கைக் கூட்டம்
கைக் கூட்டம்
இவை என்னுடைய பழைய கைகள்
இவை பழைய கைகள் என்ற புதிய கைகளை வைத்து
அந்தப் பழைய கைகளைப் பார்த்தேன்
வேறு புதிய கைகள் இருந்தன
அந்தப் புதிய கைகளை வைத்து ஏற்கெனவே இருந்த புதிய கைகளை
ஆச்சர்யமாகத் தொட்டேன்
வேறு புதிய கைகள் தெரிந்தன
ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளை
இன்னொரு கிளையிலிருந்து இன்னொரு கிளை
எல்லா கிளைகளும் எங்கிருந்து எப்படி போகிறதெனக் கைகளைத்
தடவிக் கொண்டிருக்கையில்
நண்பர் ஒருவர் வந்து ஹலோ என்றார்
அவரது இரண்டு கைகளை எனது எல்லா கைகளாலும் பிடித்துக்
குலுக்கி ஹலோ என்றேன்
ஒரு இலட்சம் ஆண்டுகள்
அவனது ஏ டி எம் பின் நம்பரைக் கேட்டு
சாகிற அளவிற்கு அவனை அடித்தார்கள்
அவன் எல்லாவற்றையும் சொல்லத் தயாராகிவிட்டான்
தன்னுடைய மகளைத் தன் மகள் இல்லையென நினைத்த
மனத் தோற்றம்
தன்னுடைய தந்தையின் கள்ளக் காதலிப் பெயர்
மனைவியோடான உறவில் நினைத்துக்கொள்கிற பெண்கள்
வருத்தம் தருகின்றவர்களை மன அரங்கில் கொன்று கிடத்துகிற முறை
ஒன்றைப் பிடித்து ஒன்றைப் பிடித்து அப்படியே
பரம்பரைக் கொடிக்கால் வழியாகத் தாவித் தாவி இங்கு வந்த விதம் என
ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும் நினைவில் இருந்த
எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்
அவர்கள் ஏ டி எம் அட்டையைக் கீழே போட்டு
ஒன்பதாம் நூற்றாண்டிற்கு எங்களை அழைத்துச் செல்ல முடியுமா
அது போதும் என்றதற்கு
அந்த வழியாகத்தானே வந்தீர்கள் அங்கேயே ஒரு ஓரத்தில்
ஒதுங்கி நின்றிருக்கலாமே என்றவனைத் திரும்பவும் சாவடி அடித்து
அவனது ஏ டி எம்மிலிருந்த பணத்தை வழித்துக் கிளம்பினார்கள்
அவன் எழுந்து ஒரு இலட்சம் ஆண்டுகளின் கண்களால்
அவர்கள் போய்விட்டார்களா எனப் பார்த்தான்
மின்னஞ்சல்: selvasankarand@gmail.com