ஜனவரி 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
பிப்ரவரி 2023
    • கட்டுரை
      வன்நினைவின் நிலம் - சேரன் கவிதைகளில் புதிய திணை
      இங்கிவரை நாம் பெறவே...
      ஈழ ஆஸ்திரேலிய நாடகம்: “எண்ணிக்கை இல்லையெல் கையோங்கு”
    • கதை
      நிலைக்கண்ணாடி
      நினைப்பு
      நீடூழி
    • திரை: விட்னெஸ்
      பார்வையாளர்கள் எனும் திறனற்ற சாட்சிகள்!
    • சுரா பக்கங்கள்
      சிவராமனுக்கு எழுதிய கடிதங்கள் - 5
    • நேர்காணல்: ஆழி செந்தில்நாதன்
      செந்தமிழிலிருந்து செய்தமிழுக்கு
    • அஞ்சலி: எஸ்.பி. சீனிவாசன் (1927 - 2022)
      வண்ணம் சூழ் தூரிகை
    • சிறப்புப் பகுதி: இன்றும் காந்தி
      இன்றும் சாதியவாதியா?
      காந்தியின் அறிவியல்
      தீண்டாமை யாத்திரையில் ஒடுக்கப்பட்டோரின் குரல்
      நுகர்வுக்கால காந்தி
      இந்தியாவுக்கு அப்பால்
      உலகத்திற்கு ஒரு கடைசி வாய்ப்பு
    • பதிவு
      சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருதுகள்
      பாரதி விருதுகள் - 2022
    • அஞ்சலி: நாரணோ ஜெயராமன்
      பாசாங்கற்ற ஓர் இருத்தலிய ஆத்மார்த்தம்
    • புத்தகப் பகுதி
      காற்று வெளியிடை...
      யாழ்ப்பாணப பார்வை
      “கூடார்த்தச் சித்திரங்கள்”
      போர் என்பது போர்க்களத்தில் மட்டும் நடப்பதல்ல
      மரணச் செய்தி...
    • மதிப்புரை
      வரலாற்றை வாசிக்கும் விதம்
    • கவிதைகள்
      எம். யுவன் கவிதைகள்
      களம்
      சரண்மனோன் கவிதைகள்
      சக்திஜோதி கவிதைகள்
    • தலையங்கம்
      இன்றும் காந்தி
    • பதிவு: ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் காட்சி - நவம்பர் 2022
      வார்த்தைகளைப் பரப்புவோம்...
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜனவரி 2023 பதிவு: ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் காட்சி - நவம்பர் 2022 வார்த்தைகளைப் பரப்புவோம்...

வார்த்தைகளைப் பரப்புவோம்...

பதிவு: ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் காட்சி - நவம்பர் 2022
மைதிலி கண்ணன்

 

இந்த ஆண்டின் பிராங்பர்ட் புத்தகச் சந்தைக்காகக் கண்ணன் முனைப்புடன் ஆயத்தமாகிக்கொண்டிருந்த செப்டம்பர் மாதத்தின் ஒரு மாலை நேரம். நான் சுதர்சன் புத்தகக் கடையில் இருந்தபோது கடைக்கு வந்த கண்ணன், இந்த முறை ரியாத், ஷார்ஜா புத்தகக் காட்சிகளில் காலச்சுவடு அரங்கு அமைக்க முடிவெடுத்துள்ளதாய் தெரிவித்தார். எப்பொழுதும் பகிரப்படும் தகவலைப்போல இதுவும் ஒன்று என்று நினைத்துத் தலையை ஆட்டினேன். மேற்கொண்டு விவரங்களைச் சொன்னபோதுதான் ஷார்ஜா புத்தகக் காட்சிக்கு அவரால் செல்ல இயலாது என்பதையும், நான் செல்ல வேண்டுமென்பதையும் அவருக்கே உரிய பாணியில் சூசகமாகத் தெரிவிப்பதும் புரிந்தது. முதலில் மகிழ்ச்சி ஏற்பட்டது. பின்புதான் மண்டையில் உறைத்தது. பொறியில் எலி வகையாகச் சிக்கிக்கொணடது.

