வென்றிலது என்ற போதும்…
சரஸ்வதி காலம்
(கட்டுரைகள்)
வல்லிக்கண்ணன்
பதிப்பாசிரியர்
பழ. அதியமான்
பக்.176
ரூ.225
தமிழில் ஒரு பத்திரிகை தன் பாடுபொருளால் தொடர்புடைய சூழலையே பாதித்து ஒரு புதிய திறப்பை இலக்கிய வரலாற்றில் ஏற்படுத்தியது என்றால் அது 1933இல் தோன்றிய மணிக்கொடிதான். அதில் எழுதியவர்கள் பிறகு மணிக்கொடி எழுத்தாளர்கள் எனப்பட்டனர். அவர்களும் அவ்விதழ்ப் பெயரை ஒரு மகுடம்போல் சூட்டிக்கொண்டனர். ஓரிரு கதைகளை மட்டுமே மணிக்கொடியில் எழுதியோர்க்கும் சிலர் அந்த மகுடத்தைச் சூட்டியபோது, இல்லை இல்லை, அவர்களுக்கு அத்தகுதி இல்லை என்று எதிர்க்குரல்களும் எழுந்தன. மணிக்கொடிக்குப் பொன்விழா எடுத்து அப்புகழைத் தக்கவைக்கும் முயற்சிகளும் நடந்தன. சென்னையில் ‘சிட்டி’யின் முயற்சியில் பொன்விழா நிகழ்ந்தது. அதையொட்டி, மணிக்கொடியின் புகழை ஏற்றுக்கொண்டு ஆனால் அதே சமயம் அதன் போக்கை வரையறுக்கச் சிறப்பு மலர் ஒன்றுகூட வெளிவந்தது. அதைப் பதிப்பித்தவர் வே.மு. பொதியவெற்பன். மணிக்கொடியைக் குறித்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. ‘விடியல்’ கே.எம். வேணுகோபால் ஒரு நல்ல ஆய்வைச் செய்தார். மணிக்கொடியின் மூன்று ஆசிரியர்களுள் வ.ரா.வைப் பற்றி நானும் டி.எஸ். சொக்கலிங்கம் பற்றி பா. மதிவாணனும் ஆய்வு செய்தோம். ‘ஸ்டாலின்’ கே. ஸ்ரீனிவாசனை ஏனோ யாரும் கண்டுகொள்ளவில்லை. மணிக்கொடி இதழ்களைப் பாதுகாக்கும் முயற்சிகளும் நடந்தன. ஆ.இரா. வேங்கடாசலபதி அதில் ஈடுபட்டார். அதில் தகராறுகளும் கிளர்ந்தன. ஒரு தரப்பை ஆதரித்து நானும்கூட எழுதினேன். நவீன இலக்கியத்தின் ஒரு அடையாளக் கல்லாக மணிக்கொடி நிலைநின்றுவிட்டது.
இம்முயற்சிகளின் பின்னணியில் மணிக்கொடியின் சாதனைகளை ஆவணப்படுத்தி எதிர்வரும் தலைமுறைக்குக் கடத்த நினைத்தார் ‘தீபம்’ நா. பார்த்தசாரதி. அரசியல் மணிக்கொடியை இலக்கிய (சிறுகதை) மணிக்கொடியாக மாற்றிய பி.எஸ். ராமையா, மணிக்கொடி நினைவுகளைத் தீபம் இதழில் எழுதினார். தொடராக வெளிவந்தபோது அடையாத புகழை, நூலாக்கத்திற்குப் பிறகு அது பெற்றது. பி.எஸ். ராமையாவுக்குச் சாகித்திய அகாதெமி விருது (1982) கிடைத்ததும், அந்நூலைப் படித்த வாசகர்கள் மிகுதியாயினர். மணிக்கொடி என்ற இலக்கிய அடையாளம் நவீன வரலாற்றில் சூழலின் ஆதரவோடு கட்டமைக்கப்பட்ட கதையின் சுருக்கம் இது. நான்கு பத்தாண்டுகளாக அந்தக் குறிப்பிடத்தக்க இடத்தை மணிக்கொடி தீவிர வாசகப் பரப்பின் ஊடாகவும் தக்கவைத்துள்ளது. காலச்சுவடு 2005இல் சேலத்தில் நடத்திய மணிக்கொடி கருத்தரங்குக்கும் இதில் பங்குண்டு.
