வழிகாட்டும் விளக்குகள்
நெடுவழி விளக்குகள்
தலித் ஆளுமைகளும் போராட்டங்களும்
(கட்டுரைகள்)
ஸ்டாலின் ராஜாங்கம்
பக்.200
ரூ.250
கடந்த இருபதாண்டுக் காலவெளியில் தமிழில் ‘தலித் வரலாற்றியல்’ என்னும் சிந்தனை அழுத்தமாகக் கால் பதித்திருக்கிறது. பொதுச்சூழல் அதிலிருந்து போதுமான அளவு உள்வாங்கிக்கொள்ளவில்லை எனினும் அப்படி ஒன்று இருக்கிறது என்னும் நினைவு இங்கு ஊன்றப்பட்டிருக்கிறது. இந்த உருவாக்கத்தில் என் நூல்களுக்கும் பங்கு உண்டு என்று சொன்னால் யாரும் தற்பெருமையாகக் கருத மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அதிலும் கடந்த பத்தாண்டுகளில் தலித் வரலாற்றியல் வேகமான கவனத்தை பெற்றிருக்கிறது. என் பணி நூல்களாக மட்டுமல்லாது கூட்டங்கள், சமூகவலைப் பதிவுகள் என்று அமைந்திருந்தது. அதன் தொடர்ச்சியே ‘நெடுவழி விளக்குகள்’ என்ற இந்நூல். வெவ்வேறு தருணங்களில் தலித் வரலாறு தொடர்பாக இதழ்களில் வெளியான 14 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ‘எழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்’ (காலச்சுவடு பதிப்பகம், 2017) நூலுக்குப் பிறகு வெளியாகும் வரலாறு தொடர்பான நூல் இது.
பண்பாடு சார்ந்தும் அயோத்திதாசர் பற்றியும் அதிகம் எழுதுபவனாக மாறிவிட்ட நான், இந்நூலில் அவ்விரண்டும் அல்லாத விஷயங்களைத் தொகுத்திருக்கிறேன்.இது திட்டமிட்டதல்ல. எனினும் மேற்கண்ட இரண்டு விஷயங்களாலும் உருவான கோணங்கள் கட்டுரைகளினூடே ஊடாடுகின்றன. தலித் வரலாறு பற்றி எழுதும் நான் உள்ளிட்ட பலரும் பண்டிதர் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் சார்ந்தே அதிகம் எழுதியிருப்பதால் அவர்களல்லாத யாரும் இல்லை என்றோ மற்றவர்களை எழுதக் கூடாது என்றோபொருளில்லை.
இந்நிலையில்தான் அம்முன்னோடிகளைத் தாண்டி, அவர்களின் காலத்திற்குப் பிறகு செயல்பட்டவர்கள் இந்நூலில் இயல்பாக வந்து சேர்ந்திருக்கிறார்கள். நவீன கால தலித் அரசியல் தொடக்கத்திலிருந்து பொருளாதாரத் தற்சார்பு பெற்றவர்களால் இயங்கிவந்திருக்கிறது. தலைவர்களில் பெரும்பான்மையோர் பொருளாதார வளமுள்ளவர்களாகவும் கல்வி படைத்தவர்களாகவும் இருந்தார்கள்.அந்த வாய்ப்பு காலனிய அரசோடு உரையாடி உரிமைகள் பெறுவதற்கு உதவியது. 1950க்குப் பிறகே அடித்தளத்திலிருந்து வந்தவர்கள் பங்கெடுக்கக்கூடியதாக தலித் அரசியல் மாறியது. அத்தகையவர்களே இந்த நூலில் அதிகம் பேசப்பட்டிருக்கிறார்கள். ஒரு நூற்றாண்டு அளவிலான ஆளுமைகளும் சம்பவங்களும் நூலில் அடங்கியிருக்கின்றன. முழுக்க முழுக்கப் போராட்ட வரலாறு. அதேவேளையில் பலவற்றைச் சுயமாக உருவாக்கிக்கொண்ட வரலாற்றையும் பார்க்கலாம்.
