நிகழாத குற்றம்
குற்றமும் கருணையும்
இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் தூத்துக்குடி அனுபவங்கள்
(அனுபவப் பதிவு)
வி. சுதர்ஷன்
தமிழில் மு. குமரேசன்
பக். 224
ரூ.275
தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள முறப்பநாடு கிராமத்தின் காவல்நிலைய எல்லைக்குள் ஒரு கொலை நடந்ததாகச் செய்திவந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனூப் ஜெய்ஸ்வால் அங்கு சென்றார்.
“என்ன நடந்தது?” என்று காவல்துறைக் கண்காணிப்பாளர் அனூப் ஜெய்ஸ்வால் நேரடியாகக் கேட்டார். இன்ஸ்பெக்டர், அமைதியாகத் தரையில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணைச் சுட்டிக் காட்டினார். “அவளுக்கும் அவள் கணவனுக்கும் சண்டை. அவள் தன் கணவனைக் கொலை செய்துவிட்டாள்.” அவள் ஒரு பழைய, நைந்து போன சேலை அணிந்திருந்தாள். அவள் ரவிக்கையும் கிழிந்திருந்ததை அனூப் பார்த்தார். கொலை நடந்த அவர்களது வீட்டிலேயே உடல் கிடந்தது. விசாரணை முடிந்து, உடலைப் பிணக் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வாடகை வண்டிக்காகக் காத்திருந்தனர். கொலைக் கருவி கைப்பற்றப்பட்டுவிட்டது. பெண்கள் அடுப்பெரிக்கப் பயன்படுத்தும் விறகைப் பிளக்க உபயோகிக்கும் சிறிய கைப்பிடி கொண்ட கோடாரி. இன்ஸ்பெக்டர், கண்காணிப்பாளரை அமருமாறு கேட்டுக்கொண்டார். தேநீர் வாங்கிவர ஆளனுப்பினார்.
அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துகொண்டிருந்தனர்.
நடந்தவற்றைப் பற்றிக் கிடைத்த தகவல்கள் இவைதாம்:
கொலை செய்யப்பட்டவன் முன்கோபி, குடிகாரன். கணவனும் மனைவியும் வயலில் கூலி வேலை செய்தனர். அவர்களது சிறிய குடிசைக்கு வெளியே ஒரு துண்டு நிலம் இருந்தது. கால் ஏக்கர் அளவுக்கு இருக்கலாம். அதில் அவள் கொஞ்சம் காய்கறிகள் பயிரிட்டாள். அவர்களுக்குப் பருவமடைந்த ஒரு மகள் இருந்தாள். 12 அல்லது 13 வயது இருக்கலாம். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை நடந்தது. அவள் பணம் தரவில்லையென்றால் அவன் அவளை வசைபாடி மகளின் கண்முன்னேயே அடிப்பான். பணம் கொடுத்தால், குடித்துவிட்டு வீட்டுக்கு வருவான். அவனுக்கு மனைவியுடன் உடலுறவு கொள்ள வேண்டும். அந்தச் சிறிய குடிசையில் மகளும் இருப்பதை அவன் பொருட்படுத்துவதில்லை. அவன் குடித்தாலும் குடிக்கவில்லையென்றாலும் மனைவியை அடிப்பான். அம்மாவைக் காப்பாற்ற மகள் குறுக்கே வந்தால், மகளுக்கும் அடி விழும்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒருமுறை அவள் உடலுறவு கொள்ள மறுத்தாள். மகள் வளர்ந்துவிட்டாள், அது சரியல்ல என்று சொன்னாள். “சரி, நீ மறுத்தால், அவள் இருக்கிறாள்” என்று அவன் மகளின் மீது பாய்ந்தான். அவளைத் திட்டினான். அரிவாளை எடுத்து வீசினான். மகள் கத்தினாள். விலகி ஓடினாள். அவளது இடது காலில் முட்டிக்குக் கீழே வெட்டு விழுந்தது. ஆடுதசையில் ரத்தம் கொட்டும் ஆழமான வெட்டு. அம்மாவும் மகளும் அலறிக்கொண்டே ஓடினார்கள். உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தனர்.