தமிழின் மறுமலர்ச்சி அடையாளமான மணிக்கொடித் தொடரின் வெற்றியையடுத்து, மறுமலர்ச்சியின் அடுத்த கட்டமான இடதுசாரித்தன்மையும் தூய இலக்கியப் பகுதியும் கலந்த இதழாக உருவான வ. விஜயபாஸ்கரனின் சரஸ்வதி பற்றியும் நா.பா. இதே முறையில் ஒரு தொடரைத் தீபத்தில் தொடங்கினார். மணிக்கொடியோடு தொடர்புடைய பி.எஸ். ராமையாவைக் கொண்டு எழுதுவித்ததுபோல் சரஸ்வதியில் எழுதிய வல்லிக்கண்ணனை அத்தொடரை எழுத வேண்டினார். சரஸ்வதிக்குப் பிறகு தீபம் இதழின் சாதனையையும் வல்லிக்கண்ணன் பதிவு செய்தார்.
குறிப்பிட்ட பத்திரிகைகளை முன்வைத்து இலக்கியத்தின் போக்கையும் காலத்தின் நிலையையும் விவரித்துச் சொல்லும் மேற்சொன்ன மூன்று முயற்சிகள் 1980களில் பதிவாயின: ‘மணிக்கொடி காலம்’ (1980, பி.எஸ். ராமையா), ‘சரஸ்வதி காலம்’
வல்லிக்கண்ணன்
(1980, வல்லிக்கண்ணன்), ‘தீபம் யுகம்’ (1999, வல்லிக்கண்ணன்). 1930முதல் 1980கள்வரையிலான அரை நூற்றாண்டுக் கால நவீன தமிழ் இலக்கிய ஊற்றுக் களத்தை ஒருவாறு மதிப்பிட்டுக் கொள்ள இந்த மூன்று முயற்சிகளும் பயன்படுவன. ‘மணிக்கொடி காலம்’ வாசகரிடையே பரவிய அளவு, ‘சரஸ்வதி காலம்’ சென்று சேரவில்லை. தேர்ந்த தீவிர வாசகர்கள் தேடும் நூலாகவே ‘சரஸ்வதி காலம்’ மறைந்து வாழ்கிறது. ‘தீப’த்தின் ஒளி, அறை அளவுகூடப் பரவியதாகத் தெரியவில்லை. ‘சரஸ்வதி காலம்’ வாசகரிடையே பரவ வேண்டும் என்ற தேவை பற்றி இந்நூல் மறுபதிப்பாகிறது.
சாகித்திய விருது எதிர்ப்பு
இன்று நேற்றல்ல, தொடங்கிய காலந்தொட்டே விமர்சனத்துக்குள்ளாகிவருகிறது சாகித்திய அக்காதெமி விருது. அதைத் தொடங்கிவைத்த பெருமை ‘சரஸ்வதி’க்கும் சேரும். 1954இல் தோன்றிய சாகித்திய அக்காதெமி, தன் முதல் தமிழ் விருதை, 1955இல் ரா.பி. சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ நூலுக்கு வழங்கியது. அக்காதெமி விதிப்படி குறிப்பிட்ட ஓர் ஆண்டின் விருதுக்கெனத் தேர்தெடுக்கப்படுகிற நூல், அந்த ஆண்டுக்கு முந்தைய மூன்றாண்டுக் காலத்தில் முதல் பதிப்பாகப் பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ‘தமிழின்ப’த்தின் மூன்றாம் பதிப்புதான் 1954இல் வந்திருந்தது. இது ஒரு தவறு. 1957இல் எவருக்கும் பரிசு அறிவிக்கப்படவில்லை. குறிப்பிட்ட காலத்தில் (அதாவது 1954, ‘55,’ 56) விருதுக்குத் தகுதியுள்ள நூல் எதுவும் வெளியாகவில்லை என்று கருதி அவ்வகையாக முடிவு செய்யப்பட்டது. 1958இல் ராஜாஜியின் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ பரிசு பெற்றது. அதன் முதல் பதிப்பு 1956இல் வந்திருந்தது. பரிசு பெறத் தகுதியுள்ள நூல் எதுவும் வெளிவரவில்லை என்று சாகித்திய அக்காதெமி குறித்திருந்த 1954-1956 என்ற மூன்று ஆண்டிற்குள் அப்புத்தகம் வெளிவந்திருந்ததால் இவ்விருது வழங்கப்பட்டதும் தவறு. இதுபோன்ற தகவல்களையெல்லாம் வைத்து விஜயபாஸ்கரன் ஒரு கண்டனத்தை ‘நோக்கமும் செயலும்’ என்ற தலைப்பில் எழுதினார். அதைச் சாகித்திய அக்காதெமிக்கும் அனுப்பிவைத்தார். இதன் தொடர்பில் ரகுநாதன், எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோரும் தொடர்ந்து எழுதினர். இது சரஸ்வதியின் எதிர்ப்புணர்வைக் காட்டும் முக்கியமான தடயமாகும். இவ்விவாதமும் இந்நூலில் விரிவாகப் பதிவாகியுள்ளது
திருக்குறள் இலக்கியமா?
