திரைக்கு உரமூட்டும் கதை
பண்டைய மரபிலிருந்து தொடங்கி இன்றுவரையிலும் பல வடிவங்களிலும் கதைகள் கொட்டிக் கிடக்கும் மொழிகளில் ஒன்று தமிழ். இங்கே உருவாகும் தமிழ்ப் படங்களில் கதைப்பஞ்சம் இருப்பதைக் காட்டிலும் அவலச் சுவை வேறொன்று இருக்க முடியாது. அஷ்டாவதானத்தில், முடிந்தால் தச, சத அவதானங்களில் நம்பிக்கை கொண்ட தமிழ்த் திரை ஆளுமைகள் கதை, திரைக்கதை, இசை, இயக்கம், நடிப்பு எனக் கூடியவரையிலும் அதிகமதிகமான பொறுப்புகளை ஏற்றுச் செயல்படுவதைப் பெருமையாகக் கருதும் போக்கு இங்கே நிலவுகிறது. சத்யஜித் ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் முதலான பெரும் படைப்பாளிகள் பிறருடைய கதைகளை எடுத்துக்கொண்டு மிகச் சிறப்பான திரை அனுபவமாக அவற்றை மாற்றியிருக்கிறார்கள். ‘எல்லாப் பெருமையும் என் ஒருவனுக்கே’ எனப் பிடிவாதமாக இருக்கும் பல தமிழ்ப் படைப்பாளிகள் பிறருடைய கதைகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவர்களுடைய சொந்தக் கதைகளும் சோபிப்பதில்லை. பிறர் எழுதிய நல்ல கதைகளை எடுத்துக்கொண்டு அவற்றைத் திரைப்படமாக்குவதில் ‘ஏழை படும் பாடு’ முதல் ‘அசுரன்’வரை வெற்றிபெற்ற எடுத்துக்காட்டுக்கள் பல இருந்தும் தமிழ்த் திரையுலகின் பெரும்போக்