காலச்சுவடு சார்பாக இன்னொருவரும் செல்ல வேண்டும் என்று ஆலோசித்தபோது, நிர்வாகப் பிரிவில் இருக்கும் ஜெபாவின் பெயரைப் பரிந்துரைத்தேன். பாஸ்போர்ட்கூட இல்லாத தேர்வு. தொடர்ந்து வந்த நாட்களில், ரியாத்திற்குச் செல்ல வேண்டியதில்லை என்றும் ஷார்ஜாவில் தனி அரங்கு எடுப்பதால் ஜெபாவும் நானும் அதனைப் பார்த்துக்கொள்வது என்றும் முடிவுசெய்தோம். பயணத்திற்கான முன்னேற்பாடுகள், கண்காட்சிக்கான புத்தகங்களை அனுப்புதல், தலைப்புகளுக்கான விவரங்களைத் தயாரித்தல், கண்காட்சி பற்றிய தகவல்களை அமீரக மக்களிடையே பரப்புதல் போன்ற பணிகளில் மும்முரமாக இறங்கினோம். ஜெபாவின் பாஸ்போர்ட்டும் வந்தது.

தடங்கல்களுடன் அமைந்த தொடக்கம்

‘ஷார்ஜா புக் அதாரிட்டி’யின் பிரதிநிதிகளுடன் தேவையான மின்னஞ்சல் பரிமாற்றங்கள், பதினைந்து நாட்கள் அங்கே தங்குவதற்கான ஏற்பாடு, பயணச் சீட்டுக்கள், அமீரக விசா போன்ற பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றன. பயணத்திற்கான நாள் நெருங்க நெருங்க ஆர்வமும் கவலையும் மாறிமாறித் தோன்றின. பயணத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்போது நாங்கள் திருவனந்தபுரத்திலிருந்து ஷார்ஜா செல்ல வேண்டிய டிக்கட் தானாகவே ரத்தானது மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியது. விசாவும் கடைசி நிமிடம்தான் கிடைத்தது. இப்படிச் சில தடங்கல்கள் ஷார்ஜா சென்று சேரும்வரை தொடர்ந்தன.

ஷார்ஜாவில் நிலவிய புகைமூட்டம் காரணமாக அபுதாபியில் விமானம் நான்கு மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. காலை ஏழு மணிக்கு ஷார்ஜா

போய்ச் சேர்ந்திருக்க வேண்டிய நாங்கள் ஒரு மணிக்குத்தான் போக முடிந்தது. அன்று முழுவதும் ஓய்வெடுத்துக்கொண்டு மறுநாள் கண்காட்சி நடக்கும் ஷார்ஜா எக்ஸ்போ கிரவுண்டுக்குச் சென்றோம்.

கிரவுண்டின் வாயிலில் நின்றதும் கண்காட்சிக்குத் தேர்ந்தெடுத்திருந்த வாசகம் ‘Spread the Word’ கண்ணில் பட்டது. கண்காட்சியின் இலச்சினை பக்கங்கள் பிரித்துக் கவிழ்த்து வைக்கப்பட்ட புத்தகம். அந்த இலச்சினையை அரங்கின் வாயிலில் பிரமாண்டமான வடிவில் கண்டதும் மனத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

நாடுகளின் அடிப்படையில் ஹால்கள் பிரிக்கப்பட்டி ருந்தன. மொத்தம் ஏழு. அதில் ஏழாவது இந்தியர்களுக்கு. அடையாளச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு அரங்கினுள் புத்தகங்களை அடுக்குவதற்குத் தயாரானோம்.

