ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்…
வ.உ.சி.: வாராது வந்த மாமணி
(ஆவணத் தொகுப்பு)
தொகுப்பும் பதிப்பும்
ஆ.இரா. வேங்கடாசலபதி
பக். 240
ரூ.290
கப்பலோட்டியும் செக்கிழுத்தும் தமிழரின் மனங்களில் நீங்காத இடம்பெற்றுவிட்டவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872–1936). 1906இல் சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டு, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பல் கம்பெனி நடத்தி, 1908 மார்ச் மாதத்தில் கைதாகி, இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற வ.உ.சி., மேல்முறையீட்டில் தண்டனை குறைக்கப்பெற்று 1912ஆம் ஆண்டின் இறுதியில் சிறையிலிருந்து விடுதலையானார். வ.உ.சி. கைதானபோது அதற்கு முன்பு எப்போதும் நடந்திராத அளவில் தென்தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டது. தூத்துக்குடியில் சுதேசி இயக்கத்தை ஒடுக்குவதில் முன்னின்ற இராபர்ட் ஆஷ் என்ற அதிகாரி வ.உ.சி. சிறையிலிருந்த காலத்தில் படுகொலையுண்டார். ‘இருண்ட மாகாணம்’, ‘தூங்குமூஞ்சி பிராந்தியம்’ என்றெல்லாம் ஏளனத்திற்கு ஆளாகியிருந்த சென்னை மாகாணம் வ.உ.சி.யால் தலைநிமிர்ந்தது. மொத்த இந்தியாவையே தமிழகத்தின் தென்கோடியைத் திரும்பிப் பார்க்கவைத்தார் வ.உ.சி. இந்தியத் தலைவர்களான திலகர், அரவிந்தர், கல்கத்தாவின் ‘அமிர்த பஜார் பத்திரிகை’, லண்டன் ‘டைம்ஸ்’ என்று எல்லாரும் அவரைப் பற்றி எழுதினார்கள்.
இவ்வளவு பரந்த கவனிப்பைப் பெற்ற வ.உ.சி., சிறையிலிருந்து வெளிவந்து, 24 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார். சேர்த்துவைத்திருந்த சொத்தெல்லாம் செலவழிந்து, வருவாய்க்கு வழிதரும் வழக்குரைஞர் தகுதிப் பட்டயத்தையும் இழந்து துன்புற்ற நிலையிலும் அவர் ஓய்ந்துவிடவில்லை. விடுதலைப் போராட்டத்தில் தொடர்ந்து பங்களித்ததோடு, தொழிலாளர் இயக்கம், வகுப்புரிமைப் போராட்டம், பார்ப்பனரல்லாதார் இயக்கம், சுயமரியாதை இயக்கம், சமயச் சீர்திருத்தம், தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் என்று தம் காலத்தின் அனைத்து இயக்கங்களிலும் பங்குகொண்டார். ஆனாலும் அவர் காலத்திலேயே அவருடைய புகழை மறைக்கும் மேகங்கள் கவிந்தன. 1932இல் வ.உ.சி.க்கு அறுபதாண்டு நிறைந்ததையொட்டி டாக்டர் பி. வரதராசுலு நாயுடு அதனைக் கொண்டாடி, பணமுடிப்பைத் திரட்ட முயன்றார். அம்முயற்சி வெற்றி பெறவில்லை என்பது மங்கல வழக்கு. இது பற்றிச் சரியாகச் செய்திகளைக்கூட அக்கால இதழ்கள் வெளியிடவில்லை என்பது இந்த அவலத்திற்குப் பருக்கைப் பதமான சான்று. வ.உ.சி.யின் தொண்டுக்கும் தியாகத்துக்கும் உரிய அறிந்தேற்பு கிடைக்கவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தின் ஒருமித்த கருத்து.
வ.உ.சி. பற்றி அவர் காலத்தில் வந்த பதிவுகளை ஆவணப்படுத்தி, இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வேண்டும் முயற்சியாக இந்த நூல் அமைகின்றது. வ.உ.சி.யின் புகழ் ஓங்கியிருந்த காலத்தில் வெளிவந்த அவருடைய வாழ்க்கை வரலாறுகளையும், அவர் மறைந்தபொழுது வெளியான இரங்கலுரைகளையும் கொண்டதாக இத்தொகுப்பு அமைகின்றது.
