செய்யாமல் செய்த உதவிக்கு…
தொல்காப்பியம்
ஒரு பனுவலின் நெடும்பயணம்
(ஆய்வு நூல்)
சிலம்பு நா. செல்வராசு
பக். 152
ரூ.195
தொல்காப்பியம் பனுவலாக உருவாக்கம் பெறுவதற்கு முன்பு அதன் கருத்தியல்கள் வாய்மொழி வழக்காறாகவோ அல்லது வேறு வடிவிலோ தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறான கருத்தியலின் காலத்தை உறுதிப்படுத்த இயலாது என்றே கூற வேண்டி உள்ளது. வரலாற்றுக் காலத்திற்கும் முன்பாகவே தொல்காப்பியக் கருத்தியலுக்கான சமூக நிகழ்வுகள் உருப்பெற்றுவிட்டன. சான்றுக்குக் களவியல் இலக்கண வரையறைக்கான சமூக நிகழ்வுகளைக் கூற முடியும். வேறு வேறு குலங்களை அல்லது குடிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் களித்துக் காதல் கொண்டு உடன்போக்கு மேற்கொள்வதாக இவ்வழக்காறு இருந்துள்ளது. அல்லது ஆண் ஒருவன் தன் உறவினருடன் சென்று வேறு குழுவில் உள்ள பெண்ணைக் கடத்தி வந்து மணமுடித்த சமூக வழக்காறிலிருந்து களவியல் கருத்தியல்கள் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறான புராதனச் சமூக வழக்காறுகளில் இருந்து களவுப் பாடல்கள் தோற்றம் பெற்றுள்ளன. இப்பாடல்கள் யாவும் தொடக்கத்தில் வாய்மொழிப் பாடல்களாகப் பாடியதற்கே வாய்ப்புகள் மிகுதி. வாய்மொழிப் பாடல்களைப் பாணர் மரபினர் கையேற்றுப் பாடினராதல் வேண்டும்.
பாணர் மரபு வாய்மொழிப் பாடல்கள் தமிழ் நிலம் தோறும் பரவிய நிலையில் அவற்றிற்கான குறு இலக்கண வரையறைகள் தோன்றியிருக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறான வரையறைகளே தொல்காப்பியத்தில் என்ப, என்மனார் எனும் மொழி வழியே குறிக்கப்பெற்றிருக்க வேண்டும். எழுத்து மரபு தமிழில்
தோன்றிய பிறகு இலக்கண ஆக்கம் உருப்பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் புலவர் மரபு தோற்றத்தையும் உடன் வைத்து எண்ணுதல் வேண்டும்.
இவற்றையெல்லாம் கடந்து வந்த பின்னரே வரலாற்றுக் காலத்தில் தொல்காப்பியம் தோன்றி இருக்க வாய்ப்புள்ளது. ஆகத் தொல்காப்பியத்தின் காலத்தை ஆராய்வதற்கு முன்னர்த் தொல்காப்பியத்திற்கும் முன்பு உள்ள காலத்தையும் சமுதாயத்தையும் சமுதாய வழக்காற்றையும் உடன் வைத்து ஆராய்தல் தேவை ஆனதாகும்.
தொல்காப்பியக் கருத்தியலின் தோற்றம் பற்றிய செய்திகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்த முடியும்.
1. தமிழரின் புராதன சமூக அமைப்பில் தொல்காப்பிய இலக்கண வரையறைகளுக்கான சில முதன்மை நிகழ்வுகள் தோன்றியுள்ளன. அவை சமூக நிகழ்வுகளாகவும் வழக்குப் பெற்றிருக்க வேண்டும்.
2. அவ்வாறான நிகழ்வுகளை மையமிட்ட வாய்மொழி வழக்காறுகள் அடுத்த நிலையில் உருப்பெற்றிருக்க வேண்டும். நிகழ்வுகளின் தாக்கம் அடிப்படையில் வழக்காறுகள் தோன்றிப் பரவிட வாய்ப்புண்டு.
3. வழக்காறுகள் வாய்மொழிப் பாடல்களாக உருப்பெற்ற நிலையில் அவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டும்.
4. வாய்மொழிப் பாடல்கள் உள்ளிட்டவை மக்கள் வரவேற்பைப் பெற்ற நிலையில் பாணர்களால் கையேற்கப் பெற்று அவை தமிழ் மண்ணில் பரவி இருக்க வேண்டும்.
5. வாய்மொழிப் பாடல்களின் செல்வாக்கும் காலம் செல்லச்செல்லச் சில மரபுக்கூறுகளை உருவாக்கி இருக்க வேண்டும். இம்மரபுக் கூறுகளே பின்னாளில் இலக்கண வரையறைகளாக மாறியிருக்க வேண்டும்.
6. இடைப்பட்ட தமிழ்ச் சமூக வரலாற்றில் தோன்றிய மாற்றங்களையும் கணக்கில் கொள்ளுதல் வேண்டும். ஆநிரை வளர்ப்பும், வேளாண்மை கண்டுபிடிப்பும், உலோகக் கண்டுபிடிப்பும் தமிழ்ச் சமூகத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்தி உள்ளன.
7. இவ்வாறான வரலாற்றுச் சூழலில் தமிழ் எழுத்து உருவாக்கமும் புலவர் மரபு உருவாக்கமும் பெரிதும் கருத்தைக் கவர்வனவாக உள்ளன.
8. இவற்றின் ஊடே தமிழ் என்ற இன, நில, மொழி, எல்லை உருவாக்கங்களைப் பேரரசு உருவாக்கத்துடன் இணைத்து இனம் காண வேண்டி உள்ளது.