அழகுணர்ச்சிக்குத் தடை இல்லை

தமிழ் அரங்குகள் மூன்று. சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் பல பதிப்பகத்தாரின் புத்தகங்களுடன் பங்கெடுத்திருந்தது (ZD1). காலச்சுவடு அரங்கு எண் ZD2. டிஸ்கவரி புக் பேலஸும் யூனிவர்சல் பதிப்பகமும் இணைந்து ஒரு அரங்கம் அமைத்திருந்தன (ZD3). பல நாடுகளிலிருந்தும் வந்த பதிப்பாளர்கள் தங்களது அரங்குகளை மிக அழகான கைவண்ணங்களுடனும் நேர்த்தியான கட்டமைப்புகளுடனும் அமைத்திருந்தனர். அரங்குகளை அழகுணர்வுடன் தத்தமது விருப்பத்திற்கு ஏற்ப அமைக்க எந்தக் கட்டுப்பாடும் அங்கு இல்லை.

அரங்குகள் அமைப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் உதவிசெய்ய எக்ஸிபிட்டர் உதவி மையம் இருந்தது. அதன் அருகிலேயே தொழில் நுட்ப அலுவலகமும் இருந்தது. இவை இரண்டுமே பங்கேற்பவர்களின் தேவைகளைச் செவ்வனே நிறைவேற்றின. உதவிசெய்வதுதான் தங்கள் பணி என்று உணர்ந்த பணியாளர்கள் இன்முகத்துடனும் இயந்திரங்களின் உதவியுடனும் பங்கேற்பாளர்களின் தேவைகளை மின்னல் வேகத்தில் பூர்த்திசெய்தார்கள்.

பெட்டிகளைப் பிரித்து மளமளவென்று புத்தகங்களை அடுக்கத் துவங்கினோம். ஒரு அரங்குதான் என்றாலும் கிட்டத்தட்ட 500 புத்தகங்களுக்கு மேல் அடுக்குவதற்கும் மீதி உள்ளவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கும் இடம் வசதியாகவும் போதுமானதாகவும் இருந்தது. புத்தகங்களை அடுக்கி முடிக்கும் தறுவாயில் தனது நண்பர் கேட்டு அனுப்பியதாக ப. சிங்காரம் நூல்களை வாங்குவதற்காக துபாய் கம்பெனி ஒன்றில் வேலைசெய்யும் தொழிலாளி ஒருவர் அரங்கிற்கு வந்தார். எங்களுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவேயில்லை. இப்படியாக ஷார்ஜா புத்தகக் கண்காட்சி விற்பனை இனிதே தொடங்கியது.

மலையாளிகள் நடத்தும் உணவு விடுதிகள் ஷார்ஜாவில் நிறைந்திருந்தன. டிசி புக்ஸ் உதவியுடன் மதிய உணவு அரங்கிற்கே வந்துவிடுமாறு ஏற்பாடு செய்துகொண்டோம். காலை நாங்கள் தங்கியிருந்த விடுதியில் சிற்றுண்டி. மதியம் அரங்கினுள்ளேயே சாப்பாடு, இரவு விடுதியில் என்று ஏற்பாடு செய்துகொண்டோம்.

காலை சரியாக 9.59க்கு விடுதியின் முன் புத்தகக் காட்சிக்குச் செல்வதற்கான பஸ் வந்து நிற்கும். ஓட்டுநர் நவாஸ் ஒரு பாகிஸ்தானி. அந்த விடுதியின் ஃபுளோர் மேனேஜராகப் பணிபுரிபவர் கண்காட்சிக்காக ஓட்டுநராக உருமாறியிருந்தார். தினமும் ‘குட்மார்னிங் மேதம்’ என்று முகமலர்ச்சியுடன் வரவேற்பார். அவரின் எண்ணைப் பெற்றுக்கொண்டது பல சமயங்களில் மிகவும் உதவியாக இருந்தது. இரவு நேரத்தில் அரங்கின் வெளியே மிகச் சரியாகக் காத்துக்கொண்டிருப்பார். முகம்மது ரஃபியின் பாடல்கள் அல்லது குலாம் அலியின் கசல் இவற்றில் ஏதாவது ஒன்று தினமும் பேருந்தில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