டாக்டர் அம்பேத்கர் 1930களில் சுதந்திரா தொழிலாளர் கட்சி தொடங்கி விட்டிருந்தார் என்றாலும், தமிழகத் தொடர்புகள் இருந்திருக்கின்றன என்றாலும், கட்சி என்னும் முறையில் புலப்படும் வடிவில் கிளை பரப்பிய இயக்கம் என்றால் அவருடைய ஆல் இண்டியா ஷெட்யூல் கேஸ்ட் பெடரேஷன்தான் (AISCF). 1940களில் பெடரேஷன் தொடங்கப்பட்து.அதற்கெனக் கொள்கை சார்ந்த பார்வைகளும் வேலைத்திட்டங்களும் இருந்தன.படித்தவர்களை மட்டுமல்லாது கிராம அளவிலிருந்தும் பலரை அந்த அமைப்பு ஈர்த்திருந்தது.அது அகில இந்திய அமைப்பு. உள்ளூர்ப் பிரச்சினைகள் சார்ந்தும் செயல்பட்டது.அம்பேத்கரிய அமைப்புகள் தலித் அமைப்புகள் மட்டுமல்ல. அவை நவீன இந்தியாவின் முக்கியமான அமைப்புகள். தலித்துகளிடம் உருவாக்கியிருந்த அரசியல் புரிதல்கள், உலகப் பார்வை ஆகியவை கவனிக்கப்பட வேண்டியவை.ஆனால் தமிழ் வரலாற்றில் எஸ்சிஎப் போன்ற அமைப்புகளின் பணிகள் கூறப்படாதது மட்டுமல்ல; அப்படி ஒன்று இருந்தது என்பது பிரதான நுண் வரலாற்று ஆசிரியர்களுக்கே தெரியாது என்பதுதான் விஷயமே.விரிவாக எழுதப்பட வேண்டியஅவ்வியக்கம் பற்றி எழுதப்பட்ட முதல் கட்டுரை இந்நூலில் இருக்கிறது.
அந்த இயக்கப் பணிகளை அடிப்படையாக வைத்து அழகிய பெரியவன் எழுதிய வல்லிசை என்னும் நாவல் பற்றி எழுதிய கட்டுரையும் இதில் இடம்பெற்றிருக்கிறது. அனேகமாக அந்நாவல் பற்றி விரிவாக எழுதப்பட்ட கட்டுரை இதுதான் என்று நினைக்கிறேன். அந்தவகையில் பெடரேஷன் பற்றி இரண்டு கட்டுரைகள் இருக்கின்றன. அவ்வாறுதான் ‘March to Madras’பேரணி பற்றிய கட்டுரையும் அமைந்திருக்கிறது. 1980களில் இந்திய குடியரசுக் கட்சியின் பெரியவர்களால் அப்பேரணி நடத்தப்பட்டது. ‘இன்றை’ மட்டுமே வரலாறாகப் புரிந்துகொள்ளாமல் அவற்றை ‘நேற்றின்’தொடர்ச்சியில் வைத்து புரிந்துகொள்ளக் கோருகிறது அக்கட்டுரை. தமிழக தலித் அரசியலுக்கு அறிமுகமாகியிருந்த கறுப்பின அரசியல் பற்றியும் அது பேசுகிறது.
தலித்துகளின் கல்வி வரலாறு பற்றி இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கிறிஸ்தவர்கள் ஆற்றிய கல்விப் பணிகளை அறிவோம். காந்தி தொடங்கியிருந்த அரிசன சேவா சங்கம் மூலம் நடந்த பணிகளைத் தொட்டுக் காட்டும் விதமாக மதுரை பகுதியில் செயல்பட்ட பள்ளிகளின் செயல்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன. தலித்துகள் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட சுயமான கல்விப் பணிகளும் குறிப்பிடத்தக்கன. பொதுவாகக் கோலார் தங்கவயல் என்றால் பெளத்தம் மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் அங்கே நீண்டகாலம் வைணவத் தொடர்பில் நடைபெற்றுவந்த பள்ளிகள் கவனப்படுத்தப்பட்டுள்ளன.இந்த வகையில் இக்கட்டுரைகள் தரும் செய்திகள் புதியவை. இவை முதன்முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
கோலார் தங்கவயல் சித்தார்த்தா புத்தகச் சாலை பற்றியும் பெ.ம. மதுரைப் பிள்ளை பற்றியும் தலித் வரலாறு அறிந்தவர்களுக்கு அறிமுகம் இருக்கலாம். ஆனால் இந்நூலின் கட்டுரையிலுள்ள செய்திகள் புதியவை; விரிவானவை. சித்தார்த்தா பதிப்பக நூல்கள் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. மதுரைப் பிள்ளை கட்டுரையோடு 19 பின்னிணைப்புகளை இணைத்துள்ளேன். பண்டிதர் அயோத்திதாசர் நடத்திய தமிழன் இதழில் மதுரைப் பிள்ளை பற்றி வெளியான எல்லாச் செய்திகளும் முதன் முறையாகப் பின்னிணைப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
ஸ்டாலின் ராஜாங்கம்
இவை தவிர்த்து ஐந்து ஆளுமைகள் குறித்த அஞ்சலிக் கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன. அதில் ஆ.சக்திதாசன், வை. பாலசுந்தரம், டாக்டர் அ.சேப்பன் ஆகியோர் 1950க்கும் 1990க்கும் இடையில் தீவிரமாக இயங்கி, அதன் பிறகும் செயல்பட்டனர். இவர்கள் ஒரே காலகட்டத்தில் செயல்பட்டவர்கள்; ஒரே காலகட்டத்தில் ஒரிரு ஆண்டு இடைவெளியில் காலமானார்கள். மைய நீரோட்ட வெளிச்சம் பெறாவிட்டாலும் உள்ளார்ந்து செயல்பட்டவர்கள். வாழும் காலத்தில் தமிழக வரலாற்றாளர்களோ, ஊடகங்களோ இவர்களைக் கண்டுகொண்டதில்லை.அவர்கள் இறப்பின்போதும் அதுவே நடந்தது.அத்தருணத்தில் அவர்களைப் பற்றி அஞ்சலி எழுதியது எனக்கு ஒருவகையில் நிறைவு தருகிறது. காலச்சுவடு மைய நீரோட்ட இதழ் இல்லையென்றாலும் தீவிர வாசிப்பாளர்களிடையே இத்தலைவர்களின் பெயர்களாவது அவ்விதழ் மூலம் சென்றடைந்தன. இவர்களைப் பற்றி வேறெந்த நூல்களிலும் அறிய முடியாது. அந்த அளவிற்குப் புறக்கணிக்கப்பட்ட தலைவர்களைப் பற்றிய அறிமுகங்களாக இக்கட்டுரைகள் இருப்பதைப் பார்க்கலாம்.
