கள்ளக்குறிச்சி: கல்விச் சந்தையில் குழந்தைகளின் அபயக் குரல்
கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் ஸ்ரீமதியின் மர்ம மரணம் விதிவிலக்காக நடந்த விபரீதம் அல்ல. இன்றைய கல்வி அமைப்பிலுள்ள விகாரங்களின் வெளிப்பாடு. மனிதனை மனிதன் விழுங்கும் போட்டி உலகத்திற்குக் குழந்தைகள் பலியிடப்படும் கல்வி அமைப்பில், நடக்கக் காத்திருந்த துயரம். இந்தக் கொடிய நிகழ்வு கள்ளக்குறிச்சியில் இல்லாவிட்டால இதை ஒத்து, வேறு எங்கோ நடந்திருக்கும். மார்க்கும் மார்க்கெட்டுமே கல்வி என்று சீரழிந்துவிட்ட ஒரு சமுதாயம் கொடுக்க வேண்டிய விலை இது.
ஸ்ரீமதி என்ற ஒரு குழந்தையின் பரிதாபகர மரணம், அதில் முதல் குற்றவாளிகளாகப் பள்ளி நிர்வாகம், பொறுப்புகளை நிறைவேற்றத் தவறி நிற்கும் காவல்துறை, கல்வித்துறை, சமூகநலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு போன்ற ஆணையங்கள். இவற்றின் sins of omission and commission, செய்தவை, செய்யத் தவறியவை ஆகியவற்றை அலசுவதும், இனி வருங்காலங்களில் இத்தகையக் கொடுமைகளைத் தவிர்ப்பதும் உடனடிப் பணிகள். ஆனால் அவற்றையும் தாண்டி, அடித்தளமான அமைப்பின் வக்கிரத்தையும் புரிந்து, தெளிந்து, மாற்றுப் பாதையை நோக்கி, இந்தச் சமுதாயத்தின் கவலைகளைத் திருப்ப வேண்டும்.