதத்தை எட்டுவதற்கான சந்தை வீச்சு கோவைக்கு உண்டு.
இம்முறை இதற்கு முன்னர் நடந்த வேளாண் சந்தை முடிந்து ஒரே வாரத்தில் புத்தகச் சந்தை கட்டமைக்கப்பட்டு நடந்ததால் போதிய விளம்பரம் செய்யப்படவில்லை; என்றபோதும் கோவையில் பெரிய முன்னேற்றம் தெரிந்தது. இந்த முன்னேற்றத்திற்குக் காரணம், தமிழகப் புத்தகச் சந்தைகளில் காலங்காலமாகப் பின்பற்றப்படும், காலங்காலமாகப் பின்பற்றப்படுவதாலேயே தொடர்ந்து கேள்வியின்றிக் கைக்கொள்ளப்படும், சில வைதீக நடைமுறைகளை கொடிசியா இம்முறை கைவிட்டதுதான்.
நிறைய இட வசதியுடைய கொடிசியா, சந்தையில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தேவையான இடத்தை, அதற்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டு ஒதுக்கியது. இந்த வழக்கமான நடைமுறையில் என்ன புதிய செய்தி என்று கேட்டால், இந்த உலக நடைமுறையைச் செயல்படுத்த இங்கு ஒரு குட்டிப் புரட்சியே தேவைப்படும் அளவுக்கு வைதீகப் பழக்கங்கள் இறுக்கியுள்ளன. இதற்கு முன்னர் அதன் கரங்கள் கொடிசியா புத்தகச் சந்தைக்கும் இடையீடுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த ஆண்டு அந்தப் பிடி தளர்ந்தது.
அடுத்ததாகப் புத்தகச் சந்தைக்குள் நுழையும் வாசகரை அவரவர் விருப்பம்போல செல்ல அனுமதித்தது. இதிலும் என்ன புதுமை என்று தோன்றலாம். ஆனால் இங்கு நடைமுறை என்பது கயிறுவைத்துப் பாதைகளைக் கட்டியடைத்து வாசகர்களைக் கால்நடைகள்போல வழிநடத்துவதாகும். இந்த மாற்றங்களின் முழுப் பயனும் இந்த ஆண்டு அங்கு கண்கூடாகக் காணப்பட்டது.
மேற்படி பழைமைவாதச் செயல்முறைகளுக்குச் சொல்லப்படும் மூடநம்பிக்கைகள் நகைப்பிற்கிடமானவை. பெரிய அரங்குகளால் சிறிய அரங்குகளின் விற்பனை பாதிக்கப்படும் என்பது இதில் ஒன்று. கோவை புத்தகச் சந்தையில் பெரிய அரங்குகளால் சிறிய அரங்குகள் எந்த பாதிப்பையும் அடையாது என்பது மட்டுமல்ல, மொத்தப் புத்தகச் சந்தையும் முன்னேறும்போது அனைவரும் பயன்பெறுவர் என்றும் உறுதிப்பட்டது.
புத்தகச் சந்தையில் தகுதியான பதிப்பாளர்களின் அரங்குகளில் கிடைக்கும் நூல்கள் அநேகம் காப்புரிமையுடைவை. அதாவது ஒரு அரங்கில் கிடைக்கும் நூல் இன்னொரு அரங்கில் கிடைக்காது. தனக்குத் தேவையான நூல்களைப் பற்றிய திட்டத்துடன் வரும் வாசகர் ‘வளர்ச்சி’ பதிப்பகத்தின் அரங்கு சிறியதாக இருப்பதால் ‘டால்ஸ்டாய்’ பதிப்பகத்தின் அரங்கில் சென்று பிறிதொன்றை வாங்க மாட்டார். தனக்குத் தேவையான நூல்கள் கிடைக்காவிட்டால், அல்லது நின்று நிதானித்து வாங்கும் சூழல் இல்லாவிட்டால் குறைவாக வாங்கிச் செல்வார். அதுபோலத்தான் பல வழிகளை மறித்து வாசகரை ஒரே வழியில் செலுத்தும் முயற்சி. அவரவர் விரும்பும் கடைகளுக்குச் செல்ல வழிசமைக்க வேண்டும், கையேடுகள் வழங்கி வாசகருக்கு துணையிருக்கவும் வேண்டும். மாறாக இன்றைய நடைமுறை என்ன? கடைகளுக்கு வேறு வேறு தினுசில் எண்கள் கொடுத்து வாசகருக்குத் தேவையான தகவல்களைக் குறைந்தபட்சமாக வழங்கி அலைய விடுவ தாகவே உள்ளது. அங்கும் இங்கும் அலையும் வாசகர் எதேச்சையாக நம் கடைகளில் நுழைந்துவிட மாட்டாரா என்ற ஆசையும் இதில் அடங்கியுள்ளது. பெரிய புத்தகச் சந்தைகளில் பொருள் சார்ந்து சந்தையை ஒன்றுக்கும் மேற்பட்ட அரங்குகளாகப் பிரிக்க வேண்டும். குழந்தைகள் பிரிவு, கல்வி, பொது நூல்கள், ஆங்கிலம் என்று பிரிப்பது வாசகர்களின் வீண் அலைச்சலைக் குறைக்கும்.