நெகிழவைத்த தருணம்

தொடக்க நிகழ்ச்சிகள் இனிதே நடைபெற்றன. வார நாட்களின் காலை நேரத்தில் அரங்குகளில் பல நூறு பேருந்துகளில் பள்ளிக் குழந்தைகள் அழைத்துவரப்பட்டார்கள். தமிழகக் குழந்தைகள் பெயர்ப் பலகையில் தமிழைக் கண்டதும் ஆர்வத்துடன் எட்டிப் பார்ப்பார்கள். ஒரு சிறுவன் தன்னிடம் பத்து திராம் உள்ளதாகவும் தனது அம்மாவிற்குப் படிப்பதற்கு ஏதேனும் ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்துதருமாறும் கூறியது மனதை நெகிழச்செய்தது. சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ அவரின் தாயாருக்கான தேர்வாகியது.

முதல் இரண்டு மூன்று நாட்கள் கண்காட்சிக்கு வரும் தமிழர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடியதாகவே இருந்தது மிகுந்த மனச்சோர்வைத் தந்தது. நண்பர் இதயத்துல்லா (தினத்தந்தி), நாகா (நான் மீடியா), ரவூஃப் (யல்லா தமிழ்), கில்லி எப்.எம். அஞ்சுகம், 98.2 எப்.எம். அருண், பாலா, எழுத்தாளர்கள் நசீமா ரசாக் (மெட்ராஸ் பேப்பர்), பிரியா ரா ஜு, துரை ஆனந்த் (இவர் சிறார் நூல் எழுத்தாளர்; ஷார்ஜா முனிசிபல் அலுவலகத்தில் சுகாதாரப் பிரிவில் பணியாற்றுபவர்) போன்றவர்களின் வருகையும் அவர்கள் தங்களது சமூக வலைப்பக்கங்களில் தமிழ்ப் பதிப்பகங்களின் அரங்குகளைப் பற்றிய பதிவுகளைப் பகிர்ந்தமையும் நல்ல விளைவை ஏற்படுத்தின. ஹால் 7இனுள்

புத்தக வெளியீடுகளுக்கான மையம் அமைக்கப் பட்டிருந்தது. காலை 10 மணிமுதல் இரவு 11 மணிவரை ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கும் ஒரு புத்தக வெளியீடு என்று நிர்ணயிக்கப்பட்டு அந்த அட்டவணை தினமும் வெளியே ஒட்டப்பட்டிருந்தது. விசாரித்ததில் பல மாதங்களுக்கு முன்பாகவே ஆன்லைனில் இதற்குண்டான அனுமதியை ஷார்ஜா புக் அதாரிட்டியிடம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரியவந்தது. இதில் சுமார் பத்து தமிழ் நூல்களின் வெளியீடுகள் இந்த வருடம் நடைபெற்றன. அந்த நிகழ்வுகள் பற்றிய செய்திகள் அமீரகத்தில் வெளியாகும் தினத்தந்தியில் முக்கியத்துவத்துடன் வெளிவந்தது கூடுதல் சிறப்பு. வெள்ளிக்கிழமை புத்தகக் கண்காட்சிக்கான நேரம் மாலை 4 மணிமுதல் இரவு 11மணிவரை. விடுமுறை நாட்களான சனி ஞாயிறுகளில் காலை 10 மணிமுதல் இரவு 11 மணிவரை.

முதல் வெள்ளியன்று எங்கள் நம்பிக்கை வீண்போகாத வண்ணம் விற்பனை நடைபெற்றது. காலச்சுவடு பற்றி அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று பலதரப்பட்ட வாசகர்கள் வந்திருந்தது மகிழ்ச்சியைத் தந்தது.

புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு ஜெபாவின் கைவேலையால் உருவாக்கப்பட்ட கலைவண்ணம் மிகுந்த புக்மார்க்கு களைப் பரிசளித்தோம். சனியன்றும் ஞாயிறன்றும் உணவருந்தக்கூட நேரமில்லாத அளவு விற்பனை இருந்தது.

