‘இசைக்கு மிஞ்சின இன்பம்’
கருவளையும் கையும்
கு.ப.ரா. கவிதைகள்
பதிப்பாசிரியர்
பெருமாள்முருகன்
பக். 104
ரூ.130
கு.ப.ரா. தம் கவிதைகளை ‘வசன கவிதை’ என்றே கூறுகிறார். அக்காலத்தில் புதுக்கவிதை, நவீன கவிதை ஆகிய சொற்கள் வழங்கவில்லை. இப்போது வசன கவிதைக்கும் நவீன கவிதைக்கும் வேறுபாடு காட்டுகின்றனர். இன்றைய அளவுகோலை வைத்துப் பார்த்தால் கு.ப.ரா.வின் கவிதையை வசன கவிதை வகைக்குள் அடக்குவதா, புதுக்கவிதை அல்லது நவீன கவிதையா என்பது விவாதத்திற்கு உரியது. முன்னோடிகளின் கவிதைகளை அப்படிக் கறாராக வகைப்படுத்திக் கூறுவது கடினம். வசன கவிதைக் கூறுகளும் நவீன கவிதைக்கான இயல்புகளும் இணைந்து அமைந்தவை அவை. கு.ப.ரா.வின் கருப்பொருள்கள் எல்லைக்கு உட்பட்டவையாக இருக்கலாம். ஆனால் அவர் வடிவ உணர்வு கொண்டவர் என்பதை இக்கவிதைகள் நிறுவுகின்றன.
நாட்டுப்பாடல் வடிவத்தைக் கையாண்டு எழுதிய நான்கு கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. விமோசனப் பள்ளு, ராக்கி நெனப்பு, வாழ்க்கை வழி, பொங்கல் ஆகியவை. ‘கள்ளுப் போனாப் போகட்டும் போடா’ என்று முடிவதாக வல்லிக்கண்ணன் கூறும் கவிதை ஒன்றையும் எடுத்துக்கொண்டால் மொத்தம் ஐந்து. அவ்வடிவத்திற்கு ஏற்ற பேச்சு மொழியை அவற்றில் கையாண்டிருக்கிறார். ‘விமோசனப் பள்ளு’ கவிதை ஹிந்துஸ்தான் இதழில் வெளியாகியுள்ளது. கு.ப.ரா.
அப்போது அவ்விதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜியின் முன்னெடுப்பில் சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு அமல்படுத்தப் பட்டது. அதன் விளைவுகளை அறிக்கையாக அப்போதைய ஆட்சியர் சமர்ப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் எழுதப்பட்ட பாடல் இது. மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியின் கூற்றாக இதை அமைத்துள்ளார் கு.ப.ரா.. அனேகமாகப் பத்திரிகைத் தேவை கருதி இதை அவர் எழுதியிருக்கலாம். ‘வெள்ளக்கார ராசாகிட்டெவொரு சேலத்து சாமி மந்திரியாம்; புள்ளெகுட்டி நல்லாயிருக்கணும்’ என்று ராஜாஜியை வாழ்த்துகிறாள் அப்பெண். பாரதியாரின் ‘புயற் காற்று’ கவிதை கணவன் - மனைவி உரையாடலாக அமைந்திருக்கிறது. ‘காற்றடிக்குது கடல் குமுறுது, கண்ணை விழிப்பாய் நாயகனே’ என்று தொடங்கும் அப்பாடலின் சந்தத்தைப் பின்பற்றித் தம் பாடலைக் கு.ப.ரா. எழுதியுள்ளார்.
இது பிரச்சாரப் பாடல்தான். பிரச்சாரத்திற்குக் கவிதையைப் பயன்படுத்துவதில் உடன்பாடு இல்லாதவர் கு.ப.ரா.. பாரதிதாசன் கவிதைகள் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் ‘பிரச்சாரத்திற்கு அவர் கவிதையை அடிமைப்படுத்த வேண்டாமென்று நான் அவருடைய பக்தர்களில் ஒருவன் என்ற முறையில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்’ (மணிக்கொடி, 15-06-1938) என்று எழுதுகிறார். பாரதிதாசனின் ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ குறுங்காவியத்தைப் பற்றிப் பேசும் அவர் அதில் பிரச்சாரம் வரும் பகுதிகளை விரிவாக எடுத்துக் காட்டுகிறார். சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக் கவி, வீரத்தாய் ஆகிய மூன்றையும் ‘பிரச்சாரச் செய்யுட்கள்’ என்கிறார். ஆகவே ‘விமோசனப் பள்ளு’ போன்ற பாடல்களை எழுதுவதில் கு.ப.ரா. உடன்பாடு இல்லாதவர் என்றாலும் பத்திரிகைத் தேவை கருதி எழுதும் நிர்ப்பந்தம் நேர்ந்திருக்கிறது.