தமது பேரப்பிள்ளைகளுக்கு நூல்கள் பரிசளிக்கச் சென்னை புத்தகச் சந்தை வரும் முதிய தம்பதியினரைக் கற்பனை செய்வோம். ஆங்காங்கு இருக்கும் குழந்தைப் பதிப்பகங்களைத் தேடி, தள்ளாடும் மரப் பாதையில் ஒவ்வோர் அடிக்கும் அமுங்கி எகிற, கால் முட்டுகள் வலிக்க, குழந்தைகளுக்கான கடையைத் தேடி எட்டுப் பாதைகள் முழுவதும் நடக்க வேண்டும். இத்தகைய புத்தகச் சந்தை அனுபவம் அவர்களுக்கு நிறைவானதாக அமையாது. அடுத்த முறை புத்தகச் சந்தைக்கு வருவதற்கான உந்துதல் குறையும்.
இன்று வீட்டிலிருந்தே தேவையான புத்தகங்களை வாங்கிவிடக்கூடிய சூழல் இருக்கும்போது வாசகரைத் தொடர்ந்து புத்தகச் சந்தைகளுக்கு வரவழைப்பது ஒரு சவாலாகிவிடும்.
புத்தகச் சந்தைக்கு வரும் அனுபவத்தை ஒரு பண்பாட்டு அனுபவமாக மாற்ற வேண்டும். சந்தை ஒரு பண்பாட்டு மையமாக வேண்டும். எழுத்தாளர்களை வாசகர் சந்திக்கும் வாய்ப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும். தனி அரங்குகளில் புத்தக வெளியீடுகள், கலை நிகழ்ச்சிகள் பல நடக்க வேண்டும். அரங்கின் உள்ளும் புறமும் இவை அனுமதிக்கப்பட வேண்டும். இவற்றை முறைப்படுத்தும் நெறிகள் அவசியம். ஆனால் கெடுபிடிகள் அவசியம் இல்லை. சந்தையில் ஒழுங்கு தேவை, கொண்டாட்டமும் அவசியம்.
தமிழகத்தில் மாபெரும் சந்தையாக வளர்வதற்கான சாத்தியமுடைய மூன்று சந்தைகள் ஈரோடு, மதுரை, திருச்சி சந்தைகள். ஈரோடு சந்தையை அரும்பாடுபட்டு வளர்த்தெடுத்த மக்கள் சிந்தனைப் பேரவை அது சுதந்திரமாக உயரப் பறக்க அனுமதிக்க வேண்டும். விரிந்த மைதானத்தில் குறுகிய சந்தையை அமைத்துப் பதிப்பாளர் பலருக்கு இடமும் மறுப்பதால் என்ன பயன்? சந்தையை விரிவுபடுத்தி இன்னும் அதிக இடம் வழங்கினால் பதிப்பாளர்கள் முழு வீச்சும் வாசகருக்கு எட்டும். காலைச் சுற்றும் பழைமைவாதத்தின் பிடியிலிருந்து விடுபட்டுச் சந்தையை உலகளாவிய போக்கிற்கு ஏற்ப புதிதாக மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்.
மேற்படி அணுகுமுறையை வருங்காலத்திலேனும் பின்பற்றினால்தான் மதுரை, திருச்சி சந்தைகள் புதிய ரூபம் எடுத்துப் பெரும் வளர்ச்சியும் காண முடியும். புத்தகச் சந்தையானது அடிப்படையில் வாசகர்களுக்கானது. அனைத்து நூல்களையும் பார்வையிட்டு வாங்கும் தமது உரிமைக்காக அவர்களும் குரல் கொடுக்க வேண்டும். ஊடகங்கள் வாசகர் குரலைப் பிரதிபலிக்க வேண்டும்!