உலகத் தரமான ஏற்பாடுகள்

முழுவதும் (எலும்பையும் உறைய வைக்கும்) குளிரூட்டப்பட்ட அரங்கு, மாற்றுத் திறனாளிகள் எளிதில் வந்து செல்வதற்கான வழிகள், புத்தகங்களை வாங்குவதற்கான டிராலி ஏற்பாடு, பிரதான பாதையில் தினமும் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், எழுத்தாளர்களிடம் கையெழுத்துப் பெற அழகான ஒளியூட்டப்பட இடம், இரு ஓரங்களிலும் நிற்கும் உணவு வண்டிகள், மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்பட்ட கழிப்பறைகள், அரங்கின் பொதுப்பாதைகளை 15 நிமிடங்களுக்கொருமுறை சுத்தம் செய்யும் பணியாளர்கள் என்று எல்லா விஷயங்களும் பிரமிப்பூட்டின.

அமீரகத்தில் உள்நாட்டுப் பதிவு இல்லாமல் அரங்கு அமைத்தவர்களுக்குக் கண்காட்சி அமைப்பினரே பில் புத்தகங்களை வழங்கியிருந்தனர். ஒரு புத்தகம் தீர்ந்தவுடன் அதை ஒப்படைத்துவிட்டு வேறு புத்தகம் வாங்க வேண்டும். கிரெடிட் கார்டு முறையில் புத்தகம் வாங்குபவர்களுடைய பில்லை எடுத்துக்கொண்டு அந்த அரங்கின் வாயிலில் இருக்கும் காசாளரிடம் சென்றுதான் அந்த பில்லுக்கான பணப் பரிவர்த்தனையைச் செய்ய வேண்டும். ஒரு புத்தகமேயாயினும் அந்த விற்பனையை விட்டுக்கொடுக்காமல் அந்த நடைமுறையைச் செய்துகொண்டிருந்தோம். கண்காட்சியில் எல்லா ஏற்பாடுகளும் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தாலும் முக்கியமான பிரச்சினை தூரம். அரங்கிலிருந்து பணப் பட்டுவாடா பகுதிக்குச் சென்று திரும்பி வருவதற்குப் பல நிமிடங்களேனும் ஆகும்.

நேரம் கிடைக்கும்போது மற்ற அரங்குகளைச் சென்று பார்வையிட முடிந்தது. இந்த ஆண்டு கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்ட இத்தாலியின் அரங்குகள் கண்ணைக் கவர்ந்தன. கலைநுட்பத்துடன் ஒவ்வோர் அரங்கும் வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாகக் குழந்தைகள் அரங்கு வண்ணங்களாலும் அவர்களுக்குப் பிடித்த மிருகங்கள், பறவைகள், கார்ட்டூன் கதாபாத்திர உருவங்களாலும் நிறைந்திருந்தன.

‘கல்ஃப் டுடே’யில் தமிழ்ப் பதிப்பகம்

கூட்டம் குறைவாக இருந்த ஒரு வார நாளில் குழந்தைகள் பகுதியில் சுதர்சன் புத்தகக் கடையின் முகநூலில் நேரலை ஒளிபரப்பிக்கொண்டிருந்தபோது, “எங்களையும் சேர்த்துக் காட்டுங்க” என்ற தமிழ்க் குரல் கேட்டது. அவர் பெயர் அதாவூர் ரஹ்மான். முப்பது வருடங்களுக்கும் மேலாக அமீரகத்தில் புத்தக வியாபாரத்தைக் கவனித்துவருபவர். ஷார்ஜா புத்தகக் கண்காட்சி தொடங்கிய காலத்திலிருந்தே அராபிய மொழிப் புத்தக அரங்குகளை அமைத்தவர். கடந்த பல வருடங்களில் புத்தகக் காட்சி எவ்வாறு உருமாறியுள்ளது என்று விளக்கினார். ‘முகம்மது யூசுப் உங்கள் அரங்கிற்கு வந்தாரா’ என்று திடீரென்று வினவினார். ‘யாரென்று தெரியவில்லையே’ என்றேன். ‘அவர் அமீரகத்தில் மிக முக்கியமான பத்திரிகையாளர். நாளை கட்டாயமாக உங்களை வந்து சந்திப்பார்’ என்று கூறினார்.