மற்ற மூன்றும் வேறு மாதிரியானவை. ‘வாழ்க்கை வழி’ பாடல் வண்டிக்காரன் கூற்று. மிக எளிமையான வடிவம்; பேச்சு மொழி. நாட்டுப்பாடலை ஆழமாக உள்வாங்கிய திறன் இதில் வெளிப்படுகிறது. ‘ஏண்டி புள்ளே, தாளு கட்டே எங்’ணே கொண்டு போறே?’ என்று நடந்து செல்லும் பெண்ணை நோக்கிய கேள்வியில் தொடங்கும் பாடல் அவளை வண்டியில் ஏறிக்கொள்ளச் சொல்வதாக முடிகிறது. தன் வண்டியைக் ‘கூண்டில்லாத மொட்டை வண்டி’ என்கிறான். கூண்டிருக்கும் வண்டி என்றால் அவள் ஏறத் தயங்கலாம். மொட்டை வண்டியில் ஏறினால் எல்லோருக்கும் தெரியும் வண்ணம் போகலாம். ‘துட்டு வாணாம் சும்மா ஏறு, பேசிக்கிட்டே போவோம்’ என்று சொல்லி அவளுக்கு அழைப்பு விடுக்கிறான். எந்த உள் அர்த்தமும் பார்க்காமல் வெளிப்படையாகப் பொருள் கொண்டாலே சுவையான பாடலாக அமைகிறது. வாய் விட்டு வாசிக்கும்போது சுவை கூடுகிறது.
இதற்கு ‘வாழ்க்கை வழி’ என்று தலைப்பிட்டுள்ளார். நீண்டு கிடக்கும் வழியில் வண்டிக்காரன் பயணம் போன்றதுதான் நம்முடையது. வண்டியில் ஒன்றுமில்லை; வெற்று வண்டிதான். ஏதோ இருப்பது போலப் பாவனை செய்து கொள்கிறோம். சுமைகளை எல்லாம் இறக்கிப் போட்டுவிட்டு ஏறி அமர்ந்து சும்மா பேசிக்கொண்டே போகலாம். எந்தச் சுமையும் வேண்டாம்; சும்மா ஏறுங்கள் என்று கு.ப.ரா. அழைப்பு விடுக்கிறார். வண்டிக்காரன் குரலல்ல; கு.ப.ரா.வின் குரல். வாழ்க்கை வழி; மொட்டை வண்டி; சுமைக் கட்டு; சும்மா; பேச்சு. எத்தனையோ அர்த்தங்களுக்குப் பாடல் தலைப்பு நம்மை இட்டுச் செல்கிறது. புழக்கத்தில் உள்ள பாடல் வடிவத்திற்குப் புதுப்பொருள் ஏற்றி அதை நவீன கவிதையாக்குகிறார் கு.ப.ரா..
‘பொங்கல்’ கவிதை இருவிதச் சந்தங்களைக் கொண்ட நாட்டுப்பாடல் வடிவம். கற்பனை வளத்தோடு எழுதிய பாடல். கதிர் ஈன்ற பயிர் வரப்பின் மேல் சாய்ந்து கிடக்கும் காட்சியை ‘புள்ளத்தாச்சி வரப்பு மேல தூங்க’ என்கிறார். சாயாமல் நேராக நிற்கும் பயிர்களை ‘பொன் நிறப் பாம்பு படமெடுத்து ஆடுவதைப் போல’ என்று சொல்கிறார். வெயில் பரவுவதை ‘வெள்ளைக் கோலம்’ என்கிறார். பாடலின் இரண்டாம் பகுதி தாளடிக்கும் செயல் பற்றிய விரிவான வருணனை. தாளைக் கட்டாகக் கட்டுதல், அடித்துத் தூற்றுதல், பதர் பிரித்தல், நெல் கூட்டுதல், குறி போடுதல், கோட்டை கட்டுதல், கரி தீட்டுதல், காவல் வைத்தல் உள்ளிட்ட வேளாண் வேலைகளைப் பாடல் விவரிக்கும் பாங்கு வியக்கச் செய்கிறது. இக்கவிதை வழங்கும் வேளாண் சொற்களைக் கொண்டு அக்கால நெல் வேளாண்மை முறை பற்றி ஆராயலாம். அழகான காட்சிகளை விவரிக்கும் இந்தப் பாடலைப் பொங்கல் பண்டிகையின் போதெல்லாம் கூட்டிசையாகப் பாடலாம் போலிருக்கிறது.