கொலை செய்யப்படுவதற்கு முந்தைய இரவு அவன் குடித்துவிட்டு வந்தான். வெறித்தனமாக மனைவியைப் பிடித்திழுத்தான். அவர்களுக்குள் வாக்குவாதம். அவளுக்குச் சில அடிகள் விழுந்தன. அவள் அவனைப் பிடித்துத் தள்ளினாள். அவன் கீழே விழுந்தான். எழுந்து உட்கார்ந்தவன், தான் சொல்வதைப் போல் நடந்துகொள்ளவில்லையென்றால் மகளைக் கொன்றுவிடுவேன் என்றான். சென்ற முறை மாதிரி அரைகுறையாக அல்ல, இந்த முறை நிச்சயம் முடித்துவிடுவேன் என்றான். மகள் அலறிக்கொண்டு ஓடி அம்மாவின் பின்னால் ஒளிந்துகொண்டாள். அவன் தட்டுத் தடுமாறி எழுந்து அரிவாளை எடுத்துக் கொண்டு கத்திக்கொண்டே மகளை நோக்கி ஓடினான். மனைவி யோசிக்கவே இல்லை. குறுகிய கைப்பிடி கொண்ட கோடாரியை எடுத்தாள். கணவனை வெட்டினாள். இரண்டு வெட்டு. முதல் வெட்டு வலது கண்ணின் அருகே விழுந்து அவன் காதை வெட்டி எறிந்தது. அவன் அலறிக்கொண்டிருந்தபோதே இரண்டாவது வெட்டு விழுந்தது. இம்முறை இன்னும் வேகமாக. கோடாரி கழுத்தில் குறுக்கு வாட்டில் இறங்கியது. அடியற்ற மரம்போல் விழுமுன் அவளது ரவிக்கையைப் பிடித்தான். நைந்துபோன, பழையதான அந்த ரவிக்கை கிழிந்து அதன் ஒரு பகுதி அவன் கையோடு வந்தது. மகள் அலறினாள்.
அனூப் ஜெய்ஸ்வால்
காவல் கண்காணிப்பாளர் அனூப் அந்தப் பெண்ணுடன் சிறிது நேரம் பேசினார். தன்னைத் தூக்கில் போடுவார்கள் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அதைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. “என் புருசன் என்ன அருவாளால வெட்டியிருந்தாலும் எனக்கு கவலையில்ல. நான் சாக கவலப்படல. ஆனா என் மக?” என் மகளின் விதி இதுதானா?” அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. “நா ஜெயிலுக்கு போயிட்டா, என் மகள யார் பாத்துக்குவாங்க? அவளுக்கு என்ன ஆகும்?” அவள் தன் மகளைப் பற்றியே கவலைப்பட்டாள்.
கண்காணிப்பாளர் அனூப் இன்ஸ்பெக்டரிடம் சொன்னார் - “நாம் இந்தச் சம்பவத்தைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்று நினைக்கிறேன். சட்டத்தைவிட வாழ்க்கை மிகப் பெரியது. அவள் கொலைக் குற்றவாளியல்ல. நேரில் பார்த்த ஒரே சாட்சி அவளது மகள்தான். அவள் என்ன சொன்னாள்?” என்று கேட்டார். அவளது வாக்குமூலத்தைப் பெறவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். அந்தப் பெண் எங்கே என்று அனூப் கேட்டார். அவள் வராந்தாவில் இருந்தாள். கூப்பிட்டதும் அழுதுகொண்டே ஓடிவந்து தன் அம்மாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். காவல் கண்காணிப்பாளர், இன்ஸ்பெக்டரிடம் அந்தப் பெண் விவரித்ததை அப்படியே பதிவு செய்யுமாறு சொன்னார்.
அவ்வாறே பதிவு செய்யப்பட்ட பின், அவர் கேட்டார்: “கொலை எங்கே நடந்திருக்கிறது? அது வெறும் தற்காப்பு. சட்டப்படி, ஒருவரைக் கொலை செய்ய முயற்சிக்கும்போது, அதைப் பார்த்துக்கொண்டிருப்பவர் தலையிட்டு, அந்த நபரைக் காப்பாற்றுவதற்காக, கொலைசெய்ய முயற்சிப்பவரைக் கொலை செய்ய நேரலாம். அதுவும் தற்காப்பாகவே கருதப்படும். சில மாதங்களுக்கு முன்பே அவளது கணவன் மகளுக்குப் பெருந்துன்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் காயப்படுத்தியிருக்கிறான். மகளைக் கொலை செய்துவிடுவதாகத் தொடர்ந்து பயமுறுத்திவந்திருக்கிறான். அவன் மனைவியையும் மகளையும் கொடுமைப்படுத்திய விதம், பிரயோகித்த வன்முறை, அவள் மனதில் இவன் தன் மகளைக் கொன்றுவிடுவான், பின் தன்னையும் கொன்றுவிடுவான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவள் அவனை எச்சரித்திருக்கிறாள். அவன் கேட்கவில்லை. அவன் அரிவாளை எடுத்துக்கொண்டு மகளைக் கொல்லும் நோக்கத்துடன் விரட்டியிருக்கிறான். அவன் கொன்றுவிட மாட்டான் என்று நம்ப இடமில்லை. அவன் ஏற்கெனவே அவளை வெட்டியிருக்கிறான் அது வெறும் அச்சுறுத்தல் இல்லை. அவளது மகளின் உயிருக்கு ஆபத்து நிச்சயமாக இருந்திருக்கிறது. முதல் தாக்குதலால் மகள் இன்னும் நொண்டிக்கொண்டிருக்கிறாள். அவளது செயல் தற்காப்புத்தான். கொலை அல்ல. முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல. தன் மகளின் பாதுகாவலர் என்ற வகையில் அவளது நியாயமான நோக்கத்தில் ஐயத்திற்கிடமில்லை. அவளது மகளைக் காப்பாற்றவோ, உதவிக்கு வரவோ வேறு யாரும் இல்லை. அவள் ஒரு கிரிமினல் அல்ல. அவளது செயல் தற்காப்புத்தான்.”
