நான்காவது ஆணி
கறி விருந்தும்
கவுளி வெற்றிலையும்
சாதியினாற் சுட்ட வடு
(தன் வரலாறு)
திருக்குமரன் கணேசன்
பக். 136
ரூ.175
அப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். புதிதாக, எங்கள் பள்ளிக்கு வந்திருந்த தலைமையாசிரியர், பள்ளியை அழகுபடுத்துவதில் ஆர்வத்தோடு இருந்தார். அவர் பணியாற்றிய காலத்தில் நடப்பட்ட, மரக்கன்றுகள்தான் ஓங்கி வளர்ந்து, அடர்ந்து படர்ந்து இன்றும் நிழல் தந்துகொண்டிருக்கின்றன. அதுபோலவே, வகுப்பறைகளை அழகுபடுத்தவும், மாணவர்களின் சிந்தனை விரியவும், அறிஞர் பெருமக்களை மனதில் பதியவைக்கவும், தேசத் தலைவர்கள், கவிஞர்கள் எனக் கண்ணாடிச் சட்டங்களால் தறிக்கப்பெற்ற புகைப்படங்களை வாங்கி வந்திருந்தார். அவற்றையெல்லாம் ஒவ்வொரு வகுப்பறைக்கும் நான்கு நான்கு படங்களாகப் பிரித்துக் கொடுத்து, மாணவர்களின் பார்வையிலேயே இருக்கும் வண்ணம், ஆணியடித்து மாட்டச் சொல்லியிருந்தார். அப்படி எங்கள் எட்டாம் வகுப்பு ஆசிரியரிடமும் நான்கு படங்களைக் கொடுத்திருந்தார் தலைமையாசிரியர்.
திருக்குமரன் கணேசன்
எங்கள் வகுப்பறையில் இருக்கும் உயரமான மாணவர்களில் நானும் ஒருவன். அதுவும் வடக்குத் தெருவைச் சார்ந்தவன். ஆணியடித்துப் புகைப்படம் மாட்டும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடுவதற்கு, மரக்கன்றுகளைப் பிடுங்கி வரச் சொல்வது, வகுப்பறையில் ஒட்டடை அடிப்பது, கடைவீதிக்குச் சென்று வெற்றிலைச் சீவல் வாங்கி வருவது. விரல் சொடுக்கெடுப்பது . . . இம்மாதிரியான வேலைகளுக்கெல்லாம் வடக்குத் தெரு தெற்குத் தெரு மாணவர்களையே தெரிவுசெய்வார்கள். ஏனென்றால், ஊருக்கு ஒதுக்குப்புறமாகப் பிரிந்து கிடக்கும் இவ்விரு தெருக்களும் பறத்தெருக்கள். பறத்தெரு பிள்ளைகளை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி வேலைவாங்கினால் அது பாவக் கணக்கில் சேராது. அதைத் தட்டிக் கேட்கவும் பெற்றோர்கள் முன்வர மாட்டார்கள். வகுப்பாசிரியர் கரும்பலகைக்கு மேலே வரிசையாக ஒவ்வொரு படங்களுக்கும் இடைவெளி விட்டு ஆணியடிக்கச் சொன்னார். பக்கவாட்டாக ஒரே நேர்க்கோட்டில் ஒன்று, இரண்டு, மூன்று என ஆணிகளை அடித்தாயிற்று.
நான்காவது ஆணியை மட்டும் கொஞ்சம் கீழிறக்கி அடிக்கச் சொன்னார். ‘ஐயா நாலு படமும் ஒரே மாதிரிதானே இருக்கு. ஏன் இந்த ஆணியை மட்டும் கொஞ்சம் கீழிறக்கி அடிக்கச் சொல்றீங்க?’ ‘இதெல்லாம் என்ன கேள்வி? சொன்னதைச் செய்யுடா கூமுட்ட . . .’ என்ன காரணமாக இருக்கும்? அமைதியாகி நான்காவது ஆணியைச் சற்று கீழிறக்கி அடித்தேன். ஆசிரியர் ஒவ்வொரு புகைப்படங்களாக எடுத்துத்தர மேசைமீது நிற்கும் நான் ஆணியில் மாட்ட ஆயத்தமானேன். முதலில் தேசத் தந்தை காந்தியின் படத்தைக் கொடுத்து மாட்டச் சொன்னார். இரண்டாவது ஆணியில் ஜவகர்லால் நேரு படம், மூன்றாவது ஆணியில் பாலகங்காதர திலகர் படம். கீழிறக்கி அடிக்கப்பட்ட அந்த நான்காவது ஆணியில் மாட்டப்போகும் படத்தில் யாருடைய படமிருக்கும்? ஆவலாக நீளும் என் கைகளில் முனகிக்கொண்டே அம்பேத்கர் படத்தைக் கொடுத்தார். நான்கு படங்களையும் மாட்டிவிட்டு மேசையிலிருந்து கீழிறங்கி மேலே மாட்டப்பட்டுள்ள படங்களைப் பார்த்தேன். ஒரு படம் மட்டும் தனித்துக் கீழிறங்கி இருப்பது எனக்கென்னவோ அழகாகப் படவில்லை. திரும்பவும் அந்த வகுப்பாசிரியரிடம், ‘ஐயா நாலாவது படமும் நேரா மாட்டிருந்தா இன்னும் அழகா இருந்திருக்கும்’ என்றேன். அவ்வளவுதான் அவருக்குக் கோபம் தலைக்கேறி, கையில் வைத்திருந்த மூங்கில் குச்சியால், எனது கையை நீட்டச்சொல்லி ஓங்கி அடித்தார். வலிபொறுக்க முடியாமல் கையை உதறிக்கொண்டே எங்கள்தெரு மாணவர்கள் அமர்ந்திருக்கும் சுவற்றோர கடைசி வரிசையில் போய் அமர்ந்தேன். வலியையும் மீறி அந்தக் கேள்வி மட்டும் என் மூளையைக் குடைந்துகொண்டே இருந்தது. அந்த ஆசிரியரின் அச்செயலுக்கு அப்பொழுது எனக்கு அர்த்தம் விளங்கவில்லை.
(நூலிலிருந்து)