சென்னை மாகாணத்தின் காவல் துறை வ.உ.சி. என்பவர் யார் என்று அறிய முயன்ற 1907ஆம் ஆண்டின் குறிப்புடன் நூல் தொடங்குகிறது. எம். கிருஷ்ணசாமி ஐயர் தொகுத்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய வ.உ.சி. வரலாறுகள் இதற்கடுத்து அமைகின்றன. பிறகு, 1909இல் காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவு தயாரித்த விரிவான வரலாற்று ஆவணம் இடம்பெறுகின்றது. இவை அடங்கிய முதல் பகுதியின் கடைசியில் பரலி சு. நெல்லையப்பர் எழுதிய சுருக்கமான வரலாறு வழங்கப்பட்டுள்ளது.
நூலின் இரண்டாம் பகுதி, வ.உ.சி. மறைந்தபொழுது பல்வேறு இதழ்களில் வெளியான இரங்கலுரைகளைத் தொகுத்துத் தருகிறது. தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பதினெட்டு இதழ்களில் வெளியான தலையங்கங் களும் கட்டுரைகளும் குறிப்புகளும் பதிவுகளும் இப்பகுதியில் அடங்கும். (நானறிந்தவரை தமிழில் பெரியாருக்கு மட்டுமே இப்படியொரு தொகுப்பு வெளிவந்துள்ளது: காவிரிநாடன், தந்தை பெரியாரின் இறுதிநாட்களும் இதழ் களும், நிலாமுற்றம், சென்னை, 2005.)
மூன்றாம் பகுதியில் சில இரங்கல் கடிதங்களும் தீர்மானங்களும் இடம்பெறுகின்றன.
ஒரு நாடகப் பாட்டும் விகடக் குறிப்பும் பிற்சேர்க்கையாக அமைகின்றன.
ஒருவகையில் நிலவின் வளர்பிறையை நூலின் முதல் பகுதியும் தேய்பிறையை இரண்டாம் பகுதியும் ஆவணப் படுத்துகின்றன எனலாம். இன்னமும் முழுமையாக எழுதப்பட்டுவிடாத வ.உ.சி. வரலாற்றை முழுமைப் படுத்துவதற்கு இந்நூல் துணைசெய்யும் என நம்புகிறேன்.
வாழ்க்கை வரலாறுகள்
வ.உ.சி. பற்றிக் கிடைக்கும் முதல் வரலாற்று ஆவணம் காலனியக் காவல் துறையின் குற்றவியல் நுண்ணறிவுப் பிரிவிலிருந்து (Criminal Investigation Department, CID) கிடைக்கிறது. இதன் பின்னணி என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
தனது குடிமக்களை வேவுபார்த்துக் கட்டுக்குள் வைத்திருப்பது எந்த அரசும் செய்யும் காரியமேயாகும். எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழிலல்லவா? பல்வேறு சாதிகளையும் மதங்களையும் பிற பிரிவுகளையும் கொண்ட ஒரு பெருந்துணைக்கண்டத்தை ஆண்ட அந்நிய பிரிட்டிஷ் அரசாங்கம் ஒற்றாடலில் பெருங்கவனத்தைச் செலுத்தியதில் வியப்பில்லை. 1858இல் நேரடியாக பிரிட்டிஷ் முடியாட்சியின்கீழ் இந்தியா வந்தபின் நவீனமுறையிலான காவல் துறையை அது உருவாக்கியது. அத்துறையில் குற்றவியல் சார்ந்த நுண்ணறிவைச் சேகரிக்கும் பிரிவும் பின்னர் அமைக்கப்பட்டது. சமூகத்தின் பல அடுக்குகளிலும் நடைபெறும் செயல்பாடுகள் பற்றிய செய்திகளை இத்துறையின் அடிநிலைக் காவலர்கள் சேகரித்துத் தம் மேலதிகாரிகளுக்கு அனுப்பினர். இந்தச் செய்திப்பதிவுகளின் பகுதிகளையும் தேர்ந்தெடுத்த சுருக்கங்களையும் (abstracts) ‘ஐயத்திற்குரிய நபர்கள்’, ‘சமய இயக்கங்கள்’, ‘அரசியல் இயக்கங்கள்’, ‘பொதுக் கருத்து’, ‘வதந்திகள்’ முதலான பல்வேறு பிரிவுகளின்கீழ் வகைப்படுத்திய சி.ஐ.