அடுத்த நாள், சுமார் 60, 65 மதிக்கத்தக்க ஒருவர் “Who has come from Kalachuvadu Publications?” என்று வினவியபடியே அரங்கினுள் நுழைந்தார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். வந்ததும், “எங்களது இஸ்லாமிய மதத்தில் தரையில் விழுந்து வணங்கும் பழக்கம் கிடையாது. இல்லையெனில் இந்த அரங்கினுள் வணங்கியிருப்பேன்” என்று கூறி நெகிழவைத்தார். தொடர்ந்த உரையாடல்களில் திருவனந்தபுரத்தை தனது சொந்த ஊராக கொண்ட மலையாளி என்றும் அங்கிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் பயணம் செய்திருப்பதையும் நினைவு கூர்ந்தார். சுந்தர ராமசாமி பற்றியும் அவரது எழுத்துக்களின் நேர்த்தியும் ஆழமும் தன்னை வெகுவாகக் கவர்ந்ததைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார். காலச்சுவடின் பயணத்தைத் தான் முகநூலில் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னவர் மொழிபெயர்ப்புக்குக் காலச்சுவடு அளிக்கும் முக்கியத்துவத்திற்காகத் தனது சந்தோஷத்தையும் பகிர்ந்துகொண்டார்.  இத்தனைக்கும் அவர் தமிழ் படிப்பவர் அல்ல.

என்னைப் பேட்டி எடுத்து அதை ‘கல்ஃப் டுடே’ இதழில் அடுத்த நாளே பிரசுரிக்க ஏற்பாடுசெய்தார். அவருடைய மொபைலில் அந்தப் பக்கத்தின் வடிவமைப்பைக் கண்டபோது உற்சாகத் துள்ளல் ஏற்பட்டது. ஷார்ஜா புத்தகக் கண்காட்சி வரலாற்றில் தமிழ்ப் பதிப்பகத்தைப் பற்றிய பதிவு ஆங்கில நாளேட்டில் வருவது இதுவே முதன் முறை. அத்துடன் நில்லாமல் மீடியா லாஞ்சிற்கு அழைத்து சென்று அங்கிருக்கும் முக்கியமான பத்திரிகை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன் காலச்சுவடு பதிப்பகத் துறையில் செய்துவரும் பணிகள் பற்றிய விவரங்களை அவர்களிடம் விளக்கினார். அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் ஓரிரண்டு செய்திகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

நிறைவளித்த விருந்தோம்பல்

வார நாட்களில் ஒவ்வொரு நாளும் துரை ஆனந்த் தன் வீட்டிலிருந்து தயார்செய்துகொண்டுவரும் காப்பியும் சிற்றுண்டியும் சிறப்பான மதிய உணவும் தமிழ்ப் பதிப்பக நண்பர்களை அந்தக் குளிரிலும் உற்சாகமாக வைத்திருந்தன. ஒரு மாலையில் சிறிது பசியுடன் வாசகர்களை எதிர்நோக்கியிருந்த நேரத்தில் அருகிலிருக்கும் முனிசிபாலிட்டியில் வாட்டர் சப்ளை பிரிவில் பணிபுரியும் அக்பர் அரங்கிற்கு வந்தார். “நீங்கள் தமிழா? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று ஆர்வமாக விசாரித்தோம். உரையாடலின் முடிவில் “வந்ததற்கு புத்தகங்கள் எடுக்கணுமே” என்று கூறி இரண்டு புத்தகங்கள் தேர்வுசெய்து தருமாறு கேட்டுக்கொண்டார். உணவிற்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். எங்களது ஏற்பாடுகளைக் கூறினோம். சிறிது நேரம் கழித்து கையில் இரண்டு பார்சல்களுடன் வந்து, “இட்லி ரொம்ப நல்லாயிருக்கும் சாப்பிடுங்க” என்று தந்துவிட்டுச் சென்றார். உண்மையாகவே இட்லி தேவாமிர்தமாகத்தான் இருந்தது.