9. அகண்ட தமிழகத்திற்கான மொழி இலக்கண வரையறைகளை மேலே கூறப்பெற்ற பாணர் மரபு வழக்காற்றிலிருந்து தோன்றிய மரபுகள் வழங்கி இருக்க வேண்டும்.
10. இவற்றை உள்ளடக்கிய நிலையில் உருவானதே தொல்காப்பியம் என்று முடிவு கூறிட முடியும்.
தொல்காப்பியர் தம் காலத்திற்கு முந்தைய இலக்கண இலக்கிய வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டே தம் இலக்கண நூலை உருவாக்கி இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேற்றுமை இருக்கக் கூடாது. தொல்காப்பியர் காலத்திற்கு முந்தைய வழக்காறுகள் எவை என்பதைத் திட்டவட்டமாக வரையறுக்கப் போதுமான சான்றுகள் இல்லை. என்றாலும் தொல்காப்பியருக்கு முன்பு பன்னெடுங்கால நீட்சிமையில் இலக்கண இலக்கியச் சிந்தனை மரபு உருப்பெற்றுப் பரிணமித்து இருக்க வேண்டும் என்பது சரியானதாகும். இச்சிந்தனை மரபிலிருந்து தொல்காப்பியர் எவற்றைப் பெற்றார் எவற்றைச் சேர்த்தார் எவற்றை நீக்கினார் என்பன விடையறியா வினாக்களாகும். என்றாலும் ஒருசில சான்றுகள் கருத்தியல் பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளன என்று கூற முடியும்.
ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே (23)
சிலம்பு நா. செல்வராசு
எனும் நூற்பா தொல்காப்பியரின் வரிசைத் தேர்வு முறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ‘ஆயர் வேட்டுவர் கிழவர் ஆடூஉத் திணைப் பெயர்’ என்ற நூற்பா ஆக்கமே பொருள் செறிந்ததாக இருக்க ‘ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே’ என்று பிரித்துக் கூறியதற்குக் காரணம் உண்டு. ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர் என்பது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வழக்கிலிருந்த பெயர்களாகும். ‘ஆவயின் வரும் கிழவரும் உளரே’ என்பது தொல்காப்பியர் காலத்தில், சமகாலத்தில் வழக்கிலிருந்த பெயராகும்.
இந்நூற்பா ஆக்கம் மூலம் இரண்டு செய்திகள் புலனாகின்றன. ஒன்று: ஆயர் வேட்டுவர் ஆகிய திணை நிலைப் பெயர்கள் முறையே முல்லை குறிஞ்சிச் சமூக அமைப்பையும் கிழவர் மருதச் சமூக அமைப்பையும் குறியீடுகளாக வெளிப்படுத்தியுள்ளன.
இரண்டு: முல்லை, குறிஞ்சித் திணைக் கோட்பாடுகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வழக்கில் இருந்த சிந்தனை மரபுகளாகும். தொல்காப்பியர் மருத நிலச் சமூக அமைப்பில் வாழ்ந்ததால் அவர் காலத்தில் வழக்கில் இருந்த ‘கிழவர்’ எனும் திணைப்பெயரையும் இணைத்து நூற்பா யாத்திருக்க வேண்டும். இந்த இரண்டு கருத்துகளின் அடிப்படையில் பெறப்படும் முதன்மை வாய்ந்த செய்தி ஒன்று உண்டு. அது வருமாறு: முல்லை, குறிஞ்சி முதலியன வெறும் பாவியல் கோட்பாடுகள் மட்டும் அல்ல. அவை தமிழர் சமூகப் பரிணாம வளர்ச்சியில் உருவான காதல் பாடுபொருள்கள். சங்க காலத்திற்கும் முன்பு தமிழகத்தில் நிலவிய சமூக அமைப்பிலிருந்து காலந்தோறும் ஒவ்வொன்றாகப் பரிணமித்திருக்க வேண்டும்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறை, மனிதச் சமூகப் பரிணாமத்தின் வரிசை முறையாகக் கொண்டு அதன் அடிப்படையில் சங்க அகப் பாடல்களைப் புரிந்து கொள்வதும் ஆராய்வதும் சிறப்பு மிக்கதாகும். இந்த வரிசை முறையில் அகவயப்பட்ட இலக்கண வரிசை முறையாகத் தொல்காப்பியருக்கு முன் உள்ள சிந்தனை மரபை அவர் பின்பற்றி இருக்க வேண்டும். எனவேதான் தொல்காப்பியர்,
ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்
எனத் தனியே கூறி அதன் பின்னர் முல்லை, குறிஞ்சிச் சமூகத்திற்கு அடுத்த பரிணாமச் சமூகமாகிய மருதத்திணைப் பெயரை ‘ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே’ என்று தனியே கூறி இருக்க வேண்டும். முல்லை குறிஞ்சி என்று முல்லை முதலில் இடம்பெற்றமைக்கு முல்லைச் சமூக காலத்தின் சமூக அரசியல் காரணமாகலாம். நெய்தல், பாலைத் திணைப் பெயர்கள் இலக்கண வரையறைகளைப் பெற்றிருக்கவில்லை என்பதைத் தொல்காப்பியர் அடுத்து வரும்
ஏனோர் மருங்கினும் எண்ணுங்காலை
ஆனா வகைய திணைநிலைப் பெயரே
என்ற நூற்பா வழித் தெரியப்படுத்தியுள்ளார். எனவே தொல்காப்பியரின் இலக்கணச் சிந்தனைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் வேட்டை, ஆநிரை, வேளாண்மைச் சமூகத்தை அடியொற்றி வரிசைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருதுகோளைச் சமைக்க வாய்ப்புள்ளது.
(முன்னுரையிலிருந்து)