திருக்குறள் தமிழர்களின் பெருமிதம். அப்படியாகத் தொடர்ந்து அது இருந்துவந்திருப்பதைப் போலவே வேறு சிலருக்கு (இவரை மாற்றார் என்றழைப்பது தமிழர் மரபு) அது ஏதோ ஒருவகையில் தொந்தரவு செய்துகொண்டேயும் இருந்துவருகிறது. அதைத் திருக்குறளின் மேலுள்ள அசூயை என்று சொல்வதைவிடத் திருக்குறளைப் பெருமிதமாகப் பேசுகிறவர்களின் மீதான வெறுப்பின் நிழல் என்பதாகப் புரிந்துகொள்ளலாம். மாற்றார் காலந்தோறும் வேறு வேறு காரணம் சொல்லித் திருக்குறளின் மதிப்பைக் குறைக்க முயல்வதை வரலாற்றில் காணமுடியும். திருக்குறள் பேசிய / பேசாத சமயம் சார்பாகக் கருத்துக் கூறி அதைத் தமிழரிடமிருந்து பிரிக்க நினைத்தது ஒரு காலம். இதன்பால் இல்லாத பொருள் இல்லை என்று அன்பர்கள் புளகாங்கிதப்பட்டபோது, ‘எனக்குத் தலையை வலிக்கிறது. அதற்கு வள்ளுவர் மருந்து சொல்லியிருக்கிறாரா, பார்த்துச் சொல்லுங்கள்’ என்று மாற்றார் கேலியாகக் கேட்ட காலமும் நினைவில் இருக்கிறது. பெண்களை இழிவுபடுத்தியதில் வள்ளுவருக்கு இணையாக உங்களால் ஒருவரைச் சுட்ட முடியுமா என்று கேட்ட ‘தாய் எழுத்தாளரை’ நான் கண்டதுண்டு. பெண்வழிச் சேறல் என்ற அதிகாரம் அவர்களுக்கு இனிப்புப் பலகாரம். சமீபத்தில் குலத்துக்கு ஒரு நீதி காட்டிய மனுநீதிக்கு எதிராய்த் தமிழ்நாடு பொங்கியபோது, திருக்குறளில் மனுநீதிக் கருத்துகள் இல்லையா என்றனர் அவர்கள். இந்த வகையில் வரும் மாற்றாரின் வாதத்துக்கும் சரஸ்வதி வாய்ப்பு தந்திருந்தது. பூரண ஜனநாயகம் பொலிந்த பத்திரிகை அல்லவா? இலக்கியமல்ல திருக்குறள், அது வெறும் அறநூல் என்று வல்லிக்கண்ணனும் க.நா.சு.வும் எழுதினர்.
“பழமொழிகளுக்கும் நீதி, சட்டம் போன்றவற்றை நிலைநாட்டுகிற நூல்களுக்கும் இலக்கியத்தில் இடம் கிடையாது. கம்பராமாயணத்தையும் சிலப்பதிகாரத்தையும் காரைக்காலம்மையாரையும்விடத் திருக்குறள் பலருக்குப் பல சந்தர்ப்பங்களில் மேற்கோள்காட்டவும் கட்சியை ஸ்தாபிக்கவும் பண்பு பேசவும் தொழில் நடத்தவும் பயன்பட்டிருக்கலாம். ஆனால் அதனாலெல்லாம் அது இலக்கியமாகிவிடாது” என்பது இந்த எழுத்தாளர்தம் ஆய்வு முடிவு. ‘கால்களையாள் பெய்தாள்’ போன்ற தொடர்கள் எல்லாம் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. இத்தகைய விமர்சனங்களின் பிரசுர காலம் இன்னும் காலாவதியாகிவிடவில்லை. வேறு வேறு வடிவங்களில் திருக்குறள் எதிர்ப்பு நெருப்பு கனன்றுகொண்டேதான் இருக்கிறது. அத்தகைய 1950களின் திருக்குறள் வெறுப்பின் சாட்சியத்தை இந்த நூலில் படித்து மறுக்கலாம் (அ) மருகலாம்.
விற்பனை, ஆதரவு போன்ற லௌகீக லாபங்களைப் பற்றிக் கவலைப்படாமல், பல இலக்கிய சர்ச்சைகளில் தயங்காமல் தொடர்ந்து ஈடுபட்டது சரஸ்வதி.
(பழ. அதியமான் எழுதிய முன்னுரையிலிருந்து)