டி. துறை வாரந்தோறும் அறிக்கைகளைத் தயாரித்து, அவற்றை அச்சிட்டுக் குறிப்பிட்ட உயரதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தது. Police Abstracts of Intelligence என்பது இந்த அறிக்கையின் பெயர். சென்னை மாகாணத்தின் அறிக்கைகள் ஆறு பிரதிகள் மட்டுமே அச்சாயின; இந்த அறிக்கைகள் ஒவ்வொன்றும் எண்ணிடப்பட்டன என்பதும் இதன் உயர் கமுக்கத்தைக் குறிக்கும். ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் இந்த அறிக்கைகளுக்கு மிக விரிவான பெயர்–பொருள் அடைவையும் (index) தயாரித்து மொத்தமாக நூற்கட்டடமும் செய்தனர். மிக நுட்பமான மாட்டேற்றுக் குறிப்புகளையும் (cross references) கொண்ட ஆவணம் இது. நுண்ணறிவுப் பிரிவின் கவனத்திற்கு உள்ளாகும் எந்தவொரு நபரின் செயல்பாட்டு வரலாற்றையும் அடைவின் துணையுடன் அறிந்துகொள்ளும் வாய்ப்பு வசதிகளை இது வழங்கியது. சென்னை மாகாணத்தில் இது 1888ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அரசியல், சமூக மாற்றங்களுக்கேற்பக் காலந்தோறும் இந்த ஆவணம் விரிவும் வளமும் பெற்றுள்ளதைக் காண முடிகின்றது. சூழலுக்கேற்பப் புதுப்புதுத் தலைப்புகளும் உள்தலைப்புகளும் திணைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. தேசிய இயக்கம் மக்கள் செல்வாக்குப் பெற்று வலுப்பெற்றதும் இந்த ஆவணம் பெருத்தது. தேசிய இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள், செயற்பாட்டாளர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு, அவர்கள் பின்தொடரவும் பட்டிருக்கின்றனர்.
ஆ. இரா. வேங்கடாசலபதி
இருப்பினும், குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களைக் கொண்டு செயல்பட்ட இந்த வேவுமுறை திறனுடனும் முழுச் சீர்மையுடனும் இயங்கியது என்று சொல்ல முடியாது. காவலரின் திறனைப் பொறுத்து அவர் சேகரிக்கும் தகவலின் உண்மையும் செம்மையும் அமைந்திருக்கும். உண்மையைப் பதிவதைவிட மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்தி, ஆதாயமும் சலுகைகளும் பெறும் நோக்கம் கீழ்நிலைக் காவலர்களுக்கு இருந்ததில் வியப்பில்லை. உயரதிகாரிகளும் இதனை அறிந்தே இருந்தனர். ஆயினும் ஆட்சியாளர்களின் தேவைகளைப் பெருமளவு பூர்த்தி செய்த அமைப்பாகவே இது விளங்கியது. அரசுக்கு உதவியாக இருந்ததோ இல்லையோ, வரலாற்று ஆய்வாளர்களுக்கு இது வரப்பிரசாதமாகும். பல சமயங்களில் ஓர் அரசியல் தலைவர் அல்லது இயக்கத்தின் செயல்பாடுகளை நாள்வாரியாக அறிந்துகொள்ளும் அளவுக்கு இந்த அறிக்கைகள் வளமான சான்றுமூலங்களாக விளங்குகின்றன. ஆனால் இந்தவகை ஆவணங்களைக் கையாள்வதில் கவனம் தேவை. அரசியல் எதிரிகளாக அரசாங்கம் கருதியவர்களைப் பற்றி எப்போதும் எதிர்மறையான கருத்துகளையே இவ்வறிக்கைகள் கொண்டிருக்கும். லட்சியத்திற்காக ஒருவர் சுகதுக்கங்களைப் பொருட்படுத்தாமல் தம் வாழ்நாளையும் ஈய முடியும் என்பதை ஏற்கவோ நம்பவோ ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அவர்களை ஒழுங்கீனர்களாகவும், அதிகாரப் பித்தும் புகழாசையும் கொண்டவர்களாகவும், பொதுப் பணத்தைக் கையாடல் செய்பவர்களாகவுமே இவ்வறிக்கைகள் பெரும்பாலும் சித்தரிக்கும். இவற்றைத் தூற்றி உண்மைச் செய்திகளைப் பிரித்தறிய வேண்டியது ஆய்வாளரின் கடமை. இதைப் புரிந்துகொள்ளாமல் இவற்றை வேதப் பிரமாணமாகக் கொள்வது ஆபத்தில் முடியும்.
(முன்னுரையிலிருந்து)