இப்படிக் கூறிய அனூப், அவளைக் கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார்.
மகள் தன் வாக்குமூலத்தைத் தந்துகொண்டிருக்கும்போது டி.எஸ்.பி. சொக்கலிங்கம் அங்கு வந்தார்.
“இல்லை சார். இதை நாம் முடிவு செய்யக் கூடாது. நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். நாம் யார் முடிவு செய்ய?”
கண்காணிப்பாளர் அனூப் டி.எஸ்.பியைக் கேட்டார். “ஏன் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்? ஒரு கும்பல் தாக்குகிறது. போலீஸ் சுடுகிறது. நீங்கள் விசாரணை நடத்துகிறீர்கள். அவர்கள் மீது வழக்கா போடுகிறீர்கள்? தற்காப்பு என்று முடிவு செய்த பின் வழக்கு எங்கிருந்து வருகிறது? வழக்குத் தொடுத்தால்தான் நீதிமன்றம் முடிவு செய்ய முடியும். நாம் பிரிவு 302இன் கீழ் பதிவு செய்வோம். இங்கு நடந்ததை அப்படியே பதிவு செய்வோம். நம்முடைய முடிவு இங்கு நடந்தது கொலையல்ல என்பதுதான். அதை அனுப்புவோம் அதற்கு மேல் செய்ய ஒன்றும் இல்லை. எப்.ஐ.ஆர். நீதிமன்றத்திற்குப் போக வேண்டும். வழக்கை முடிவு செய்ய நீதிமன்றத்திற்குப் போக வேண்டும் அவ்வளவுதான்” என்றார்.
டி.எஸ்.பி. அமைதியானார். இன்ஸ்பெக்டர், டி.ஐ.ஜி.யிடம் பேச வேண்டும் என்றார். டி.ஐ.ஜி. ஜாபர் அலி, கண்காணிப்பாளரை அழைத்து, நீதிமன்றம்தானே முடிவு செய்ய வேண்டும் என்றார்.
“ஏன் சார்? ஏன் என்று சொல்லுங்கள். ஒரு விசாரணை அலுவலர் குற்றப் பத்திரிகை எழுத விரும்பாதபோது அதை ஏன் செய்ய வேண்டும்? ஒரே விஷயம், அவர் காரணங்கள் சொல்ல வேண்டும். நான் தற்செயலாக இங்கிருந்தேன். எனவே நான் காரணங்களைப் பதிவு செய்திருக்கிறேன்.”
“சரி. ஆனால் அரசு வழக்கறிஞரிடம் கலந்தாலோசியுங்கள்” என்றார் டி.ஐ.ஜி.
கண்காணிப்பாளர் அனூப், காவல் நிலையத்தை விட்டுச் செல்லு முன் இந்த வழக்கில் யாரையும் கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுச் சென்றார். இன்ஸ்பெக்டர், அந்தப் பெண்ணையும் மகளையும் வீட்டிற்குப் போகலாம் என்று சொல்லியனுப்பிவிட்டார். அனூப் காரை நோக்கிச் சென்றபோது, அந்தப் பெண் அங்கே உட்கார்ந்திருந்தாள். தன் மகளைக் கட்டித் தழுவியபடி. நிம்மதியாக அழுதபடி.
அரசு வழக்கறிஞரைக் கலந்தாலோசித்த பின் அந்த வழக்கு ஒரு வார காலத்திற்குள் முடிவு செய்யப்பட்டது. அங்கு குற்றம் ஏதும் நிகழவில்லை.
மதுரை புத்தகக் காட்சி 2022ஐ முன்னிட்டு வெளியாகவிருக்கும் புதிய நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இவை
(நூலிலிருந்து ஒரு பகுதி)