பெருமாள்முருகன்
‘ராக்கி நெனப்பு’ பாடல் பலவித விமர்சனங்களுக்கு உட்பட்டது. ராக்கி என்னும் ‘தீண்டாத சாதிப்’ பெண்ணைப் பார்த்துக் காதல் கொண்ட ஆதிக்க சாதி ஆண் ஒருவனின் குரலாக ஒலிக்கும் பாடல் இது. இயல்பான சந்தம் கொண்ட பாடல் வடிவம்; பொருத்தமான உவமைகள்; தெளிவும் உணர்ச்சியும் இயைந்த சொற்கள் என எல்லாம் இடம்பெற்ற போதும் வெளிப்படையான சாதிக் குறிப்புகளைக் கொண்டிருப்பதால் இப்பாடல் இடறுகிறது. ‘தீண்டாத சாதியவ’, ‘ஏண்டா அ’ங்ணெ போயி பொறந்தா?’, ’மட்ட சாதி ஈன சாதி’, ’கெட்ட பய மவடா’ என வரும் தொடர்கள் இன்று சங்கடத்தையும் கோபத்தையும் தருகின்றன.இவை ‘கவிதை சொல்லி’யின் குரல் என்று சொல்லும் சமாதானம் வலுவுடையதல்ல. ஆதிக்க சாதிக் குரலைக் கடப்பது அத்தனை எளிதல்ல என்பதையே கு.ப.ரா.வின் இக்கவிதையும் உணர்த்துகிறது.
யாப்பிலக்கணத்திற்கு உட்பட்டது போலத் தோன்றும் சில வடிவங்களையும் உருவாக்கியிருக்கிறார். யோகம் கலைதல், கவி ஆகிய கவிதைகளை இத்தகைய வடிவங்களுக்குச் சான்றாகச் சொல்லலாம். மரபான ஓசையை மட்டும் எடுத்துக்கொண்டு எதுகை மோனை ஆகியவற்றை வலிந்து கொண்டுவராமல் இயல்பாக அமையும்படி செய்திருக்கிறார். ‘யோகம் கலைதல்’ மூன்று பகுதிகளாக உள்ளது. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தைப் போன்ற சந்தத்தை முயன்று பார்த்திருக்கிறார். எதுகை, மோனை ஓரளவு பொருந்துகின்றன. நான்கடி இல்லை; மூவடியில் முடித்திருக்கிறார். புணர்ச்சி இலக்கணம் பின்பற்றப்படவில்லை. வாய் விட்டு வாசித்தால் சந்தம் தெரிகிறது. ஆனால் இது மரபுக் கவிதையல்ல. முயன்றிருந்தால் இதை எண்சீராக்கி இருக்கலாம். கு.ப.ரா.வால் முடியாத செயல் அல்ல. தாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கேற்பப் போதுமான இடத்தில் நிறுத்திவிடுகிறார். அதன் முதல் பகுதி:
கரிச்சான் ஒன்று கூரை மேலிருந்து
மருட்சியுடன் மெல்ல மெல்லத் தயங்கி
வரி திறந்து வேதம் பாடக் கேட்டு நான்
அவ்வின்பம் அலையெடுத்த இடத்தைப் பார்க்க
பரிந்து வந்தேன்; பாட்டை நிறுத்திப் பறவை
என்னைக் கண்டு எழுந்தோடி விட்டது!
கு.ப.ரா.வின் கவிதைகளில் இது மிகச் சிறப்பான ஒன்று. கரிச்சான், கோதையொருத்தி, கவியொருவன் என மூன்று பேர்; மூன்று காட்சிகள். உயிர்கள் அதனதன் இயல்பில் ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கச் செயல் கலைக்கும் இன்னொரு இடையீட்டைக் காட்டுகிறது கவிதை. கரிச்சான் பாடுகிறது. பாட்டைக் கேட்டு ரசிக்காமல் பாடும் அதன் உருவத்தைப் பார்க்க வந்ததும் அது பறந்தோடி விடுகிறது. கோதையொருத்தி குளித்து முடித்துத் தன் அழகைக் கண்டு லயிக்கிறாள். அதைக் காணும் ஒருவன் தன் ஏக்கத்தைப் பெருமூச்சாய் வெளியிடு வதைக் கண்ட அவள் ஆடை மறைத்துக் கொண்டு ஓடிப் போகிறாள். கவியொருவன் கற்பனை கொண்டு கவியெழுதும் மனநிலையில் இருக்கிறான். அங்கே செல்லும் இன்னொருவன் கவி மனதைக் கலைத்துவிடுகிறான். மூன்று செயல்களுமே அவரவர் நிலையில் யோகம். அதைக் கலைக்க இன்னொரு வெளிச்சக்தி வந்து சேர்கிறது. யோகம் கலைதல் இயற்கையா? யோகத்தைக் கலைத்தலும் இயற்கைதானா? எப்படியிருந்தாலும் யோகம் கலைந்த துயர் மிஞ்சத்தான் செய்கிறது.
(பெருமாள்முருகன் முன்னுரையிலிருந்து)