தங்க ரீகல் -1
தங்க ரீகல் -1
முதன்முதலில் கண்ணாம்பாவுக்குச் செல்வ மகனாகப் பிறந்தேன். அன்னையின் சொல்லுக்கு
இரும்பு இஞ்சிப் போகும். சங்கிலி சுக்கு நூறு.
பின்னொரு நாள் பண்டரிபாயின் புதல்வனாகப்
படித்துப் பட்டம் பெற்றேன். மறுபடியும் பிறந்தது மனோரமாவுக்கு. ஆத்தாளை விஷமருந்த விடுவேனா? காடு கரையைப்போலவே
நீதி வழுவாது பார்த்திருந்தேன். இந்தப் பிறவியில்
எந்த வயிற்றிலும் பிறக்காமல் எடுத்த எடுப்பிலே
மதுச்சாலையில் அமர்ந்திருந்தேன்.
அம்மா? அம்மா எங்கே ? இவன் பிடுங்கல் தாங்கவில்லை. என் கணக்கு சரியானால்
இந்நேரம் அரளி விதையை
அரைத்துக்கொண்டிருப்பாள்.
ஓவியங்கள்: கிடாத்திருக்கை சிவராஜ்
தங்க ரீகல் -2
கணேசனோடு போனால் அழ வேண்டும்.
ராமச்சந்திரனோ கோதாவுக்குக் கூப்பிடுவார்.
ஊதாரி ராதாவோடு சேர்க்கையில்லை.
நம்பியும் மனோகரனும் கெடுமதியர்
என்றாலும் திண்டுக்கல்லுப் போலிருந்தனர்.
தனவந்தர் அசோகன் கண்ணாடிக் கோப்பையில்
வரக்காப்பியை ஊற்றித்தருவார்.
ச்சை... அலுப்பு! அலுப்பு !
வந்தார் ரகுவரன்
‘இந்தா திராட்சை ரசம்!
எழுந்து வாய் கொப்பளி’ என்றாரே
அன்றைக்கு ரட்சிக்கப் பட்டேன்.
மின்னஞ்சல்: ilayanilajohnsundar@gmail.com