நவம்பர் 13ஆம் தேதி இரவு கண்காட்சி நிறைவுநாள் சுமார் எட்டு மணி. இனி விற்பனை அதிகம் இருக்காது என்ற எண்ணத்தில் ராக்கிலிருந்து புத்தகங்களை எடுத்து பார்சல் செய்ய ஆரம்பித்திருந்தோம். “என்ன புறப்பட்டுவிட்டீர்களா?” என்று பரிச்சயமான குரல் கேட்டது. நிமிர்ந்து பார்த்தபோது அக்பர் தனது குடும்பத்தினருடன் அரங்கின் வாயிலை நிறைத்திருந்தார். தன் மனைவியை அறிமுகப்படுத்தினார். ‘புத்தகம் எதாவது வாங்குங்க’ என்று அக்பர் சொன்னார். அதற்கு அவர் மனைவி ‘கிடை’ நாவலைக் கையிலெடுத்து இதைப் படித்துவிட்டேன் என்று கூறியபடி வேறு நூல்களைப் பார்வையிட்டார். அருகிலிருந்த வயதான

பெண்மணியைக் காட்டி, “இவங்க என் அம்மா. சின்ன வயசிலிருந்தே நிறைய புத்தகம் படிப்பாங்க. இவங்ககிட்டயிருந்துதான் இந்த பழக்கம் எனக்கு வந்திச்சி” என்று தனது தாயை அறிமுகப்படுத்தினார். நெருப்பின் பொறி அடையாளம் காணப்பட்டது.

விடைபெறும் வேளையில்

எஞ்சிய புத்தகங்களைக் கணக்கெடுத்து பார்சல் செய்துவிட்டு இரவு சுமார் இரண்டு மணி வாக்கில் அரங்கிற்கு வெளியே வந்தோம். வரும் வழியில் பேக் செய்யப்பட்ட அட்டைப்பெட்டிகள், புத்தகங்கள் என்று இருந்த அரங்குகள் அலங்காரங்களைக் கலைத்த மணமகளைப் போலக் காட்சியளித்தன. பாதி இருளில் இருந்த அரங்குகள் மனத்தில் சொல்லவொணா வருத்தத்தை அளித்தன. கண்காட்சிக்கு முந்தைய நாள் திருமண மண்டபம் போன்ற கோலாகலத்துடனும் மனிதர்களின் உற்சாக உரையாடல்களுடனும் நிரம்பி வழிந்த அரங்கா இது என்ற ஏக்கம் வந்தது. இரவு களைப்புடன் வெளியேறும்போது வழக்கமாக இசை நிகழ்ச்சி எங்களை வரவேற்கும். அந்த இசை இதமாக மனதை வருடும். அன்று அது இல்லை. சில்லென்ற மெல்லிய காற்றில் எண்ணங்களை அசைபோட்டவாறே அதிகாலை 2.30 மணிக்கு அறைக்கு வந்துசேர்ந்தோம்.

மறுநாள் ஊர் சுற்றிப் பார்க்க விடுதி மேலாளர் செய்த சிறப்பான ஏற்பாடுகளையும் அற்புதமான விருந்தையும் மறக்கவே முடியாது. கேரள உணவு விடுதியில் பெரிய இலையில் மீன் உணவுகளைப் பார்த்ததும் ஜெபாவின் கண்களில் தெரிந்த பிரகாசத்தையும் மறக்க முடியாது.

இனிவரும் காலங்களில் அமீரக மண்ணில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளுக்கான யோசனைகளுடனும் ஷார்ஜாவின் இனிய அனுபவங்களுடனும் இந்தியா திரும்பினோம். ஓயாமல் வார்த்தைகளைப் பரப்புதல் இனிதினும் இனிது.

மைதிலி கண்ணன்: சுதர்சன் புக்ஸ் புத்தகக் கடையை நாகர்கோவிலில் நடத்திவருகிறார்.

                   மின்னஞ்சல்: mythili69@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.