பொதுவாக என் கட்டுரைகளில் சான்று நூல்களும் மேற்கோள்களும் அதிகமிருக்க வாய்ப்பிருக்காது.ஆனால் இத்தொகுப்பில் மேற்கோள்கள் அதிகமிருக்கும் கட்டுரைகளும் குறைவாக இருக்கும் கட்டுரைகளும் சமஅளவில் உள்ளன. அஞ்சலிக் கட்டுரைகளில் உள்ள தலைவர்கள் பற்றிய தகவல்கள் எந்த நூல்களிலும் ஏற்றப்பட்டிருக்கவில்லை. எனவே பெருமளவு வாய்மொழியாகக் கேட்டறிந்த தகவல்களாக இருக்கின்றன.நூல்களில் தகவல்களாக மட்டும் உறைந்துவிடும் செய்திகள் வாய்மொழியாகக் கிடைக்கும்போது பல்வேறு நுட்பங்களை நமக்கு விரிக்கின்றன. இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது ஆளுமைகளின் உழைப்பை மட்டு மல்லாது தலித் அரசியலின் விடுபடல்களைப் புரிந்து கொள்வதற்கான இடைவெளியும் இவற்றில் மறைமுகமாகத் தொக்கியிருப்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
இதற்கு மாறாக, சான்றுகள் அதிகமிருக்கும் ‘பசவலிங்கப்பா, தலித் இலக்கியம், கன்னட - தமிழ்த் தொடர்புகள்’ கட்டுரை இருக்கிறது. அண்மையில் கன்னட தலித் எழுத்தாளர் சித்தலிங்கையா இறந்தபோது கூட்டமொன்றில் இரங்கலுரை ஆற்ற அவர் எழுதியிருந்த தன்வரலாற்று நூல்களை வாசித்தேன். அதில் கன்னடத்தில் தலித் இலக்கிய வகைமை உருவாக 1970களில் கர்நாடக அமைச்சராக இருந்த பசவலிங்கப்பாவின் கருத்தொன்று காரணமாக இருந்ததை விவரித்திருப்பார்.அதைப் படித்தபோது பசவலிங்கப்பாவின் தமிழ்த் தொடர்பு பற்றி ஆங்காங்கு படித்தவை நினைவுக்கு வந்தன. உடனே சித்தலிங்கையா பின்னுக்குப் போய் பசவலிங்கப்பா முன்னுக்கு வந்துவிட்டார். அவரைப் பற்றித் தேடியபோது நினைத்ததைவிடத் துண்டு துண்டாக அதிகக் குறிப்புகள் கிடைத்தன. செய்தித்தாள் குறிப்புகள், சிறு வெளியீடு, நினைவுகூரல்கள் எனக் கொண்டு கூட்டிய சித்திரமாக அக்கட்டுரை விரிந்தது. சித்தலிங்கையாவின் பசவலிங்கப்பா பற்றிய குறிப்புகள்கூட அவர் நினைவிலிருந்து எழுதியவையாகவே இருந்தன. இவ்வாறு பன்முக வடிவிலான சான்றுகளைக் கோத்து எழுதும்முறை எனக்குப் பிடித்தமானது. பசவலிங்கப்பா பற்றி இவ்வளவு தகவல்களோடு எழுதப்பட்ட முதல் கட்டுரையாக இதுவே இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ் தலித் இலக்கியத் தோற்றத்தை எதிர்பாராத திசையிலிருந்து புரிந்துகொள்ள உதவும் கட்டுரையாக இது இருக்கும்.
(முன்னுரையிலிருந்து)